“ஒலிவியா, நீங்க இந்த அறையில தங்கலாம். அட்டாச் பாத்ரூம் இருக்கு. முன்னால இருக்கிற அந்த அறையில் உன்ர நண்பி தங்கலாம். கிச்சனில எல்லாமே இருக்கு. இப்ப சாப்பிட …” என்று ஆரம்பிக்க, “எங்களுக்கு ஒண்டும் வேணாம் ஏதன். பிரெஷ் அப் செய்திட்டு கஃபே குடிக்கிறம்.” என்றான், வேர்த்.
“ம்ம் சரி, ஹொஸ்பிட்டல் போயிட்டு அப்பிடியே லஞ்ச் முடிச்சிட்டு வரலாம். வரேக்க உன்ர நண்பி வீட்டில சொல்லி அவவுக்குத் தேவையானதுகளையும் எடுத்துக்கொண்டு வரலாம்.” என்றவன், மறந்தும் துர்க்காவைப் பார்க்கவில்லை. அவளும் அவனைப் பார்க்கவில்லை. ஆனாலும் அவளைக் கண்ட கணத்திலிருந்து அவன் இப்படித்தானே? கரிசனை காட்டியே அவளை ஒரு வழி செய்கிறான். இவனை இப்போது ஏதாவது உதவி கேட்டாளா என்ன? விழிகள் கலங்கின. உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தவள்தான், கைப்பேசியில் புதைத்துவிட்டாள் போன்ற பாவனையில் தன்னை மறைத்துக்கொண்டாள் .
“ம்ம் சரி.” என்ற ஒலிவியா நண்பியைப் பார்த்தாள். இப்போதும் அவள் ஏதனோடு முகம் காட்டும் விதம் அவளுள் பெரும் சந்தேகத்தைக் கிளப்பியது. பல நாள்கள் பழகியவர்களுள் வரும் உரிமையான பிணக்குப் போலவே அது தெரிந்து தொலைகிறதே! ஆறுதலாக அவளோடு கதைக்க வேண்டும் என்று நினைத்தாள்.
துர்க்கா இலண்டன் வந்து குறுகிய காலம் தானே? நண்பியைப் பற்றி நன்றாகத் தெரிந்தவளால் அத்தனை விரைவில் காதல் எல்லாம் சாத்தியமே இல்லை என்றுதான் முடிவெடுக்க முடிந்தது.
“ஏதன் கஃபே குடிச்சிட்டுப் போகலாமே” என்றது வேர்த்.
“இல்ல பரவாயில்ல, ரெண்டு மணித்தியாலத்தில வந்திருவன். ஆர் வந்தாலும் கதவு திறக்க வேணாம். டேக் கேர்.” என்றவன், விருட்டென்று வெளியேறியிருந்தான். தானியங்கி முன் கதவு மூடிக்கொண்டது.
“துர்க்கா பிரெஷ் ஆகிற்று வாறம்.” பயணப்பைகளை அறைக்குள் எடுத்து வைத்த கணவனிடம் கைப்பையைக் கொடுத்துக்கொண்டே சொன்னாள், ஒலிவியா.
“நீங்க உங்கட அலுவல்களப் பாருங்க ஒலிவியா. நான் கஃபே போட்டு வைக்கிறன்.” சமாளிப்புச் சிரிப்போடு பார்த்துச் சொன்னவளை கூர்ந்து பார்த்தாள், ஒலிவியா. ஆட்காட்டி விரல் துர்க்கா நோக்கி வந்திருந்தது.
“என்னட்ட எதையும் மறைக்க நினைக்காதே பெண்ணே!” அதட்டலோடு எச்சரிக்கை விட்டாள்.
“போ போ… போய்க் குளி …இங்க மறைக்க எண்டு ஒண்டும் இல்ல. உன்ர அண்ணாக்கு…மெண்டல்.” உதட்டைச் சுழத்தவள், “நான் கட்டாயம் இங்க தங்கவா வேணும்? நீங்க ரெண்டு பேரும் கப்பில். இதுக்க நான் என்னத்துக்கு இடைஞ்சலா?” கண்ணடித்துச் சீண்டியவள், “ஒவ்வொரு நாளும் உன்னப் பாக்க வருவன் ஒலிவியா. போயிட்டு வரவோ?” கெஞ்சலாகக் கேட்டாள்.
ஒலிவியா தலை மறுப்பாக ஆடியது. “இந்தச் சாட்டுச் சொல்லுற அலுவல் என்னட்ட வேணாம் சரியா? அதெல்லாம் எங்களுக்கு ஒண்ணும் பிரச்சின இல்ல. நீ இந்தப் பத்து நாள்களும் எங்களோடதான்.” கதை முடிந்தது என்று நகர்ந்தாள், அவள்.
இடுப்பில் கைவைத்து முறைத்தவள், சித்திக்கு அழைத்து விசயத்தைச் சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள். மனமோ, ‘இஞ்ச தங்கிற வேலையெல்லாம் வேணாம். நீயே அவனுக்கு இடம் குடுக்கிறது போல ஆகிரும்.’ அதட்டிக்கொண்டே இருந்தது.
அப்பார்ட்மெண்டை விட்டு வெளியேறிய ஏதன் தாய்க்கு அழைத்தபடிதான் காரில் ஏறினான். தாம் எல்லோரும் வைத்தியசாலையில் நிற்பதாகச் சொன்ன சோஃபி. “என்ன அவள் வந்திட்டாளோ? நீ தான் விடிய வெள்ளனவே போய் ரிசீவ் பண்ணோணுமா? நல்லாத்தான் தலையில வச்சி ஆடுறீங்க. இத உன்னட்ட நான் எதிர்பார்க்கேல்ல ஏதன்.” என்றவருக்குக் குரல் தழுதழுத்திட்டு. தனக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் அந்த ஒலிவியாவுக்கு மகன் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவரால் சகிக்க இயலவில்லை.
“மோம் அங்க வந்து கதைக்கிறன்.” அழைப்பைத் துடித்தவன் கார் சீறிப் பாய்ந்தது.
ஆரோன் தங்கியிருப்பது தனியறை. முன்னால் நீண்டு கிடந்த வராண்டா அமைதியாக இருந்தது. இவன் நுழையும் போது தகப்பனின் அறைக்கதவைத் திறந்து வெளியில் வந்தான் இவன் தமையன் ஐவன்.
ஏதன் எப்படி அவ்வளவு வேகமாக அவனை நெருங்கினானோ தெரியாது, வந்த வேகத்தில் பளாரென்று அறைந்தே விட்டிருந்தான்.
ஐவன் உறைந்து போனான். நொடிகள் கடந்தபின்னே நடந்ததை அவனால் உள்வாங்க முடிந்தது. கன்னத்தைப் பற்றியவன் கண்கள் கோபாக்கினியில் சிவந்து போயின. உதடுகள் துடிக்க, “என்ன துணிவு உனக்கு?” சகோதரன் நெஞ்சில் கரம் வைத்து ஒரே தள்ளில் சுவரோடு அழுத்தியவன் கரம் பளாரென்று ஏதன் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது. இருவருமே வெறி கொண்ட சிங்கங்களாக மோதத் தயாராகினர்.
“என்ன துணிவோ? ஒரு கொலைகாரன, ஆள் வச்சுக்கொலை செய்யிறவனை அடிக்க எனக்குத் துணிவு வேணுமோ? ஒலிவியாவ மட்டுமா கொலை செய்ய நினைச்சனி? அப்பிடித் தெரியேல்லையே! என்னையும் சேர்த்துக் கொல்லத் திட்டம் போட்டுட்ட என்ன?” அடிக்குரலில் உறுமியபடி ஐவன் கழுத்தைப் பற்றியிருந்தான்.
சகோதரன், அதுவும் இளையவன் கை நீட்டிவிட்டானே என்று கொதித்து ஒரு அறையும் அறைந்துவிட்ட ஐவன், ஏதன் தன்னில் வைத்த குற்றச்சாட்டில் அசைய மறந்து நின்றான். கழுத்தில் சகோதரன் விரல்கள் அழுத்தியும் அவன் அசையவில்லை.
“ரெண்டு பங்குச் சொத்தும் உனக்கு வருமே. சொல்லு, நீ தானே அந்த ரெண்டு பேரையும் அனுப்பினது?” என்றவன், சகோதரன் வினையாற்றாது நிற்பதில் மிருமகமானான்.
அந்நேரம் சோஃபியா மட்டும் வரவில்லையோ, என்னவாகி இருக்குமோ! வெளியில் கேட்ட வித்தியாசமான பேச்சொலியும் நடமாட்டமும்தான் சோஃபியாவை வெளியே இழுத்து வந்தது.

