தாத்தா வீட்டின் கேட் முன்னால் வந்து கிரீச்சிட்டு நின்றது ஏதன் கார். வெளியில் சத்தம் கேட்ட வாயில் காவலாளி எழுந்து வந்து பார்க்கும் முன்னரே, பொறுமையின்றித் தொடர்ந்து ஒலிப்பானை அழுத்தியிருந்தான்.
வேகமாக பொத்தானை அழுத்திவிட்டு வெளியில் வந்தார், அந்த முதிய காவலாளி. கதவு முழுதாகத் திறப்படும் வரை காத்திருக்கும் அளவுக்குக்கூட அவனுக்குப் பொறுமை இருக்கவில்லை. கிர் கிர் என்று சீறிக்கொண்டு நின்ற கார் அவ்வளவு வேகமாக உள்ளே நுழைந்தது விரைந்தது. எப்போதும் நாசுக்காக ஒலிப்பானை அழுத்திவிட்டுக் காத்திருப்பவன் அவன். காவலாளி என்றெல்லாம் உயர்வு தாழ்வு பார்க்கமாட்டான், நலம் விசாரித்து நான்கு வார்த்தைகள் கதைப்பான், இல்லையோ தலையசைத்துக் கைகாட்டிவிட்டே சொல்லுவான்.
வீட்டின் முன்னால் கிரீச்சிட்டு நின்ற காரையே பார்த்து நின்றார், அந்த முதியவர். ஆரோன் டேலுக்கு உடல்நிலை தீவிரமாகிவிட்டதோ ? அவர் பெற்றோரை அழைத்துச் செல்ல வந்தானோ? அந்த முதியவர் மனத்துள் பெரும் கலவரமாக இருந்தது. ஏதனிடம் விசாரித்துவிடுவோம் என்று ஒரு அடி எடுத்து வைத்தவர் நின்றுவிட்டார்.
காரைவிட்டு இறங்கியவன் கதவை அறைந்து சாத்திய விதமே அவர் நடைக்குத் தடை போட்டு விட்டிருந்தது. பெரும் கோபமாக இருக்கிறான். இது வேறு எதுவோ. அந்தப் பெரியவர் தன்னிடத்தினுள் நுழைந்துவிட்டார்.
வரவேற்பறையில் தாத்தா பாட்டி அமர்ந்திருந்தார்கள். ஏதனை எதிர்பார்க்கவில்லை, என்றது ஆச்சர்யப்பட்ட பாட்டியின் விழிகள்.
“ஒலிவியா வந்திட்டாவா?” என்றபடி எழுந்து வந்தார்.
“என்ன விசயம்? ஆரோனுக்கு ஒண்டுமில்லையே?” என்ற தாத்தா, பேரனிடம் எப்போதும் காட்டும் கனிவை மருந்துக்கும் காட்டவில்லை. காரியத்தைச் சாதித்துக்கொள்ளப்பார்ப்பானே.
ஏதனுக்கோ பாட்டி கேட்டது காதில் விழவில்லை. தாத்தாவை நெருங்கியவன் அவர் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியின் பிடிகளில் கையை அழுந்த ஊன்றி நின்றுகொண்டான்.
பெரியவர் முகத்தை நெருங்கியவன் பார்வை அவரைக் கூறு போடுவதாக இருந்தது. அவன் வந்த வேகத்தில் மகனுக்குத்தான் எதுவுமோ என்று பயந்து போனவர், இப்போது பேரன் கோபம் உணர்ந்து நிதானமானார். அவன் தாத்தாவாச்சே! உதடுகள் இறுக மூடியிருக்க அலட்சியமான பார்வையாலேயே என்ன என்று கேட்டார்.
“செய்யிறது எல்லாம் செய்திட்டு என்ன திமிராப் பாக்கிறீங்க!” சீறலாகத் தொடங்கியவன், “உங்களிட்ட இதை எதிர்பார்க்கேல்ல கிராண்ட்பா.” என்றான் தழுதழுப்போடு.
“ப்ச்!” சலித்துக்கொண்ட பெரியவர், “நானும்தான் உன்னட்ட இருந்து இதுகளை எதிர்பார்க்கேல்ல ஏதன். போயும் போயும் உனக்கு அந்த இந்தியப்பிள்ளையா கிடைக்கோணும்? அவள விட்டுட்டதானே?” அவர் கேட்டு முடிக்கவில்லை, மூர்க்கன் ஆகிப்போனான்,ஏதன்.
“ஆஆஆஆ” என்ற உறுமலோடு கைப்பிடிக்குள் அகப்பட்டிருந்த சக்கர நாற்காலியைப் பிடித்து கடகடவென்று அசைத்து ஆட்டினான். கதிரையின் அசைவில் குலுங்கிய பெரியவர் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உறைந்து போனார்.
இவர்களையே பார்த்திருந்த பாட்டிதான், “ஏதன்! இதென்ன செய்ற?” என்று கத்திக்கொண்டு ஓடிவந்தார். பேரனைப் பிடித்து இழுத்து விலக்கியவர் , “நீ என்ன செய்யிற? அவர் ஒரு பேஷண்ட் மறந்து போனியா?” கத்தினார்.
“பேஷண்ட்?” கோபச் சிரிப்போடு கேட்டவன், “அப்ப அதுக்கு ஏத்த மாதிரி அமைதியா இருக்கோணும் பாட்டி. கொலை செய்ய ஆட்களை ஏவுற அளவுக்கு அவர் சுகமாகத்தான் இருக்கிறார்.” என்றதும் முதியவர்கள் இருவருமே குழம்பிவிட்டார்கள்
“நீ… நீ என்ன சொல்லுற ஏதன், உண்மையா எனக்கு ஒண்ணும் விளங்கேல்ல. டோனி கொலை செய்ய ஆட்கள அனுப்பினவரா? ஆரக் கொலை செய்ய?” நடுங்கியபடி கேட்ட ஈவ்லின் பார்வை கணவரிடம் விசாரிப்பு நடத்தியது. டோனி தலை அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பதாக அசைந்தது.
“உங்களுக்கு விளங்கேல்லையா? சரி, உங்கட கணவர் என்ன செய்தவர் எண்டு அவரிட்டயே ஒருக்காக் கேளுங்க.” என்றவன், தோள்பற்றித் தடுத்த பாட்டியை விலத்திவிட்டு முதல் போல சக்கர நாற்காலியில் கையூன்றி பெரியவர் முகம் பார்த்தான்.
“அவள் …துர்கா எந்த நாடாவும் இருந்திட்டுப் போகட்டும், ஐ ரியலி டோன்ட் கேர். அவள்தான் எனக்கு. அவளுக்கு ஏதாவது ஆகோணும் சின்னதாச் சரி என்னவும் நடக்கட்டும் பிறகு நான் ஆர் எண்டு தெரியும் உங்களுக்கு.” அவன் உறுமியது அந்தப் பெரிய கூடமெங்கும் உரசி ஒலித்தது.
அப்போதும் தாத்தா வாய் திறக்கவில்லை. பார்வை மட்டும் பேரனில் அக்கினியைக் கக்கிற்று. நிதானமாக வாயில் நோக்கிக் கை காட்டினார். “கெட் அவுட்!” என்ற இரு சொற்களும் ஏதன் குரலுக்குச் சற்றும் சளைக்காது காத்திரமாக ஒலித்தது.
கோபச் சிரிப்போடு நிமிர்ந்தான், ஏதன்.
“சோ… நீங்க செய்ய நினைக்கிறதச் செய்யத்தான் போறீங்க. இப்பிடித்தான் அண்டைக்கு அப்பாவ இந்த நாட்டை விட்டே அனுப்புனீங்க. அவருக்குச் சமையலில்தான் விருப்பம் எண்டு சொல்லேக்க சம்மதிச்சு உதவியா இருந்திருக்க, இப்ப நடக்கிற எந்தப் பிரச்சினையும் நடந்திருக்காது. அம்மாவையும் தூண்டிவிட்டு டிவோர்ஸ் எடுக்க வைத்து எல்லாத்துக்கும் பின்னால இருந்தது நீங்க. நீங்க மட்டும் ரைட்! காரணம் கேட்டா தகுதி தராதரம், மரியாதை,கௌரவம் எண்டு எடுத்து விடுவீங்க. செத்துப் போகேக்க கொண்டுபோகப்போறீங்களா இதுகள?” சீறினான்.
“திரும்பவும் சொல்லுறன் அவளில் ஆரிடையாவது கை படோணும் கொழுத்தீருவன் எல்லாத்தையும் …” அவன் சொல்லி முடித்து நிமிரவும் பெரியவர் கைக்கெட்டிய தூரத்தில் இருந்த ரிமோட் அவனை நோக்கிப் பறந்து வந்து அவன் நெற்றியில் பட்டுச் சிதறி விழவும் சரியாக இருந்தது. அதனுள் இருந்த பற்றிகள் இரண்டும் பயத்தில் சோஃபாவின் கீழ் பதுங்கிக்கொண்டன.
“ஓ டோனி நீங்களுமா? அவன் சின்னவன் இதெல்லாம் என்ன? அவன் என்ன என்னவோ சொல்லுறான், என்ன எண்டு கேக்கிறத விட்டுப்போட்டு இப்பிடியா கோவப்படுவீங்க?”
பதறிக்கொண்டு சென்று கணவரைப் பிடித்த பாட்டி அழுதுவிட்டார்.
“ஐயோ! அவன்ட நெற்றியப்பாருங்க.” பேரனிடம் ஓடி வந்து தடவிவிட முனைய பட்டென்று விலத்தி நிறுத்திவிட்டான், அவன் .
“நான் ஆருக்கென்று நிக்க?” பாட்டி பரிதாபமாக அழுதார்.
“உன்ன வெளில போகச் சொன்னனான். ஒண்டைக் கேட்டுக்கொண்டு போ, அந்த ஆசியாக்காரிய கொலை செய்யக்கூட நான் தொட்டுரமாட்டன். யாரையும் கொண்டும்தான். அந்தளவுக்கு கீழிறங்கமாட்டான் இந்த டோனி. யூ லொஸ்ட் யுவர் மைண்ட் புவர் போய். ஐ செட் கெட் அவுட்!” ஆத்திரத்தோடு கத்தியவர் நெஞ்சை நீவிக்கொண்டு இருமினார்.
“அதுதானே, நீ எப்பிடி அவரப் பார்த்துக் கொலையாளி எண்டு சொல்லலாம்.” வருத்தமாகக் கேட்ட பாட்டி ஓடிச் சென்று கணவன் நெஞ்சை நீவிவிட்டார்.
தண்ணீரை எடுக்க முனைய, அதை எடுத்துக் கொடுத்தான் ஏதன். பாட்டி வாங்கவில்லை. அவர் கையில் கிளாஸைத் திணித்தான். அவன் கிராண்ட் பா, பொய் சொல்லவில்லை என்று அவன் நெஞ்சு உணர்ந்துவிட்டதில் கோபமெல்லாம் வடிந்து அப்படியே சோர்ந்துவிட்டவன் தொய்ந்து போய் தாத்தாவின் முன்னால் மடிந்து அமர்ந்துவிட்டான்.
பெரியவர் சுதாரிக்க முதல் அவன் தலை அவர் மடியில் சரிந்துவிட்டது. “ஐ லவ் ஹேர் கிராண்ட் பா. ஒண்டு இல்ல ரெண்டு பேர், கத்திகளோட பாய்ஞ்சு வந்து அட்டாக் பண்ணினாங்கள். கொஞ்சம் கவனம் இல்லாமல் இருந்திருக்க துர்கா மட்டும் இல்ல, நானும் வேர்த், ஒலிவியாவுமே தாக்குப்பட்டிருப்பம் கிராண்ட் பா.” என்றவன் விழிநீர் அந்த முதியவர் தொடையைச் சுட்டது.
*****