ஏதனின் இலஞ்சியவள் 21- 2

 

தூறலாக ஆரம்பித்த மழை சட்டென்று வலுத்தது. கோடாக இறங்கிய மழை நீரை ஊடுறுத்துக்கொண்டு ஏதன் கார் விரைந்தது. காலையில் விமான நிலையத்தில் வைத்துப் பருகிய  ஒரு கோப்பி மட்டும்தான். வயிறு காந்தியது. எப்போதுமே தாத்தா, பாட்டி வீட்டுக்குச் சென்றால் ஏதாவது வாய்க்கு ருசியாகச் சாப்பிடாமல் திரும்புவதில்லை. இவன் என்றில்லை யார் சென்றாலும் உண்ணக் கொடுத்து உபசரிப்பார், பாட்டி. இன்று அவர்களைச் சிந்திக்க, நிதானிக்கக் கூட விடாது அல்லவா தாக்கிவிட்டான்.

வலியுணர்த்திய நெற்றியைத் தடவிப்பார்த்தான். நன்றாகவே வீங்கி இருந்தது.   கோடாகச் சிறு காயமும். அதில் அவன் பாட்டி கண்ணீரோடு போட்டுவிட்டிருந்த பிளாஸ்டர். டோனி  மிகவுமே கண்டிப்பான மனிதர்தான். ஆனால் அவ்வளவு இலேசில் இப்படி நிதானம் இழக்கமாட்டார். வார்த்தைகள் ஒன்று ஒன்றும் கத்தியின் கூர்மையை உணர்த்தி மிகவும் வலிக்கவும் குன்றவும் செய்யும்தான், இப்படி அதையிதைத் தூக்கி அடிக்க மாட்டார். இன்று, நிதானமிழந்து சுயமிழந்து நடந்திருக்கிறார். அந்தளவுக்கு அவன், அவர் நிதானத்தை இழக்கச்  செய்திருக்கிறான். 

வயோதிபம் மட்டுமா? சுகயீனமானவரும் கூட. என்னதான் கோபம் இருந்தாலும் அவன் நிதானமாக நடந்திருக்க வேண்டும். ஏதன் தன்னைத்தானே நிந்தித்துக்கொண்டான். 

ஏன் இப்படியாகிப்போனான்? நேசிப்பவளின் தயை தாட்சண்யமின்றிய மறுப்பு, யார் எவர் என்ன ஏதென்றில்லாத திடீர்த் தாக்குதல் எல்லாம் சேர்ந்து அவன் அவனாக இல்லை. இதில், தகப்பனுக்காக வீட்டில் கதைத்திருந்ததில், அவரின் அன்றைய சூழ்நிலையை எடுத்துக் கூறியதில், ஒலிவியா விடயத்தில்  நியாயத்தைப் பார்க்க முனைந்ததில் என்று, அவன் தமக்கு எதிராக நிற்பதாக நினைத்த தாய் மற்றும் உடன்பிறப்புகளின் ஒதுக்கமும் பாராமுகமும் என எல்லாம் சேர்ந்து அவன் இயல்பைத் தொலைக்க வைத்திருந்தது.

விமான நிலையத்தில் நடந்ததைக் கேட்டதும் பெரியவர்கள் பதறிவிட்டார்கள். 

“வந்ததும் வராததுமாக என்னைக் குற்றம் சாட்டுறதில மட்டுமே  குறியா இருந்தனி ஏதன், நடந்ததச் சொல்லேல்ல நீ!” என்ற தாத்தா, தாமதியாது காவல்துறைப் பெரியவருக்கு அழைத்துவிட்டார். யார் எண்டு விரைவில் கண்டுபிடிக்கும் படி அவர்களிடம் அழுத்தம் கொடுத்த வேகத்தில் தனியார் புலனாய்வு ஏஜென்சிக்கும் அழைத்திருந்தார்.  அவர்களிடமும் விபரம் சொல்லி யார் எவர் என்று எவ்வளவு விரைவில் இயலுமோ தெரிய வேண்டும் என்றவர், தனியார் பாதுகாப்பு சேவையை அழைத்துத் தங்கள் குடும்ப உறுப்பினர் எல்லாருக்குமே தனிப்பட்டுக் காவலுக்கு ஒழுங்கு செய்துவிட்டே நிம்மதி மூச்சு விட்டார்.

“தனித்தனியா எல்லாருக்கும் பாதுகாப்பு ஆட்களோ? அதெல்லாம் தேவேல்ல தாத்தா.” என்று இவன் மறுத்ததை அவர் காதில் வாங்கவில்லை. 

“எனக்கு என்னவோ மனம் சரியில்ல. இது துர்க்காவுக்கான குறி இல்ல எண்டே மனம் சொல்லுது. எங்கட குடும்பத்தோட எந்தவிதத்திலும் சம்பந்தமே இல்லாத பெண் அவள்.” என்றவர், பேரன் முகம் இறுகப் பார்த்ததைப் பொருட்படுத்தாது  யோசித்தார். 

“நீ என்ன எண்டால் உன்ர அண்ணனையும் என்னையும் சந்தேகப்பட்டிருக்கிற. என்ர பரம்பரை இரத்தத்தில இப்பிடிப்பட்ட கீழான  யோசனைகள் வரவே வராது. எது எண்டாலும் நேர நேர மோதுறதுதான் எங்கட இயல்பு.” என்று ஒரு குட்டு வைத்துவிட்டு, மீண்டும் மீண்டும் கவனம் சொல்லியே விடை கொடுத்திருந்தார்.

அவன் பின்னாலேயே  கார் வரை வந்தார்,பாட்டி. “ உன்ர அப்பாவ உதாரணமாச் சொன்னியே, அவன் செய்தது போல, எங்கயாவது போறன் எண்டு ஏதும் வெளிக்கிட்டிராத ஏதன். இஞ்ச இப்ப முதல் பிரச்சின உன்ர காதல் இல்ல  எண்டுறத நல்லா நினைவில வச்சிரு சரியோ! ஆரோன் சுகமாகி வீட்டுக்கு வரட்டும். நானே எல்லாரிட்டையும்  கதைக்கிறன். எனக்கு உன்ர காதலி  துர்காவப் பிடிச்சிருக்குத் தெரியுமா? உன்ன அடக்கிறதுக்கு ஏற்ற பெண் அவள்தான்!” என்றபடி கண்சிமிட்டியவர், “மறக்காம அவளிட்ட என்ர  ஃபோன் நம்பர் குடு. என்னோட கதைக்கச் சொல்லிவிடு!” என்று சொல்லியே  அனுப்பி வைத்திருந்தார். 

“ப்ச்! நீங்க மட்டும் இல்ல  தாத்தா, அவளும் என்ர  நேசத்தை ஒரு   பொருட்டா எடுக்கேல்லை. தட்டிக் கழிச்சிட்டாள்.” கசந்த முறுவலோடுதான் காரோட்டினான், ஏதன்.

*****

இங்கோ,  ஏதன் விடைபெற்றுச் சென்ற கையோடு பயணக்களைப்புப் போகத்  தோய்ந்துவிட்டு வந்தார்கள், வேர்த்தும் ஒலிவியாவும் .

வீடே கோப்பியின் நறுமணத்தில் மூழ்கியிருந்தது. கூடவே சுடச் சுட முட்டையும் வெள்ளரித்துண்டுகளும் வைத்துச் செய்த பாண் வாட்டி வைத்திருந்தாள்.

“தேங்க்ஸ் மை டியர்!” என்று துர்க்காவைக் கட்டிக் கொஞ்சிவிட்டு டோஸ்டை எடுத்துக் கடித்தாள், ஒலிவியா.

“ஏதனையும் சாப்பிட்டுட்டுப் போகச் சொல்லி இருக்கலாம்.” என்றபடி உண்ண ஆரம்பித்தான், வேர்த்.

அவனருகில் கெச்சப் போத்தலை தள்ளி வைத்துவிட்டுத் தானும் ஒரு டோஸ்டைக் கடித்த துர்க்கா, “சான்ஸே இல்ல, அவர் நிண்டு இருந்தா நான் இதெல்லாம் செய்தே இருக்கமாட்டனே.” தன்னை மீறியே சொல்லிவிட்டு நாக்கைக் கடித்தவளை, இருவருமே ஒரு சாதியாகப் பார்த்தாலும் எதுவும் கேட்கவில்லை. வேர்த், நமுட்டுச் சிரிப்பை கெச்சப் தொட்டுக் கடித்த டோஸ்டோடு சேர்த்து விழுங்கினான்.

“உன்னைக் கண்டதும் செஃப் சரியாச் சந்தோசப்படுவார்.” என்று துர்கா ஆரம்பிக்க, அன்றைய தாக்குதல் பற்றிய கதையைத் தொடங்கி அந்தக் கதையை வளரவிடாது செய்துவிட்டான் வேர்த். செஃப் மகிழ்வார். ஆனால் ஒலிவியா எவ்வளவு தவித்துப்போகப்போகிறாள்? அவள் மனத்துள் மருக்கிக்கொண்டு இருப்பதை வெளியில் காட்டவில்லை என்று அவனுக்குத்தான் தெரியுமே.

கத்தியோடு பாய்ந்த சம்பவம் பற்றிக் கதைக்க, அந்தக் கணத்தை நினைக்க  மூவருக்குமே நெஞ்சு சில்லிட்டுப் போனது. ஏனடா இந்தக் கதையைத் தொடங்கினோம் என்று வேர்த்  வருந்தும் அளவுக்கு ஒலிவியாவும் துர்க்காவும் பயத்தில் முகம் வெளிறிப்போனார்கள். எழுந்து சென்ற துர்கா கதவு சாத்தியுள்ளதா என்று பார்த்து வந்தாள். அறைகளோடு இருந்த பால்கனிக் கதவுகளை எல்லாம் பரிசோதித்தாள்.

பட்டப்பகலில் அவள் செயலை நக்கல் அடித்துச் சிரித்து நிலைமையைச் சற்றேனும் மாற்ற முனைந்தான், வேர்த்.

அவர்கள் மட்டில் காலை நடந்த சம்பவம்  ஆரோன் மூத்த மகனின் வேலை என்ற முடிவுக்குத்தான் வர முடிந்தது. அதுவே வைத்தியசாலை போவது பற்றி நினைத்தாலே வயிற்றைக் கலக்குகிறது என்றாள், துர்க்கா. ஒலிவியாவுக்குமே ஆரோன் குடும்பத்தினரைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கப் பயமாகத்தான் இருந்தது. அதையும் மேவி அவளினுள் ஒரு வகையான பிடிவாதம்  எழுந்தது. நான் அந்த மனிதனை ஒதுக்குவது வேறு, என்னை மகள் என்று சொல்லும் மனிதனை என்னைவிட்டு ஒதுங்கி நில் என்று இன்னொருவர்…அது அவர் மனைவி, மகனே என்றாலும் சொல்வது வேறு. அதை அவர்கள் சொல்லவே கூடாது. “பாப்பமே” என்றாள் பற்களைக் கடித்துக்கொண்டு.

“இதுதான் என்ர ஹனி! நாங்களும் ஒரு கை பாப்பம், முதல்  நான் இருக்கப் பயமேன்?”  என்று மனைவியை கட்டிப் பிடித்துக்கொண்டான் வேர்த். 

மெல்ல எழுந்து கோப்பிக் கோப்பையோடு சிங்க் அடிக்குச் சென்றாள் துர்க்கா. வேர்த் தம் கோப்பைகளைக் கழுவி வைத்தான். “குட்டித் தூக்கம், ஒரு மணித்தியாலத்துக்குப் போட்டுட்டு வரப்போறம்.” என்றுவிட்டு இருவரும் தமக்கான அறைக்குள் சென்றுவிட்டார்கள்.  

இன்றைய காலையே, ‘உன்னை நேசிக்கிறன்’ என்றவனில் கோபம் கொள்வதாகச் சினப்பதாக  ஆரம்பித்திருந்தது. தொடர்ந்து  என்ன எல்லாம் நடந்துவிட்டது. தவிப்பும் பயமும் பரபரப்புமாக ஒரு சாதியான மனநிலையில் இருந்த துர்க்காவால்  சும்மா  இருக்க  முடியும்  போலிருக்கவில்லை. ஏதன் வேறு சும்மா சும்மா வந்து அருட்டிச் சென்றான். இப்படியே சும்மா இருந்து எதையாவது உன் விருப்பப்படி நினைத்துக்கொள் என்று அவள் மனத்தை விட அவள் விரும்பவில்லை. அந்தச் சமையலறையை ஆராய்ந்தாள். 

ஒரு பெரிய குடும்பம் இரு கிழமைகளுக்கு மேலேயே வசிக்கத் தேவையான அளவில் எல்லாப் பொருள்களும் இருந்தன.  

எப்படியும் பகலுணவுக்கு வெளியில்தான் செல்ல வேண்டும். நேரத்தைப் பார்த்தாள். ஏதன் வர ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமாகவே இருக்க, குட்டியாக ஒரு சமையல் செய்வோம் என்று தொடங்கிவிட்டாள்.

இது என் வீடு.  என்ன உரிமையில் இதெல்லாம் செய்கிறாய்  என்று வந்து சீறினால் என்ன செய்வாய்? அவள் மனம் முணுமுணுப்பாகக் கேட்டு வைத்தது. பெரிய வீடு, இது உன்  வீடு மட்டுமா? என் நண்பிக்கும் இங்கு எல்லா உரிமையும் உண்டே! “வாயை மூடிட்டுப் போடா எண்டு  சொல்லுவன்.” வாய்விட்டே சொல்லிவிட்டாள். மறுகணம் வேர்த் ஒலிவியாவுக்குக் கேட்டிருக்குமோ , எங்காவது கமரா இருக்குமோ என்று பதறிப் போனாள். சுற்றிச் சுழன்று பார்த்துவிட்டு அப்படியெதுவும் இல்லை என்ற பிறகே  அவள் மனம் நிம்மதியானது.

கைகளை நெஞ்சில்  வைத்து,  “அடியேய்  துர்கா வேணாம் சரியோ, காலம என்ன நடந்தது எண்டு பாத்ததானே? அந்த வளந்தவன் சொன்னது போலவே கொல்லுறதுக்கு ஆள் அனுப்பி இருக்கிறான். உனக்கு இந்தச் சனத்தோட தொடுசலே வேணாம் பிள்ள. உன்ர  நண்பிக்காக பல்லைக் கடிச்சுக்கொண்டு இந்த ஒரு கிழமையையும் கடந்திரு. பிறகு இவே கண்ணிலும் பட்டிராத! முக்கியமா அந்த ஏதன் இருக்கிற பக்கம் தலை வைச்சுத் தூங்கிற  வேலை கூட வேணாம் சொல்லிட்டன். ” முணுமுணுத்தாள். 

பிறகு, “ நீதான் என்ர மிச்ச வாழ்க்கை எண்டுகொண்டு வந்திருவான்.” அவளுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம் முணுமுணுத்து உதடுகளை சுழித்தவளுக்கு, அவன் அந்த நேசிப்பைக் காட்டிய சந்தர்ப்பங்கள் நினைவில் மின்னிச் சென்றன. சட்டென்று வியர்த்தது. கோபம் , அவன் செய்கைகள் மீதான எரிச்சல் என்று, அந்த உணர்வுகளை முதன்மையாக இழுத்து நிறுத்தினாள். அதுவே, அவள் இதழ்களில் கள்ளமாக உருவாக முயன்ற புன்முறுவலைக் கூட அடக்க உதவியது. 

வாய்ச் சுழிப்பும் அவனை ஏசித்தள்ளும் முணுமுணுப்புமாகத்தான் அலுமாரிகளைத் திறந்து ஆராய்ந்தாள். 

பின் வேறு சிந்தனைக்கு இடம் கொடுக்கவில்லை. ஒரு கிழமையும்  கடையிலயா சாப்பிடுறது? சமைக்கட்டும் என்றுதானே இதெல்லாம் வாங்கியிருக்கு என்று நினைத்தபடி, பாசுமதி அரிசியில் சோறு சமைத்தாள். கோழி இறைச்சிப் பிரட்டலும்  ஒரு சாலட்டும் செய்துவிட்டு சுருக்கமாகச் சமையலை முடித்தாள். 

error: Alert: Content selection is disabled!!