ஏதனின் இலஞ்சியவள் 21- 3

இடையில் இறைச்சிக்கறி வாசத்தில் ஒலிவியா எழுந்து வந்துவிட்டாள்.

“தனிய நிண்டு இதெல்லாம் என்ன வேலை?” என்று கேட்டவள், சமைத்த இடத்தைத் துப்பரவு செய்ய, வேர்த்  பாத்திரங்களை அலம்பி கழுவும் இயந்திரத்தினுள் அடுக்கினான். 

சுட சுட இருந்த சாப்பாடு எச்சிலை ஊற வைத்தது. டோஸ்ட் எங்கே போயிற்று என்றவகையில் மூவருக்குமே பசித்தது. ஆனாலும் ஏதன் வரட்டும் என்று காத்திருந்தார்கள். களைத்துப்போனதுதான் மிச்சம் . பொறுத்துப் பார்த்திருந்துவிட்டு அவனுக்கு அழைத்தான், வேர்த். 

“சொறி வேர்த், இன்னும் ஒன்றரை மணித்தியாலத்தில அங்க வந்திருவன், பாத்துக்கொண்டு இருக்க வச்சிட்டன் என்ன, சொறி சொறி!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான், அவன். 

“நாங்க சாப்பிடலாம் வாங்க” என்று எழும்பிவிட்டாள் துர்கா. மூவருமாகச் சாப்பிட்டார்கள்.

“உன்ர ப்ரோ விரும்பினாச்  சாப்பிடட்டும். இல்லாட்டி நாளைக்குச் சாப்பிடுவம்.” மேசையில் எல்லாவற்றையும் மூடி வைத்தவளை ஒலிவியா முறைத்தாள்.

“உண்மையில் உனக்கு ஏதனைப் பிடிக்கேல்லையா துர்கா?” ஒலிவியா கேட்டுவிட்டாள்.

“ஏய் என்ன இது கேள்வி?  உண்மையாவே எனக்கு அப்பிடியெல்லாம் ஒரு எண்ணம் இல்லையப்பா. உன்ர  ப்ரோக்கு முன்னால வச்சு இப்பிடியெல்லாம் கேட்டிராத சரியா.” வாயைச் சுழித்துவிட்டுக் கதை வளர்க்காது நகர்ந்த தோழியையே பார்த்து நின்றாள், ஒலிவியா.

“பிடிச்சிருந்தா சொல்லிரு. ஏதன் நல்லவன் எண்டு நினைக்கிறன்.  உன்னை உண்மையாவே …” தொடர்ந்து சொன்னவள் நண்பியின் கோபப்பார்வையில் வாயை மூடிக்கொண்டாள்.

அதன்பின் அங்கு ஒரு வகை அழுத்தமான அமைதி நிலவியது.  அதைக் கிழித்தது, “சொறி கைஸ், நீங்க ரெடியா, போகலாம்.” என்றபடி வந்த ஏதனின் குரல்.

அவன் குரலில் இருந்த ஏதோவொன்று துர்காவைச்  சட்டென்று நிமிர்ந்து பார்க்க வைத்திருந்தது. வாயிலுக்கு எதிரிலும்தான் அமர்ந்திருந்தாள். உணவு மேசையில் இருந்து ஒலிவியா, வேர்த் எழுந்துவர முதல் சரேலென்று  எழுந்தவள், “ என்ன நடந்தது ஏதன்? திரும்பவும் ஆரும் அட்டாக் பண்ணிட்டினமோ?” வேகமாக அவனை நெருங்கியிருந்தாள்.

பார்வையில் ஒளியடிக்க  உதட்டில் சிரிப்பு நெளிய அவளின் பதைபதைப்பை இரசிப்போடு பார்த்து நின்ற ஏதனுக்கு, அதுவரை மனத்துள் இருந்த கனம் அகன்ற உணர்வு. அதுமட்டுமா? அவனை அழுதிக்கொண்டிருந்த சோர்வு, பசி என்று எல்லாமே போயே போயிருந்தது. 

“ஏதன் கேக்கிறன் எல்லா? என்னெண்டு காயம்பட்டது? புருவம் இப்பிடி வீங்கியிருக்கு?  சும்மா பிளாஸ்டர் ஒட்டியிருக்கிறீங்க? காயத்தைப் பாப்பம் ?” அவன் மேல் கையைப் பிடித்து உலுக்கியவள், “ஏதன் என்ன நடந்தது?” என்று சேர்ந்து ஒலித்த ஒலிவியா, வேர்த் குரலில்தான் தன்னுணர்வு பெற்றாள். பட்டன்று கையை விலக்கிக்கொண்டாள். சற்றே தள்ளியும் நின்றுவிட்டவள், இத்தனை கேட்டும் பதில் சொல்லாதவனைக் கலங்கிவிட்ட கண்களோடு ஏறிட்டாள். அவன் அவளையேதான் பார்த்திருந்தான்.

‘உனக்கு என்னில் எந்தவித உணர்வுமே இல்லையா பெண்ணே? உன்ன நீயே எத்தின நாள்களுக்கு ஏமாற்றுகிறாய் எண்டு பாக்கத்தானே போறன். ஆனால் ஒண்டு , என்னை நீ ஏமாற்றேல்ல. உன்ர  மனத்தைக் காட்டிட்ட!’ மனத்துள் சொன்னபடி,  அவள் தலையில் கையை வைத்து அப்படியும் இப்படியும் அன்போடு அசைத்தான். 

“அது ஒண்டும் இல்ல, சின்னக் காயம்தான்.”  கனிந்த பார்வையும் முறுவலுமாகச் சொன்னான்.

“சின்னதோ பெரிசோ எப்பிடிக் காயம்பட்டது?” அவன் கரத்தை விலக்கிக்கொண்டு கேட்டாள், துர்க்கா. 

“அது… தாத்தாவோட சின்னதா  வாக்குவாதம் ஆகிற்றா…அப்பிடியும் சொல்லேலாது, கோவப்பட்டுக் கத்திட்டன். அவர் எனக்குத் தாத்தாவாச்சே, கையில கிடைச்ச  டிவி ரிமோட்டால …” என்றுகொண்டே புருவத்தை நிவி விட்டவன் விண்ணென்ற வலியை மறைத்துச் சிரித்தான்.

“உங்கட தாத்தாவா?” என்ற துர்க்கா, நெற்றி சுருங்க அவனைக் கூர்மையாகப் பார்த்தாள்.

“ஏதன், உங்கட தாத்தாவா அந்த கொலைகாரன்கள அனுப்பினது? என்னைக் கொல்லவா? ஐயோ! நான்தான் உங்களுக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்ல எண்டனே.  எல்லாம் உங்களாலதான். முருகா முருகா! அப்ப என்னைக் கொல்லப் போறாங்களா? நான் …நான் இப்பவே அவுஸ்திரேலியா போகப்போறன்.” என்று அழுதுவிட்டாள்.

ஓடிவந்து நண்பியைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள் ஒலிவியா. வேர்த்துக்குமே பெரும் அதிர்வு. “என்ன இதெல்லாம் ஏதன்? துர்கா என்ன சொல்லுறா? அப்ப  காலேல நடந்ததுக்கு உன்ர கிராண்ட்பா தான் காரணமா?” கோபத்தோடு கேட்டான்.

“அச்சோ இல்ல இல்ல… அப்பிடியெல்லாம் இல்ல. இவளக் காதலிக்கிறன் எண்டு சொல்ல, தாத்தா சரியாக் கோவப்பட்டவர். அதான் நானும் அவரில சந்தேகப்பட்டு நேரவே போய்க் கேட்டனான். என்ன நீ எப்பிடி இப்பிடிக் கீழ்த்தரமா நினைக்கலாம் எண்டு  கேட்டுத்தான் இந்த அடி விழுந்தது.” என்றவன், “அதை விடுங்க, இந்த கேர்ளுக்கு  இவ்வளவுதான் வீரமா? நானும் ஏதோ பெரிய வீராங்கனை எண்டு நினைச்சிருந்தனே!” என்று துர்காவை நக்கல் அடித்தான். 

அவளோ மீண்டும் அவன் தாத்தாவில் சந்தேகமாகக் கேட்டாள். காவல்துறை, தனியார் புலனாய்வு மட்டுமன்றி இவர்கள் எல்லோருக்கும் தனிப்பட பாதுகாப்பு ஏற்பாடு செய்ததையும் சொல்லி அவர்கள் சந்தேகத்தைத் தீர்த்தவன், அப்போதுதான் வீட்டினுள் உணவு வாசத்தை உணர்ந்தான்.

“சாப்பாடு ஓடர் பண்ணி எடுத்தீங்களா?” அவன் கேட்டு முடிக்கவில்லை, “நான்தான் சமைச்சனான், உங்களுக்கும் இருக்கு. சாப்பிட்டா நாங்க ஹொஸ்பிட்டல் போகலாம்.” என்றாள், துர்கா.

ஒலிவியா புருவங்கள் வில்லாக வளைந்தன. விழிகளோ, கணவனிடம் இரகசிய பாசையில் பேசின. அவனும்தான் சிரிப்பை அடக்கிக்கொண்டு துர்கா, ஏதனைப் பார்த்தான்.

“வாட்? உன்ர  ப்ரோக்கு எண்டு எடுத்து வச்சது நீ . பிறகு என்ன இஞ்ச பார்வை?” என்றுவிட்டு , “முகம் கழுவிட்டு வாறன்.” விருட்டென்று அறைக்குள் புகுந்துவிட்டாள்  துர்கா.

பசி என்றாலும் நிதானமாக இரசித்து ருசித்து உண்டான், ஏதன். அவளும் அருகில் இருந்திருக்க இன்னும் நிறைவாகத்தான் இருந்திருக்கும். ‘சரி சரி நிதானமாக முன்னேறு ஏதன்.’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

அடுத்த முக்கால் மணி நேரத்தில் வைத்தியசாலை செல்லும் நோக்கில் வெளியே வந்த போதுதான் துர்காவுக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. 

“நான் இப்ப என்னத்துக்கு அங்க? செஃப்ப  அண்டைக்கே நான் பாத்திட்டன் . நீங்க போயிட்டு வாங்க. நான் சித்தி வீட்டுக்குப்போயிற்று ஆறு மணிபோல இஞ்ச வாறன்.” என்றாள் ஒலிவியாவிடம்.

ஏதனுக்குச் சுர்ரென்று ஏறிட்டு. அதுவரை இருந்த இதம் ஆட்டம் கண்டுவிட்ட உணர்வு. திரும்பி முறைத்தான். அவளும் முறைத்தாள்.

 “ஒலிவியா, ஹொஸ்பிட்டல் போயிட்டு வரேக்க அவாட சாமான்கள எடுக்கலாம். என்ர டாட்ட பாக்க விருப்பம் இல்லையோ காருக்க இருக்கச் சொல்லு.” என்றவன் மீண்டும் அவளை முறைத்தான். “அதுக்கும்  விருப்பம் இல்லையோ ஒரேயடியா போகச் சொல்லு.” என்றுவிட்டு விறுவிறுவென்று முன்னால் நடந்துவிட்டான்.

“என்ன ஒரேயடியா போ எண்டு சொல்ல இவர் ஆர்? நான் இஞ்ச  நிக்கிறது உனக்காக, நீ கேட்டதுக்காக எண்டு தெளிவாச் சொல்லி வை ஒலிவியா.” அவனுக்கும்  கேட்கட்டும் என்று சத்தமாகவே சொன்னவளை, “பேசாமல் வா .” இழுத்துக்கொண்டு நடந்தாள் ஒலிவியா.

error: Alert: Content selection is disabled!!