வைத்தியசாலை கார் நிறுத்துமிடம். சாரை சாரையாக நின்ற கார்களுள் இடம் பார்த்துச் சொருகிக்கொண்டது, ஏதன் கார்.
‘கிளிக் கிளிக் டப் டப்’ சத்தங்கள் மட்டுமே கேட்டன. நால்வரும் இறங்கிக்கொண்டார்கள். வைத்தியசாலைக் கட்டிடங்கள் உயர்ந்து நின்றன.
அண்ணாந்து பார்த்தாள் ஒலிவியா. இலண்டன் வந்து இறங்கிய கையோடு நடந்த பயங்கரமான கூத்தில் ஆரோன் பற்றி மனத்துள் இருந்த கலக்கம் சற்றேனும் அமிழ்ந்திருந்தது. இப்போதோ, அந்த மனிதன் நினைவுகள் குப்பென்று அவளை ஆட்கொண்டது. என்ன கதைப்பது, எப்படி எதிர்கொள்வாள் என்பது கூட அவளுக்குச் சரியாக விளங்கவில்லை.
அவள் முன் இன்னார் நான், நீ பிறப்பதற்குக் காரணமானவன், உன் தந்தை என்று, திடகாத்திரமாகவும் நிமிர்வாகவும் அவர் வந்து நின்ற போது வலு அலட்சியமாய் எதிர்கொண்டிருந்தாள், அவர் அன்பை மறுத்திருந்தாள். இப்போதோ, நலிந்து நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் இருக்கையில் அது ஏலுமா என்ன?
‘அப்போ ஓடிப்போய்க் கட்டிப் பிடித்துக் கொஞ்சி கண்ணீர்விட்டு…’ அவளுக்கு இந்த வழியிலும் சிந்திக்க இயலவில்லையே. அவளுக்கு ஏன் இந்தத் தர்மசங்கட நிலை?
மனத்திடம் நழுவும் உணர்வு. ஏனோ, தந்தை என்ற உறவை, உணர்வை, அன்பை யாசித்து நின்ற மனிதரை ஒதுக்கிய தருணங்கள், அதையுணர்ந்து அவர் கசியவிட்ட கண்ணீர் என்று ஒன்று ஒன்றாக நினைவுக்கு வருகின்றனவே.
அவளையே பார்த்துக்கொண்டு இறங்கிய வேர்த், மனைவி கரத்தைப் பிடித்து அழுத்திக்கொண்டே அவளோடு இணைந்து நடக்க ஆரம்பித்தான்.
ஏதன் இன்னமும் முகத்தை நீட்டிகொண்டுத்தான் இருந்தான். “கம் திஸ் சைட்.” என்றபடி, விடுவிடுவென்று முன்னால் நடந்தான்.
துர்கா தயங்கி நின்றாள். அவர்கள் குடும்பமாகப் போகிற இடத்தில் அவளுக்கு என்ன வேலையாம்? ‘அவேக்குப் பின்னால போகாத!’ மீண்டும் மீண்டும் மனம் எச்சரித்திட்டு. நிச்சயம் அங்கு ஏதன் தாய், சகோதரன், சகோதரிகள் நிற்பார்கள். ஏற்கனவே அவர்களிடம் பட்ட அவமானம் போதாதா? மீண்டும் உன் நண்பி முன்னால் வைத்தும் அவமானப்படப் போகிறாயா? முதல் என்ன தேவைக்குச் சொல்லு? மனம் வாதிட்டது.
ஏதன் சட்டென்று திரும்பினான். அசையாது நிற்பளைப் பார்த்துப் புருவங்களைச் சுருக்கினான். அவள் முகத்தில் இருந்த இறுக்கம், கலவரம் , குழப்பம் அவன் மனத்தைத் தாக்கிற்று. இதற்கு முதல் இங்கு வந்துவிட்டு மனம் நொந்து சென்றது நினைவில் வந்திட்டு.
“ஒலிவியா உன்ர நண்பியையும் கூட்டிக்கொண்டு வாவன்.” என்றான், தன்னைக் கடந்து செல்ல முனைந்த ஒலிவியாவைப் பார்த்து.
அவள் விசுக்கென்று திரும்பி முறைத்தாள். “என்ன ரெண்டு பேரும் விளையாட்டுக் காட்டுறியளோ? உனக்கு வேணும் எண்டால் கையப் பிடிச்சுக் கூட்டிக்கொண்டு வா. 4த் ப்ளோர் 115 தானே? நாங்க போறம்.” வேர்த்தையும் இழுத்துக்கொண்டு மின்தூக்கிக்குள் நுழைந்துவிட்டாள்.
“துர்கா பாவம் கூட்டிகொண்டே போகலாம்.” என்று கணவன் சொன்னதைக் காதில் வாங்கவில்லை, அவள். “அவேக்க என்ன ஓடுது எண்டு உங்களுக்கு விளங்கேல்லையா வேர்த்? என்ன எண்டாலும் அவே ரெண்டு பேருமே கதைச்சு ஒரு நல்ல முடிவுக்கு வரட்டும். நல்ல செய்தி சொல்லட்டும். நாங்கள் இடைக்க போக வேணாம்.” மெல்லிய சிரிப்போடு சொன்னவள், மூடும் மின்தூக்கிக் கதவால், ‘விட்டுட்டுப் போறியா?’ என்று, அதிர்ந்து நிற்கும் நண்பியைப் பார்த்தாள்.
நீண்ட பெருமூச்சோடு விறுவிறுவென்று துர்க்காவை நோக்கி வந்தான் ஏதன். அதில் நின்று அவளோடு வாக்குவாதம் செய்ய எல்லாம் அவன் தயாராக இல்லை. அதுவே, நெருங்கிய வேகத்தில், “வா” என்று கரத்தைப் பற்றியபடி நடக்க ஆரம்பித்துவிட்டான்.
அவன் பிடிக்குள் அடங்கிவிட்ட கரத்தால் கடத்தப்பட்ட வெம்மை அவள் ஆழ்மனம் வரைப் பாய்ந்தது. கையை உதற, அவனைக் கடிந்துகொள்ள முயன்றாள், இயலவில்லை. விழிகள் தான் கலங்கித்தொலைத்தன.
மின்தூக்கிக்குள் நுழைந்து நான்கை அழுத்தியவன், கதவை மூடுவதற்கும் அழுத்திவிட்டே துர்கா முகம் பார்த்தான். அப்போதும் அவள் கை அவன் கைக்குள்தான். உதறி விடுவிக்கவில்லை என்கிறதே அவள் மனநிலையைச் சொன்னது.
இறுக அணைத்து ஆறுதல் சொல்ல, என் வீட்டினர் உன்னை அவமதிக்கும் வகையில் ஒற்றை வார்த்தை கதைக்க மாட்டார்கள், விடமாட்டேன் என்று சொல்ல வேண்டும் என்று மனம் பரபரத்தது. கட்டுப்படுத்திக்கொண்டான்.
நீண்டதொரு பெருமூச்செறிந்தான். அப்போதுதான் துர்காவுக்குச் சுயம் வந்தது. பட்டென்று கையை உதறி விடுவித்தாள்.
“அம்மாவோ வேற ஆருமோ அண்டைக்குப் போல உன்னோட கதைக்க மாட்டினம். நானுமே பாத்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டன். உன்ர மனம் நோகிற மாதிரி எதுவும் நடக்க விடமாட்டன்.” ஆழ்ந்த குரலில் அவள் பார்வையைத் தாங்கியபடியே சொன்னான்.