ஆரோனுக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்திருந்தது. சரியாக ஏழு நாள்கள் வைத்தியசாலையில் இருந்துவிட்டு வீடு செல்ல ஆயத்தமாகிறார், செஃப்.
“மகளே…” கணவனோடு தாழ்ந்த குரலில் கதைத்துக்கொண்டிருந்த ஒலிவியா சட்டென்று திரும்பினாள். அதேநேரம் “என்ன டாட்? என்ன வேணும்?” வேகமாக நகர்ந்த ஐலா மற்றும் ஏவா அவரின் இருமருங்கிலும் அணைவாக நின்றுகொண்டார்கள்.
ஆரோன் பார்வை ஒலிவியாவில். அவள் பார்வையும் அவரில்தான். பார்த்தாளேயொழிய, சற்றுமே அசையவில்லையே! எதிர்பார்ப்புக்கு என்ன? எத்தனை அடிவாங்கினாலும் திருந்தாதாம். செஃப் பெருமூச்செறிந்தார். வலக்கையை உயர்த்தி ஒலிவியாவைத் தன்னை நோக்கி அழைத்தார். மறுநொடியே, அவரோடு அணைந்து நின்றிருந்த பெரியவள் ஐலா விசுக்கென்று நகர்ந்துவிட்டாள்.
“மகளே, நீயும் வீட்டுக்கு வாவன். இன்னும் மூண்டே மூண்டு நாள்களில் நீ அவுஸ்திரேலியா போயிருவதானே? பிறகு எப்ப நேரில சந்திப்பமோ?” ஒலிவியா விழிகளையே பார்த்தபடி கெஞ்சலாகக் கேட்டார், ஆரோன்.
அவருக்கு மகள் தன்னைப் பார்க்க வந்துவிட்டாள் என்ற நெஞ்சு நிறைந்த மகிழ்வு இருந்தாலும் தவிர்க்க முடியாது, துர்காவும் வேர்த்தும் வற்புறுத்தியதில் வந்தாளோ என்ற எண்ணமும் உண்டே. அதுவே அவள் விழிகளையே பார்த்துக்கொண்டு கதைப்பார். அங்கே ஒரு கணமேனும் அவர் மீதான ஒதுக்கமோ, வெறுப்போ தென்பட்டுவிடுமோ என்ற பதைபதைப்பு அவரை ஒரு வழியாக்கிக்கொண்டிருக்கிறது.
ஒலிவியா மனத்தில் அம்மனிதர் மீதான அன்பு பாசம் கடந்து இரக்கமே. அவர் வாழ்வில் என்றோ செய்துவிட்ட சறுக்கல், இன்று அணுவணுவாக வதைக்கிறது.
இதற்கு முடிவேயில்லையா என்ன? குற்றவுணர்வில் மிகுதிக்காலத்தைக் கழிக்க வேண்டுமா என்ன? இந்த எண்ணமே இவளை இங்கே இழுத்து வந்தது.
இந்த மனிதன் ஒலிவியா என்பவளைப் பற்றி எண்ணி வருந்தவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டவள் இயன்ற மட்டும் அவரைப் பரிவோடு அணுக எண்ணினாள். அதை நடைமுறைப்படுத்தினாள்.
அவளின் அந்தப் பரிவுக்குப் பின்னால் தந்தை என்ற பாசம் எல்லாம் இல்லை என்று ஆரோன் கண்டுகொண்டாரோ, உணர்ந்தாரோ தெரியாது. ‘இப்படித்தான் சிறுபிள்ளை போல் நடக்கிறார்.’ என்று எண்ணிக்கொண்டே அவரைச் சமாதானப்படுத்த ஆரம்பித்தாள், ஒலிவியா.
“ப்ளீஸ் டோன்ட் புட் மி இன் எ ஸ்பொட் (தர்மசங்கடப்படுத்தாதீங்க) நான் ஒவ்வொருநாளும் வந்து பாக்கிறன்.” வெகு தன்மையாகச் சொன்னவளில், மீண்டும் மீண்டும் உன் வீட்டுக்கு வரும்படி கேட்டுவிடாதே என்ற கெஞ்சல் இருந்தது. பரிதாபமாகப் பார்த்தார், ஆரோன்.
“என்ன பேசாமல் பாத்துக்கொண்டு நிற்கிறீங்க? நீங்க சரி சொல்லுங்கோவன்.” வேர்த், ஏதனைப் பார்த்துச் சொன்னார்.
இருவருக்குமே ஒலிவியா மறுப்பதற்கான காரணம் தெரியும். ஒரேயடியாகத் தன் குடும்பத்தினர் மனங்களை மாற்றிவிட இயலும் என்ற நம்பிக்கை ஏதனுக்கு இல்லை. காலத்தின் சத்தி மகத்தானது. அதன் போக்கில் விடுவோம் என்றுதான் ஒலிவியா வந்ததிலிருந்து தமையனும் சகோதரி தாயும் முறைப்பதையும் முணுமுணுப்பதையும் அமைதியாகப் பார்த்திருந்தான். இனி வீட்டுக்கு என்று வந்துவிட்டு ஒலிவியா மனம் வருந்திச் செல்வது வேண்டாமே என்றுதான் அவனும் நினைத்தான்.
அதையேதான் வேர்த்தும் பிரதிபலித்தான். அதிலும் அவன் மனைவியிடம், “என் கணவருக்காக உன்னைச் சகித்துக்கொள்ளப் பழகிறன்.” என்று சோஃபியா சொன்னதும் தெரியுமே. அதைகேட்டுக்கொண்டிருந்த ஐலா ஒரு படி மேலே சென்று , “எங்களுக்கு எண்டா அந்தத் தேவையும் இல்ல. எங்களோட பழக வேணும் எண்ட ஆசை உனக்கு இருந்தா அதை இப்பவே விட்டிரு! ஏதன் போல நாங்க ஒண்ணும் முட்டாள்கள் இல்ல. நீயும் இந்த வீட்டில ஒருத்தி எண்டுறது ‘டாட்’டுக்கு மட்டும்தான். நினைவில வச்சிரு! ” என்று, முகம் கோண வெடுசுடுவென்று சொல்லியிருந்தாள்.
கேட்டுக்கொண்டு நின்ற ஒலிவியாவுக்கும் வேர்த்துக்கும் அவ்வளவு கோபம். ஒலிவியா முகம் சிவந்து போயிற்று. சுருக்கென்று பதில் சொல்ல வாய் உன்னிவிட்டு, ஆரோனை எண்ணி அமைதியாக நின்றாள்.
வேர்த்தால் அது முடியவில்லை. ஐலாவின் அருகண்மையில் சென்று நின்றவன், அவளை அலட்சியமாகப் பார்த்தான். “மைண்ட் யுவர் டங் ஐலா! உன்னோடயோ உன்ர குடும்பத்தோடையோ பழகோணும் எண்டு இஞ்ச ஆரும் ஆசைப்படேல்ல. என்ர மனைவியோட கதைக்கேக்க வார்த்தைகளில வெகு கவனம் தேவை! கொட் இட்?” கோபத்தோடு அவன் சொன்னது ஐலா முகத்தைச் சிறுத்துப்போக வைத்திருந்தது. அவள் பாட்டி ஈவ்லின் வந்து அவளை இழுத்துச் சென்றுவிட்டார்.
ஏவா ஒதுங்கவோ ஒதுக்கவோ இல்லை. தகப்பனோடு கதைத்துவிட்டு நின்ற ஒலிவியா கரம் பற்றி அன்பாகவே நலம் விசாரித்திருந்தாள். கண்ணீர் ஈரத்தோடு விழிகள் படபடக்க அவள் வந்து கதைத்ததால், அவளுக்காகவும் அன்பாக அரவணைத்த ஈவ்லினுக்காகவும் மற்றவர்களைப் பொறுத்துக்கொள்ள முடிந்தது.
இப்படியிருக்க, அவர்கள் வீட்டுக்கெல்லாம் எப்படிச் செல்வது? அதுவே ஒருவாறு ஆரோனைச் சமாதானப்படுத்தி சோஃபியா ஆட்களோடு வீட்டுக்குக் கிளம்பு வைத்தார்கள்.