ஏதனின் இலஞ்சியவள் 23 – 2

ஏவாவையும் ஷொப்பிங் வருகிறாயா என்று கேட்டாள், ஒலிவியா. அவளும் ஆமென்றுவிட்டாள். சோஃபியா கடுமையாக முறைத்தார். ஆரோனுக்கோ அவ்வளவு மகிழ்வு. அதுவும் வருகிறேன் என்ற ஏவா, ஒலிவியா கரத்தைப் பற்றிக்கொண்டு நின்றதை பார்த்துக் கண்கலங்கிவிட்டார். அதைப் பார்த்த சோஃபியா கோபத்தை அடக்கிக்கொண்டு போக வேண்டியதாயிற்று.

துர்கா பல்கலைக்குச் சென்றிருந்தாள். மதியம் ஒரு மணிக்குத்தான் நிறைவடையும். தாம் வந்து அழைத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டிருந்தாள், ஒலிவியா. அவளையும் அழைத்துக்கொண்டு செல்வதாகக் கதைத்திருந்தார்கள். 

ஏதன் கார் துர்க்காவின் பல்கலைக்கழகம் நோக்கி விரைந்தது.   

அப்போது துர்க்காவிடமிருந்து  ஒலிவியாவுக்குத் குறுந்தகவல் ஒன்று வந்தது. உறவினர் ஒருவருக்கு சுகமில்லை என்றும்  சித்தியோடு அவர்கள் வீடு  செல்வதாகவும் சொன்னவள், தாம் வீடு வரப் பிந்தும்  என்பதால் சித்தி வீட்டிலேயே தங்குவதாகவும் அதில் இருந்தது.  

 ஒலிவியா அதைச் சத்தமாகவே வாசித்தாள். கேட்ட ஏதன் முகம் கன்றிச் சுருங்கிற்று. “பொய்! அவளுக்கு வர விருப்பமில்ல எண்டதுதான் உண்மை.” என, அவன் முணுமுணுத்தது காருக்குள் தெளிவாகவே கேட்டிட்டு. 

அவளின் மறுப்பும் இந்த ஒதுக்கமும்  அவனைப் போட்டு வதைத்தெடுக்கிறதே! மறுபுறமோ,  தன்  நேசத்தை, விருப்பை  ஏற்கும்படி தன்னை அவன் நிர்ப்பந்திப்பதாக அவன் விழிகளைப்  பார்த்துக்கொண்டே துர்கா சொல்லிச் சென்றிருந்தாள். அந்தக் கணமும் அவள் கதைத்தவையும் அவனை அங்கிங்கு அரங்க விடாது பிடித்து வாட்டி எடுக்கின்றன. அவனுள் மிகுந்த குன்றலைக் கொடுக்கவும் செய்கின்றன. 

‘வேணவே வேணாம் சரி வராது எண்டு விலகுவதிலேயே அவள் குறியாக இருக்கிறாள், விட்டுத் துலையேன்.’ புத்தி அதட்டினாலும்  அவளை விட்டுத் தர அவனால் இயலுமா என்றால், “ஏலவே ஏலாது!” என்று கூவித் துலைக்கிறதே மனம்.   

நெற்றி சுருங்க முகம் சிடுசிடுக்க காரைச் செலுத்திக் கொண்டிருந்தவனைப் பார்க்க உண்மையில் பாவமாக இருந்தது. 

“என்ர அண்ணா எப்பிடி இருந்தவர் தெரியுமா ஒலிவியா? இண்டைக்கு  துர்கா இந்தப் பாடு படுத்திரா. உன்ர  பெஸ்டி தானே, சொல்ல மாட்டியா?” என்று , தன்னருகில் இருந்த ஒலிவியாவிடம் குறைப்பட்டாள் ஏவா. அவளுக்குத் துர்க்காவை மிகவுமே பிடித்திருந்தது. தாய் சகோதரன், சகோதரி தம் விருப்பமின்யைக் காட்டிய போதும் ஏதனுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் சற்றும் பொருத்தமில்லாதவள் என்று முகம் சுளித்த போதும், இவளுக்கோ, துர்கா தன் தமையனுக்கு நல்ல பொருத்தம் என்ற எண்ணம்தான்.  ஆனால் அந்த எண்ணம் அந்த துர்க்காவிடம் இல்லையே!  தமையனை எட்டி நில் என்கிறாள். பிறகும் இந்த அண்ணா ஏன் அவளையே நினைத்திருக்க வேண்டும்? தேடிச் செல்ல வேண்டும்? அவள் தவிர்ப்பில் தாக்குப்பட வேண்டும்?

அன்று, ஆரோன் அறுவைச் சிகிச்சைக்குச் செல்ல முன் எல்லோருக்கும் முன்னால்  வைத்தே துர்க்காவைத்  தம்  குடும்பத்துக்குள்  வரவேற்று இருந்தார். துர்க்காவும் ஏதன் கரத்தைப் பிடித்துக்கொண்டு அலங்க மலங்க விளித்தாலும் மறுக்கவில்லை.

அதே, மறுநாளே ஏதனிடம் வந்து நின்றாள்.  எனக்கும் உனக்கும் சரி வராது என்று ஆரம்பித்தாள். “இவ்வளவுக்கும் பிறகு திரும்பவுமா? டாட்  வீட்டுக்கு வந்த பிறகு உன்ர  வீட்டில் கதைக்கிறம் துர்க்கா. ப்ளீஸ் இப்படிக் கதைக்காதே.” என்றபடி அவள் கைப்பற்ற முனைந்தான், அவன். 

சரேலென்று தள்ளி நின்றவள், “உனக்கு எத்தனை  தடவைகள் சொன்னாலும் உன்னைப் பற்றி மட்டும்தான் நினைப்பியா? நான் என்ன இயந்திரமா?” சீறிவிட்டிருந்தாள். “ உன்ர அம்மாவும் அண்ணா தங்கையும் சொல்லுறதுபோல ரெண்டு பேருமே எல்லா விதத்திலும் வேற வேற. நான் உனக்குக்  கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவள்தான் ஏதன், அதுக்காக நான் எதிலும் இழிஞ்சவள் இல்ல.” மூக்கு விடைக்கக் கோபத்தோடு சொன்னவளுக்கு, மீண்டும் மீண்டும் அவளை இழிவாகப் பார்க்கும், பேசும் அவன் குடும்பத்தினர் பார்வையில் படவே விருப்பம் இல்லை. இதில் இவனைத் திருமணம் செய்வதா என்று இருந்தது.

 “தயவு செய்து விரும்புறன் எண்டு சொல்லுறத விட்டிரு. உனக்கும் உன்ர குடும்பத்துக்கும் பொருத்தமானவளா பார்!” என்று சொல்லி இருந்தாள். இதை ஒலிவியாவும் வேர்த்தும் கதைக்கையில் ஏவாவும்  கேட்டுவிட்டாள். அதன்பின் ஏதன் முகம்  இறுகத்தான் நடமாடுகிறான். கதை பேச்சு அவ்வளவாக இல்லை. ஆனாலும் அவள் சொன்னதுபோல் விலகிவிட்டனா என்றால் இல்லை என்பதும் வெளிப்படையாகவே தெரிகிறதே. எந்த நம்பிக்கையில் என்ற கேள்விதான், அவள் இப்படிச் சொன்னது தெரிந்த ஒலிவியா, வேர்த் மற்றும் ஏவாவுக்கு. 

“இப்ப என்ன செய்ய, நேர மோலுக்குப் போவமா ?” கார் மெதுவாக, பக்கவாட்டில் திரும்பி ஒலிவியாவிடம் கேட்டான் ஏதன். குரல் அவ்வளவு இறுகிப்போயிருந்தது. 

“இல்ல, முதல் துர்க்காட யூனிவெர்சிட்டிக்கு போவம்.” என்றுகொண்டே நண்பிக்கு அழைத்தாள், ஒலிவியா. 

ஏதனுக்கு அதுவே போதுமாக இருந்ததோ , மறுபேச்சு இல்லை கார் அவள்  இடம் நோக்கி விரைந்தது.

அழைப்பு ஒரு தடவை சென்றுவிட்டு ஓய்ந்தது. “இவள” முணுமுணுத்தபடி மீண்டும் அழைத்தாள், ஒலிவியா.

‘ஐ அம்  இன்  தி கிளாஸ். கோல் யூ சூன்’ தட்டிய வேகத்தில்  அனுப்பிவிட்டே நாக்கைக் கடித்துக்கொண்டாள், துர்க்கா. பிடிபட்டுவிட்டாளே. ‘கொல்லப்போறாள்’ என்று எண்ணியவள்  இங்கு வருவார்களோ என்று தவித்துப்போனாள். எழுந்து சென்றுவிடுவோமா என்றுகூட நினைத்தாள்.  ஆனால் அன்றைய வகுப்பு மிகவும் முக்கியமானது. அதே, அமைதியாக இருக்க வைத்தது. நிச்சயம் ஏதன்தான் அழைத்து  வருவான் என்று தெரியுமே. அன்று, வைத்தியசாலையில் வைத்து அவனிடம் தன் நிலைபாட்டை உறுதியாகச் சொன்னபிறகு, கடந்த நான்கு நாட்களாக மிகவும் கவனமாக அவன் பார்வையில் படாமல் நடந்து  கொள்கிறாள்.  இன்று சந்தித்தால் மீண்டும் அதே கதை கதைப்பானோ  என்று மனத்துள் கலங்கி நின்றாள், அவள். 

அதே கலக்கத்தோடு வகுப்பு முடிய வெளியே வந்தால் வாசலுக்கு நேரே காரை நிறுத்தியிருந்தான், ஏதன். ஒலிவியா இறங்கி நின்றிருந்தாள்.  இவள் உருத் தெரிந்ததும் கழுத்தை நெறிக்கும் பாவனை செய்தவள், தவிப்போடு நெருங்கியவளைப் பிடித்த பிடியில் காருக்குள் ஏற்றிவிட்டிருந்தாள். விசுக்கென்று கார் கிளம்பியது. இவள் மிகவும் கவனமாக முன்னால் பார்ப்பதைத் தவிர்த்தாள். 

அருகில் இருந்த ஏவா, “உன்ர சொந்தக்காரர் இஞ்சயா இருக்கினம்? இப்ப எப்பிடி  இருக்கு?” என்றாள் நக்கலாக. வெடுக்கென்று பார்த்து  முறைத்தாள், துர்க்கா. அவளும் முறைத்தாள். 

அப்படியே ஏதன் விழிகள் ஏவாவுக்கு. அவன் விழிகளின் சாயலில் உள்ள விழிகள் இவளை இந்தளவுக்குப் பாதிக்குமா? பட்டென்று பார்வையை விலத்தியவள், சிரிப்பும் ஒற்றைப் புருவ உயர்தலுமாகப் பார்த்த ஒலிவியாவையும் சேர்த்து முறைத்தவள் மறந்தும் முன்னால் பார்க்கவில்லை. 

அழுந்த மூடிய இதழ்களோடு பார்வையை வலு அடக்கமாக வெளிப்புறமாகத் திருப்பிக்கொண்டாள். இவள் தவிர்த்த முன்புறத்தையே அவள் உள்ளுணர்வு பார்த்து நின்றது. அதுவும்  ரியர் வியூவால் ஒருத்தன் துளைத்தெடுத்துப் பார்த்திருந்தானே. சளைக்காமல், நிமிர்வாக, ஒரு படி மேலே சென்று வெகு அசட்டையாக அவன் பார்வையை எதிர்கொள்ள முயன்ற உள்ளுணர்வாலேயே அது முடியாதிருந்தது. 

காருக்குள் குளுகுளுவென்று ஏசி, ஆனால் இவளுக்கு வியர்த்தது. கண்கள் கூடக் கசியப்போகிறேன் என்று மிரட்டின. ஏனோ தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது. இதெல்லாம் எதற்காக? பதில் தேடவே பயமாக இருந்தது.

‘இஞ்ச பார் துர்க்கா, உன்னை உன்ர  குடும்பத்தை ஒரு படி மேலே சென்று உன்ர  நாட்டை, இனத்தை எண்டு அசட்டையாகப் பாக்கிற, அவமானப்படுத்திற இடத்தில, அது எவ்வளவு பெரிய திரவியம் கிடைக்கும் எண்டாலும் சரி, உன்ர  இருப்புத் தேவையில்ல.’ புத்தியின்  உரத்த அதட்டல் வேலை செய்தது.  உள்ளங்கைகள் இரண்டையும் இறுகப் பொத்தித் தன்னை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க முயன்றாள், வெற்றியும் கண்டாள்.  

error: Alert: Content selection is disabled!!