ஏதனின் இலஞ்சியவள் 26 – 1

“துர்கா வெய்ட்!”  விறுவிறுவென்று நடந்தவள் தன்னால் நின்றாள். அந்தக் குரலில் இருந்த கோபமா, ஏமாற்றமா இவற்றோடு கலந்து கிடந்த தவிப்பா எதுவோ ஒன்று அவள் நடையை நிறுத்திவிட்டிருந்தது.

“இப்ப என்ன வேணும் உங்களுக்கு?” சிடுசிடுப்பாகக் கேட்டபடி விசுக்கென்று திரும்பியவளை வேகமாக  நெருங்கியவன் அவளை ஆழ்ந்து பார்த்தான். 

‘எனக்கு என்ன வேணும்  எண்டு தெரிஞ்சுகொண்டே கேக்கிறியே பெண்ணே’ என்றுதான் சொல்ல வந்தான். அவள் மீது நேசம் வைத்த இதயத்தின் பெரும் ஆசை அது. அதே இதயத்தைத் தயைதாட்சண்யமில்லாத  தவிர்ப்பால் எத்தனை தடவைகள் நோகச் செய்து விட்டாள்? அவள் மீதான அவன் நேசம் உருவாகி  மிகவுமே குறுகிய காலம்தான். இல்லை என்று சொல்லமாட்டான். ஆனால், நீண்ட நெடுங்கால உறவாக அவன் உணர்வது எதனால்? அது என்ன மாயையோ! பதில் தெரியவில்லை. அதுபோலவே மீண்டும் மீண்டும்  அவளிடம் தோற்றுப் போயும் இப்படிப் பின்னால் ஓடி வருகிறானே! அவன் இதயம் பின்னால் ஓடடா என்று துரத்துகிறதே!

“என்ன விசயம் ஏதன்?” அவன், தன்னையே மௌனமாகப்  பார்த்து நிற்பதில் சற்றே தடுமாறியவள் இதை  அதட்டலாகத்தான்  கேட்டாள்.

“உன்னட்ட இருந்து எனக்கு ஒண்ணுமே வேணாம். ஒரு விசயமும் இல்ல. வா கூட்டிக்கொண்டுபோய் விடுறன்.”

“ஓ  ஏதன், என்னால போகேலும். நீங்க போங்க.”என்றவளிடம் எதுவும் சொல்லவில்லை. பட்டென்று அவள் கரத்தில் இருந்த பையைத்  தன் கைக்கு மாற்றியிருந்தான். எதிர்பாராது நின்றதாலோ என்னவோ பையும் ஒரே இழுவையில் அவன் கைக்கு மாறிவிட்டிருந்தது.

“கனக்கக்  கதைக்காமல் வா.” விறுவிறுவென்று கார் நிறுத்தியிருந்த இடம் நோக்கி நடந்தவனை முறைத்தபடியே நின்றவள் பெருமூச்சோடு நகர்ந்தாள்.

அவள் சிறிய தாயார் வீடு வரும் வரை கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் காருக்குள் கனத்த அமைதி நிலவியது.  ஒரு கட்டத்தில் துர்காவால் அதைப்  பொறுக்க இயலவில்லை. அதேநேரம்  காரைச் செல்லுவதை மட்டுமே செய்வேன் என்ற கணக்கில் இறுக்கமாக வருபவனோடு கதை வளர்க்கவும் விரும்பவில்லை.

தவிப்பும் தத்தளிப்பும் மனத்துள் கட்டிபிடித்துப் புரண்டு அவளை ஒரு வழி செய்தன.  அதையும் மேவி, ஒவ்வொரு கணமும் அவளை அவமானப்படுத்தும் அவன் குடும்பம், முக்கியமாகப் பார்வையாலும் பேச்சாலும் வெறுப்பை உமிழும் சோஃபியாவும் ஐலாவும் ‘நீ எல்லாம் எங்களுக்கு ஒரு கணக்கே இல்ல’ என்றவகையில் நடந்துகொள்ளும் ஐவனுமே நினைவில் வந்து போனார்கள்.

 ஏதோ, இவனைக் காதலிப்பதாக அவள் தன் வீட்டில்  சொன்னதும் அப்படியே மகிழ்வில் மூழ்கி, இரத்தினக் கம்பள வரவேற்போடு கல்யாணம் நடத்தி வைத்துவிடுவார்கள் என்ற கணக்கில் அல்லவா இவர்கள் எண்ணம் இருக்கிறது. அவளுள்ளும் இறுக்கம் படரத் தொடங்கியது.

துர்காவின் சிறியதாயார் வீட்டின் முன்னால் காரை நிறுத்தினான், ஏதன். திரும்பித் துர்க்காவைப் பார்த்தான். அவள் என்ன ஏதென்று கேட்கப்போகவில்லை.  

“போயிட்டு வாறன் ஏதன். கூட்டிக்கொண்டு வந்து விட்டதுக்கு தாங்க்யூ!” வலு இயல்பு போல் சொல்லிவிட்டு  இறங்கிவிட்டாள். வேகமாகச் சென்று டிரங்கை திறந்து தன் பையையும் எடுத்துக்கொண்டாள்.

அவன் இறங்கவே இல்லை. அவள் டிரங்கை மூடிவிட்டு விலகவும் சிறு தலையசைப்போடு காரைக் கிளப்பிவிட்டான். சர்ரென்று செல்லும் கார் திருப்பத்தில் திரும்பி மறையும்  வரை அங்கேயே நின்றுகொண்டிருந்தாள், துர்க்கா. 

வீட்டினுள் நுழைந்தவளை அம்மம்மாவும் தாத்தாவும் கோபமாகப் பார்த்தார்கள். கதைக்கவில்லை. தானாகவே சென்று செல்லங் கொஞ்சிச் சமாதானம் செய்விக்க முயன்றாள், இவள். 

அந்நேரம் அழைப்பு மணி இசைத்தது. 

“ஆர்?” தாத்தா கதவைத் திறக்கச் சென்றார்.

கதவு திறந்த கையோடு, “நான் ஏதன், செஃப் ஆரோனிட  கடைசி மகன்.” என்ற குரல் கேட்க, நெற்றி சுருங்க, அம்மம்மா கையைப் பற்றிக்கொண்டே  முன்னறைக்கு வந்தாள், துர்க்கா. 

error: Alert: Content selection is disabled!!