ஈவ்லின், டோனி தம்பதியின் அந்த அழகிய மாளிகை பல வருடங்களின் பின்னர் கலகலப்பில் மூழ்கிக் கிடந்தது.
மறுநாள் இரவு விமானத்தில் ஒலிவியா, வேர்த் அவுஸ்திரேலியா செல்லவுள்ளார்கள் . அவர்களுக்காகவே இந்த விருந்து ஏற்பாடு.
விடியவே துர்காவிற்கு அழைத்திருந்தார், ஈவ்லின். இவர் அழைப்பை அவள் எதிர்பார்க்கவில்லை. சட்டென்று தடுமாறிப்போனாள். மௌனம் காத்தாள். “நான் கதைப்பது கேட்குதுதானே துர்கா?” என்று ஈவ்லின் கேட்ட பிறகே சுதாரித்தவள், “நீங்க கோல் செய்வீங்க எண்டு நினைக்கேல்ல அதான்.” என்றாளா.
“ஓ அப்பிடியா? உன்ர காதலன் அழைப்புக்குக் காத்திருந்தியோ?” என்று ஆரம்பித்துவிட்டார்.
“ஐயோ இல்ல இல்ல.” என்று அவள் பதறியதை அவர் எங்கே கருத்தில் எடுத்தார்? ‘அவன் ஒண்ணும் என்ர காதலன் இல்ல’ என்று, அவள் புத்தி முனகியதை மனம் எங்கே கருத்திலெடுத்தது? அவனோடு சேர்த்து வைத்து அந்த முதியவர் அதுவும் அவன் பாட்டி கதைக்க கதைக்க, அதை, அவள் மனம் இரசித்திட்டு. அதுவும் ‘நீ கதைக்கிறது ஒண்டு, செய்ய நினைக்கிறது ஒண்டு, ஆனா செய்யிறது அப்பிடியே எதிர்மார்’ என்ற புத்தியின் அதட்டலுக்கும் முறைப்புக்கும் இடையில் இது நடந்தது.
இடையில் இரவு விருந்து பற்றிய விபரம் சொன்னார். “நீ கட்டாயம் வரோணும் துர்கா.” என்றவர், அவள் பதில் சொல்ல முதலே, “நான் சொல்லவே தேவையில்ல, உன்ர காதலன் வந்து கூட்டிக்கொண்டு வரத்தானே போகிறான்.” என்றுவிட்டுப் பெரிதாக நகைத்தார்.
என்ன சொல்வது என்று விழித்தாள், துர்கா . ‘கோல் பண்ண அவன் எடுக்கேல்ல, வந்திட்டுத்தான் மற்ற வேல பாப்பான்.’ என்று, அவள் மனம் முணுமுணுத்ததை அவளே எதிர்பார்க்கவில்லை. தவித்துப் போய் நின்றாள். இதில், என்னால் வர இயலாது என்று எதையாவது சாட்டாக வைத்துச் சொல்வோம் என்றால், ஈவ்லின் அவளுக்குக் கதைக்கவே இடம்கொடுக்கவில்லை.
“என்ன நீ, உன்ர காதலனோட மட்டும்தான் கதைப்ப போல இருக்கே. அவனோட நீ சண்டை போடுறதே அவ்வளவு வடிவா இருக்கும் ஸ்வீட்டி! அவன் ஒரு முரடன். அப்பிடித்தான் டீல் பண்ணோணும். எண்டாலும் என்னோடயும் நீ கதைக்கலாம். ஏன், சண்டை கூட போடலாம்.” என்று கலகலத்தவர், இவர் கதைத்ததைக் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த மகன் குடும்பத்தைச் சைகையாலேயே வரவேற்றார்.
ஏவா தாமதமாக வருவாள் என்றபடி சோஃபியா அவரை நோக்கி வர , ஐலாவும் ஐவன் மனைவியும் பின்னால் வந்தார்கள்.
யார் என்று சைகையால் கேட்டார், சோஃபியா. “உன்ர கடைசி மகனின் காதலி, வருங்கால மனைவி துர்க்கா. கதைக்கப் போறியா?” என்று கைபேசியை சோஃபியாவிடம் நீட்டினார், ஈவ்லின். அவர் முகம் இறுகிற்று. எதுவும் சொல்லாது விலகி வந்து மகளுக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டார்.
“அந்தத் தொல்ல இன்னும் தொடர்பிலதான் இருக்கா? இண்டைக்கு மட்டும் வரட்டும், ஏதன விட்டு இல்ல, இலண்டன விட்டே ஓட வைக்கிற மாதிரிச் செய்யிறன். நீங்க ஒண்டும் யோசியாதீங்க மொம்.” என்றாள் ஐலா.
“அதுக்கு இந்த வீடு இடம் இல்ல ஐலா. உங்களைப்போலத்தான் துர்க்காவும் எனக்கு. ” என்றபடி வந்தார், ஈவ்லின்.
“நீ வீணா உன்ர சகோதரனப் பகைச்சுக்கொள்ளாதே ஐலா.” என்றவர், சோஃபியாவைக் கண்டனத்தோடு பார்த்தார். கணவர் அறைக்குள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கவே, அங்கே ஒரு பார்வை பார்த்தவர், “அண்டைக்கு ஏதன் அவள இஞ்ச கூட்டிக்கொண்டு வந்த நேரம், உனக்கு இந்தக் காதல் வேணாம், சரிப்படாது எண்டு டோனி சொன்னவர் எண்டு உங்களுக்குத் தெரியும். அதை ஏதன் எதிர்த்ததும் தெரியும். எந்த மாதிரி எதிர்த்தான் எண்டு எனக்கும் டோனிக்கும் மட்டும்தான் தெரியும்.”என்று சொல்லி அவர்களைச் சற்றேனும் அதிர வைத்தார்.
“அதாலதான் சொல்லுறன், அவன்ட விசயத்தில ஆரும் தலையிட வேணாம். அவன் குழந்தையா என்ன? பிறகு அண்டைக்கு என்ர மகன் ஆரோன் கண்காணா தேசம் போனதுபோல என்ர ஏதனும் போயிருவான். என்ன பாக்கிறீங்க? அவன்தான் அண்டைக்கு அப்பிடிச் சொன்னவன். உங்கட சொத்து சுகத்த நீங்களே வச்சிருங்க, எனக்கு இதைவிடவும் அதிகம் உழைக்கத் தெரியும், துர்கா மட்டும் என்னோட இருந்தால் போதும் எண்டவன்.” கண்டிப்போடு சொல்லி, அப்போதைக்கு அவர்கள் வாயை அடைந்துவிட்டார். சோஃபியும் ஐலாவும் மனத்தில் குமுறிக்கொண்டிருப்பதை அவர் எங்கே கண்டார்?
மாலையே ஒலிவியா, வேர்த் மற்றும் ஐவன் வந்து சேர்ந்தார்கள். ஏதன் சிரமனே இல்லை. உனக்காகக் காத்திருக்கிறம் என்று அழைத்துச் சொன்ன பின்னரே வந்து சேர்ந்தான்.
“தனியவா வந்தனி? இவ்வளவு நேரமாக நீ சோடியா எங்கயோ சுத்துற எண்டு நினைச்சன், துர்கா எங்க, வரேல்லையா?” என்றார், ஈவ்லின்.
“அவள் உங்களிட்டச் சொல்லேல்லையா…. முக்கியமான கேஸ், நாளைக்கே குடுக்கோணுமாம். இனித்தான் எழுதோணும், வரேலாது எண்டு என்னட்டச் சொன்னவள். நாங்க வந்தில இருந்து அவளுக்கு அலைச்சலும் கூட..” என்றாள் ஒலிவியா.
ஏதன் எதுவுமே கதைக்கவில்லை. அதை ஒலிவியா கவனித்தாள். துர்காவுமே பட்டும் படாமலும்தான் கதைத்தது போலிருந்தது. வேர்த்திடமும் சொல்லியிருந்தாள். ஏதாவது பிரச்சினையா?
இரவுணவு முடிய அப்பார்ட்மெண்ட் செல்லும் வழியில் ஏதனிடம் நேரடியாகவே கேட்டுவிட்டாள்.
சொல்லவா வேண்டும் என்று மௌனம் காத்தவன் ஒலிவியா மீண்டும் மீண்டும் கேட்கவும், அவள் சித்தி வீடு சென்றது தொடங்கி, அன்று நடந்ததைச் சொல்லிவிட்டான்.
“நீ செய்தது சரியா ஏதன்? அவளுக்குக் கொஞ்சம் மூச்சு விடச் சரி நேரம் குடு. இப்பிடி அவசரப்படாதே! இவ்வளவு கொஞ்ச நாள்களில ஏன் இப்பிடி அவசரப்படுற நீ? அதோட அவள் இன்னும் படிச்சுக்கொண்டு இருக்கிறாள். இன்னும் ரெண்டு வருசங்கள் இருக்கு.” படபடத்தாள், ஒலிவியா. தன்னிடம் அவள் மனக்குறையை நண்பி சொல்லவில்லையே என்ற ஆதங்கம் அவளுக்கு.
அவள் அப்படிச் சொல்லவும் கேள்வி கேட்கவும் ஏதனுக்குக் கோபம் வந்திட்டு. “நீயும் வேர்த்தும் மட்டும் நிண்டு நிதானிச்சு நிறையக் காலம் எடுத்துக் பழகித்தான் காதலிச்சுக் கலியாணம் செய்தீங்களோ?” வெடுக்கென்று கேட்டிருந்தான்.
“அது வேற இது வேற. எங்கள் ரெண்டு பேருக்குமே விருப்பம் இருந்தது. வெளிப்டையாப் பகிர்ந்து கொண்டம் ஏதன். நீங்க அப்பிடியா? நீ சொல்லுறது போல உன்னில் அவளுக்கு விருப்பம் இருக்கு எண்டு எடுத்தாலும் அவள் அதை வெளில சொல்லத் தயார் இல்லையே! விலத்திப் போறவளக் கட்டாயப்படுத்தி உன்ன நோக்கி இழுக்கிற நீ! வற்புறுத்திற! இல்லையோ சொல்லு? இதுக்க உன்ர வீட்டில என்ன எல்லாம் அவளப் பற்றிக் கதைக்கினம் எண்டு எனக்குத் தெரியாதா? அல்லது உனக்குத் தெரியாதா? முதல் அதுகள சரி செய்!” அதட்டியிருந்தாள்.
சற்று நேரம் ஏதன் வாயே திறக்கவில்லை. எதைக் கதைப்பதாம்? உண்மையைத்தானே சொல்கிறாள். ஐலா ‘கோல்ட் டிங்கர்’ என்றது அவன் மனக்கண்ணில் வந்து போனது. அந்தச் சூழ்நிலையில், கத்தியால் குத்த வந்தவன் தொடர்பில் பெரியவர்கள் பயந்து, கலங்கி இருக்கையில் அவனால் அதுபற்றித் தொடர்ந்து கதைக்க முடியவில்லை. பெருமூச்செறிந்தான். துர்கா விடயமாகத் தாயோடும் ஐலாவோடும் தீர்மானமாகக் கதைக்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டான்.
“சொறி ஒலிவியா. ஐலா ‘கோல்ட் டிங்கர்’ எண்டு சொன்னதுக்குச் சொறி! உனக்கும் நிச்சயம் ஹெர்ட் ஆகியிருக்கும். நான் மொம் , ஐலாவோட கதைக்கிறன்.” என்றவன், “ சரி, நீ சொன்னது போலவே மூச்சு விட ரெண்டு வருசம் உன்ர நண்பிக்குத் தரலாம். போதுமா? படிப்பு முடிஞ்ச கையோட என்னோட அவளைச் சேர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு முழுதும் உன்ரதான். உன்ர சகோதரனுக்கு இந்த உதவியச் செய்வியா?” என்றவன் விழிகள் பளபளத்தன.
அவனுக்குத் துர்காவில் உள்ள நேசத்தில் ஒலிவியாவுக்கு முழுமையாகத் தெளிவில்லாதே இருந்தது. வேர்த் அப்படியில்லை, அவன் நேசத்தை நம்பினான். உண்மை என்றான். துர்கா கொடுத்து வைத்தவள் என்றான். அப்போதெல்லாம் என் நண்பியின் வாழ்க்கை இது. விளையாட்டு இல்லை என்று சொன்னவள், இந்த நாள்களில் உன்னிப்பாக ஏதனைக் கவனித்து வந்ததும் அதனால்தான்.
எட்டி ஏதன் தலையைக் கலைத்தவள் நச்சென்று ஒரு குட்டுக் குட்டினாள். “ ட்ரைவ் பண்ணுறான், என்ன விளையாட்டு இது?” என்ற வேர்த்துக்கு, ஏதனைப் பார்க்கச் சிரிப்பு. காட்டிக்கொள்ளவில்லை. காதல் வந்தால் சுயமிழந்துதான் போவார்கள் போலும்.
“பின்ன, சந்தடி சாக்கில என்னை இழுத்து விடுறான் பாருங்க. துர்காட அம்மா அப்பா அவள்ட சித்தி போல இல்ல ஏதன். டெரரான ஆக்கள். உன்னைக் கலியாணம் செய்ய ஓமெண்டு சொல்லோணுமே.” நமுட்டுச் சிரிப்போடு கடித்தாள்.
“உண்மையாவா, நான் அப்ப ஒருக்கா அங்க வந்து அவேயோட கதைச்சிருறன். அப்பதான் நிம்மதியா இருக்கும். ரெண்டு வருசம் எண்டா உனக்கு விளையாட்டா என்ன?” என்றவனைப் பார்த்துச் சிரித்துவிட்டாள், ஒலிவியா. வேர்த்துமே சேர்ந்து கொள்ள ஏதனுக்கு ஒரு சாதியாகிற்று. ஒலிவியாவைப் பார்த்துவிட்டுப் பாதையைப் பார்த்தவன் உதடுகளிலும் முறுவல். மனத்திலோ, ஒலிவியா தம்மோடு சிறுவயதிலிருந்து வளராதவளா என்ற கேள்வி. அவனால் இக்கணம் அப்படி உணரவே முடியவில்லை.
அவளோ, “உன்னைப் போய் கிராணி வார்த்தைக்கு வார்த்த முரடன் எண்டு சொல்லுறா ஏதன். நீ என்ன இப்பிடி இருக்கிற?” என்றவள், “போனால் போகுது, இந்த ஒலிவியாவை நம்பியவர்கள் என்றைக்குமே கைவிடப்படுவதில்லை. யோசியாமல் இரு!” என்றாள், நம்பிக்கையாக.
“இஞ்ச பார் ஏதன், உன்ர காதலைச் சேர்த்து வைக்க ஒலிவியாவோ ஆருமே தேவையில்லை. உன்ர உண்மையான அன்பு மட்டுமே போதும்.” அவன் தோளில் நட்போடு தட்டிச் சொன்னான், வேர்த்.