Skip to content
ஒலிவியாவோடு கதைத்தபடி வந்த பேத்தியையே பெரியவர்கள் பார்த்து நின்றார்கள். “அப்பம் சாப்பிட்டுக்கொண்டே கதையம்மா.” என்று மெதுவாகச் சொல்லி, இரு அப்பங்களைக் கொண்டுவந்து வைத்தார், அம்மம்மா. கணவர் அருகில் சென்று அமர்ந்துகொண்டவர் பார்வை பேத்தியில்தான்.
பெரியவர்கள் மெதுவாகத் தம்முள் கதைக்க, இவள் ஒலிவியாவோடு கதையைத் தொடர்ந்தாள்.
“அம்மா ஆக்களுக்குச் சொல்லிராத ஒலிவியா ப்ளீஸ்!” என்றவள், காலை நடந்ததை மீண்டும் ஒரு தடவை மெல்லிய குரலில் பகிர்ந்துக்கொண்டாள்.
“என்னதான் சொல்லு, நீ அருந்தப்பு. பின்னால கலைச்சுக்கொண்டு போனனி ஒருவேளை அவனைப் பிடிச்சிருக்க, ஏதனுக்கு விழுந்த வெட்டு உனக்கு விழுந்திருக்கும் துர்கா. விளங்குதா உனக்கு?” என்ற ஒலிவியா சொன்ன கவனங்களைப் பத்திரப்படுத்திக்கொண்டே அழைப்பைத் துண்டித்தாள்.
அவளுக்கு அது தெரியாதா? அல்லது நடந்த நிகழ்வு அவளுள் நடுக்கத்தை உருவாக்கிடவில்லையா? அதற்காக இப்போ அவள் என்ன செய்வது?
மற்றவர்களையும் தேற்றி, நடந்த நிகழ்வின் தாக்கத்திலிருந்து தானும் மீண்டு, ஆறு மாதங்களும் படித்துவிட்டுப் போக எண்ணினாள், துர்க்கா.
அப்பமும் சாப்பிட்டு முடிந்திருக்க, தட்டைக் கழுவிட்டு வந்தவள் கைப்பேசியைப் பார்த்தபடி மாடியேறப்போனாள். பெரியவர்கள் அழைத்து என்ன ஏதென்று ஏதாவது கேட்டுவிட்டாலும் என்ற பதற்றம் உண்மையில் அவளுள் இருந்தது. அவர்களைத் தவிர்க்க நினைத்தாலும் பெரியவர்கள் பார்வை அவளில் இருக்கிறதே! பார்த்தும் பாராது செல்ல முடியவில்லை.
மாடிப்படியில் வைத்த காலைக் கீழிறக்கியவள், “என்ன அம்மம்மா?” என்றபடி தயங்கினாள். அவர் வாய் திறக்க முதல், “அப்பம் உண்மையாவே வேற லெவல் அம்மம்மா. இவ்வளவு நாளும் அம்மா சுடுறதுதான் டேஸ்ட் எண்டு நினைச்சு இருந்தனான் தெரியுமா? வீட்ட போறதுக்குள்ள எப்பிடிச் செய்யிறது எண்டு எனக்குப் பழக்கிவிட்டிருங்க சரியா? எங்கட செஃப் ஆரோன் பாராட்டிட்டார் எண்டா பேந்தென்ன! நான் ஓபன் செய்யப்போற ரெஸ்ட்டோரண்டில அப்பம் உங்கட பொறுப்பு.” கலகலத்தாள். உண்மையில் கதையை மாற்றவே முனைந்தாள்.
அது எங்கே? அவள் அம்மம்மாவோ, அவள் பாராட்டில் மகிழ்ந்தாலும் காரியத்தில் கண்ணாக இருந்தார்.
“ஏன் திடீரெண்டு அந்த செஃப் உன்னத் தேடி வந்தவர்? அவர் தந்தது உன்ர ஃபோனோ? நேற்றிரவு இதில இருக்கேக்க ஃபோன் உன்னட்ட எல்லா பிள்ள இருந்தது? எப்பிடி அவரிட்டப் போனது? முதல் என்னத்துக்குக் குடுத்தனீ? ஆருக்கு இப்ப எப்படி எண்டு எல்லாம் விசாரிச்சனி? அவரிட ஃபோனில நீ ஆரோடயம்மா கதைச்சனி? விடிய ஓடப்போயிற்று வந்ததில இருந்து முகமும் சரியில்ல. என்ன நடந்தது?” மாறி மாறித் தாத்தாவும் அம்மம்மாவும் கேள்விகளால் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
எந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது, எதை விடுவது? நடந்ததை எத்தனைக்கு மறைப்பது? என்றாவது தெரியவந்தால் வீண் பிரச்சனை.
“நீங்க ரெண்டு பேரும் பேசாமல் பொலீஸ் வேலை செய்ய இப்பயும் போகலாம்.” இலகுவாகச் சொன்னபடி சென்று அவர்கள் முன்னால் அமர்ந்தாள், துர்கா.
“அதெல்லாம் போகலாம், நீ கதைய மாத்தாமல் என்ன ஏதெண்டு முதல் சொல்லு.” அதட்டினார், அம்மம்மா.
“அது… வந்து அம்மம்மா, விடிய ஓடப்போனனான் எல்லா?” என்று ஆரம்பித்தவள் அதன் பின்னர் தயங்கவில்லை, முழுதாகச் சொல்லிவிட்டாள்.
கேட்டவர்கள் அதிர்வில் எழுந்து நின்றுவிட்டார்கள். “இவ்வளவு பெரிய விசயம் நடந்தும் இஞ்ச சொல்லோணும் எண்டு நீ நினைக்கேல்ல என்ன? எங்கள நம்பித்தானே உன்ன இஞ்ச விட்டிருப்பினம். நீ என்ன எண்டா?” என்ற அம்மம்மா, கணம் தாமதியாது இவள் வீட்டுக்கு அழைத்துவிட்டார்.
“அய்யோ வேணாம் அம்மாம்மா. அம்மா பயந்திருவா சொல்லாதீங்க.” என்று இவள் இடையிட்டதைப் பெரியவர்கள் கருத்தில்கொள்ளவில்லை.
“ நேற்றுச் சித்தப்பா என்ன சொன்னவர், ஐஞ்சு நிமிச நடையில பார்க் இருக்கு ஓடலாம் எண்டவரா இல்லையா? கேட்டியோ? ” கொதித்தபடி, தன் மூத்த மகளுக்கு அழைத்தவர், எல்லாவற்றையும் ஒப்பித்துவிட்டார்.
இவள் சொன்ன சமாதானங்கள் எடுபடவேயில்லை. “ஒண்ணும் நடக்கேல்ல எண்டுறயாம்மா? எனக்கு நெஞ்சு நடுங்குது. அந்தத் தம்பிக்கு ஒண்டு கிடக்க ஒண்டு நடந்திருந்தா ஆர் பதில் சொல்லுறது?” என்று, மாறி மாறிக் கதை போயிட்டு. ஏற்கனவே அவளுள் இருந்த தவிப்பும் பயமும் மீண்டும் மீண்டும் ஏதனுக்கு ஏதாவது ஆகியிருக்க என்று கதைத்ததும் சேர, துர்கா விம்மி வெடித்து அழ ஆரம்பித்துவிட்டாள்.
குடும்பத்தினர் சுற்றி வளைத்துக் கதைத்தது மூச்சு முட்ட வைத்தாலும் ஆறு மாதங்கள் முடித்துவிட்டே செல்வேன் என்று பிடிவாதமாக நின்றாள் இவள்.
“அப்பிடி எண்டா நீ சித்தி வீட்டில இருந்துதான் போய் வரோணும்.” அவள் தகப்பன் முடிவாகச் சொல்லிவிட்டிருந்தார்.
“உனக்கான சுதந்திரத்த நீ சரியாப் பயன்படுத்தோணும் துர்கா. என்னதான் நீ வளர்ந்திட்டாய், உன்னை நீயே பார்த்துக்கொள்ளுவாய் எண்டு உனக்கும் எங்களுக்கும் நம்பிக்கை இருந்தாலும் உன்ர பாதுகாப்பு எங்களுக்கு நிச்சயமாகத் தெரியோணும். சித்தி வீட்டில இருந்து வேலைக்குப் போறதும் கிட்ட எல்லா? அங்கயே இரு!” தாய் அழுத்திச் சொன்னதை அதன்பிறகும் மீற முடியவில்லை.
அன்று மாலை வேலைக்கு என்று வெளிக்கிட்டவளுக்கு உண்மையில் மனத்தளவில் மிகுந்த களைப்பு. ஆரோன் ரெஸ்டோரண்டில் வேலை என்றால் சும்மாவா? கனவு நனவாகும் தருணம் அது. அதுவும் அவள் என்ன பயிற்சி பெற்ற சமையற்கலை வல்லுனரா? ஒலிவியாவினால் கிடைத்த வேலை இது. எப்போதடா வேலைக்குச் செல்வோம் என்ற மனநிலையில் இருந்தவள், இப்போதோ, இன்று போகவா வேண்டும் என்ற தத்தளிப்போடு நின்றாள். முதல் மூன்று நாட்களுக்குப் பயிற்சி இருக்கும் என்று சொல்லி இருந்தார் ஆரோன். மனம் குவித்து அவதானிக்கவோ வேலை செய்யவோ முடியும் போலவும் இருக்கவில்லையே!
“காரக் கொண்டு போகப்போறியோ பிள்ள? இரவு பதினொன்றுக்கு முடிஞ்சு தனியா எல்லா வரோணும்?” அதிருப்தியோடு கேட்டார் அம்மம்மா.
“அதானே. இண்டைக்குப் பேசாமல் நில் எண்டாலும் காதில வாங்கிறா இல்ல. ஜீவா, நீயே கொண்டு போய்விட்டுப்போட்டு வரலாமே. பிறகு தம்பி வர, போய்க் கூட்டிக்கொண்டு வரலாம்.” என்று சித்தியை வெளிக்கிட வைத்திருந்தார், தாத்தா.
“சித்தி இதெல்லாம் எத்தனை நாள்களுக்குச் சரிவரும் சொல்லுங்க? சித்தப்பா நாளைக்கு வெள்ளனவே வேலைக்கும் போகோணும் . நான் போயிட்டு வருவன் எண்டுறன்.” சலிப்பை மறைக்காது சொன்னவளைத் தள்ளிகொண்டுவந்து காரில் ஏற்றியிருந்தார், அவள் சித்தி.
“அம்மா, அப்பா நல்லாப் பயந்து போய்ட்டினம் துர்க்கா, இண்டைக்குப் பாட்டுக்கு என்னோட வா. இனி இனி காரைக்கொண்டு போகலாம்.” சகோதரி மகளைச் சமாதானம் செய்வித்தார்.
“கடவுளே எனக்கு உங்கட கார் வேணாம் சித்தி. நான் ட்ரெயின்ல போயிட்டு வருவன். பதினாறு வயசில இருந்து சிட்னியில தனியத்தான் தங்கி இருந்து படிச்சனாங்க. பின்னாலும் முன்னாலும் அம்மாவும் அப்பாவும் திரியேல்ல. நாங்க என்ன கெட்டுப் போய்ட்டமா?” காலையிலிருந்து புத்தி சொல்கிறோம் என்று மாறி மாறி அவளைப் போட்டுப் படுத்தியபாட்டில் மனத்துள் இருந்த சினத்தைச் சிறியதாயிடம் கொட்டினாள்.
ஒரு பார்வை பார்த்தார், ஜீவா. எதுவுமே கதைக்கவில்லை.
“எது செய்யோணும் செய்யக்கூடாது எண்டு எனக்கு நல்லாவே தெரியும் சித்தி.” என்றவள், அதே வேகத்தில் “சொறி!” என்றுமிருந்தாள்.
“ப்ச் விடு, இப்பிடி முகத்த நீட்டிக்கொண்டா வேலைக்குப் போகப்போற?” தோளில் தட்டிக் கொடுத்தவர், ரெஸ்டோரண்ட் செல்லும்வரை ஆரோன் டேல் பற்றிக் கதைத்தார். அதில் துர்கா சற்றேனும் இயல்புக்கு வந்திருந்தாள்.
வாழ்த்திய சிறிய தாய்க்குக் கை காட்டிக்கொண்டே, வெளித்தோற்றத்தில் பழைய கால அரண்மனை போலிருந்த அந்தப் பிரமாண்டமான ஐந்து நட்சத்திர உணவகத்தினுள் நுழைந்தாள், துர்க்கா.
error: Alert: Content selection is disabled!!