“யூ ஆர் சோ ரூட் “ காரினுள் அமர்ந்தவள் சினக்கிறாளாம். ஏதனுக்குச் சிரிப்புத்தான் வந்தது. அந்தளவுக்கு மென்மையாகச் சொல்லியிருந்தாள். அதுமட்டுமா? அவள் முகபாவனையில் கோபமோ, சினமோ ஏன் எரிச்சலோ கூட இல்லை. அவன் இப்படி வருந்தி அழைத்து அமர வைக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தாளோ என்று எண்ணியவன், தன்னை நோக்கியிருந்த அவள் வதனத்தை, படபடக்கும் அந்த விழிகளை ஆழ்ந்து பார்த்தான். அவள் மீது கோபம் வரும்தான், இப்படித்தான் எங்கென்று இல்லாது மறைந்தும் விடும்.
“There’s something magical about her… she pulls me into her world effortlessly.” (இவளிடம் ஏதோ மாய சக்தியிருக்கிறது. இலகுவாகவே தன்னுள் என்னை இழுத்துக்கொள்கிறாள்.) முணுமுணுத்துக்கொண்டான்.
“வாட்?” என்றாள். ஏதோ முணுமுணுக்கிறான். அதுவும் அவளையே பார்த்தடி. முதல் இது என்ன பார்வை?
இப்படி, அவன் பார்வை பற்றி அவள் ஆராய்ந்துகொண்டிருக்கையில், அவன் முகம் அவள் முகத்தின் வெகு பக்கத்தில் வந்திருந்தது. கைகள் இரண்டையும் கார் கதவில் ஊன்றிக்கொண்டு குனிந்து, அவள் முகத்தில் முட்டி விடும் கணக்கில் வந்தவன் அவளில் அவ்வளவு அதிர்வைக் கொண்டு வந்திருந்தான்.
அவள் நினைவு உருண்டு பிரண்டு அன்றொரு நாளுக்குத் தாவியோடியது. “நோ ஏதன்!” என்றபடி, தலையைப் பின்னால் விலத்தியவள் கைகள் இரண்டும் துணைக்கு வந்தன. அவன் முகத்தில் வைத்து தன்னால் முடிந்தளவுக்கு வெளியே தள்ளப் பார்த்தாள்.
“ஹேய்ய்ய்ய்ய்ய….யூ” மின்னலாக அவள் கரமிரண்டையும் ஒன்றாகச் சேர்த்துப் பிடித்தவன், “ யூ ர் அ மொன்ஸ்டர்!” என்றபடி மீண்டும் குனிந்தவன், “இதச் சொல்லத்தான் வந்தனான், நீ என்ன நினைச்ச?” கண்சிமிட்டி விசமமாக முறுவலித்தான்.
“யூ ஆர் சச் அ ராஸ்கல்!” இப்படியெல்லாம் அவள் சொல்ல நினைக்கவில்லை. கேட்டு வாங்குகிறானே.
“யெஸ் ஐ அம், மை ஸ்வீட் கேர்ள்!” என்றுவிட்டு வாய்விட்டே சிரித்தான், ஏதன்.
“அவசரத்துக்கு இன்னும் கடுமையா ஏதாவது அம்பிடேல்லையா?” என்றவன் பார்வையாலேயே அவளைக் கட்டிப்போட முயன்றான். அவன் உதிர்த்த ‘ஸ்வீட் கேர்ள்’ வழுக்கி வந்து முகத்தில் மோதியது வேறா, அவள் பார்வை தட்டுத் தடுமாறி அப்பால் இப்பால் என்று நகர்ந்தது.
“உன்ர விசயத்தில மட்டும். இப்ப இல்ல, நான் உயிரோட இருக்கிற வரைக்கும்.” மீண்டும் ஒரு கண்சிமிட்டல். அவளையே பார்த்துக்கொண்டு கதவைச் சாத்தினான். அடுத்த மூன்றாவது நொடி சாரதியாசனத்தில் அமர்ந்திருந்தான்.
“ஏன் இப்பிடி ஓடி வந்தனான் எண்டு யோசிக்கிறதானே?” தலை கோதிக்கொண்டே கேட்டவன், அவள் தலையைப் பிடித்து அப்படியும் இப்படியும் ஆட்டியபடி பதிலும் சொன்னான். இறங்கிப் போனாலும் போயிருவாளாம். உண்மையில் அவள் அப்படித்தான் நினைத்தாள். ஆனாலும் முறைத்தாள். அவள் முறைக்கும் போது பார்க்கையில் இன்னமும் வடிவாம்.
‘இவன’ பற்களை நறும்பியபடி யன்னல் பக்கம் திரும்பியவள் இதழ்களில் மெல்லிய முறுவல். மறு நொடியே வந்த சுவடின்றி மறைந்துமிருந்தது.
“சீட் பெல்ட் நான் போட்டு விடவோ?” மீண்டும் நெருங்கியவன் தோளில் சுரீர் என்று ஒரு அடி அடித்துவிட்டாள்.
“அவுச்(ouch )” தோளைத் தடவிக்கொண்டு பார்த்தவன் பார்வை, அவன் மனத்தின் முனகலை அவளுக்குச் சொல்ல நினைத்தது.
என்னை விட்டு விலகிச் செல்லாதே பெண்ணே என்று அது கிடந்து இறைஞ்சுகிறதே! இப்படியே காலம் முழுவதும் என்னருகில் இருந்துவிடேன், சிரித்தாலும் சிடுசிடுத்தாலும் கோபப்பட்டாலும் எதிர்கொள்வது என்பாடாயிற்று என்று பிடிவாதம் பிடிக்கிறதே! தேவையில்லாத மற்றவர் பேச்சை, பயங்களை உதறிவிடேன், என்னை மட்டும் நினையேன் என்கிறதே! அவள் முன் முழந்தாளிட்டு, ‘வில் யூ மேரி மீ?’ என்று கேட்கவும் பேராவல் கொண்டு நிற்கிறதே!
இது எதுவும் அவளுக்கு விளங்கவில்லையா? மனத்தாழத்தில் எங்கோ, பார்வையில் படாது ஆழ்ந்து கிடந்த கோபத்தின் பார்வை, சிலுப்பலோடு முன்னேற முயன்றது. கட்டுப்படுத்திக்கொண்டான். அருகில் இருப்பவள் கட்டுப்படுத்த வைக்கிறாள் . அதைச் சொன்னாலும் அவள் நம்பப் போவதில்லை.
“கார எடுக்கிறீங்களா இல்லையா? நான் வீட்டுக்குப் போகோணும். நிறைய வேலைகள் இருக்கு. அதோட, என்னோட இப்பிடித் தனகிறது இதான் கடைசியா இருக்கோணும்.” சிடுசிடுத்தாள்.
அவன் என்ன யோசிக்கிறான், அவள் என்ன சொல்கிறாள்?
“அதெல்லாம் சரிவராது எண்டா என்ன செய்யிறதா உத்தேசம்?” புருவ உயர்த்தலில் நெற்றி ஏறி அப்படியே நின்றிட்டு. “ஒண்டு ஒண்டாச் சொல்லு கேப்பம்.” காரைக் கிளப்பி மெதுவாக வந்து பார்க்கிங்கிலிருந்து வெளியேறிப் போக்குவரத்தில் கலந்தவன் இப்போது கடைக்கண்ணால் அவளை பார்த்தான். அவளோ, இன்னமும் அவனை முறைத்துக்கொண்டு இருந்தாள்.
“இதென்னது எண்டு தெரியுதா? நீங்கதானே அனுப்பினது? இதுக்கும் நீங்க இப்ப நடந்துகொள்ளுற விதத்துக்கும் கதைக்கிறதுகளுக்கும் என்ன சம்பந்தம் ம்ம்ம்?” அதட்டினாள்.
அவள் கைபேசித் திரையை மின்னலாகப் பார்த்தான்.
“I’ll wait as long as it takes, until your fear fade and you can fully trust the love between us.” சத்தமாக வாசித்தவன் “ம்ம்… நான் தான் அனுப்பினனான்? இப்பவும் சொல்லுறன் வெய்ட் பண்ணுறன். அதுக்காக இப்பிடி ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா கதைக்காமல் எப்பிடி? முதல் நீயும் இண்டைக்கு என்னைப் பாக்கத்தானே வந்தனி? இல்லவே இல்லை எண்டு சாதிக்கப் போற …விடு விடு!” கண்சிமிட்டினான்.
“அப்பிடி நீங்களா நினைக்கிறதுக்கு நான் பொறுப்பில்ல. நான் என்ர நண்பியை வழியனுப்ப வந்தனான்.” என்றவள் அவனைப் பார்க்கவில்லை. களவு பிடிபட்டது போலொரு உணர்வு. உதட்டைக் கடித்துக்கொண்டு யன்னல் புறம் திரும்பியவளைக் காப்பாற்றுவது போல் ஒலிவியா அழைத்தாள்.
அழைப்பை ஏற்றதும், “வெளிக்கிட்டாச்சா, ஏதனோடதானே?” என்றவள் குரலில் எக்கச்சக்க நகைப்பிருந்தது.
“நீதானே மாட்டி விட்டனி, பிறகு என்ன கேள்வி?” அடிக்குரலில் எரிச்சலோடு சொன்னாள், துர்க்கா.
“இதென்ன வம்பு? நீ ஏற்கனவே மாட்டுப்பட்டு இருந்தனி. அதை எனக்கு மறைச்சனி . இதெல்லாம் உனக்குத் தெரியாது என்ன? அவுஸ்திரலியா வா உனக்குச் செய்யிறன்.” என்றவள், ஏதனோடும் இரண்டு வார்த்தைகள் கதைத்துவிட்டு வைத்தாள்.
“நான் ஒலிவியாட்ட பெரிசா ஒண்ணும் சொல்லேல்ல சரியா? அவளாப் பாத்ததுகள வச்சுத்தான் உங்கட வீட்டில அப்பிடிக் கதைச்சிருக்கிறாள். என்னால உங்கட வீட்டுக்க வீண் பிரச்சனைகள் வேணாம் ஏதன் , நமக்குள்ள சரி வராது ப்ளீஸ்!” என்றவளைப் பார்த்தவன், “ ஏவா எல்லாம் சொல்லிட்டாளா? இல்ல ஒலிவியாவா? நீ ஒண்டும் சொல்லேல்ல எண்டு தெரியும்.” என்றான். அவள் கதைத்த பிற்பகுதியைக் காதில் வாங்கியது போலவே காட்டிக் கொள்ளவில்லை. ஆனாலும் அதுவரை அவனில் இருந்த சீண்டலும் கலகலப்பும் சட்டென்று மறைந்து போயிருந்தது.
அவள் வீட்டுக்குச் செல்ல எப்படியும் ஒன்றரை மணித்தியாலம் சரி பிடிக்கும். இதுவரை வார்த்தைக்கு வார்த்தை கதைத்துக்கொண்டு வந்துவிட்டு, இப்படி, அவன் மௌனமாக இருப்பது எதுவோ போலிருந்தது.
சற்றே அசைந்து அமர்ந்தாள். அப்படியே கடைக்கண்ணால் அவனைப் பார்த்தாள். நேரே முன்னால் பார்த்தபடி காரோடிக்கொண்டிருந்தான்.
அவளுக்கு இன்னமும் நம்புவதற்குக் கடினமாக இருந்தது. எங்கோ பிறந்து வளர்ந்தவள் இங்கு வந்து இப்படி இவனோடு…இதுதான் விதியா? ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதா? தெரியவில்லையே! முதல், அவன் ஆழமாய் நம்புவது போல் காலம் முழுதும் இவனருகில், நெருக்கமாக, மனமொத்த ஒரு பயணம் சாத்தியமா?
அந்தக்கணம் அப்பயணத்துக்காய் அவள் உள்ளம் பெரிதும் ஏங்கிற்று. கண்கள் கலங்க யன்னல் புறம் திரும்பி விட்டாள். மெல்ல யன்னல் கண்ணாடி கீழே இறங்கியது . திரும்பிப் பார்த்தாள். அவன் அப்படியே நேர்ப் பார்வையில்தான் இருந்தான்.