Skip to content
அதே வார இறுதி.
“துர்கா உன்ர வீட்டு கேட்ல நிக்கிறன்.”என்று வந்த ஏவாவின் அழைப்பில், துர்கா உண்மையில் திகைத்துப் போனாள்.
“ஐயோ இதென்ன சொல்லாமல் கொள்ளாமல்” என்று வார்த்தைகள் அதுபாட்டில் வெளிவந்திருந்தன.
“ஹலோ ஹலோ ஆர் சொல்லேல்ல? அண்டைக்கு ஏர்போட்டில வச்சுச் சொன்னனே. நீ மறந்திட்ட எண்டு சொல்லு.” என்றவள், “உள்ள வரவா துர்கா?”என்று கேட்டாள்.
“இதென்ன கேள்வி ஏவா? உள்ள வா.” என்றவள், அப்போதுதான் தோய்ந்துவிட்டு வந்திருந்தாள். இரவுடையில் நின்று தலையைத் துடைத்துக்கொண்டு இருந்தவள், மின்னலாக ஒரு பாண்ட் அணிந்து, கைக்கு அகப்பட்ட டீ சேர்ட்டையும் போட்டுக்கொண்டே படிகளால் இறங்கினாள்.
“இந்தப் பிள்ள இப்ப என்னத்துக்கு இப்படி ஓடுறா எண்டு கேக்கிறன். தலையும் வடிவாத் துடைக்கேல்ல. ஈரம் டைல்ஸ்ல பட்டு விழுந்தெழும்பப் போறா இருந்து பார். அன்றாட வாழ்கைக்குத் தேவையான இதுகள் ஒண்டும் ஒழுங்காத் தெரியாது. லவ் கேக்குது லவ். அதும் வெள்ளைக்காரனோட. வாய் திறக்காத எண்டு எல்லாரும் சொன்னதால பேசாமல் இருக்கிறன் நான். விடு என்ன. நான் இப்ப என்ன பிழையாக் கதைக்கிறன். “மகளிடம் சீறினார்.
“என்ன தேவைக்கு இந்த முறைப்பு முறைக்கிறீங்க? செல்லப் பேத்தியல்லா? ஒரு வார்த்த கேட்டிங்களா? நீ போற வழி சரியில்ல எண்டு கண்டிச்சீங்களா? புதினமான பேத்தி.” கணவர் மீதும் அம்மம்மாவுக்குப் பெரும் கோபம். காரணம் வேறு ஒன்றுமில்லை. ஏதன் அவ்வளவு பணிவாகக் கதைத்துவிட்டுச் சென்ற மறுநாள் பெரும் யோசனைக்குப் பிறகு, “ அந்தத் தம்பியப் பாத்தா குணவானாத் தெரியுது.”. என்று, ஒரு தடவை சொல்லிவிட்டாரே!
அம்மம்மாவோடு மல்லுக்கட்டிக்கொண்டு இருக்கையில், “வாங்க ஏவா, உள்ள வாங்க.” என்றபடி, ஏவாவோடு உள்ளே வந்தாள், துர்கா.
உள்ளே வந்த ஏவாவின் முதல் பார்வையே அம்மம்மாவில் விழுந்தது. “ஹாய் கிராணி”என்று ஓடிச்சென்று இலேசாக அணைத்துக்கொண்டவள், “யூ லுக் வெரி பியூட்டிபுல்! ” என்று வேறு சொன்னவள், “துர்கா , நீ அப்பிடியே உன் அம்மம்மா போல!” என்றதோடு நிறுத்தவில்லை. “உங்கட அப்பம் நல்ல ருசியாமே! டாட் சொன்னவர். எனக்கும் செய்து தரோணும் ப்ளீஸ்!” கெஞ்சினாள்.
அதுவரை கொதித்துக்கொண்டு இருந்த கிழவி அவுட்! கன்னம் தடவி அவளையும் வடிவு என்றவர், “அப்பம் என்ன, என்ன விருப்பமான உணவோ சொல்லு செய்து தரலாம். அடுத்த முறை எப்ப வருவ” என்று, அவளோடு கதைக்க ஆரம்பித்துவிட்டார்.
“ஆர் ஃப்ரெண்டா துர்கா?” சிறிய தயார் வினவினார் .
“ஏதன்ட சிஸ்டர் சித்தி.” என்றாள், அவள்.
அம்மம்மா தடுமாறிப்போனார். இடித்துக்கொண்டு அணைந்திருந்தபடி அமர்ந்திருப்பவளைத் தள்ளியா விடுவது? அவர் கணவர் நமுட்டுச் சிரிப்போடு மனைவியைப் பார்த்துவிட்டு ஏவாவோடு கதைக்க , “எனக்கு என்ன பிரச்சின இந்தப் பிள்ளையோட? இந்த வீட்டுப் பிள்ள புத்தி கெட்டு செய்யிற வேலைகளுக்கு ஆரையும் நொந்து என்ன பயன்?” புறுபுறுத்தது கேட்டு, துர்கா முகம் சுண்டிப்போயிற்று.
“என்ன சொல்லுறா?” என்று வேறு ஏவா கேட்டாளா?
“அது ஒண்ணும் இல்ல, இடியப்பம் இருக்குச் சாப்பிடுறியா?” ஏவாவோடு எழுந்தார் , அம்மம்மா.
“தாங்க தாங்க” என்று சமையலறைக்குள் நுழைந்தவள், ஒரு இடியப்பமும் சொதியும் என்று தொடங்கி, ஏழெட்டு இடியப்பத்தைச் சம்பல், பருப்புக் கறி என்று கலந்துகட்டி உள்ளே அனுப்பிவிட்டே ஓய்ந்தாள். அருகில் இருந்து இரசித்துப் பரிமாறினார், அம்மம்மா. உணவு பரிமாறச் சென்றாலே, “நானே போட்டுச் சாப்பிடுறன் ப்ளீஸ்!” என்று சொல்லும் பேத்திக்கு வெறுப்பேற்றவே ஏவாவைக் கொஞ்சித் தள்ளினார். அந்தளவுக்கு எல்லோரோடும் கலகலத்து அந்தக் குடும்பத்தில் தானும் ஒரு அங்கம் என்று உணர வைத்துவிட்டாள், அவள்.
“ஒரு மசாலா தேத்தண்ணி குஞ்சு…” என்று கேட்டு அதையும் போட்டுக் கொடுத்த அம்மம்மா, துர்காவைத் தவிர்ப்பதும் முறைப்பதும் அப்போதுதான் ஏவாவுக்குத் தெரிந்தது.
“என்ன விசயம்?” துர்காவிடம் கேட்க , “பிறகு சொல்லுறன்”. என்று சமாளித்துவிட்டாள்.
“என்ர கிராணி வீட்டில எனக்கும் இவளுக்கும் லன்ச். அதான் இவளக் கூட்டிக்கொண்டு போக வந்தனான்.” என்றபோது மறுக்க இயலவில்லை . தலையாட்டி வைத்தார்கள். அழைத்தும் சென்றுவிட்டாள்.
இதுவே அடுத்தடுத்த வார இறுதிகளிலும் நடந்தது. ஏதன் மட்டும் கண்ணிலும் படவில்லை. பொறுத்து பொறுத்துப் பார்த்தவள் இயல்பாகக் கதைப்பது போல ஏவாவிடம் மெல்லக் கேட்டுப் பார்த்தாள்.
“உனக்குத் தெரியாதா என்ன?” என்றவள், தெரியாது என்று பொய் சொல்லாதே என்றும் இருந்தாள். அவன் வேலை விசயமாக அமெரிக்கா சென்று விட்டானாம். திரும்பி வர இரு மாதங்கள் செல்லுமாம் என்று சொன்னவள், “அப்ப நீ ஏதனோட கதைக்கிறதும் இல்லையா? உங்களுக்க இன்னும் பிரச்சினையா?” என்றும் கேட்டிருந்தாள்.
“பிரச்சினையா, எங்களுக்குள்ளயா, அப்பிடி நான் எப்பவாவது சொன்னனானா என்ன?” என்று சிரித்து மழுப்பிவிட்டாள்.
“ஓ! அப்பிடி எண்டுறீங்க. ம்ம்ம் சரி சரி, மகிழ்ச்சியா இருந்தா எங்களுக்கும் மகிழ்ச்சி!” என்று நாடகபாணியில் சொல்லிவிட்டு விட்டுவிட்டாள், அவள்.
ஒற்றை வார்த்தை சொல்லாமல் சென்றுவிட்டான், இத்தனை நாட்கள் ஒரு சத்தமும் இல்லை, என்ன ஏதென்று இவள் நினைப்பது?
ஏவா, அன்பாகத் தன் பேரப்பிள்ளைகள் போலவே அரவணைத்துக்கொண்ட ஈவ்லின், இடையில் இரு தடவைகள் போனில் கதைத்து வீட்டுக்கு வந்து போ துர்கா என்ற செஃப் ஆரோன், ஒரு சில தடவைகள் சந்தித்தபோது முறுவலோடு நகர்ந்த ஐவன் என்று யாருமே, சொல்லி வைத்தாற்போல் ஏதன் பற்றி இவளோடு ஒரு வார்த்தை கதைக்கவில்லை. இப்போது யோசிக்கையில், அடிக்கடி கதைக்கும் ஒலிவியா கூட அவன் பற்றி எதுவும் கதைக்கவில்லை. அவன்தான் எல்லோரிடமும் சொல்லிவிட்டுச் சென்றானோ என்ற ஐயம் அவளுக்கு.
நல்ல நட்போடு பழகும் ஏவாவிடம் கூட இதைப் பற்றிக் கதைக்கப் பிடிக்கவில்லை.
அன்று இரவு அவன் புலனத்தைத் திறந்து வைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தவளுள் கோபம் கோலோச்சி நின்றது.
‘நீ எப்பிடிச் சொல்லாமல் போகலாம்?’ மனதுள் சீறல் எழுந்தது. அந்தத் தொலைபேசி உருவில் கை வைப்பதும் எடுப்பதுமாக இருந்துவிட்டுக் கடைசியில் அழுத்தியிருந்தாள்.
error: Alert: Content selection is disabled!!