அன்று விமான நிலையத்தில் இருந்து திரும்புகையில், அதன்முன் அவன் அறிமுகமானதில் இருந்து தம்முள் நடந்த ஒன்று ஒன்றையும் பல தடவைகள் எண்ணிப் பார்த்து விட்டாள், துர்கா. தான் எங்கவாது தவறு செய்தாளா, அவனை வருத்தி விட்டாளா, அவமரியாதை செய்து விட்டாளா என்றெல்லாம் யோசித்தவளுக்கு, எஞ்சியது என்னவோ கோபம் மட்டுமே! எல்லாவற்றுக்குமே முதல் எதிரி கோபம் என்பது அவள் எண்ணம். இருந்தாலும் அந்த எதிரிதான் இப்போது அவளோடு நட்பில் இணைந்திருந்தது.
இத்தனைக்கும் பின், தானாக அழைத்தால் இரண்டு ரிங்கில் அவள் அழைப்பு செயலிழந்துவிட்டது. சுரீர் என்று கோபம் அதிகரித்தது. கண்ணீர் வழிந்தது. கைப்பேசியை, அதில் தெரிந்த அவன் பெயரை, குட்டியாகத் தெரிந்த அவனுருவையே முறைத்துப் பார்த்திருக்க வீடியோ அழைப்பு வந்தது.
“ராஸ்கல்!” வாய் உச்சரித்துக்கொண்டு இருக்கையில், வலக்கை ஆட்காட்டி விரல் முந்திரிக்கொட்டை வேலை பார்த்திருந்தது. கண்ணீரோடு அவன் முன் காட்சி தந்து வலிமை குறைந்தவள் என்று தம்பட்டம் அடிக்கவா வேண்டும்? சட்டென்று தோற்பட்டையில் முகத்தைத் துடைத்துக்கொண்டாள்.
“துர்கா!”என்றவன் விளிப்பில் பதற்றம். கண்ணீரைக் கண்டுவிட்டான். அவள் மீதான அக்கறையில் வந்த அந்தப் பதற்றமே கண்ணீரை மேலும் மேலும் உற்பத்தி செய்தது.
“துர்கா, ஏதாவது பிரச்சினையா? ஏன் அழுகிற?” என்றவன் குரலில் தவிப்பும் சேர்ந்திருந்தது. அப்போதுதான் அவன் வாகனம் ஓட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது. ‘ஓ ட்ரைவிங்கில் இருந்தானோ, அதாலதான் கோல் கட் பண்ணினானோ’ என்று எண்ணியவளுக்கு, வீடியோ கோலுக்காக கட் பண்ணியிருக்கிறான் என்பது தாமதமாகவே புரிந்தது.
பாதையோரமாக இடம் பார்த்து காரை நிறுத்திவிட்டு, “கேட்டாப் பதில் சொல்லோணும் துர்கா.” என்றவன் குரலில் இலேசாக அதட்டல் ஒட்டியிருந்தது.
“மண்ணாங்கட்டி” அவனையே பார்த்துக்கொண்டு சொல்லியிருந்தாள்.
“வாட்?” தமிழில் சொன்னால் அவனுக்கு எப்படி விளங்கும்.
“என்ன வாட்?” இத்தனை நாட்கள் கதைக்கவில்லை, காணவில்லை என்றுதானே இப்போது அழைத்தாள். இப்போ, அவன் முகம் பார்த்ததும் சுமூகமாகக் கதைக்க வரவில்லையே!
“ஏன் அழுகிற எண்டு கேட்டன்.” தன்மையாகக் கேட்டான்.
“ஆங்! நேத்தி வச்சிருக்கிறன்.”மீண்டும் தமிழில்தான் சொன்னாள்.
“நான் இன்னும் தமிழ் படிக்கத் தொடங்கேல்ல துர்கா. இங்கிலிஷ்ல சொல்லு.” என்றபோது அவனுள் பதற்றம் வடிந்திருந்தது. பெரிய விசயம் என்றால் இப்படி இருந்து அவனோடு சீண்டுப்படும் ஆளா அவள்?
“எங்க இருக்கிற நீ?” இங்கிருந்து முறைப்பின் முதுகில் ஏறிப் பயணப்பட்டது, இக்கேள்வி.
ஏதனோ, அந்த உரிமையான முறைப்பை இரசித்தான். அடக்கப்பட்ட முறுவலோடு இலகுவாக இருக்கையில் அமர்ந்தவன் விழிகளில் எக்கச்சக்க சுவாரசியம். அவளையே ஊன்றிப்பார்த்தான். “என்னைத் தேடினியா நீ? எங்க இவன் எண்டு கோல் எடுத்துப் பாக்க இத்தினை நாள் தேவைப்பட்டு இருக்கு… ம்ம்ம் ?” புருவமுயர்த்தியபடி கேள்வி கேட்டவனை என்ன செய்வது?
அவன் தன்னைப் பார்த்து நகைக்கிறானா என்ன? தான் தேட வேண்டும், தவிக்க வேண்டும் என்றே இப்படிச் செய்தானா? இந்த மனம் இருக்கே, மிகவுமே பொல்லாதது. சில சமயங்களில் அதி வேகமானதும் கூட. கடிவாளம் இடவில்லையோ கண்டபடி பறந்து திரியும். அதன் பிடி எப்போதும் புத்தியின் விரல் இடுக்குகளில் இருக்க வேண்டும். இல்லையோ போச்சு! இதோ இப்போது இவள் மனமும் அவனில் குற்றம் கண்டுபிடிப்பதே குறிக்கோள் போல் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்க கண்கள் மீண்டும் நிறைந்து போயின.
புத்தி அருட்டியதில், “வன் மினிட்.” எழுந்து விட்டாள். முகத்தைக் காட்டாமலே, “உங்களுக்கு இப்ப நேரம் இருந்தா கதையுங்கோ ஏதன், இல்லையோ பிறகு கதைக்கலாம். ஒண்ணும் அவசரம் இல்ல.” சொல்லிக்கொண்டே குளியலறைக்குள் புகுந்திருந்தாள்.
கண்ணீரை அவனுக்கு மறைக்க எண்ணியே எழுந்தாள். ஆனால், ஏதன் கண்டுவிட்டான். அவள் கண்ணீர் எப்போதும் அவனுக்கு மகிழ்வைத் தராது. ஆனால், இப்போதைய கண்ணீருக்குக் காரணம், அவன் சொல்லாது வந்ததால், அவனை எதிர்பார்த்துச் சந்திக்க முடியாது போனதால் வந்ததாயிற்றே! அவன் நேசம் நோக்கி அவள் நேசம் வருகிறது என்பதற்குச் சான்றே இந்தக் கண்ணீர்தான். பிறகு மகிழாமல் இருப்பது எப்படியாம்? பொறுமையாகக் காத்திருந்தான்.
துர்காவோ, உள்ளே நுழைந்த வேகத்தில் விக்கி அழுது விட்டாள். எவ்வளவை யோசித்தாள்? அது பார்த்தால் சீண்டலோடு கதைக்கிறான். வேண்டும் என்றே இப்படி அவளைத் தவிக்கவிடவே சொல்லாமல் சென்றிருக்கிறான். என்ன மாதிரியான மனநிலை இது? அவனைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியே தீருவேன் என்றது, உள்ளம்.
‘அதுக்காக இப்பிடியா அழுவ? பிறகு சிரிக்காமல் சேர்ந்து அழுவானா என்ன? மோட்டுப் பெட்ட, அழுகைய முதல் நிப்பாட்டு.’ புத்தி பலமாகவே அதட்டியது.
குளிர் நீரால் முகத்தை நன்றாகக் கழுவினாள். அழுத சுவடு தெரிகிறதா என்று அங்கிருந்த கண்ணாடியில் பார்த்தாள். அப்பட்டமாகத் தெரிந்தது. மீண்டும் ஒரு தடவை முகத்தைக் கழுவி அழுந்தத் துடைத்தாள். அது எங்கே?
‘விடன், இப்ப என்ன தெரிஞ்சிட்டுப் போகட்டுமே. அவன் செய்த வேலை என்ன எண்டு அப்ப சரி உணரட்டும். இன்னொரு நாளைக்கு இப்பிடி நடக்க யோசிக்கட்டும்.’ என்ற எண்ணத்தோடுதான் மீண்டும் வந்தமர்ந்தாள்.
“பிசி எண்டால் வைக்கச் சொன்னனே, நான் சும்மாதான் எடுத்தனான்.” நிமிர்வாகவே சொல்ல முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டாள்.
“நான் பிசியே இல்ல.” கண்சிமிட்டி முறுவலித்தவன் பார்வை அவளைத் துளைத்தெடுத்தது.
“ஓ!” முறைப்போடு அளவுக்கு அதிகமாகவே வியந்தாள்.
“யெஸ், என்ர ஹனி முதன் முதல் என்னை நினைச்சு, எங்க இவன் எண்டு தேடி கோல் பண்ணியிருக்கிறாள். அவளோட கதைக்கிறத விட வேற என்ன வேல பெரிசா இருக்கப் போகுது?” என்றவனுக்கு, “இஞ்ச ஆரும் ஓவரா நடிக்கத் தேவையில்ல.” சட்டென்று கொட்டு வைத்தாள்.
“நடிப்பா? அதும் ஓவரா? இப்ப நான் விக்கி விக்கி அழப்போறன் சொல்லிட்டன். கண்ணீர மறைக்க, ஓடிப்போய் கழுவிட்டு வர, இப்ப இந்த நடு ரோட்டில வோஷ் ரூமுக்கு நான் எங்க போக?” என்றவன், “ நீ தானே, என்ர கண்ணீரப் பாத்தா எனக்குப் பிரச்சின ஒண்டும் இல்ல துர்கா. நான் உன்னட்ட இருந்து என் சம்பந்தமா எப்பயும் எதையும் மறைக்க நினைக்கேல்ல, நினைவுக்கவும் மாட்டன்!” என்று சொல்லிக்கொண்டு திரைக்கு கிட்ட முகத்தைக் கொண்டுவந்தவன், அவள் விழிகளை மீண்டும் கலங்கவைத்தான்.
கரமிரண்டாலும் முகத்தைப் பொத்திக்கொண்டாள், துர்கா. கண்ணீரை உள்ளே இழுக்க முனைந்தாள். அது விரல் இடுக்குகளால் வழிந்து அவனுக்குத் தன்னைக் காட்டிக்கொடுத்திட்டு.
“துர்கா, ப்ளீஸ் டோன்ட் கிரை!”அவள் அருகண்மையில் அமர்ந்திருந்து சொல்வது போலிருந்தது, ஆழ்ந்து ஒலித்த அவன் குரல், அதிலிருந்த நேசம், அவளுடனான நெருக்கம் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து அவள் விழிநீரைத் துடைத்து விடுவது போல் உணர்ந்தாள், அவள். பட்டென்று கரங்களை விலத்தினாள்.
“ரியலி சொறி, நான் சொல்லாம வந்திருக்கக் கூடாது.” என்றவன், அங்கு தாம் புதிய ரெஸ்ட்டோரண்ட் திறக்கும் ஆயத்தங்களில் இருப்பதைக் கூறினான். ஒன்றரை இரண்டு மாதங்களுக்கு அங்கு நிற்க வேண்டி வரும் என்றும் சொன்னான்.
“அவ்வளவு நாள்களுக்கா?” எப்போது அவனோடு சமாதானம் ஆனாளோ தெரியாது, அவனை உடனே சந்திக்கக் கிடைக்காது என்பது மனத்துக்கு எதுவோ போலிருந்தது.
அவள் விழிகளையே பார்த்தபடி, “அங்க இருந்தா நீ அடிக்கடி அந்த மெசேஜ எடுத்துக் காட்ட வேண்டி வரும் துர்க்கா. அதான் ஓடி வந்திட்டன். இப்ப நீ என்ன ‘அவ்வளவு நாள்களுக்கா?’ எண்டு அழுகிற ? சரி விடு, இண்டைக்கே வெளிக்கிட்டு வாறன். ஆனா ஒண்டு, நீ அந்த மெசேஜ பெர்மனண்டா டெலிட் செய்திரோணும். டீல் ஓகேவா?” என்றவன் கழுத்தை நெரிக்கும் வகையில் கரமிரண்டையும் கொண்டுசென்றவள் முகமும் திரைக்கு மிகவுமே அண்மையில் சென்றிருந்தது.
“ஒண்டும் தேவையில்ல. போன வேலையை முடிச்சிட்டே வரலாம். ஆனா ஒவ்வொருநாளும் கோல் எடுக்கோணும். நான் எடுக்கவே மாட்டன் . நீங்க எடுக்கோணும். இப்ப அலுவலப் பாக்கலாம். உம்மா.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவள் முகம், அதிகாலை நேரக் கீழ் வானத்தின் செஞ்சாந்தின் மினுக்கத்தில் இருந்தது.
*****