அதிகாலை ஒரு மணிக்கு விமானம். அழைத்துச் செல்ல வருவதாக ஏவா சொல்லியிருந்தாள். “உனக்கு ஏன் வீண் அலைச்சல்? நாங்களே கூட்டிக்கொண்டுபோய் விடுவம்.” என்றிருந்தார், துர்காவின் சிறிய தயார். ஏவா கேட்கவில்லை. ஒரேபிடியாக நின்று, “சரி சரி” என்று சொல்ல வைத்திருந்தாள்.
துர்காவோடு கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு வந்த ஏவா, “பின்னேரம் ஏழு மணிபோல துர்காவ ஏர்போட்டில விட்டுட்டு வருவம் வாறியா?” என்று, ஐவனிடம் கேட்டாள்.
அவன் யோசிக்கவெல்லாம் இல்லை, “ட்ரைவரோட போயிட்டு வா.” என்றுவிட்டு எழுந்துவிட்டான். ஆரோன், சோஃபியா மற்றும் ஐலா எல்லோரும் அங்குதான் அமர்ந்திருந்தார்கள்.
மகனை ஆழ்ந்து பார்த்த ஆரோன், “ஐவன்” என்று அழைத்து நிறுத்தினார்.
“யெஸ் டாட்” என்றபடி திரும்பியவனிடம், “பின்னேரம் முக்கிய வேலைகள் ஏதாவது இருக்குதா?” என்று கேட்கவும், “இல்ல, அப்பிடி முக்கியமானது எண்டு ஒண்டும் இல்ல டாட். ஏன் கேக்கிறீங்க?” என்றவனுக்குச் சற்றுத் தாமதமாகத்தான் தந்தை ஏன் கேட்டார் என்று புரிந்தது.
“ஆனா, ஏர் போட்டுக்குப் போறதுக்கு எனக்கு வசதிப்படாது டாட்.” என்றும் சொல்லிவிட்டான்.
“அப்பிடிச் சொல்லு என்ர மகனே! ஏதோ ஊருலகத்தில இல்லாத பொம்பள அவா. ராங்கி பிடிச்சவள். இவன் ஏதனுக்கு மூளை மழுங்கிப் போய் நிக்கிறான் எண்டா, துணைக்கு இவே எல்லாரும். எல்லாம் அந்த அவுஸ்ரேலியாக்காரி வைன் குடுத்து நடக்குது. இதுக்க அவளுக்கு என்ர பிள்ள ட்ரைவர் வேல பாக்கோணுமாக்கும்.” சோஃபியா வாய்க்குள் முணுமுணுத்தார். “அதானே.” என்றாள் ஐலா. தாய்க்கு மட்டும் கேட்கும் வண்ணம்தான். தகப்பனிடம் அந்தளவுக்கு ஏச்சு வாங்கியிருந்தாளே!
“ஓ!” என்ற ஆரோன், “அப்ப நான் வாறன் ஏவா. ரெண்டு பேரும் போகலாம். ” என்றுவிட்டு, மனைவி பிள்ளைகளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தார்.
“ஏதன் இஞ்ச நிண்டு இருந்தா அவன்தான் போயிருப்பான். உங்களில ஆருக்கும் விருப்பம் இருக்கோ இல்லையோ துர்காவும் எங்கட வீட்டில ஒரு பிள்ளதான். அதான் உண்மை. உதாரணத்துக்கு, காலம அந்தப் பிள்ளைக்குப் பிறந்தநாள் எண்டு போக வெளிக்கிட, சோஃபியாவும் ஐலாவும் வரேல்ல எண்டு நிண்டீங்க, அதால ஒண்ணுமே குறைஞ்சு போகேல்ல. அப்பிடித்தான் எல்லாம்.” என்றுவிட்டு எழுந்து செல்ல, “டாட் போயிட்டு வர லேட் ஆயிரும். அவ்வளவு நேரத்துக்கு நீங்க தூங்காமல் இருக்கக் கூடாது. நான் ட்ரைவரோட போயிட்டு வாறன்.” என்றாள் ஏவா.
“அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல, நான் வாறன்.” என்று நகர்ந்த தந்தையிடம், “டாட் நானே போறன்.”என்று சொன்னான், ஐவன். திரும்பியவர், “இந்தளவுக்குச் சிரமப்பட்டு நீ ஒண்டும் செய்யத் தேவையில்ல ஐவன். உன்ர அலுவல்களைப் பார்.” என்றபடி அறைக்குள் சென்று மறைந்திருந்தார்.
“அவரே போகட்டும், நீ ஒண்டும் போக வேணாம்.” சோஃபியாவுக்கு ஐலாவும் ஒன்றாகச் சொன்னார்கள்.
“ப்ச்!” சலித்துக்கொண்டு தந்தையை நாடிச் சென்றான், ஐவன்.
துர்க்காவுடனான முதற்சந்திப்பே இவனுக்கு நல்ல முறையில் அமையவில்லையே! அந்தளவுக்குக் கோபப்பட்டிருக்கிறான். பொருட்டாகக் கருதாமல் உதாசீனம் செய்திருக்கிறான். அந்நேரம், துர்கா என்பவள் ஒலிவியாவின் நெருங்கிய நண்பி என்று மட்டுமே தெரிந்ததும் காரணம். அந்நேர அவன் மனநிலைக்கு அவன் கொதிப்பு மிகவும் சரியாகத் தெரிந்தது.
தாயும் மூத்த சகோதரியும் அவனை ஒத்த மனநிலையில்தான் இருந்தார்கள். அதிகம் ஏன், அவர்கள் வீட்டின் மூத்த உறுப்பினரான கிராண்ட்பா டோனியே துர்க்காவின் பிரசன்னம் அவர்கள் வீட்டில், உணவகத்தில் தேவையற்ற ஒன்று என்றுதான் அப்போது எண்ணினார்.
கடந்து சென்ற சில மாதங்கள் அந்த மனநிலையில் மாற்றம் கொண்டுவந்திருந்தது. துர்கா விடயத்தில் ஒரு நிதானத்துக்கு வந்திருந்தான். முக்கிய காரணம் ஏதன்தான். என்னதான் தங்களுள் அடித்துப் பிடித்ததுக்கொண்டாலும் கோபப்பட்டாலும் ஏதன் அவன் சகோதரன், முக்கியமானவன். அப்போ, சகோதரன் எதிர்கால வாழ்வாகக் கருதும் பெண் அவனால் மதிக்கப்பட வேண்டியவள். அடுத்து, ஆரோனுக்கு அவளை மிகவுமே பிடித்துப் போய் விட்டது. கிராண்ட்பாவே, ஏதன் இந்தளவுக்கு விரும்பினால் , உறுதியாக நின்றால் குறுக்க நிற்பான் ஏன் என்று, அமைதியடைகையில் இவன் எல்லாம் துள்ளி என்ன பயன்? அமைதியாகிவிட்டான். ஆனாலும் துர்காவோடு கதை பேச்சுக்குச் செல்வதில்லை. நாசுக்காக ஒதுங்கிவிடுவான்.
இப்போது மறுத்ததற்கும் அதுவே காரணம். அதோடு, காலையில் பிறந்தநாளுக்குச் சென்றானே, அது போதும் என்று நினைத்தான்.
தந்தையிடம் இதையெல்லாம் சொல்லி, தானே போவதாகச் சொல்லிவிட்டு வந்தான்.
ஐவனும் ஏவாவும் துர்கா வீடு வந்து சேர்க்கையில் இரவு எட்டு மணி. அடுத்த அரைமணிநேரம் விடைபெறுதலில் கழிந்திருக்க, மூவருமாக விமான நிலையம் நோக்கிப் பயணப்பட்டார்கள்.
மின்சார விளக்கொளியில் சோம்பலாகக் காட்சி தந்த வெளிப்புறத்தில் துர்கா பார்வை இருந்தது. “டிரான்சிட் மலேசியால என்ன துர்கா? எவ்வளவு நேரம் அங்க நிக்கோணும்?” என்ற ஏவா, பதில் வரவில்லை என்றதும் திரும்பிப் பார்த்தாள்.
“துர்கா.” தோளில் தட்டவும் “ம்ம் என்ன?” என்று திரும்பியவள் கருத்தில், தான் கேட்டது பதியவில்லை என்றது ஏவாவுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அதோடு துர்காவின் முகமே சரியில்லை.
“என்ன இலண்டனை விட்டுப் போறது கவலையா இருக்கோ?” சீண்டினாள். “ப்ச்!”அலுத்துக்கொண்ட துர்கா வேறொன்றும் சொல்லவில்லை.
“இப்ப என்ன, நினைச்சோன்ன ஓடி வர வேண்டியதுதானே? இல்லையோ உனக்கு வேண்டிய ஆக்கள அங்க ஓடி வரச் சொன்னா வந்திட்டுப் போகினம். என்ன ஐவன் நான் சொல்லுறது சரி எல்லா?” தமையனையும் பேச்சினுள் இழுத்துக் கதைத்தாள், ஏவா.