ஏதனின் இலஞ்சியவள்-34 – 2

நண்பிகள் ஐவருமாக இலங்கை புறப்பட்டிருந்தார்கள். அதில் ஒருத்தி கண்டியைச் சேர்ந்தவள். சிங்களப் பிள்ளை. அதிகாலை விமானமேறி நேரே கண்டிக்கு அவள் வீட்டிற்குச் சென்றவர்கள், அன்று ஓய்வில் இருந்துவிட்டு மறுநாள் கண்டியைச் சுற்றி வந்தார்கள்.

 தலதா மாளிகையில் ஆரம்பித்தவர்கள்,  கண்டி லேக் வியூ பார்த்துவிட்டு அப்படியே  வயிற்றைக் கவனிக்கும் பொருட்டு   MANDIYA வினுள் நுழைந்தார்கள்.  சோறுதான், கைக்குத்தரிசி. நடுவில் சிறு கிண்ண வடிவில் இருக்க, அவர்கள் கேட்டுக்கொண்டபடி கடலுணவு வகைகளில் பொரியல் அவியல் கறிகள் , கோழிப் பொரியல் , மரக்கறி வகைகள், கீரை பப்படம் என்று விருந்தே பரிமாறினார்கள். 

வயிறார இரசித்து உண்டுவிட்டு, வட்டிலப்பம் சாப்பிட்டுவிட்டு ஒரு பீடாவையும் அதக்கிக்கொண்டே வெளியே வந்தவர்கள் நேரே சிரியாணி மற்றும்  கண்டி மோல்களில் ஒரு சுற்றுச் சுற்றி வந்தார்கள்.

மறுநாள், ‘சிவனொளி பாதமலை’ செல்வதுதான் அவர்கள் திட்டம்.  ‘சிவனொளி பாதமலை’  அடிவார நாலாந்தெனியா என்ற ஊரில் இருந்து, கிட்டத்தட்ட ஒரு மணித்தியால தூரத்தில் ஹற்றனில், இரவு தங்குவதற்காக இரு அறைகள் முன்பதிவு செய்திருந்தார்கள். 

அங்குச்  செல்லும் வழியில் ‘ரம்பொட ஓயா’வின் அழகை நின்று நிதானித்து இரசித்தார்கள். அப்படியே,  ‘ப்ளூ ஃபீல்ட் டீ  எஸ்டேட்’ சென்றவர்கள், கைட்  உதவியோடு அந்தத் தேயிலைத் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தார்கள். சுற்றிலும் அடர்ந்து பரவிக்கிடந்த மலையரசியின் அழகை இரசித்தார்கள். அப்படியே தேயிலைத் தொழிற்சாலைக்குச் சென்று தேயிலை பதப்படுத்துவது , தேயிலை வகைகள் என்று ஆர்வமாக அறிந்துகொண்டவர்கள்,  அங்கிருந்து ரெஸ்டோரண்டில் சுடச் சுட தேநீர் அருந்திவிட்டுப்  புத்துணர்வோடு ஹற்றன் நோக்கிப் பயணப்பட்டார்கள். 

அறைக்கு வந்து சேர்கையில் இரவு எட்டு மணி கடந்திருந்தது. வரும் வழியில் கொத்து ரொட்டிப் பார்சல் வாங்கியவர்கள் ஒன்றைச் சாரதிக்கு கொடுத்தார்கள். அவர்  இவர்களை இறக்கிவிட்டவர், தான் உறவினர் வீட்டில் தங்கிவிட்டு விடிய ஐந்தரைக்கு வருவதாகச் சொல்லிச் சென்றுவிட்டார்.

சுத்தமான வசதியான அறைகள். குளித்துவிட்டுச்  சாப்பிட்ட கையோடு உறக்கம் சொக்கியது. அவுஸ்திரலியாவில் நடு இரவு. அதனால் வீட்டுக்குக்  குறுஞ்செய்தி அனுப்பியவள் ஏதனுக்கு அழைத்தாள். அவர்கள் இன்று இரவு இலண்டனில் இருந்து புறப்படுவதாகச் சொல்லி இருந்தான். அழைப்பு ஏற்கப்படவில்லை. அவனுக்கும் குறுஞ்செய்தி அனுப்பியவள்  உறங்கிவிட்டாள்.

மறுநாள் காலை ஏழரைக்கு எல்லாம் சிவனொளி பாதமலை அடிவாரத்தில் நின்றார்கள். இருள் முழுதாக விலகவில்லை. மழை மேகங்கள் திரண்டு நின்று மிரட்டின. சாரதி அனுபவப்பட்டவர். ஏற்கனவே சொன்னதை மீண்டும் நினைவுறுத்தினார். 

“இது  ஓஃப் சீசன் பிள்ளைகள். மலை ஏறத்தான்  போறீங்களா  எண்டு இன்னொரு தடவை நல்லா யோசிச்சுக்கொள்ளுங்கோ. மழை கொட்டப்போகுது. சீசன் நேரங்களில இருக்கிற டொயிலட் வசதிகள், அவசர உதவி வசதிகள் எண்டு ஒண்டும் இந்த நாள்களில திறந்து இராது.  முக்கியமா அட்டை இருக்கு. எப்பிடி ஏறும் எண்டு தெரியாது, கடிச்சு இரத்தம் உறிஞ்சிறதும் தெரியா. பிளான் பி ஏதாவது இருந்தாப்  பாக்கலாமே மா.” என்று அக்கறையாகச் சொன்னார். 

ஐவரும் சிரித்தார்கள். “அதுதானே சேலஞ்.” என்றவர்கள், “நீங்க ஒண்ணும் யோசியாதீங்க அங்கிள். நாங்க போறதும் வாறதுமா விறுவிறுவென்று வந்திருவம். மிஞ்சி மிஞ்சிப்போனா நாலு மணித்தியாலங்கள் எங்களுக்குக் காணும். நீங்க இஞ்ச வேற வேலைகள் இருந்தாச்  செய்திட்டு,  மத்தியானம் பன்னிரண்டு போல இந்த இடத்துக்கு வந்தாலே போதும்.” என்றார்கள்.

இளம் கன்று பயமறியாது. கவனம் சொல்லி அனுப்பி வைத்தார் அவர். அப்போதே மழை  துமிக்க ஆரம்பித்திருக்க, உடலை மூடும் மழைக்கோட்டை  அணிந்துகொண்டவர்கள் மேலே செல்லும் வழியினைக்  காட்டும் குறியீட்டைப்  பின்பற்றி உள்ளே நடக்க ஆரம்பித்தார்கள். 

அவர்களையே பார்த்து நின்ற நாய் ஒன்று, வாலை ஆட்டியபடி அவர்களைத் தொடர்ந்தது. 

எதிர்ப்பட்ட கடவுளருக்கு வணக்கம் வைத்துவிட்டு முன்னேறினார்கள். நீர்வீழ்ச்சிகள், கனத்த கரும்பஞ்சு மேகங்கள் முட்டும் மலை முகடுகள், பசிய ஏகாந்தமான சுற்றம், நெருங்கிய நட்புகள் என்று எல்லாம் ஒன்றாகச் சேர்ந்திருக்கையில் ரசிக்காது, அந்தக் கணத்தை ஆழ்ந்து அனுபவிக்காது இருக்க முடியுமா என்ன? 

இடையிடை கடிக்கவும்  கொறிக்கவும் தாகம் தீர்க்கவும் கைவசம் வைத்திருந்தார்கள். பிறகென்ன? எக்கச்சக்கமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு கலகலத்தபடி  ஏறியவர்களுக்கு மழை உக்கிரமாகவும்தான் சிரமம் விளங்கியது. 

ஐய்யாயிரத்து ஐநூறு படிகளில் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு ஏறிவிட்டார்கள். மழையின் சடசடப்பு சற்றே பயம் கொடுத்தது. படிகளில்  நீர் சாதுவாக வடிந்து வரத்  தொடங்கியிருந்தது. 

“திரும்பி  இறங்கிருவமா? இது அட்டைதானே?” மிகச் சிறு கறுப்பு நூல் துண்டு எனக் கிடந்ததைக் குச்சியால் தட்டி ஆராய்ந்தபடி கேட்டாள், ஒருத்தி. 

“ஓமடி, அட்டையேதான். இத்தறிக்குக் கைக்குள்ள எத்தின ஏறிட்டோ தெரியா. அச்சோ அங்கால  அந்தக் கம்பில சாயாத, அட்டை இருக்கும். ” பயப்படுத்திச் சிரித்தாள், துர்கா. 

அதில் நின்று துள்ளுப்பட்டார்கள். தம்மை நன்றாக ஆராய்ந்துகொண்டார்கள். 

“இப்ப வரை ஒருத்தரக் காணேல்ல.  தனியா நாங்க மட்டும்தான். ஏதாவது நடந்தா? இந்தக் காட்டுக்க இருந்து பாம்பு வந்தா…ஐயோ!” இன்னொருத்தியும் தொடங்கினாள்.  

“டிரைவர் அங்கிள் சொன்னதக்  கேட்டமா? இப்பவும் ஒண்ணும்  பிரச்சினை இல்ல, கீழ போவம்.” இருவரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு கெஞ்சினார்கள்.

“பயந்தாங்கொள்ளிகள்!” துர்காவும் அந்த கண்டிப் பிள்ளையுமாகச் சிரித்தார்கள். 

“கால் ஏலாது எண்டு சொல்லு இறங்கலாம். பயம் எண்ட  வார்த்தை வரக்கூடாது.” என்ற அந்தச் சிங்களப்பிள்ளை, தன்னோடு இருவரை அழைத்துக்கொண்டு முன்னால்  ஏறினாள். மற்றவளோடு துர்கா  ஏறினாள். மேலும் ஐநூறு   ஏறியிருப்பார்கள், முன்னால் சென்ற ஒருத்தி பின்தங்கி இவர்களோடு சேர்ந்து கொள்ள,  முன்னால் சென்றவர்கள் பார்வையில் இருந்து மறைந்து விட்டார்கள்.

மேலேயிருந்து படிகளால் மழை நீர் பிரவாகமாக இவர்களை எதிர்கொண்டு வர ஆரம்பித்திருந்தது. நின்று பார்த்தவர்களுக்கு மிரட்சியாகத்தான் இருந்தது. அதில் ஒருத்திக்கு காலில் அட்டை ஏறியிருக்க, அதைப்  பிடுங்கி எடுப்பதத்திற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.  திரும்புவோம் என்று சொல்லிச் சொல்லியே மூவாயிரத்துச் சொச்சம் படிகள்வரை வந்த அந்த இரு நண்பிகளும் அங்கு இருந்த சிறு சமதரையில் நின்று விட்டார்கள். 

“இனி ஏலாது துர்கா. மேல போனவேய வரச் சொல்லு, இறங்கலாம்.”  பிடிவாதம் பிடித்தார்கள். 

 

error: Alert: Content selection is disabled!!