ஏதனின் இலஞ்சியவள்-34 – 3

அழைத்துப் பார்த்தாள். அழைப்புச் செல்லவில்லை. மனத்துள் பதற்றமாக இருந்தது. காட்டிக்கொள்ளாது மீண்டும் மீண்டும் அழைத்ததில் ஒருவாறு ஹலோ வந்து சேர்ந்தது. நண்பிகள் சொல்வதைச் சொன்னாள். ஏச்சும் பேச்சும் பறந்து வந்தது.   

“உங்களை விட ஒரு இருநூறு படிகள்தான் முன்னுக்கு நிக்கிறம்.  இவ்வளவுக்கு வந்திட்டு இதென்ன கதை? பேசாமல் வாங்க. இந்த அனுபவம் பிறகு எப்ப, எங்க கிடைக்கும் சொல்லுங்க?” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தார்கள். 

அவர்களோ முடியாது என்று பிடிவாதமாக நிற்க, “சரி, கவனமாக் கீழ இறங்கிப்  போங்க. நான் வேகமாப் போய்  அவே ரெண்டு பேரையும் கூட்டிக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு, வேகமாக ஏற  ஆரம்பித்தாள், துர்கா.  

மேலும் சில நூறு படிகள் ஏறிய பின்னரே  தனித்து வந்தது எவ்வளவு முட்டாள்தனம் என்று அவளுக்கு விளங்கியது. அவ்வளவு நேரமாக வியந்து பார்க்க வைத்த ஒன்று ஒன்றும் பயம் காட்டின. ஒரு தடவை வந்த வழியில் திரும்பிப் பார்த்தாள்.  மழை மேகங்களுள் ஒளிந்து மறைந்தேனும் தம்மை வெளிப்படுத்தி நின்ற நீர் வீழ்ச்சிகளும் மலை முகடுகள் அவ்வளவு இரம்மியமாக இருந்தன. சுவிஸ் மலை முகடுகளை அவளுக்கு நினைவுபடுத்தின. 

அதேநேரம் அந்த ஏகாந்தம் கழுத்தை நெரிப்பது போலிருந்தது. பலமாக வீச  ஆரம்பித்த காற்று அவளை விழுங்க வரும் அரக்கன் போலிருந்தது. பாம்பு இருக்குமா வேற என்ன இருக்கும் என்று எல்லாம் கதைத்துக்கொண்டு வந்தது நினைவில் வந்து கால்களை வலுவிழக்கச் செய்தன. 

மழை  நீர் வேறு வேகமாகவும்  அதிகமாகவும் வழிந்தோடி  வரத் தொடங்கியது.  கால்களை மட்டும் நம்பிப் பயனில்லை. முன்னால் செல்பவர்களோடு சேர வேண்டும் என்றால்…  இப்படி நினைத்த வேகத்தில் கைகளையும் பாவித்து விறுவிறுவென்று ஏறினாள், துர்கா.

 அந்நேரம் பின்னால் எதுவோ அரவம். அவள்  இதயம் வாயால் வந்துவிடும் போலிருந்தது. விருட்டென்று திரும்பினாள். யாரோ ஒருத்தன் வந்து கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால்  அவள் நடுக்கத்தைக் காட்டுவதா என்ன ? அவளே வருந்தி அபாயத்தை வரவழைப்பது போலாகிவிடுமே. 

கைப்பேசியை எடுத்து யாரோடோ கதைப்பது போல் கதைத்துக்கொண்டே வருபவனுக்கு வழிவிட்டுத் தள்ளி நின்றுகொண்டாள். அவளைக் கடந்து ஏறினான், அவன். 

“எத்தின ஸ்டெப்ஸ்?  ஓ! இந்தா  உங்களுக்குப்  பின்னுக்குத்தான் நிக்கிறன் ப்ரோ. அங்கயே நில்லுங்க வாறன்.” ஆங்கிலத்தில் சத்தமாகவே சொல்லி வைத்தாள். அங்கு அழைப்பில் ப்ரோ என்ன ப்ரோ சிஸ்டரும் இல்லை. எல்லாம் ஒரு பாதுகாப்புக்கு. 

முன்னால்  சென்றவன் திரும்பியும் பாராது தன்  காரியத்தில் கவனமாக இருந்தான்.  

“அப்பாடா!  ஆபத்தில்லாதவன். சிங்களவனா, தமிழனா, முஸ்லிமா இல்லாட்டி வெளிநாடா? இப்பிடி மூடிக்கட்டிக்கொண்டு வந்து பயங்காட்டிட்டான்.” என்று முணுமுணுத்தபடி ஏறினாள், துர்கா.

மேலிருந்து ஒரு பிக்கு அந்தக் காற்றிலும் இலாவகமாகக் குடை பிடித்துக்கொண்டு இறங்கி வந்துகொண்டிருந்தார்.

நண்பிகளைப் பற்றிக் கேட்டாள். சற்றே முன்னால் செல்வதாகச் சொன்னார். மேலே போவது பயமில்லையா என்றவளைப் பார்த்து முறுவலித்தவர், இதுவரை வந்துவிட்டுக் கேட்கிறீங்களே என்றார். பயமெல்லாம் ஒன்றுமில்லை போகலாம் என்றுவிட்டு அவர் செல்ல, நான்கு இளைஞர்கள் மழையில்  நனைந்தபடி வந்தவர்கள் இவளை விசித்திரமாகப் பார்த்தார்கள். 

தன்னந்தனியாக என்ன முட்டாள் வேலை செய்கிறாள் என்று அவர்கள் ஏசிக்கொண்டு செல்வது தெரியாது நிமிர்வாக ஏறினாள், துர்கா.  

ஏற  ஏற  சற்றே பயம் மட்டுப்பட்ட உணர்வு.  முன்னால்  கண்ணில் பட்டுக்கொண்டே ஒருத்தன் ஏறிக்கொண்டு இருக்கிறானே! அவன் பார்வையில் இருக்க வேண்டும் என்பதற்காக இவள் வேகமாக ஏற வேண்டியும் இருந்தது. கைகள் துணையோடு விறுவிறுவென்று ஏறியவள் உச்சி நெருங்க நெருங்க, குத்தென இருந்த படிகளும் பிரவாகமாகப்  பாயும் மழை நீரும் வெருட்ட  வெருட்ட நடுங்கிக்கொண்டேதான்  சென்றாள். 

‘சேலஞ்’ என்று நினைத்த செயல் இப்போது பெரும் முட்டாள்தனமானதாக இருந்தது.  இனிமேல் இப்படியொரு அபாயகரமான வேலையை முயன்று பார்க்கக்கூடாது என்ற தீர்மானத்தோடு ஒருவாறு உச்சியை அடைந்தால்  அங்கு கோவில் மூடியிருந்ததில் அங்கிருந்த கட்டில் அமர்ந்திருந்தார்கள், நண்பிகள்.

“பூட்  பிரிண்ட் பாக்கேலாதா?” தொப்பென்று அவர்கள் அருகில் அமர்ந்தாள். ஐயோ என்றிருந்தது.  

“எங்க அவே?” என்று கேட்டு இருவருக்கும் ஏசிக்கொண்டிருக்க, களைத்து விழுந்து அழுதுகொண்டே வந்து சேர்ந்தார்கள், அந்த இருவரும்.

ஐந்து பேரும் தங்கள் சாதனைகள், வீர தீரங்களைச் சொல்லிச் சிரிக்கையில் அதுவரை ஒரு புறமாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த அந்த நெடியவன் இவர்கள் புறமாக வந்தான்.

“எங்கே உன் நண்பர்கள் குரூப்?”  என்று நக்கலாகக் கேட்டுவிடுவானோ என்று ஒரு கணம் எண்ணினாலும் அவனைப் பார்க்காது திரும்பியவளை,  “ஹேய் துர்கா, அப்படியே நில்லு!”என்று அவள் தோளைப் பற்றியவன்,  கழுத்தடியில் இருந்து குட்டி உருண்டையாக அட்டை ஒன்றைத் தட்டி விட்டான். வீலென்று அலறிவிட்டாள். நண்பிகள் நால்வரும் அலறி அடித்துக்கொண்டு தம்மை ஆராய்ந்தார்கள். கால்கள், கைகள் என்று அட்டைகள் ஏறியிருந்தன. சிறு பொழுது அங்கு குய்யோ முறையோ என்று சத்தம். 

துர்காவோ, “இவ்வளோ இரத்தம் ஐயோ!”மழை நீரோடு சேர்ந்து உடலுக்குள் வழிந்த இரத்தத்தில் பதறி கைகால்களை ஆராய முயன்றவள், சரேலென்று இயக்கம் நிறுத்தி அவனைப் பார்த்தாள். 

நொடிதான், “அடோய் ஏதன்!” பாய்ந்து அவனைக் கட்டிப்பிடித்துகொண்டாள். 

“என்ர ஏஞ்சலுக்கு சர்ப்ரைஸ் பிடிச்சிருக்கா?” என்றவன், இரண்டாவது தடவையாக  அவளை சுற்றம் மறக்கச் செய்துவிட்டான்.

 அடுத்த ஒரு மணித்தியாலம் அவ்விடத்தில் நடந்தவை என்றைக்குமே அவர்கள் நினைவில் நிற்பவையாயின.

கட்டிப் பிடித்துக் கொஞ்சினாள் என்று பார்த்தால், 

“உன்னைப் பாத்துப் பயந்தன் தெரியுமா? உனக்கு அது நல்லாவே விளங்கினதுதானே?” என்று ஆரம்பித்தாள். 

அவனோ, சீண்டல் சிரிப்போடு நின்றானா. “ஏலாம  ஏறி வாறன் எண்டும்  தெரிஞ்சது எல்லா? ஏன்  விட்டுட்டு வந்தனீ?” என்று கேள்விகளாகக்  கேட்டு கழுத்தை நெரித்தாள்.

“ஹேய்  தள்ளி நில்லு. உன்னில இருக்கிற அட்டை இஞ்ச என்னில  தொத்தப் போகுது.” என்று அவன் சொன்னதுதான் வேலை செய்தது. அப்போதும் “அது தொத்தாது. பொறு நானே பிடிச்சு விடுறன்.”என்றுகொண்டு துள்ளி விலக்கியவளை ஆராய்ந்தால், காலில் இரு இடங்களில் இரத்தம்  உறிஞ்சிப் பந்தாக இருந்தவை சிறு தட்டலில் உருண்டு விழுந்தன. 

மழையும் விட்டிருக்க, “அதெப்படி உன்னில மட்டும் அட்டை ஏறெல்ல? தேடுங்க இண்டைக்கு   இவர் அட்டைக்கடி வாங்கோணும்.” என்று நின்றவளைப் பிடித்து நிறுத்தியவன், அவளையே பார்த்தபடி பொக்கற்றுக்குள் இருந்து சிறு நகைப் பெட்டியை எடுத்தான். என்ன ஏதென்று அவள் சிந்திக்கும்  முன்னரே, அவள் முன்னால்  ஒரு கால் மடித்தவாக்கில் அமர்ந்து விட்டான்.  துர்கா ஆனந்த அதிர்வில் வாய் பொத்தி நின்றாள்.

“Ahhh! This has to be the most adorable proposal we’ve ever seen!” என,  நண்பிகள் குதூகல ஆரவாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் கைப்பேசிகள் இவர்களில் குவிய , “Let’s turn this beautiful moment into a beautiful lifetime. Be my forever?” என்று கேட்டவன் பார்வை, அவள் விழிகளை விட்டு அங்கிங்கு அரங்கவில்லை. அவன் குரலோடு அந்தப் புனித மலையில் வீசிய காற்றும் கலந்து அவளிடம் கதைத்தது போலிருந்தது. உள்ளம் தந்தும்பிய ஆனந்தத்தில் அவன் கண்கள் மெல்ல மெல்ல கலங்க, அவள் விழிகளால் மகிழ்ச்சி முத்துகள் உருண்டு விழ, பொம்மையாகத் தலையாட்டியவள் அப்படியே அவனை அணைத்துக்கொண்டாள். 

“முதல் மோதிரத்தப் போட்டுட்டு ரெண்டு பேரும் தனியாப் போகலாம்.” நண்பியொருத்தி சீண்டினாள்.

சிரித்துக்கொண்டே, அவள் இடக் கையைப் பற்றி ஒற்றைக் கல் வைர மோதிரத்தை அணிவித்து விட்டான், ஏதன். அப்படியே அவளை அணைத்து மின்னலாய் ஒரு முத்தம், அதே வேகத்தில் யாருக்கோ அழைத்தான். 

“அத்தார், ப்ரோபோஸ்  செய்தாச்சா ?”அங்கிருந்து துர்காவின்  பெரிய தம்பி கேட்டான் என்றால், அவள் வீட்டில் ஆரோன் குடும்பம், ஒலிவியா குடும்பம் என்று எல்லோரும் கூடியிருந்தார்கள்.

 அங்கிருந்து வந்த வாழ்த்தொலிகளோடு தானும் சேர்ந்துகொண்டது, சடசடத்துப் பெய்ய ஆரம்பித்த மழை!

     இனிதே நிறைவுற்றது!

 

error: Alert: Content selection is disabled!!