தோள்க் காயம் என்று ஓய்வில் இருந்தாலும் முடிந்தளவு தன் வேலைகளை வீட்டிலிருந்தே கவனித்துக்கொண்டான், ஏதன். முதல் நாள்தான் நேரடியாக வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான்.
‘ஆரோன் டேல்’ தனியார் உணவகக் குழுமத்தில், ஐக்கிய இராச்சியத்தில் மட்டும் 34 உணவகங்கள் உள்ளன. அவற்றில் ஆரோன் டேல் கிரில் அண்ட் பார் (Aron Del Grill & Bar ), Union Street Café – Brunch, Coffee & Desserts இரண்டிலும் Marketing and Promotion மற்றும் Financial Management பொறுப்பினைக் கடந்த ஐந்து வருடங்களாகப் பொறுப்பேற்றிருந்தான், இவன். அதோடு, ஆரோன் டேல் ரெஸ்டோரண்ட் – பைன் டைன் GM, அங்கும் Marketing and Promotion மற்றும் Financial Management இவன் பொறுப்பு.
பதின்ம வயதின் இறுதியில் தொடங்கி படித்துக்கொண்டே அனைத்து நுணுக்கங்களையும் கற்றவன் மூன்றையும் அடுத்தடுத்துப் பொறுப்பேற்றபோது உனக்குச் சுமையாகிவிடலாம் என்று மறுத்தார், ஆரோன். அவன் கேட்கவில்லை.
இன்றோ, அன்று, என்னால் முடியும் என்று கூறியவன் நிரூபித்துக்காட்டியவண்ணம் இருக்கிறான்.
தந்தையே வியக்கும் வண்ணம் இலாவகமாகத் திறம்பட நிர்வகித்து வருகிறான். அவர் பார்த்து பார்த்து உருவாக்கிய உணவக இராச்சியம் அவனால் திறமையாகக் கட்டிக்காக்கப்படும் என்ற நம்பிக்கை வருமளவுக்கு இருந்தது அவன் செயற்பாடுகள்.
அதிலும் Marketing and Promotion யூனிட்டில் அவன் செயற்பாடுகள், விளம்பரங்கள் அதன் நுண்ணிய யுக்திகள் ஒன்று ஒன்றும் ஆரோன் டேல் ரெஸ்டாரண்ட் வசதியானவர்களுக்கானது என்றதை கடந்து, சாமான்யர்களும் துணிந்து அணுகலாம் என்றளவுக்கு மாற்றியிருக்கிறது.
அதுவே, அவன் பொறுப்பிலிருந்த மூன்றிலும் எதிர்பார்த்த வருவாயை விடவும் அதிகரித்து, நன்மதிப்பும் மக்கள் மத்தியிலான பிரபல்யமும் உயர்ந்துமுள்ளது.
முதல்நாள், ‘க்ரில்’ மற்றும் ‘ கஃபே’ என்று காலையிலும் மதியமும் சென்றிருந்தான். இரவு ‘ஃபைன் டைனிங்’ வந்தவன் சில மணித்தியாலங்கள் சரி அங்குள்ள வேலைகளைச் செய்ய நினைத்திருந்தான்.
அதோடு, துர்கா அங்கு வேலை செய்வதும் தெரியுமே! இருந்தும் அவள் வீடு செல்லப் புறப்பட்டுவிட்டாள் என்றதில் வேலையில் கவனம் குவிக்க முடியாது புறப்பட்டுவிட்டிருந்தான்.
அதுவே, இன்று நேரத்துக்கே ரெஸ்டோரண்ட் வந்துவிட்டான். சனிக்கிழமையாச்சே. துர்க்காவிற்கும் முழுநாள் வேலை. அதுவே அவனை இழுத்து வந்திருந்தது.
மாத இறுதி, எப்போதும் வேலைகள் கழுத்தை நெரித்துவிடும். கணக்கெடுக்காது அலுப்புச் சலிப்பின்றி உற்சாகமாகவே வேலை செய்பவன்தான். இன்று, மேலும் புத்துணர்ச்சியாக உணர்ந்தான். காரணம் என்னவாம்? விசமமாகக் கேட்ட மனத்துக்கு அதட்டலோடு முறைப்பைக் கொடுக்க முயன்றவன் உதடுகளில் மலர்வு வந்து ஒட்டிக்கொண்டது. இத்தகைய மலர்வைத் தருவது என்றால் ஒன்றினால் மட்டுமே முடிந்தவொன்று! அது எதுவாம்?
ஏதன் எழுந்துவிட்டான். அந்த அறையின் மூலையில் சிறு குளிர்சாதணப்பெட்டி இருந்தது. குளிர் நீரை எடுத்து மடமடவென்று பருகினான். நேச அலைகள் உருவாக்கிவிட்டுக்கொண்டிருந்த மனத்தின் வெம்மை அந்தச் சில்லென்ற குளிர் நீருக்கே விளையாட்டுக்காட்டியது.
நிதானமாக வந்தமர்ந்தவன் பார்வை கணக்குகளில் இருந்தாலும் மனம் சேட்டை விட்டுக்கொண்டு இருக்கிறதே! அதன் சுரண்டலில் அவன் பார்வை அவனுக்கு வலப்புறம் இருந்த பெரிய திரையில் தெரிந்த அந்த உணவகத்தின் கமராப் பதிவுகளை, குறிப்பாக நுழைவாயில் பதிவைத் தொட்டுவிட்டுத் திரும்புவதை வாடிக்கையாகச் செய்தது.
வேக நடையில் வந்து உள்ளிட்டிருந்தாள், துர்க்கா. நேரத்தைப் பார்த்து பார்த்து ஓடி வந்திருப்பாளோ என்று எண்ண வைத்தாள். ஒரு கிளாஸ் நீரை வேகமாக அருந்தியவள் உடை மாற்றும் அறைக்குள் நுழைந்துகொண்டாள். தாடையை இடக்கையால் பொத்தியபடி அவள் ஒவ்வொரு அசைவையும் இமைக்காது ஒருவன் பார்த்துக்கொண்டிருப்பதை அவள் அறிவாளா என்ன?
ஐந்து நிமிடங்களும் சென்றிராது, அதற்குள் பதினைந்து தடவைகளுக்கும் மேல் உடைமாற்றும் அறை வாயிலைக் காட்டும் கமராவைப் பார்த்திருப்பான், ஏதன்.
துர்கா வெளியே வந்தாள். கறுப்பு பாண்ட் வெள்ளை பட்டின் சேர்ட், மேலே கறுப்பு வெஸ்ட். கறுப்பு சொக்ஸ், சுத்தமான கறுப்புச் சப்பாத்து. முகத்தைப் பளிச்சென்று காட்டும் வகையில் இறுக்கமாக இழுத்து போனிடெயில் இட்டிருந்தாள். அடர்ந்த நீண்ட கூந்தலை அப்படியே விடாது இறுக்கமாகப் பின்னிக் குஞ்சமாகக் கொஞ்சம் விட்டு மீண்டும் ஒரு பேண்ட் போட்டிருந்தாள்.
யாரோ அழைத்தார்கள் போலும் . சரேலென்று திரும்பினாள். கூந்தல் அனுமதிக்குக் காத்திருக்கவில்லை, தோளைத் தழுவி வழுக்கி முன்னால் வந்து, அவள் நெஞ்சில் வலு உரிமையாக இடம்பிடித்துக்கொண்டது.
விழிகளை மூடித்த திறந்தான், ஏதன். மேசையில் இருந்த பேனையை எடுத்து நாலைந்து தடவைகள் தன் நெற்றியில் தட்டிக் கொண்டவனுக்குச் சிரிப்பாக இருந்தது. தன்னை நினைத்துத்தான்.
அவளோ, ப்ரோகிராம் செய்யப்பட்ட பொம்மை போலவே வேலையில் இறங்கிவிட்டாள். காதலித்த அனுபவம் அவளுக்கு இருக்குமா? மிக முக்கிய சந்தேகம் அவனுள் முளைத்தது. அனுபவம் என்ன அனுபவம் காதலன் இருப்பானோ? கேள்விக்குறி கொஞ்சமும் தயை தாட்சண்யம் பாராது அவன் இதயத்தில் ஆழமாகவே கீறல் போட்டது. மனத்தவிப்போடு பெருமூச்செறிந்தான்.
அவளைப் பற்றி அப்படி என்ன உனக்குத் தெரியும், காதலன் உள்ளானா என்று தெரிய? தன்னைத்தானே கடிந்துகொண்டவன், அவளையே பார்த்திருக்கவா வந்தாய் என்று தன்னைத்தானே அதட்டிக்கொண்டான். வேலையில் கவனம் பதிக்க முயன்றான்.
இருந்தாலும் குறும்புக்கார விழிகள் இடையிடை அவள் எங்கே, என்ன செய்கிறாள் என்பதைப் பார்த்து மனத்தைச் சீண்டிக்கொண்டே இருந்தன.
மதிய உணவு நேரம் நெருங்கியிருந்தது. கரங்களை உயர்த்தி நெட்டி முறித்து நிமிர்ந்து அமர்ந்தான், ஏதன்.
திடுமென்று தோன்றிய எண்ணம்தான். அவளைப் பற்றி என்ன தெரியும் என்று கேட்டாய் அல்லவா? தெரிந்துகொண்டால் போயிற்று. எழுந்து வெளியேறியவன் சென்று நின்ற இடம் சேர்வீஸ் ஏரியா.