ஏதனின் இலஞ்சியவள் 7 – 1

வெடிக்கத் தயார் நிலையில் இருக்கும் குட்டிக் குண்டுபோல் முகத்தை நீட்டிக்கொண்டு வருபவளைக் கடைக்கண்ணால் பார்த்த ஏதனுள் அவளைச் சீண்டிடும் ஆவல் எழுந்தது. முதலுக்கே மோசமாகும். நிச்சயம். அடக்கிக்கொண்டான்.

உணவகத்தின் உட்கோடியிலிருந்து வெளிவாயில் வரும் வரைக்கும் பல சோடி விழிகள் இருவரையும் படம் பிடித்தன. சிலர் நெற்றி ஏறியது, அப்படியே நின்றது. சிலர் தம்முள் குசுகுசுத்துக்கொண்டார்கள். அதிலும் அவன் துர்காவை கடைக்கண்ணால் பார்த்த விதத்தைக் கண்டவர்கள், “ஏதனின் புதிய காதலி இவளா?” கேள்வியைப் பரிமாறிக்கொண்டார்கள்.

இது எதுவும் கருத்தில் பதியாது விடுவிடுவென்று நடந்தாள், துர்க்கா.  மனமும் முகமும் இறுகிக் கிடந்தன. ஏதனின் செய்கை அந்தளவுக்கு அசௌகரியமாக இருந்தது. அவன் அவள் அருகண்மையை இரசித்தது தெரியவும் இல்லை, அவள் அப்படி அவன் கூட வருவதைப் பெரும் விசயமாக எண்ணவும்  இல்லை. 

முதல் நாள் அவன் நில் என்றதும் நின்றாளே. அவன் நண்பி என்றதற்கும் அமைதி காத்தாளே. பிறகு அவனோடு காரில் ஏறி  வீடு சென்றாளே. அது எல்லாவற்றுக்கும் இப்போது அவளை அவளே மிகவும் கண்டித்துக்கொண்டாள். அது கொடுத்த துணிவுதான் இவனை இப்படி எல்லாம் நடந்துகொள்ள  வைக்கிறது. 

காரை அண்மித்ததும் வேக எட்டு வைத்து முன்னால் சென்றவன், இன்றும் அவள் ஏறுவதற்கு ஏதுவாக கார் கதவைத் திறந்து பிடித்து நின்றான். 

சுருக்கென்று குத்தும் பார்வை பார்த்தபடிதான் ஏறியமர்ந்தாள். அவன் ஏறியமர்ந்து காரை இயக்கவும் இவள் கதைக்க ஆரம்பித்திருந்தாள். 

“சாப்பிட வெளிய போகப்போறன், நீயும் வாறியா, உன்னால ஏலுமா, நேரம் இருக்கா எண்டு ஒண்டுமே நீங்க கேட்கேல்ல சேர். அதோட இப்பிடி இழுத்துக்கொண்டு வாற குறையாக் கூட்டிக்கொண்டு வர, நேற்று நீங்க பீட்டரிட்ட சொன்னது போல ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் இல்லையே!” அவன் விழிகளைத் தயக்கம் சிறிதும் இன்றிப் பார்த்தபடி நெற்றி சுருங்கியிருக்க, விழிகளில் கோபம் மின்னப் படபடத்தாள்.

கார் இப்போது பாதையில் இறங்கி போக்குவரத்தில் கலந்திருந்தது. 

அவள் கதைத்த விதம் அதுவரை இருந்த இதமான மனநிலையை மாற்றியிருக்க, நெற்றி சுருங்க அவளைப்  பார்த்தான்,ஏதன்.

“என்னோட சாப்பிட வாறதில  உனக்கு விருப்பம் இல்லையா துர்கா? பிரச்சினை ஏதும் இருக்கா?” என்று கேட்டிருந்தான். அவன் குரல் அந்தக் காருக்குள் ஆழ்ந்து ஒலித்தது.

“ஓம் சேர், விருப்பம் இல்ல. உங்களுக்கு மெசேஜ் போட்டனே. பாத்தீங்கதானே? பிறகும் அதில உங்கட ஸ்டாஃப்ஸ் அவ்வளவு பேருக்கும் முன்னால நிண்டு சீன்  என்னத்துக்கு எண்டுதான் வந்தனான்.  நான் வீட்டில இருந்து இங்க படிக்க வந்தனான்.” என்றவள், அந்தப் படிக்க என்றதில் கொடுத்த அழுத்தம் இருக்கே! சிக்னல் போட்டிருந்தான்.  பாதையின் ஓரமாக கார் நிறுத்தப்பட்டது. 

துர்கா கருத்தில் அது பதிந்தது போலவே தெரியவில்லை. “அதோட வேலையும் செய்யிறன். நேரம் மட்டு மட்டு. உண்மையாவே தேவையில்லாத பொழுதுபோக்குகளுக்கு எனக்கு நேரமில்ல. லன்ச் டைம்லதான் வழமையா  வீட்டுக்குக் கதைக்கிறனான். இண்டு  படிப்புச்  சம்பந்தமா  சில குறிப்புகளும் எடுக்கோணும்.”  என்றவளிடம், “சொறி!” என்றிருந்தான், அவன்.

அவன் முகம் கன்றிச் சிறுத்திருந்தது.  அவள் கன்னத்தில் அடித்திருந்தால் கூட இந்தளவுக்கு வலித்திருக்காதோ! அவமரியாதை செய்த உணர்வுமே இந்தளவுக்கு ஏற்பட்டிராது. 

அவனுக்கு நினைவு தெரிந்ததில் இருந்தே, கதைக்கப்பேச, நட்போடு பழக என்று ஆண் பெண் பேதமின்றிய போட்டி இருக்கும். அவனாக யாரோடும் பழகப் போகும் தேவையும் இருந்ததில்லை. 

பதின்ம வயதில் கால் வைக்க முன்னரே, படபடக்கும் பட்டாம் பூச்சியாக அவனைக் கவர்ந்த  ஈர்ப்புகளைச்  சந்தித்திருக்கிறான். இதுதானோ காதல் என்ற கேள்வியோடும் மலர்ந்த முறுவலோடு கடந்திருக்கிறான். பதின்ம வயதில் அந்த ஈர்ப்பின் இனிமையை நேரம் எடுத்து இரசித்திருக்கிறான்.  அதில் இருவர் அவன் காதலிகள் என்ற முத்திரையோடு திகட்டிடாச் செல்வமாய் உணர்ந்து அனுபவித்திருக்கிறான், வாழ்ந்திருக்கிறான். அவற்றின் முறிவு எதிர்பாராதது என்பதே உண்மை. ஆனாலும் பெரும் அனுபவத்தை, வாழ்க்கைப் பாடத்தை, குறிப்பாகத் தோல்வியை அவனுக்கு அறிமுகம் செய்துமிருந்தன.

அதையெல்லாம் இந்தக் கணம் எண்ணினால் ‘காதல்’ என்றால் அதுவா என்ன என்று பெரும் சந்தேகம்கொண்டான், அவன். 

அவனுக்கு அருகண்மையில் அமர்ந்திருப்பவள் மனத்தால் எங்கோ கண்காணா தொலைவில் இருந்தபடியே அவனைக் காதலாக உணரவைக்கிறாளே! 

நெற்றி சுருங்க, விழிகளில் தீர்க்கமும் கண்டிப்பும் முன்னணியில் நிற்க அவனைப் பார்க்கிறாள். அதில் நேசத்தின் சாயலே இல்லை. 

வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று கதைக்கிறாளே, அந்த இதழ்கள் அன்போடு ஒற்றைச் சொல்லை உதிர்க்குமானால்…அந்த உணர்வை இரசிக்க அவன் இதயம் கிடந்து ஏங்குகிறதே! 

‘ப்ச்’ மனத்துள் பெரிதும் சலித்துக்கொண்டான். அவன் அவளில் உணரும் காதல் சாத்தியமாகாது விட்டுவிடுமா என்று பதற்றம்கொள்ளவும் வைக்கிறாளே! ‘காதல்’ என்றால் இதுதான் மடையா என்று உணர்த்திவிட்டாளே! அது மட்டுமா? இந்தக் காதல் மட்டும் உன் கை சேரவில்லையோ, துவண்டு செய்வதறியாது அலங்க மலங்க விழித்து நிற்பாயே…அதுதான்டா ‘தோல்வி’ என்று நச்சென்று நடுமண்டையில் ஒரு போடு போட்டு உணர்த்தியது, அவன் மனம்.

நீண்டதாகப் பெருமூச்செறிந்தவன் காரை இயக்கினான். நல்லவேளையாக முன்னால் யூ டேர்ன்  இருந்தது. சிக்னல் போட்டு மறு கரைக்குச் சென்றவன்,  யூ டேர்ன் எடுக்கும் நோக்கில் முன்னால் சென்ற கார்களுக்காக வேகத்தைக் குறைத்து ஓடினான். அப்போதுதான் அவன் என்ன செய்யப்போகிறான் என்பதே துர்கா கருத்தை எட்டியது.  அதுவரை அவன் வாய் உதிர்த்த சொறியில் அதிர்ந்து அமர்ந்திருந்தாள். என்னவோ, செஃப்  ஆரோன் அவள் முன்னால் குற்றவாளியாக நின்று மன்னிப்பைக் கேட்ட கணக்கில் அவன் குரலும் முகபாவனையும் அந்த ஒற்றைச் சொல்லும் அவளை அதிர வைத்திருந்தன. இப்போது  மீண்டும் உணவகத்திற்குத் திரும்பிச் செல்லப் போகிறான் என்று விளங்கியது. 

error: Alert: Content selection is disabled!!