Skip to content
திருமண உறவில் சிக்கல் வருமாயின் அதுவும் எம் உணர்வுகளைக் கட்டுக்குள் வைக்க இயலாத பட்சமொன்றில், நன்மை தீமைகள் பற்றி யோசியாத முட்டாள்தனமான செய்கைகளால் ஏற்படுமாயின் அது எங்கள் முனேற்றத்தையே விழுங்கிவிடும். உன் தகப்பனைப் பார், குடும்பம் கட்டுக்கோப்பாகச் சிக்கலின்றி இருந்ததால் மட்டுமே மனிதரால் இந்தளவுக்குச் சாதிக்க முடிந்தது என்று தாய் சொல்கையில், அவர் விழிகளில், அது தன்னால் என்ற பெருமை மின்னும். சொல்லவும் செய்வார். ஆரோனுமே ‘எல்லாமே என் மனைவியால்’என்பார். அது இன்று இப்படியா பிசுபிசுக்க வேண்டும்?
அடுத்து என்ன நடக்கும் என்று இவன் குமைந்து கொண்டிருக்கையில் கதவு தட்டுப்பட்டது. பார்வை தன்னால் கேமராவுக்கு சென்றது. வாயிலில் தவிப்போடு கால் மாற்றி நின்றுகொண்டிருந்தாள், துர்கா.
விருட்டென்று எழுந்து விடுவிடுவென்று சென்று கதவைத் திறந்தவன், “ உள்ளுக்கு வா!” என்று அழைத்துவிட்டு விலக, அவளை உள்வாங்கிய கதவு தானாக மெதுவாகச் சாத்திக்கொண்டது.
நான் இங்கு நிம்மதியாக வேலை செய்ய வேண்டும். எனக்கு வேலை தந்தவனாக எட்டவே நின்றுவிடு என்று சொன்னவள் அவள்தான். அதன் பின்னர் அவனும் சிறு தலையசைப்பைத் தவிர அவளை அணுகவே இல்லை. இப்போது…
தன் முன்னால் இருந்த கதிரையை இழுத்து அவள் அமர வசதியாகப் போட்டவன், அவள் அமர்ந்ததும் முன்னால் சென்று அமர்ந்தான்.
அவன் செய்யும் இப்படியான சிறு சிறு செயல் துர்காவை உண்மையில் தாக்குகிறது, இதமாக. அவள் மனம் அதை வெகுவாகவே இரசிக்கிறது, அதுவும் அவளுக்கு மறைத்துக் களவாக.
எல்லாவிதத்திலும் அவளை விடவும் பெரியவன் அவன். உண்மையில் அண்ணாந்து பாக்கும் உயரத்தே இருக்கிறான். அப்படி இருக்க, பெரிதாகப் பழக்கமே இல்லாத நிலையில் அவளைக் கரிசனையாக ஏன் பார்த்துக்கொள்ள வேண்டும்?
இதுதான் அவன், அவன் சுபாவம் என்றால் இங்கு வேலை செய்பவர்களோடு மிகவும் இயல்பாக, நான் உன் முதலாளி என்று சொல்லாமல் சொல்லி அவன் நடப்பதையும் இவள் உணர்ந்துதானே இருக்கிறாள்.
முன்னால் அமர்ந்திருப்பவனைப் பார்த்தாள்.
சிவந்த கண்களும் இறுக்கமான முகமாக இருந்தவனைப் பார்த்தவளுக்கு, தான் இப்போது இங்கு வந்தது பிழையோ என்றும் இருந்தது. என் வீட்டு விசயங்களில் நீ எப்படித் தலையிடலாம் ? உன் எல்லையில் நின்றுவிடு என்று விட்டான் என்றால் என்ற பயம் வந்தது. எழுந்து சென்று விடு என்று மனம் எச்சரிக்க, “இல்ல…சும்மா வந்தனான் ஏதன், நான் வாறன்.” எழுந்தே விட்டாள்.
“ப்ச்… உட்கார் துர்கா!” என்றவன், இரு கரங்களாலும் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டான்.
அடுத்து , “ஒரு மணித்தியாலம், இல்ல… அரைமணித்தியாலம் ஜஸ்ட் ஒரு ட்ரைவ் போவம் வாறியா…ப்ளீஸ்!” என்று அவன் கெஞ்சலாகக் கேட்டதைத் துர்கா எதிர்பார்க்கவில்லை. முழித்தாள்.
பதிலுக்குக் காத்திருக்கிறானே. “பதினைஞ்சு நிமிசங்கள்தான் டீ பிரேக் ஏதன்.” அவள் சொல்லி முடிக்கவில்லை, “அது எனக்குத் தெரியாதா என்ன?” என்றான் அவன்.
“இல்ல இண்டைக்கு நிறைய வேலையும் இருக்கு. அதும் உங்களுக்குத் தெரியும்தானே?” மெல்லச்சொன்னவளுக்கு, தானாக அவனைத் தேடி வந்ததை நினைத்துத் தலையை எங்காவது கொண்டுபோய் முட்ட வேண்டும் போலிருந்தது.
“இவ்வளவும்தானே உன்ர பிரச்சினை?” கேட்டபடி இன்டர்கொம்மை எடுத்தவன், “ஸ்மித்… ஒரு மணித்தியாலம் துர்காவுக்கு ஃபிரீ. உங்களால அங்க சமாளிக்க ஏலும்தானே?” கேட்டேவிட்டிருந்தான். இவள் முகம் இறுகியதை எல்லாம் அவன் பார்க்கவில்லை.
“ம்ம்ம் தேங்க்ஸ் ஸ்மித்.” என்று அழைப்பைத் துண்டித்தவன், “சொல்லியாச்சு வா.” எழுந்தவன் பேசியையும் கார்த் திறப்பையும் எடுத்துக்கொண்டு முன்னால் நடக்க இப்போது பலியாடு போலானாள், துர்க்கா.
அவளை அதிகம் சோதிக்காது உணவகத்தின் பின்புறத்தால் இறங்கி பார்க்கிங் சென்றான். காரில் ஏறி அமர்ந்தான். அதைச் சட்டென்று இயக்கவில்லை.
“சொறி துர்கா, நீ அவ்வளவு சொன்ன பிறகும் திரும்பவும் அதே வேலையைச் செய்திருக்கிறன். எனக்கு வேற வழி தெரியேல்ல. சரியான மன அழுத்தமா இருக்கு. உன்னோட கதைச்சாக் கொஞ்சம் ரிலீஃபா இருக்கும்.” தன்பாட்டில் சொன்னவன், “அது சரி, நீ என்னத்துக்கு என்னைத் தேடி வந்தனீ?” என்றான் இப்போது.
“அது வந்து…இன்ஸ்ட்டா, யூ டுயூப் எல்லாம் … ஒலிவியா” எப்படிச் சொல்வது என்று தயங்கியவள் இழுக்க, “ம்ம் பாத்தனான்…வீட்டில எல்லாரும் பாத்தாச்சு.” என்றான் இறுக்கமாக. காரை இயக்கி போக்குவரத்தில் இணைந்தவன் வாய் அழுத்தமாக மூடிவிட்டிருந்தது.
“அப்பாக்கு ஒலிவியா எண்டாத் தனி அன்பு எண்டு எல்லாருக்குமே தெரியும். அதுவும் அவர் கையால எழுதின ரெசிபி புத்தகத்தப் பரிசாக் குடுக்கேக்க, அண்ணா கொஞ்சமும் விரும்பேல்ல. வேணாம் எண்டவர். அப்பவும் அப்பா குடுத்தவர்.” என்றவனால், இன்னமும் தகப்பனுக்கு இன்னொரு பெண்ணோடு பிள்ளை உண்டு என்றதை நம்ப இயலவில்லை.
“உனக்கு நான் சொல்லியா தெரியோணும்? அப்பா சமையலில எவ்வளவு பிரசித்தமோ அப்பிடித்தான் அப்பா அம்மா அன்பான தம்பதி எண்டதும் அவேட காதலும் பிரசித்தம்.
செஃப் ஆரோன் டேல், அவரைத் தொடரும், நேசிக்கும் பல மில்லியன் மக்களுக்குச் சமையலில மட்டும் இல்ல, குடும்ப வாழ்விலும் குரு! அந்த மனிதர், சமையலை நேசிக்கிறதுக்கு மேல மனைவி, பிள்ளைகளை நேசிக்கிறவர். அவரப் போல தாங்களும் வாழோணும் என்று ஏங்காதவர்கள் இல்லையென்றே சொல்லலாம்.
நெருங்கிய உறவு, நட்பு வட்டத்தில் கூட அந்த மனிதரைப் பொறாமையாப் பாக்கிறவேயும் இருக்கினம். அதெல்லாம் அவர்ட தொழில், பெயருக்கும் புகழுக்கும் மட்டும் இல்லை, குடும்ப வாழ்வு பார்த்து. அந்த நல்ல பெயரைக் காலாகாலமா நீங்களும் காப்பாத்தோணும் எண்டு மொம் எப்பவும் சொல்லுறவா . டாட்டும்தான்.” என்றவன் குரல் இறுகிப்போயிருந்தது.
“மொம்முக்கு டாட் எண்டா உயிர் தெரியுமா உனக்கு? அவவோட முகத்த எங்களால பாக்கேலாமல் இருக்கு. டாட்டுக்கும் மொம்மில அவ்வளவு லவ். ஆனா இதெப்பிடி? என்னை விடவும் அந்த …உன்ர ஃப்ரெண்டுக்கு வயசு குறைவு. அப்ப…” கல்போன்ற முகம் அவன் மன இறுக்கத்தையும் கோபத்தையும் காட்டிட்டு.
துர்கா என்ன சொல்வாள்? ஏதனைப் பார்க்கையில் அவனோடு இப்போது காரில் செல்வதை நினைக்கையில் மனத்துள் குளிர் பரவியது.
இது போதாதென்று ஒலிவியா அழைத்தாள். அவளையும் மீறியே, “ஒலிவியா.” என்றுவிட்டாளா. ஏதன் பார்வை அவள் கைக்குள் இருந்த திறன்பேசியில்.
“எடுத்துக் கதை” துர்கா அழைப்பை ஏற்கும் எண்ணமின்றி இருக்கச் சொன்னான், ஏதன்.
“இல்ல, நான் நான்… பேந்து கதைக்கிறன்.” என்றாள் துர்க்கா.
“ப்ச்!” அவள் எதிர்பாராதே திறன்பேசியை எடுத்துவிட்டிருந்தான். அழைப்பை ஏற்ற வேகத்தில் ஸ்பீக்கரை தட்டிவிட்டான்.
“ஹாய் துர்கா” என்ற ஒலிவியா குரலுக்குப் பதில் சொல்லுமாறு கண் காட்டியபடி அவள் கையில் பேசியை வைத்தான்.
“ஹாய்.” என்றவள் குரலில் பதற்றம் . அதை ஒலிவியா உணர்ந்தாலும் சமூக வலைதளத்தில் வந்த செய்தியை எண்ணி என்றுதான் நினைத்தாள். அதுவே இந்த விடயத்தை உயிர் நண்பியிடமே மறைத்திருந்தது ஒரு மாதிரியாக உணர வைக்க, கடகடவென்று அனைத்தையும் ஒப்பிக்க ஆரம்பித்தாள்.
ஹோம் குக்கிங் பைனல், வெற்றி பெற்ற மகளை வாழ்த்த லிசி அழைத்தது, அந்த சீசன் முழுவதுமாக மட்டுமேஅன்றித் தன் சமையல் ஆர்வத்தாலும் திறமையாலும் பிரத்தியேகமாகத் தன்னைக் கவர்ந்த ஒலிவியா அன்னையா என்று, கதைக்கும் ஆர்வத்தில் ஆரோன் கைப்பேசியை வாங்கியது, அந்தப் பெண்தான், ஆரோன் வீட்டை விட்டு இரு மகன்கள் மனைவியைப் பிரிந்து அவுஸ்திரேலியா வந்திருந்த நேரம் அறிமுகமான நண்பி என்றறிந்தது, ஆரோன் தன் தாயைச் சந்திக்கச் சென்றது, தாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது, மனைவி என்றால் சோஃபியா மட்டுமே என்று தன் தாய் லிசியை உதறிய மனிதன், இப்போது மகள் உள்ளாள், அவள் ஒலிவியா என்றதும் நின்ற நிலை, நீ, நான் ரசித்துப் பார்க்கும் இடத்தில் இருக்கிற செஃப் மட்டுமே என்று, இவளால் வலு நாசுக்காகச் சொல்ல முடிந்தது, அவர் இன்னார் என்று அறிந்ததில் லிசியோ, தானோ, தங்கள் குடும்பமோ எவ்விதத்திலும் பாதிப்புறாதது என்று கடகடவென்று ஒப்புவித்தாள், ஒலிவியா.
அதனால், இப்போது சமூக வலைதளத்தில் உலவும் விசயம் தன்னை எவ்விதத்திலும் பாதிக்கப் போவதில்லை என்றும் சொன்னாள்.
“அந்தளவுக்கு இந்தக் கதைகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கேல்ல துர்கா. அதாலதான் உன்னட்ட இதைப் பற்றிக் கதைக்கேல்ல.” என்றாள்.
“அந்த ஜோனுக்கு செஃப் ஆரோனில என்ன கோவமோ? எல்லாம் எத்தனை நாளைக்கு , இதை விடவும் சுவாரசியமான இன்னொரு புதினம் வரும் வரைக்கும்தான் .” என்றவள், “செஃப் ஆரோன் வீட்டில இதால பிரச்சினை வருமோ என்னவோ தெரியாது. எங்கட கலியாணத்துக்கு அவே குடும்பத்தோட வந்திருந்தத யோசிச்சுப் பாத்தா செஃப் ஒண்டும் சொல்லேல்ல எண்டு நினைக்கிறன். விடு, அந்தக் கதை எங்களுக்கு ஏன்? அவராச்சு அவர்ட குடும்பமாச்சு.” என்றவள் , “நீ ஆரிட்டையும் சொல்லீராத என்ன?” என்றவளுக்குப் பதில் சொல்லவும் வரவில்லை துர்க்காவுக்கு.
“துர்கா உன்னட்ட சொல்லேல்ல எண்டு கோவமா? கோவியாத என்ன? வேர்த் கூப்பிடுறார், பிறகு எடுக்கிறன், வை.” என்று வைக்கப் போனவள், “ஒலிவியா… நான் ஏதன்.” என்ற குரலில் அப்படியே இருந்தாள்.
error: Alert: Content selection is disabled!!