கடன் அன்பை முறிக்கும் – 1

அத்தியாயம் 1

 

வவுனியாவில் அமைந்திருக்கும் சாந்தசோலை என்கிற அந்தக் கிராமமே, கிழக்கு வெளுக்கும் பொழுதில் மார்க்கண்டேயர் இறைபதம் அடைந்துவிட்டாராம் என்கிற செய்தியில்தான் விழித்தெழுந்தது.

 

தன் மகள் சுவர்ணா மூலம் செய்தி அறிந்த மாதவி, நெஞ்சைப் பற்றிக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டார். கொஞ்ச நேரத்துக்கு எதையும் யோசிக்கக் கூட முடியவில்லை.

 

‘அப்பா அப்பா அப்பா’ என்று உள்ளம் அரற்றியது. கடைசிக் காலத்தில் பக்கத்திலிருந்து பார்த்துக்கொள்ளும் கொடுப்பினை கூட அவருக்குக் கிடைத்ததில்லை. இப்போது கடைசியாக அவர் முகம் பார்க்கவாவது விடுவார்களா?

 

ஆனால், பார்த்தேயாக வேண்டும். இல்லாமல் முடியாது. அவர்களின் காலில் விழுந்தாவது பார்த்துவிட வேண்டும். இல்லையோ அவர் நெஞ்சுக்கட்டை என்றைக்கும் வேகாது.

 

“இசை!” வீட்டின் பின் பக்கம் பார்த்து நெஞ்சு வெடிக்கும் துயருடன் குரல் கொடுத்தார்.

 

சற்று முன்னர்தான் எழுந்து, காலைக்கடன்களை முடித்துக்கொண்டு வந்த யாழிசை, அவர் குரலின் பேதமுணர்ந்து, “அத்த, என்னத்த?” என்றபடி வீட்டுக்குள் ஓடி வந்தாள்.

 

“அப்…பா அப்பா மோசம் போய்ட்டாராம் பிள்ளை.” கண்ணீருடன் அவள் முகம் பார்த்துச் சொன்னார்.

 

“ஆர் அப்புவோ? அச்சோ! ஆர் சொன்னது உங்களுக்கு?” அவருக்கு நல்ல வயதுதான் என்றாலும் அவளால் நம்ப முடியவில்லை.

 

“சுவர்ணாதான் இப்ப எடுத்துச் சொன்னவள். அவள் அங்கதான் நிக்கிறாளாம்.”

 

இங்கே வந்து இவரையும் கூட்டிக்கொண்டு போகாமல் என்ன இது?

 

“நான் போகோணும் இசை. கடைசியா அப்பான்ர முகத்தை ஒருக்கா பாக்கோணுமம்மா.”

 

அவருக்கு வயது அறுபத்தியிரண்டுதான். ஆனால், அவரால் மற்றவர்கள்போல் நடக்க முடிவதில்லை. இரத்தம் கட்டியாவதால் கொஞ்சத் தூரம் நடந்தாலே கால்கள் விறைத்து, உணர்வற்றுப்போய் விழுந்துவிடுவார்.

 

அதில், அப்பா இறந்துவிட்டாராம் என்று அறிந்த நொடியிலேயே எழுந்து ஓட முடியாத தன் இயலாமையும் சேர, இன்னும் உடைந்து அழுதார்.

 

“ஆனா அத்த…” அவளுக்கும் அவர் தவிப்புப் புரியாமல் இல்லை. ஆனால், அதற்கு அவர்கள் இவரை வீட்டுக்குள் விடுவார்களா? அதை எப்படி உடைத்துக் கேட்பது என்று தெரியாமல் தடுமாறினாள்.

 

அவருக்கும் அது புரிந்ததில், “அவே என்ன சொன்னாலும் எனக்கு அப்பாவைப் பாக்கோணும் இசை. பாக்காம அந்த வீட்டு வாசலை விட்டு வரமாட்டன்!” என்றார் ஒருவிதப் பிடிவாதத்துடன்.

 

இதற்குள் விடயமறிந்த யாழிசையின் அண்ணி நளினியும் பக்கத்து வீட்டிலிருந்து ஓடி வந்தவர், “நான் அவாவைப் பாக்கிறன். நீ போய் ஆட்டோவைக் கூட்டிக்கொண்டு வா.” என்றார் அவளிடம்.

 

அவளும் எப்போதும் அவருக்கு வரும் ஆட்டோக்கார அண்ணாவை அழைக்க, அவரும் உடனேயே வந்து நின்றார்.

 

“நீயும் வாம்மா. எனக்கு நடுக்கமா இருக்கு.” அவள் கையை இறுக்கிப் பற்றிக்கொண்டு மாதவி சொல்ல, என்ன சொல்வது என்று தெரியாமல் நளினியைப் பார்த்தாள்.

 

“ஆபத்துக்குப் பாவமில்லை போயிற்று வா. ஆரும் ஏதும் சொன்னா பெரிசா எடுக்காத.” என்றார் நளினி.

 

அவரைப் பார்த்தாலே அங்கு என்ன நடக்கும் என்று தெரியாது. இதில் அவளையும் சேர்த்துப் பார்த்தால்? அதில், “மச்சாளை வரச் சொல்லுறன் மாமி. இந்த நேரம் வீண் பிரச்சினைகள் வேண்டாம்.” என்றவள், மாதவியின் மகள் சுவர்ணாவுக்கு அழைத்தாள்.

 

“மச்சாள், மாமிய வந்து கூட்டிக்கொண்டு போறீங்களா?”

 

“இப்ப எப்பிடி வாறது? இஞ்ச இருந்து நான் அரக்கேலாது(விலக முடியாது). அம்மாவை ஆட்டோவில வரச் சொல்லு. நான் வாசலுக்கு வந்து கூட்டிக்கொண்டு போறன்.” என்று சொல்லிவிட்டு வைத்தாள் அவள்.

 

“அப்ப பிறகென்ன. நீயும் கூடப்போய் வாசலில இறக்கி விட்டுட்டு வா.” என்று இருவரையும் ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவிட்டார் நளினி.

 

மாதவி அழுதுகொண்டே இருந்தார். “இருக்கிற வரைக்கும் அப்பா என்னை மன்னிக்கவே இல்லையே இசை. ஒரு வார்த்த கதைச்சிருக்கலாமே. அப்பிடி என்ன கோவம் எண்டு எனக்குத் தெரியேல்ல. கடமையை மட்டும் முடிச்சாக் காணும் எண்டு முடிச்சுப்போட்டுப் போய்ட்டார். எப்பிடி அவரின்ர முகத்தைப் பாப்பன்.”

 

தான் அவருக்குச் செய்தது பெரும் நம்பிக்கைத் துரோகம் என்கிற குற்றவுணர்வு, அவரை இன்னுமே நொறுக்கியிருந்ததில் முற்றிலுமாய் உடைந்துபோனார்.

 

“மாமி, பழசை எல்லாம் நினைக்காதீங்கோ. அப்புக்கு உங்களில் ஒரு கோவமும் இல்ல. இவ்வளவு காலமும் கதைக்காம இருந்ததில அப்பிடியே இருந்திட்டார். அவ்வளவுதான்.” அவளும் தனக்கு தெரிந்த வகையில் அவரைத் தேற்றியபடி அழைத்துப்போனாள்.

 

மார்க்கண்டேயரின் வீடு இருக்கும் வீதியின் ஆரம்பத்திலிருந்தே வாகனங்கள், இரு சக்கர வண்டிகள், துவிச்சக்கர வண்டிகள் என்று வரிசையாக ஓரம் கட்டி நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

 

இவர்களின் ஆட்டோ அவரின் வீட்டு வாயிலில் சென்று நிற்பதற்கிடையில் பலமுறை ஒதுங்கி நின்று மற்ற வாகனங்களுக்கு வழிவிட வேண்டியிருந்தது.

 

அந்தளவில் அவர் இறந்துவிட்டாராம் என்று அறிந்த சனங்கள் அவரைப் பார்க்க வந்துகொண்டிருந்தார்கள்.

 

ஒரு வழியாக அந்த வீட்டின் முன்னால் ஆட்டோ சென்று நின்றது.

 

பெரிய வீடு. பழைய வீடுதான் என்றாலும் இரண்டு மாடி வீடாக, முற்றிலும் நவீன மயமாய் மாற்றியமைத்திருந்தார்கள்.

 

சாதாரணமாகப் புழங்குவதற்கு ஒற்றைக் கதவு கொண்ட கேட்டும், வாகனங்கள் போய் வருவதற்கு ஏற்ப மூன்று பெரிய கதவுகள் கொண்ட கேட்டும் தனித்தனியாக இருந்தன.

 

பெரும்பான்மைப் பொழுதுகளில் இரண்டு கேட்டுகளும் அடைத்தே இருக்கும். ஆனால் இன்று, இரண்டும் விரியத் திறந்து கிடந்தன.

 

கேட்டின் ஒரு பக்கத்தில் மார்க்கண்டேயரின் பிறப்பு, இறப்புத் திகதிகள் இரு பக்கமும் குறிக்கப்பட்டிருக்க, நடுவில் அவரின் புகைப்படம் போட்ட கண்ணீர் அஞ்சலி பேனர் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது.

 

அந்த ஊரில் யாரின் நல்லது கெட்டதுகளுக்கும் முதல் ஆளாகக் கலந்துகொள்பவர். கடைசி வரையிலும் தன் வேலைகளைத் தானே பார்த்துக்கொண்டு தன் 91ஆவது வயதில் காலமாகியிருந்தார்.

 

அவரை அப்படிப் பார்க்க அவளுக்கே நெஞ்சில் ஏதோ ஒன்று அடைக்கும் உணர்வு. அப்படி இருக்க மாதவிக்கு? தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.

 

தவிப்புடன் விழிகளைச் சுழற்றினாள் யாழிசை. வாசலில் வந்து நிற்கிறேன் என்று சொன்ன சுவர்ணாவைக் காணவில்லை. அவளுக்கு அழைக்கத் தேடியபோதுதான் கைப்பேசியை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தது தெரிந்தது.

 

மாதவியைக் கவனமாக ஆட்டோவில் ஏற்றுவதாலும், இருந்த அவசரத்திலும் எடுத்துவர மறந்திருந்தாள் யாழிசை.

 

இப்போது என்ன செய்வது? அவளால் அந்த வீட்டு கேட்டைத் தாண்டிக் கூடக் கால் வைக்க முடியாது.

 

“இறங்கேல்லையாம்மா? இறங்க ஹெல்ப் பண்ணுறதா?” மாதவியின் நிலை ஆட்டோக்காரருக்கும் தெரியும் என்பதில் வினவினார்.

 

“ஓம் அண்ணா. உங்கட ஹெல்ப் வேணும்தான். ஆனா, சுவர்ணா மச்சாள் வாசலுக்கு வந்து நிப்பன் எண்டு சொன்னவா. காணேல்ல அதான்.” என்று அவருக்குச் சொல்லிவிட்டு, “மாமி, உங்கட ஃபோன் எங்க?” என்று மாதவியை வினவினாள்.

 

“எனக்குத் தெரியேல்லையே ஆச்சி.” என்றார் அவர் அரற்றலாக.

 

அப்பு இறந்துவிட்டார் என்று அறிந்த அதிர்ச்சியில் கைமாறி வைத்திருப்பார் என்று புரிந்தது. ஆனால், இப்போது என்ன செய்வது? ஆட்டோக்காரரின் கைப்பேசியில் அழைத்துச் சொல்லுமளவுக்கு இலக்கங்கள் நினைவில் இல்லை.

 

அவசரமாக யோசித்து, “அண்ணா, உள்ளுக்குத்தான் மச்சாள் நிக்கிறா. குறை நினைக்காம மாமி வந்திருக்கிறா எண்டு சொல்லி வரச் சொல்லுறீங்களா, ப்ளீஸ்.” என்றாள் கெஞ்சலாக.

 

அவர்கள் வீட்டு விடயங்கள் அவருக்கும் ஓரளவு தெரியும் என்பதில், “இதுக்கு என்னத்துக்கம்மா ப்ளீஸ்? நான் கையோட கூட்டிக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு உள்ளே விரைந்தார் அவர்.

 

இவர்கள் இருவரும் ஆட்டோவிலேயே அமர்ந்திருந்தனர். ஆனால், போனவரைக் காணவே இல்லை. இதில் வாகனங்களின் நெரிசல் வேறு. போகிறவன் வருகிறவர்கள் எல்லாம் ஒலிப்பானை அழுத்தி அழுத்தி யாழிசையைப் பரிதவிக்க வைத்துக்கொண்டிருந்தார்கள்.

 

“என்னம்மா, ஏன் இன்னும் வாசலிலேயே நிக்கிறோம். என்னை உள்ளுக்குக் கூட்டிக்கொண்டு போ பிள்ளை. எனக்கு அப்பாவைப் பாக்கோணும். அவரின்ர கால்ல விழுந்து அழோணும். கடைசி வரைக்கும் மன்னிப்புக் கேக்காம விட்டுட்டனே. ஐயோ அப்பா!” என்று உடைந்து அழுதார் மாதவி.

 

அவளுக்கும் கண்கள் கலங்கின. பெற்ற தந்தை இறந்து கிடக்க அவள் இப்படித் தயங்கிக்கொண்டிருப்பது சரியே இல்லை.

 

யாராவது ஏதாவது சொன்னால் பொறுத்துக்கொள்வோம் என்று எண்ணிக்கொண்டு, “சரி வாங்க மாமி!” என்று கைத்தாங்கலாக ஆட்டோவிலிருந்து இறக்கி, இரண்டு அடிதான் எடுத்து வைத்திருப்பாள்.

 

கேட் வாசலைக் கூடத் தொடவில்லை.

 

“ஏய் நில்லு!” என்று கேட்டது ஒரு கோபக்குரல்.

 

நெஞ்சு பதற வேகமாக நிமிர்ந்து பார்த்தாள்.

 

வீட்டுக்குள்ளிருந்து தூயவன் வேகமாக வந்துகொண்டிருந்தான். அவன் விழிகள் அவளை எரித்தன. அதற்கே அவளுக்கு நடுங்கியது.

 

மாதவியை விட்டுவிடுவோமோ என்று பயந்து அவரை இறுக்கிப் பற்றிக்கொண்டாள். அதற்குள் வந்து, “வாங்க சித்தி.” என்றபடி அவரைத் தான் தாங்கிக்கொண்டான் அவன்.

 

வேகமாய் அவரை அவனிடம் விட்டுவிட்டு இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றாள் யாழிசை.

 

திரும்பிப் பார்த்தவன் மாதவியின் முதுகுக்குப் பின்னால் ஆள்காட்டி விரலை ஆட்டி, அப்படியே திரும்பிப் போய்விடு என்றான் சைகையில்.

 

யாழிசையின் முகம் மிகுந்த அவமானத்தில் கன்றிப் போனது. இது நடக்கும் என்று தெரியும். ஆனாலும் எதிர்கொள்கையில் மிகுந்த வெட்கமாய் உணர்ந்தாள்.

 

வேகமாக ஓடிப்போய் ஆட்டோவினுள் ஏறி அமர்ந்து, தன்னை மறைத்துக்கொண்டாள்.

 

ஆனாலும் அவன் பார்வையும், அதில் இருந்த வெறுப்பும் கோபமும் அவள் நெஞ்சை இன்னுமே சில்லிட வைத்துக்கொண்டிருந்தன.

 

அவனுக்கு எல்லோருக்கும் போல் இரண்டு புருவங்களுக்குமிடையில் இடைவெளி இருக்காது. இரண்டு புவங்களும் வந்து புருவ மத்தியில் இணைந்தே இருக்கும். அதுவே ஒருவிதமாக அவளைப் பயமுறுத்தும். இதில் அவளைப் பொசுக்கிவிடும் கனலோடு உறுத்துப் பார்த்தால்?

 

*****

 

அந்தக் காலத்திலேயே தோட்டம் துரவு என்று வாழ்ந்த பெரிய மனிதர் மார்க்கண்டேயர். இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தவர் தேவகிக்கு சரியான வயதில் கருணாகரனை மணமுடித்து வைத்திருந்தார்.

 

அவருடனேயே இருந்து, பொறுப்பாக அனைத்தையும் கவனித்துக்கொண்டு, மகளையும் நன்றாகப் பார்த்துக்கொள்ளும் மருமகன் மீது, அவருக்குப் பிரியமும் மதிப்பும் மிக மிக அதிகம்.

 

அதே போலொரு வாழ்க்கையை சின்ன மகளுக்கும் உருவாக்கிக் கொடுத்துவிட வேண்டும் என்கிற ஆசையில் மாதவிக்கும் திருமணத்துக்குப் பார்க்க ஆரம்பித்தார்.

 

ஆனால், அதற்கு மறுத்துப் படிக்கப் போவதாகப் பிடிவாதமாக நின்றார் மாதவி.

 

மாதவி சின்ன வயதாக இருக்கையிலேயே மனைவி விசக் காய்ச்சலில் இறந்துபோனதும், கடைசி மகள் என்கிற செல்லமும் சேர, மார்க்கண்டேயரும் மகள் விருப்பத்துக்கு இசைந்துவந்தார்.

 

ஆனால், படிக்கப் போகிறேன் என்று சொன்ன மகள், காதலில் விழுந்துகிடப்பதை அறிந்தபோது கொதித்துப்போனார். அதுவும் சாதி குறைந்த, பெரிதாகப் படிக்காத, மிகுந்த ஏழை வீட்டில் பிறந்து, கூலி வேலை செய்கிற அரசரட்ணத்தை அவரால் மகளின் துணையாக ஒப்பவே முடியவில்லை.

 

அதில், மாதவிக்கு நல்ல அடியைப் போட்டு வீட்டிலேயே அடைத்துவைத்தார்.

 

கண்ணீரிலேயே கரைந்தார் மாதவி. தேவகி, கருணாகரன், அவர்களின் நெருங்கிய சொந்தங்கள் என்று எல்லோரும் சொன்ன புத்திமதி அவர் செவியில் ஏறவேயில்லை.

 

குணம் மட்டுமே உள்ள ஒருவனுக்காக அவரால் வீட்டில் வாதாடவும் முடியவில்லை. அதுவும் சாதி குறைந்த ஒருவனைப் பற்றி வாயே திறக்க முடியாது.

 

ஆனால், கருணாகரனின் உறவிலேயே அவருக்குத் திருமணத்துக்குப் பார்க்கிறார்களாம் என்று அறிந்தபோது, துணிந்து வீட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

 

மார்க்கண்டேயர் அவமானத்தில் குறுகி, ஆத்திரத்தில் கொதித்துப்போனார். அந்த ஊருக்குள் கிட்டத்தட்ட ஒரு கலவரமே வெடித்திருந்தது. அரசரட்னத்தின் வீடு அடித்து நொறுக்கப்பட்டு, அவரின் உறவுகள் எல்லாம் பாதிக்கப்பட்டார்கள்.

 

மார்க்கண்டேயரின் செல்வாக்கு அதுவரையில் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்த கூலி வேலைகளைக் கூடப் பறித்துக்கொண்டது. அதில், அடுத்தடுத்த ஊரில் வேலைகள் தேடி அலைந்து, பசியில் வாடினர்.

 

இத்தனை நெருக்கடிகளைக் கொடுத்தும் கூட ஓடிப்போனவர்கள் எங்குப் போனார்கள், என்ன ஆனார்கள் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.

 

கடைசியில் எட்டு மாதங்கள் கழிந்த நிலையில் ஆறு மாத வயிற்றுடன் கணவனோடு வீடு தேடி வந்த மகளை அடித்துத் துரத்தியிருந்தார் மார்க்கண்டேயர்.

 

அரசரட்ணம் வீட்டிலும் அவர்களை வைத்துப் பார்க்கும் அளவில் வசதியில்லை. அதைவிட, இவர்களை ஏற்றுக்கொண்டால் தமக்கு இன்னும் எதுவும் நடந்துவிடுமோ என்று மிகவுமே பயந்தனர்.

 

எளிய வறிய மனிதர்கள். நாளாந்த வாழ்வை ஓட்டுவதே அவர்களுக்கான மிகப்பெரிய போராட்டமாக இருக்கையில் அடுத்தவரைப் பாவம் பார்க்கும் நிலையில் அவர்கள் இல்லை.

 

கடைசியில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது யாழிசையின் அப்பப்பா வீட்டினர்தான்.

 

அவர்கள் வீட்டில்தான் மாதவிக்கு மகள் சுவர்ணாவும் மகன் ஜீவனும் பிறந்தார்கள்.

 

அரசரட்ணம் மிகக் கடுமையான உழைப்பாளி. அதைவிட ஊருக்குள் கிடைத்த அவமானமும் மனைவி மீதிருந்த நேசமும் அவரைக் கடினமாக உழைக்க வைத்தது.

 

காலவோட்டத்தில் யாழிசையின் அப்பப்பா வீட்டுக்குப் பக்கத்துக் காணியை வாங்கிக்கொண்டு, அங்கே குடிசை ஒன்றைப் போட்டுக்கொண்டு குடிபோனார்கள்.

 

அந்தக் காணியில் வீடு கட்டி, பிள்ளைகளை நன்றாகப் படிப்பித்து, மனைவியை நன்றாகப் பார்த்துக்கொண்டபோதிலும் மார்க்கண்டேயர் மகளையோ மருமகனையோ சேர்க்கவேயில்லை.

 

error: Alert: Content selection is disabled!!