கடன் அன்பை முறிக்கும் 10 – 1

அத்தியாயம் 10

 

 

‘அத்தைக்கு ஏதுமோ?’ அவர்களைப் பார்த்த நொடி அவளுக்குத் தோன்றியது அதுதான். ஒரு கணம் நெஞ்சம் குலுங்கியே போயிற்று.

 

அப்படி ஏதுமென்றால் இவர்கள் அங்கிருந்து இங்கு வருவதற்குள் நிச்சயமாக யாராவது அழைத்து இவளுக்குச் சொல்லியிருப்பார்கள்.

 

அதைவிட முக்கியமானது, எது நடந்தாலும் இவர்கள் எல்லாம் அவளைத் தேடிக்கொண்டு வருவார்களா என்ன? பிறகு அவர்களின் மானம், மரியாதை, செல்வம், செல்வாக்கு முக்கியமாகச் சாதி எல்லாம் என்னாவது?

 

வேறு யாரையோதான் தேடி வந்திருக்கிறார்கள் என்று அவள் நினைத்து முடிக்க முதலே, கருணாகரன் இவளைப் பார்த்துக் கையை அசைத்து வரச் சொன்னார்.

 

இவளுக்குத் திரும்பவும் ஒரு முறை திக் என்றிருந்தது. அவர்களிடம் போகக் கால் வரவேயில்லை. வைத்தியசாலைக்குப் போனவளையே ‘அலுவலா’ என்று கேட்டுத் துரத்தியடித்த மனிதர், அவ்வளவு தூரத்திலிருந்து தேடி வந்து கூப்பிடுகிறார் என்றால் என்னவோ?

 

முதலே பார்த்திருக்க எங்காவது மறைந்துகொண்டிருக்கலாம். இனி முடியாது. வேறு வழியற்று நெஞ்சின் படபடப்பைப் காட்டாதிருக்க முயன்றபடி அவர்களை நோக்கி நடந்தாள்.

 

“ஆரடி அது?” அவளோடு கூட வந்துகொண்டிருந்த அவளின் பல்கலைக் தோழி சந்தியா வினவினாள்.

 

“எங்கட ஊர் ஆக்கள்.” வாய்க்குள் முணுமுணுத்தவளுக்கு அவர்களை நெருங்க நெருங்க இலேசாக வியர்த்தது.

 

கிட்டப்போய்க் கருணாகரனைக் கேள்வியும் பதற்றமுமாக ஏறிட்டாள்.

 

“திடீர் எண்டு வந்து நிண்டு பயப்பிடுத்திப்போட்டமா? பெருசா ஒண்டும் இல்ல. அவசரமா உங்கட பெயர்ல இருக்கிற சொத்தை எல்லாம் திரும்பவும் மாதவின்ர பெயருக்கு மாத்தோணும். படிக்கிற பிள்ளைய அலைய வைக்க வேண்டாமே எண்டுதான் கையோட கூட்டிக்கொண்டுபோய் வேலைய முடிப்பம் எண்டு நினச்சு வந்தனாங்க.” என்று விளக்கம் சொன்னார் அவர்.

 

அதற்கு எதற்கு இத்தனை பேர்? கருணாகரன் நல்ல உயரமும் திடகாத்திரமும் கடின முகமும் கொண்ட மனிதர். அவரைப் போலவே இன்னும் இருவர் வாட்ட சாட்டமாகப் பார்வையிலேயே பயமுறுத்தியபடி நின்றனர். போதாக்குறைக்குப் புருவங்கள் சேர்ந்தவனும் அவன் நண்பனும்.

 

என்னவோ அவள் அவர்களின் சொத்தோடு தப்பியோட முயன்றது போலவும் அவர்கள் அவளைச் சுற்றி வளைத்துப் பிடித்தது போலவும் இருக்க அவளுக்கு முகம் கன்றிச் சிவந்துபோனது.

 

“நான் வாறன். நீங்க போங்கோ.” என்றாள் மெல்லிய குரலில்.

 

“இவ்வளவு பெரிய வாகனத்தில் வந்திருக்கிறம். இதுல வராம தனியா வருவீங்களாம்மா?”

 

“இல்ல… அது நான்… பஸ்லயே வாறன்.”

 

அவள் பயப்படுவது தெரிய குருவுக்குப் பாவமாயிற்று. “டேய், உன்ர சித்திக்கு ஃபோன போட்டுக் கதைக்கக் குடு.” என்றான் தூயவனிடம்.

 

 

அதுவரையில் யாழிசையே பார்த்துக்கொண்டு இருந்தவனும் மாதவிக்கு அழைத்து, அவர் அழைப்பை ஏற்றதும் குருவிடம் கொடுத்தான். அவன் அதை இவளிடம் நீட்டினான். வாங்கி காதில் வைத்தாள்.

 

“அம்மாச்சி… அது… அத்தையப் பிழையா…” என்றவரை இடைமறித்து, “இல்ல. பிரச்சினை இல்ல. நான் வாறன்.” என்றுவிட்டுக் கைப்பேசியைக் குருவிடம் கொடுத்தவளுக்கு நாசி சிவந்து, விழிகள் கலங்கின.

 

ஆனால், இவர்களின் முன் அவள் உடைவதா? கூடவே கூடாது என்கிற பிடிவாதத்துடன் நிமிர்ந்து நின்றாள்.

 

“இப்பிடியே வெளிக்கிடுவமா?”

 

தலையைச் சரி என்று ஆட்டியவள், “அண்ணாக்குச் சொல்லிப்போட்டு வாறன்.” என்றுவிட்டுத் தள்ளிப்போய் நேசனுக்கு அழைத்து விடயத்தைச் சொன்னாள்.

 

கேட்ட நேசனுக்கு மிகுந்த கோபம். “எங்களப் பற்றி என்ன நினச்சுக்கொண்டு இருக்கினம்? ஃபோன அவரிட்டக் குடு, கேக்கிறன்.” என்றான் அவன்.

 

“அண்ணா கதைக்கவாம்.” தயக்கத்துடன் தன் கைப்பேசியைக் கருணாகரனிடம் நீட்டினாள்.

 

“என்ன அண்ணா இதெல்லாம்? என்னட்டச் சொல்லியிருக்க நானே கூட்டிக்கொண்டு வந்திருப்பனே.” என்றான் நேசன் எடுத்ததுமே சூடாக.

 

“அதுக்கு என்ன நேசன்? நாங்க என்ன தெரியாத மனுசரா? அதைவிட எங்களுக்காக உங்களையும் சேர்த்து அலைய வைக்க வேண்டாமே எண்டு நினைச்சன்.”

 

“அதுக்காக ஒரு வார்த்த கூடச் சொல்லாம கம்பஸ்ல போய் நிப்பீங்களா? அங்க அவள் பயந்துபோய் நிக்கிறாள்.”

 

“வரோணும் எண்டு வரேல்ல நேசன். இந்தப் பக்கம் ஒரு அலுவல் இருந்தது. அப்பிடியே கையோட கூட்டிக்கொண்டுபோய்ச் சொத்தை மாத்தி எழுதிட்டா உங்களுக்கும் சுகம் எங்களுக்கும் சுகம் எண்டு நினைச்சசு வந்தனான்.” என்றார் அவர் அப்போதும் தன்மையான குரலில்.

 

“என்னவா வேணுமெண்டாலும் இருக்கட்டும். பக்கத்தில நான் இருக்கேக்க எனக்குச் சொல்லாம நீங்க எப்பிடி அங்க போய் நிப்பீங்க? உங்கட மச்சாளின்ர சொத்தை நாங்க கேக்கவே இல்ல. அவவாத்தான் அவளின்ர பெயர்ல எழுதினவா. இப்ப வந்து மாத்தி எழுத்தோணும் எண்டா என்ன இது? ஆளாளுக்கு நீங்க நினைச்ச மாதிரி விளையாட நாங்க என்ன பொம்மையா?” என்று சீறினான் அவன்.

 

கருணாகரனுக்கும் கோபம் வந்தது. இப்படியெல்லாம் அவரிடம் யாரும் பேசிவிட முடியாது. அதில், “என்ன தம்பி, பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு?” என்றார் குரல் மாற.

 

“உங்கட செயல் மட்டும் நல்ல மாதிரி இருக்கா? இதுவே உங்கட வீட்டுப் பொம்பிளைப் பிள்ளையிட்ட இப்பிடி நாங்க ஆராவது சொல்லாம கொள்ளாமப் போய் நிண்டா உங்களுக்கு ஓகேயா? ஒண்டும் சொல்ல மாட்டீங்களா?” என்று அவன் கேட்டு முடிக்க முதலே தூயவன் கைப்பேசியைப் பறித்திருந்தான். மைக் போட்டிராத போதிலும் அவன் பேசியது எல்லோருக்கும் தெளிவாகவே கேட்டது.

 

“ஏய் என்ன, ஆர் என்ன எண்டில்லாம குரல் உயருது? சங்க அறுத்து விட்டுடுவன். எங்க வீட்டுச் சொத்தை வாங்கேக்க சத்தமே இல்லாம சந்தோசமா வாங்கி வச்ச உங்களுக்குத் திருப்பிக் கேட்டதும் வலிக்குதோ? அதுக்கு எங்கட வீட்டுப் பொம்பிளைப் பிள்ளைய இழுப்பியா நீ? நாங்க என்ன, கிடச்ச வரைக்கும் லாபம் எண்டு அடுத்தவன்ர சொத்தையெல்லாம் பறிச்சு வச்சிருக்கிறமா?” என்று சீறியவன்,

 

யாழிசையின் முன்னே வந்து நின்று, “பிடியடி ஃபோன. உன்ர அண்ணா என்ன பெரிய இவனா? அவனுக்கு ஃபோன போட்டு எங்களிட்டத் தாறாய்? மரியாதையா வந்து ஏறுறாய். இல்லை எண்டு வை, தூக்கிப் போட்டுக்கொண்டு போக நிறைய நேரமாகாது!” என்றான் உறுமலாக.

 

யாழிசைக்கு ஒருமுறை மொத்த உடலும் தூக்கிப் போட்டது. வேகமாக அவனிடமிருந்து கைப்பேசியை வாங்கிக் காதுக்குக் கொடுத்து, “அண்…ணா!” என்றாள் நடுங்கியபடி.

 

“எங்களுக்கு அதுகளின்ர சொத்தும் வேண்டாம், ஒண்டும் வேண்டாம் இசை. நீ பயப்பிடாம வா. அந்தக் கண்டறியாத சொத்தக் குடுத்துத் துலச்சுப்போட்டு நிம்மதியா இருக்கலாம்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.

 

நடந்ததையெல்லாம் பார்த்திருந்த சந்தியாவுக்கு நடுங்கியே போனது. “இசை!” என்றபடி அவள் கரத்தை இறுக்கிப் பற்றினாள்.

 

அவ்வளவு நேரமாக இருந்த கட்டுப்பாடெல்லாம் உடைய தூயவனின் மிரட்டலான பேச்சில் தேகம் நடுங்கி, கண்கள் குளமாகியிருந்தது யாழிசைக்கு. “வாறனடி!” அவள் கரத்தைத் தானும் அழுத்திக் கொடுத்துவிட்டு, வாகனத்தினுள் ஏறிப் பின்னிருக்கைக்குச் சென்று அமர்ந்துகொண்டாள்.

 

தூயவன் ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்து வாகனத்தைக் கிளப்ப, அவனருகில் குருவும் பின்னிருக்கைகளில் மற்ற மூன்று ஆண்களும் ஏறிக்கொண்டனர். வாகனம் புறப்பட்டது.

 

மூச்சைக் கூட விடப் பயந்து இழுத்துப் பிடித்தபடி இறுகிப்போய் அமர்ந்திருந்தாள் யாழிசை.

 

சற்று நேரத்தில், “நீ ஓகேயாடி?” என்று கேட்டுக் குறுந்தகவல் அனுப்பியிருந்தாள் சந்தியா.

 

“ம்! ஓகேதான்.”

 

அவளுக்கு அடிக்கடி வவுனியாவில் பார்த்து பார்த்து தூயவனின் வாகன இலக்கம் தெரியும். அதையும் எழுதி, “எப்பிடியும் ஒண்டரை மணித்தியாலத்தில அங்க போயிடுவன் தியா. அப்பிடி இல்லாட்டி அண்ணான்ர நம்பர் உன்னட்ட இருக்கு எல்லா. அவருக்கு எடுத்து இந்த நம்பர் வாகனத்திலதான் வந்தான் எண்டு சொல்லிவிடு. அடிக்கடி மெசேஜ் பண்ணு.” என்று அனுப்பிவிட்டாள்.

error: Alert: Content selection is disabled!!