கடன் அன்பை முறிக்கும் 10 – 2

மனத்தில் அப்படி ஒரு கசப்பு. யாரையும் நம்பவோ யாரிலும் பாசம் வைக்கவோ கூடாது போலும். இல்லாமல் அவள் பிறந்ததிலிருந்து அவளைத் தூக்கி வளர்த்த ஒருவரால் இப்படி நடக்க முடியுமா என்ன?

 

இத்தனை நாள்களும் அன்னைக்கு ஒப்பாகத் தெரிந்த மாதவி, திடீரென்று அந்நியமாகத் தெரிந்தார்.

 

ஜீவன் விதுசாவைத்தான் பிடித்திருக்கிறது என்று சொன்னது மாதவியை மிக ஆழமாய்க் காயப்படுத்தியிருந்தது.

 

அதே நேரம், அந்தக் காலத்திலேயே காதலுக்காகப் பிறந்த வீட்டை விட்டு, வாழ்ந்த செல்வாக்கான வாழ்க்கையை விட்டே வெளியேறிய அவரால் மகனின் விருப்பத்துக்கு மாறாக நடக்க முடியவில்லை.

 

ஆனால், கணவரின் பெரும் ஆசையைத் தீர்க்க முடியவில்லையே என்கிற குறையும், தாம் இந்த நிலையில் இருப்பதற்கு முழுக்க முழுக்கக் காரணமாக இருந்த குடும்பத்துக்குக் கடைசி வரையிலும் ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விடுமோ என்கிற பயமும், யாழிசைக்குத் தானும் நியாயம் இல்லாமல் நடந்துவிடவே கூடாது என்கிற பரிதவிப்பும்தான் அவளுக்குத் தன் சொத்தில் ஒரு பகுதியைக் கொடுத்தால் என்ன என்று யோசிக்க வைத்தது.

 

ஜீவனுக்கு நாட்டுக்குத் திரும்பும் எண்ணமே இல்லை. கூடவே, அவளுக்குத் தான் நியாயம் செய்யவில்லை என்கிற குற்றவுணர்வும் இருந்ததில் தன் பங்கு முழுவதையும் அவளுக்குக் கொடுக்கச் சொல்லித்தான் அவனும் சொன்னான்.

 

உண்மையில் யாழிசை வீட்டுக்கும் மாதவி ஜீவனுக்குமிடையில் இதனால் பெரும் சண்டையே நடந்தது. நேசன் முதற்கொண்டு எல்லோருமே இது வேண்டாம் என்றுதான் நின்றார்கள். கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக இந்த வாக்குவாதம் அவர்களுக்குள் நடந்தது.

 

கடைசியில், “நான் நன்றி இல்லாதவளாவே நிக்கோணும் எண்டு நினைக்கிறீங்களா இசை? இரவில என்னால நித்திரை கொள்ளவே ஏலாம இருக்கு. ‘இசை எங்கட பொறுப்பு. எண்டைக்கும் விட்டுடாத.’ எண்டு உங்கட மாமா சொல்லிப்போட்டுப் போனதுதான் காதுக்க கேட்டுக்கொண்டே இருக்கு. தப்பித்தவறி இதச் செய்யாம என்ர உயிர் போயிட்டுது எண்டு வைங்கோ, சத்தியமா என்ர ஆத்மா சாந்தி அடையவே அடையாது.” என்று அழுதவரிடம் அதற்குமேல் அவளால் மறுக்க முடியவில்லை.

 

அப்போதும் கூட ஜீவனுக்கான பங்கை முழுமையாக வாங்க அவள் சம்மதிக்கவில்லை. கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கினைத்தான் மாற்ற உடன்பட்டாள். என்னதான் மாதவிக்காக அவரின் அன்புக்காக அவர் கேட்கும் அந்த நிம்மதிக்காக என்று உடன்பட்டாலுமே அவளால் அதை முழு மனத்துடன் ஏற்க முடியவில்லை.

 

அவையனைத்தும் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டிருந்த விவசாய நிலங்கள். அதிலிருந்து பெரிய தொகை ஒன்று அவளுக்கு மாதம் மாதம் வரும்.

 

அதைக் கூடச் சுவர்ணாவின் பிள்ளைகளின் பெயரில் வைப்பு நிதியாகச் சேர்வதுபோல் மாற்றியிருந்தாள். மாதவிக்கு அதிலும் வருத்தம்தான்.

 

“அத்த, சொத்துத் தரோணும் எண்டுறதுதானே உங்கட ஆசை. அதை என்ன செய்றது எண்டுறது என்ர விருப்பம் தானே? என்ர விருப்பம் இதுதான். அதால இதைப் பற்றிக் கதைக்காதீங்கோ.” என்று முடித்திருந்தாள் யாழிசை.

 

சுவர்ணாவுமே அவள் அப்படிச் செய்த பிறகு கொஞ்சம் சமாதானமாகியிருந்தாள்.

 

இன்று வரையில் அந்தச் சொத்தைப் பற்றி அவள் யோசித்ததும் இல்லை, அது தன்னிடம் இருக்கிறது என்கிற நினைப்புக் கூட அவளிடம் இருந்ததில்லை.

 

ஆனால் இன்று… வலித்தது. மிக மிக வலித்தது. ஜீவன் முதற்கொண்டு மாதவி வரையில் அவள் உயிராக நேசித்த மனிதர்கள் ஒவ்வொருவராகத் தரும் இந்தச் சம்மட்டி அடிகளைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

 

ஆனால், அவள் தமையன் சொன்னதுபோல் நடப்பது நல்லதற்குத்தான். அவள் அப்பாவைப் போல அடுத்தவரின் ஒரு துளி கூட அவளுக்கு வேண்டாம். இதைக் கொடுத்துவிட்டால் எல்லாம் சரிதானே.

 

மாதவியின் மனத்தை நோகடித்துவிடுவோமோ என்று பயந்து நகைகளைத் திருப்பிக் கொடுக்கக் கூட ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தாளே. இதோ, அவராகவே சந்தர்ப்பத்தைத் தந்துவிட்டார். அதையும் சேர்த்துக் கொடுத்துவிட்டால் ஆயிற்று.

 

எல்லாக் கடனும் முடிந்துவிடும்.

 

மனம் ஏதோ ஒரு வகையில் தெளிந்துவிட கைக்குட்டையால் முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டு அமர்ந்தாள்.

 

திடீரென்று, “என்ன சண்முகம் அண்ண? அண்டைக்கு ஆரோ தரவேண்டிய காசத் தராம ஏமாத்தப் பாக்கிறான் எண்டு சொன்னீங்க. பிறகு என்ன நடந்தது?” என்று, அவருக்குப் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவரிடம் திரும்பி விசாரித்தார் கருணாகரன்.

 

“என்ன நடந்ததோ? ஏமாத்த நினைச்சா விடேலுமா தம்பி? பிடிச்சு நல்லா நாலு போட்டுக் குடுத்த காசுக்கு ரெண்டு மடங்கா திருப்பி வாங்கியாச்சு. இல்லை எண்டு வைங்கோ குடும்பத்தோட தூக்கி இருப்பன். ஆரிட்ட வந்து சேட்டை விடுகினம்?” என்று மீசையை முறுக்கிவிட்டார் அவர்.

 

அவள் நிமிரவேயில்லை. ஆனால், எதற்காக இந்தப் பேச்சு என்று விளங்கிற்று. உதட்டோரம் அழுகையில் துடிக்க விழிகளிலிருந்து சொட்டு சொட்டாகக் கண்ணீர் கொட்டியது. அதை அவர்களுக்குக் காட்டிவிடக் கூடாது என்பதாலேயே இன்னும் நன்றாகத் தலையைக் குனிந்துகொண்டாள்.

 

என்னவோ புலியின் கூண்டுக்குள் வந்து மாட்டிக்கொண்ட புறாவைப் போல் அவள் தேகமெல்லாம் கிடுகிடு என்று நடுங்கியது.

 

பின்னால் திரும்பிப் பார்த்தான் குரு. அவள் அழுவது அப்படியே தெரிந்தது. கருணாகரனின் மீது கோபம் ஒன்று கிளம்ப பாட்டின் சத்தத்தைக் கூட்டிவிட்டான்.

 

“டேய்! என்னடா இது?” என்றார் அங்கிருந்த மூன்றாமவர்.

 

“பின்ன என்ன வயசான கிழடு கட்டைகள் நீங்க கதைக்கிறதையா கேக்கச் சொல்லுறீங்க?” என்றான் அவனும் கடுப்புடன்.

 

“அதுக்கு எண்டு இவ்வளவு சத்தமாவா வைக்கிறது? கொஞ்சம் குறை.”

 

“வைட்டுக்கு வெயிட்டா நித்திரை வருதாம். பரவாயில்லையா உங்களுக்கு?” என்றான் அவன் பதிலுக்கு.

 

“எண்டாலும் கொஞ்சம் சவுண்ட குறையப்பா.”

 

“அதெல்லாம் ஏலாது!” என்றவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கொஞ்சம் குறைத்து வைத்தான் தூயவன்.

 

அவனும் கண்ணாடி வழியே பின்னால் இருக்கிறவளையும் அவளின் கண்ணீரையும் கவனிக்காமல் இல்லை.

 

ஆனால், அவர்களின் செயலில் தவறிருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. மாதவிக்கு அவர்கள் அன்றிலிருந்து உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்தவர்கள் என்று அவனுக்கும் தெரியும். அதற்கென்று பரம்பரைச் சொத்தைக் கொடுக்க முடியுமா?

 

மார்க்கண்டேயரின் பெயரைச் சொல்லும் சொத்துகள் அவை. அவை அவரின் பரம்பரைக்குத்தான் வழி வழியாகப் போக வேண்டியவை. அப்படியிருக்க காலத்துக்கும் அவர்களால் சேர்த்து நடக்க முடியாத ஒரு குடும்பத்திடம் போவதை அவனாலேயே ஜீரணிக்க முடியவில்லை என்கையில் தவறாகிப்போன ஒன்றை நேராக்குவது தானே சரி.

 

எது பற்றிய சிந்தனையும் இல்லாமல் ஒருவர் பாசத்திலோ நன்றிக் கடனிலோ சொத்துப்பத்தைத் தருகிறார் என்றதும் சந்தோசமாக வாங்கி வைத்துக்கொண்டால் இப்படி அழத்தான் வேண்டும்.

 

இன்னொருவரின் உடைமைக்கு ஆசைப்பட்டால் அனுபவிக்க வேண்டியதுதான்.

 

 

ஆனாலும் பார்வை அடிக்கடி அவளிடம் ஓடியது. மழையில் நனைந்த கோழிக் குஞ்சைப் போல் வாகனத்தின் கடைசி இருக்கையில், யன்னலோரமாக ஒடுங்கி, நடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தவள் உள்ளே அவன் நெஞ்சை என்னவோ செய்தாள்.

 

‘செயினை வச்சு ஸ்கூட்டியை திருத்தினா எப்பயாவது அந்த செயினை எடுத்திடலாமாம் அப்பு. அதுவே உங்களிட்ட வாங்கினா திருப்பித் தரேலாதாம். அதால உங்களிட்ட வாங்க மாட்டாவாம்.’ என்று அவளைப் பற்றி அன்றொருநாள் வந்து மாதவி சொன்னதும் காதில் எதிரொலித்தது.

 

 

error: Alert: Content selection is disabled!!