கடன் அன்பை முறிக்கும் 11 – 1

அத்தியாயம் 11

 

 

நேசனுக்குக் கோபத்தில் தேகமெல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது. எவ்வளவு தைரியம் இருந்தால் சங்கை அறுப்பேன் என்று அவனிடமே சொல்வான்! அவனுக்கு அது அவ்வளவு இலகுவாமா? இல்லை, இவன் என்ன நாதியற்ற அநாதையா?

 

முதலில் அந்தளவு தைரியம் அவனுக்கு எங்கிருந்து வந்தது? இல்லை யார் கொடுத்தது என்று நினைத்ததுமே கோபம் அவன் கண்ணை மறைத்தது.

 

“என்னப்பா, என்ன பிரச்சினை? என்னவாம் இசை? கருணாகரன் அண்ணா அங்க என்னத்துக்குப் போனவாரம்?” கணவனின் சிவந்து கொதித்த முகத்தைக் கண்டு பயந்துபோய் வினவிய நளினிக்குப் பதில் சொல்லாமல் அடுத்த நொடியே மாதவிக்கு அழைத்தான்.

 

“தம்பி, நேசன்…” என்று அவர் பெரும் தவிப்புடன் சொல்லி முடிக்கவில்லை, “சீ! இனி என்ர பெயரக் கூட உங்கட வாயால சொல்லாதீங்க. என்ன மாதிரியான மனுசி நீங்க? இஞ்ச இருக்கிற வரைக்கும் எங்களோட நல்லமாதிரி இருந்துபோட்டு அங்க போனதும் உங்கட குணத்தைக் காட்டுறீங்க என்ன? எவ்வளவு கேவலமான பொம்பிளை நீங்க?” என்றதும் மாதவிக்கு நெஞ்சு குலுங்கியே போனது.

 

“நேசன், இப்பிடி எல்லாம் கதைக்காதயப்பு.” என்று அழுதார்.

 

“வேற எப்பிடிக் கதைக்கோணும்? உங்கட பெறா மகன் என்ர சங்க அறுப்பானாம். அதுக்கா என்ர அம்மாவும் அப்பாவும் என்னப் பெத்து வளத்து விட்டிருக்கினம். அவன் ஆர் என்னப் பாத்து அப்பிடிச் சொல்ல? அவே அங்க போறது உங்களுக்குத் தெரியுமா இல்லையா? தெரிஞ்சும் ஏன் ஒரு வார்த்தை சொல்லேல்ல? என்ன, சொன்னா எங்கயாவது ஓடிப்போய்த் தலைமறைவா இருந்திடுவம் எண்டு நினைச்சீங்களோ? எவனையாவது இழுத்துக்கொண்டு ஓடிப்போறதும் ஒளிஞ்சு வாழுறதும் உங்களுக்குத்தான் சரி, எங்களுக்கு இல்ல.” என்றதும் மாதவி மொத்தமாய் உடைந்துபோனார்.

 

எத்தனை வயதில் என்ன வார்த்தையைக் கேட்கிறார்? அதுவும் மகனைப் போன்றவனின் வாயிலிருந்து? “கடவுளே! இப்பிடி என்னை வார்த்தையால கொல்லாத தம்பி. நான் சொல்லுறதக் கேளய்யா. உங்களிட்ட சொல்லச் சொல்லிச் சொன்னனான் அப்பு. அத்தான்தான் சொல்ல வேண்டாம்…” என்றவரைப் பேச விடவில்லை அவன்.

 

“அந்தாளைப் பற்றி நான் கேக்கேல்லை. நான் கேக்கிறது உங்களப் பற்றி. அடுத்தவன்ர ஒரு ரூபாக்கு ஆசைப்படுற ஆக்கள் நாங்க இல்லை எண்டு உங்களுக்குத் தெரியாது? சின்ன பிள்ளை அவள். திடீர் எண்டு அத்தனை ஆம்பிளைகளைக் கண்டதும் எவ்வளவு பயந்திருப்பாள்? அத்த அத்த எண்டு உங்களுக்குப் பின்னாலயே திரிஞ்சவளுக்கு நல்லா செய்திருக்கிறீங்க. பாம்புக்குப் பால வாத்தை மாதிரி தகுதியே இல்லாத உங்களுக்கு எங்கட அப்பா போயும் போயும் உதவி இருக்கிறாரே. அண்டைக்கு என்னவோ என்ர மனுசன்ர ஆத்மா சாந்தி அடையாது, எனக்கு நிம்மதியான நித்திரை வராது எண்டெல்லாம் சொன்னீங்க? இனி உங்கட மனுசன்ர ஆத்மா சாந்தி அடஞ்சிடுமா? இனி நிம்மதியா நித்திரை கொள்ளுவீங்களா? இப்ப நான் சொல்லுறன், உங்கட குணத்துக்கும் செயலுக்கும் அந்தாளின்ர ஆத்மா நிம்மதி இல்லாம அலஞ்சுகொண்டுதான் இருக்கும். உங்களுக்கும் நல்ல சாவு வராது!” என்றுவிட்டுப் பட்டென்று அழைப்பைத் துண்டித்திருந்தான்.

 

“ஐயோ தம்பி!” விடயம் புரிந்தும் புரியாமல் பரிதவித்துக்கொண்டிருந்த கோகிலாவுக்கே அவன் வார்த்தையில் ஒரு கணம் நெஞ்சு குலுங்கிப் போனதென்றால் அங்கே மாதவி நெஞ்சைப் பற்றிக்கொண்டு கதற ஆரம்பித்திருந்தார்.

 

ஆனால், அப்போதும் நேசனின் நெஞ்சு ஆறவேயில்லை. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அமர்ந்திருந்தான். என்னவோ இவர்கள் பெரும் ஏமாற்றுக்காரர்கள் போன்று சொல்லாமல் கொள்ளாமல் கும்பலாக அவர்கள் போனதும், அவர்களைக் கண்டு தங்கை நடுங்கியதும், அவளைச் சொத்தைச் சுருட்டி வைத்துக்கொண்டு இருக்கிறாள் என்று சொன்னதும், சங்கை அறுப்பேன் என்றதும் அவன் இரத்தத்தை இன்னுமே கொதிக்க வைத்துக்கொண்டிருந்தது.

 

இது வரையில் இப்படி ஒரு கோபத்தை நளினியோ, ஏன் கோகிலாவோ கூட அவனிடத்தில் கண்டதில்லை. அவன் மிகவும் சாந்தமானவன். எல்லாவற்றையும் பொறுத்துப் போகிறவன். பயந்துபோய் என்ன நடந்தது என்று விவரம் கேட்டார்கள். அவன் முழுமையாகச் சொன்னதும் நளினியும் சேர்ந்து கொதித்தாள் என்றால் கோகிலா அப்படியே அமர்ந்துவிட்டார்.

 

அவர் விழிகளிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. கணவரின் இழப்பை நிறையக் காலத்துக்குப் பிறகு மீண்டும் இன்று மிக அதிகமாக உணர்ந்தார். அவரின் ஒற்றைப் பெண் பிள்ளை பாசம் வைத்த பாவத்துக்கு என்னவெல்லாம் அனுபவிக்கிறாள்? இந்த நிமிடம் அவள் உள்ளம் என்ன பாடு படுகிறதோ!

 

நேசன், யாழிசைக்கு கூடப் பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், அன்றிலிருந்து இன்றுவரை அவர்களுக்கு எவ்வளவு செய்திருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியுமே.

 

அரசரட்ணம், மாதவியை வயிற்றில் குழந்தையோடு அழைத்து வந்தபோது இவர்களுக்கு அரை வயிற்று நிலைதான். அப்படி இருந்தும் கோகிலா தன் உணவையும் சேர்த்து வயிற்றுப் பிள்ளைக்காரிக்கு எத்தனையோ நாள்கள் கொடுத்திருக்கிறார்.

 

அவர்கள் காசாகப் பணமாக எதையும் பெரிதாகச் செய்ததில்லை என்றாலும் ஜீவனுக்கு மூன்று வயதாகிற வரைக்கும் உணவு கொடுத்து, உறைவிடம் கொடுத்து, அவர்களின் பிள்ளைகளையும் சேர்த்துப் பார்த்திருக்கிறார்கள்.

 

ஒரு நாள், ஒரு பொழுது கூட முகத்தைத் திரும்பியதும் இல்லை, சுருக்கியதும் இல்லை. இன்னுமே சொல்லப்போனால் இரண்டு பக்க உறவுகளாலும் கைவிடப்பட்டு வந்திருக்கிறவர்களை நோகடித்துவிடக் கூடாது என்று இரட்டிப்புக் கவனத்தோடு கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

அவரின் மகள் மட்டும் இலேசுப்பட்டவளா என்ன? சுவர்ணா திருமணமாவதற்கு முதலுமே வீட்டு வேலைகளைப் பொறுப்பாகச் செய்கிறவள் இல்லை. பாசம் உள்ளவள் போல் சும்மா வாய் மட்டும்தான். யாழிசைதான் எல்லாம் பார்த்துக்கொள்வாள். இன்னொரு வீடு என்று நினைத்ததே இல்லையே. அவளின் அத்தை என்று உரிமையாக எல்லாம் செய்திருக்கிறாள்.

 

அவரளவுக்கு இல்லாவிட்டாலும் தங்கையை அப்படியே வெறுங்கழுத்தோடு நேசனும் விட்டிருக்க மாட்டான். என்ன, அவன் செய்ய நினைக்க முதலே மாதவி செய்து முடித்திருப்பார். அதனால் அவன் செய்யும் தேவை வந்ததில்லை.

 

சின்ன வயதிலிருந்தே அவள் அந்த வீட்டு மருமகள் என்கிற எண்ணம் உள்ளூர அவர்களை அறியாமலேயே ஊறிப் போயிருந்ததாலோ என்னவோ இவர்களும் அவர் அவர் மருமகளுக்குச் செய்கிறார் என்றெண்ணியிருக்கிறார்கள்.

 

ஜீவன் விதுசாவை விரும்பி மணந்த பிறகுதான் கண்ணுக்குத் தெரியாத ஒரு இடைவெளியை அவர்கள் கடைப்பிடிக்க ஆரம்பித்ததே!

 

நளினியும் பொல்லாதவளோ கூடாதவளோ இல்லை. குடும்ப நிலை சில நேரங்களில் அவளைக் கோபப்பட வைத்திருக்கிறது. அவ்வளவுதான். ஆழ்ந்து யோசித்தால் அவள் கோபத்தில் கூட ஒரு நியாயம் இருக்கும்.

 

அப்படியானவர்கள் வீட்டுப் பெண் பிள்ளையைக் கிட்டத்தட்ட கும்பலாகப் போய்த் தூக்கிக்கொண்டு வருகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? அவரின் ஒற்றை மகனின் சங்கை அறுப்பான் என்றால்? அவர் தேகம் ஒரு முறை தூக்கிப் போட்டது. கணவரை இழந்தது போதாதா? அவர் இல்லாமல் அவர்கள் படுகிற பாடுதான் போதாதா?

 

நினைக்க நினைக்கக் கோகிலாவுக்கு மனம் ஆறமாட்டேன் என்றது.

 

இங்கே மாதவியால் நேசன் வீசிய வார்த்தைகளின் வலியைத் தாங்கவே முடியவில்லை. “இது வேண்டாம் எண்டு சொன்னனான்தானே அக்கா? நீங்கதான் கேக்கேல்லை. இப்ப பாத்தீங்களா? அண்டுல(அண்றையில்) இருந்து உதவி செஞ்ச குடும்பத்துக்கு நன்றி கெட்டவள் ஆயிட்டன். நேசன் கேட்டதில பிழை இல்லைதானே?” என்று அழுதவரிடம் நடந்ததைக் கேட்டு அறிந்துகொண்ட தேவகியே ஒரு கணம் நடுங்கித்தான் போனார்.

 

“இசை… அவள் என்ர பிள்ளைக்கும் மேல எனக்கு. அவளுக்கு நான் செய்தது பாவம்தான்…” என்று அரற்றிக்கொண்டிருந்தார் மாதவி.

 

இந்தப் பேச்சு ஏன் ஆரம்பித்தது, எப்படி ஆரம்பித்தது என்று மாதவிக்குச் சரியாக நினைவில் இல்லை. ஆனால், அவர் யாழிசைக்குச் சொத்துகளைக் கொடுத்ததைச் சொல்லி ஒரு நாள் மிகவும் கடினமாகவே சாடியிருந்தார் கருணாகரன்.

 

“அவே எனக்குச் செய்தது நிறைய அத்தான்.” என்று அவர் சொன்னதுக்கு, “இப்ப ஆர் இல்லை எண்டு சொன்னது? அதுக்காகப் பரம்பரச் சொத்தக் குடுப்பீங்களா மாதவி? முந்தி, நீங்க இந்த வீட்டில இருந்த காலத்தில உங்களிட்ட இந்தளவு சொத்து இருந்ததா? இருந்ததை எல்லாம் ரெண்டா,முண்டாப் பெருக்கினவன் நான். அதுல சரி பாதிய மாமா உங்களுக்குத் தந்த நேரம், அது நியாயமே இல்லை எண்டு தெரிஞ்சாலும் இந்த வீட்டு வாரிசு நீங்க எண்டுதான் பேசாம இருந்தனான். அதத் தூக்கி ஆருக்கோ குடுப்பீங்களா நீங்க? முதல் அதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?” என்றதும் மாதவிக்கு முகம் கறுத்துப் போனது.

error: Alert: Content selection is disabled!!