கடன் அன்பை முறிக்கும் – 12

அத்தியாயம் 12

 

 

அவர்களின் வாகனம் சீரான வேகத்தில் வவுனியாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. அதைச் செலுத்திக்கொண்டிருந்தவனின் புருவங்கள் சுளித்திருந்தன. கண்ணாடி வழியே கண்ட அவளின் அழுது சிவந்திருந்த விழிகள் அவனை அந்தளவில் தொந்தரவு செய்தன.

 

இப்போதெல்லாம் இது அவனுக்கு அடிக்கடி நடக்கிறது.

 

அன்றைக்கு அவன் முன்னால் வந்து நின்று, ‘என்னில தானே பிழை. சொல்லுங்க!’ என்று நியாயம் கேட்டவளின் கண்ணீர் நிறைந்த விழிகள் அவனை அலைக்கழிக்கும் என்றால், முறுக்கைக் காட்டி அவன் வேண்டுமா என்று கேட்டபோது ‘அம்மாடி!’ என்று நெஞ்சில் கையை வைத்து அதிர்ந்தவள் அவசரமாகக் கைப்பேசியை அணைத்த செய்கை உதட்டோரம் சிரிப்பை மலர வைக்கும்.

 

தினந்தோறும் காலையில் கண் விழித்ததும் செல்லச் சோம்பலுடன் தலையணையைக் கட்டிக்கொண்டு புரள்கையில் அந்த இரண்டு காட்சிகளும் அவனுக்கு நினைவில் வராமல் போனதேயில்லை.

 

இனி இதுவுமா என்று எண்ணியபடி மீண்டும் ‘ரியர்வியூ மிரர்’ வழியாக அவளைப் பார்த்தான். இப்போதும் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள் அவள்.

 

‘இவளுக்கு என்ன விசரா பிடிச்சிருக்கு? நாளைக்குத் தலைய நிமித்தேலாமத் திரியப்போறாள்.’ ஒரு விதமாகச் சினம் வரவும் படார் என்று குருவின் தோளில் ஓங்கி ஒன்றைப் போட்டு, “ஒழுங்கா நிமிந்து இரு. இல்லையோ வேனில இருந்து தள்ளி விட்டுடுவன்!” என்றான் சத்தமாக.

 

திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் யாழிசை. தூயவனின் விழிகள் இது உனக்குத்தான் என்று அவளிடம் சொல்லாமல் சொல்லின. அவள் அதற்கும் வேகமாகத் தலையைக் குனிந்துகொள்ள, ‘இவள!’ என்று பல்லைக் கடித்தான் தூயவன்.

 

“மனுசனாடா நீ. நிமிந்து இருக்கிறவனை நிமிந்து இருக்கச் சொல்லி அடிக்கிறாய்.” என்று தன் தோளைத் தேய்த்துவிட்டவனைக் கவனிப்பார் யாருமில்லை.

 

‘போடி! உனக்குக் கழுத்து வலிச்சா எனக்கென்ன, கால் வலிச்சா எனக்கென்ன!’ என்று சினத்துடன் வாகனத்தைச் செலுத்தியவனின் விழிகள், மற்றவர்கள் அறியாமல் மீண்டும் மீண்டும் அவளிலேயே மோதி நின்றன.

 

அவளின் கண்ணீர் அவனை அசைத்தாலும் தந்தையின் கோபத்தில் நியாயம் இருப்பதாகவே எண்ணினான்.

 

இது எல்லாவற்றுக்கும் கரணம் அவனின் தாத்தா. என்ன, அவரின் வயதும் அவர் அவன் மீது கொண்டிருந்த பாசமும் அவனை அவரிடம் கோபப்பட விட்டதில்லை.

 

இப்போதெல்லாம் தந்தையின் மேற்பார்வையின் கீழ் அத்தனை வேலைகளையும் பொறுப்பெடுத்துப் பார்க்கிறவன் அவன்தான். அதனால் அவன் வீட்டில் நிற்கும் நேரங்கள் மிக மிகக் குறைவே.

 

மாதவியோடு அவர் என்ன கதைத்தார் என்று அவனுக்குத் தெரியாது. அவர்கள் கதைக்கிற பொழுதுகளில் அவன் நின்றதில்லை. ஆனால், அன்னை, துளசி மூலம் அவர் மாதவியைக் கடிந்துகொண்டதையும் மாதவி இதற்குச் சம்மதித்த செய்தியும் வந்திருந்தது.

 

தூரப் பயணங்களுக்குத் தந்தையைத் தனியாக அவன் அனுப்புவதில்லை. அவன் எங்குப் போனாலும் குரு தொத்திக்கொள்வது வழக்கம்.

 

மற்ற இருவரையும் கருணாகரன் அழைத்து வந்தபோது அவனுக்கு அது ஒரு விசயமாகத் தெரியவில்லை.

 

இன்னுமே சொல்லப்போனால் இளையவர்களும் பெரியவர்களுமாகச் சேர்ந்து வந்த பயணம், கேலி, கிண்டல், சிரிப்பு என்று நன்றாகத்தான் இருந்தது. கருணாகரன் கூட அடிக்கடி உடல் குலுங்கச் சிரித்திருந்தார்.

 

ஆனால், அங்கே பல்கலையில் வைத்து, இவர்களை நோக்கி வந்துகொண்டிருந்த யாழிசையின் விழிகளில் புலியிடம் மாட்டிக்கொண்ட மான்குட்டியின் மிரட்சி தெரியவும், ‘இவள் என்னத்துக்கு இப்பிடிப் பாக்கிறாள்?’ என்று தம்மையே திரும்பிப் பார்த்தவனுக்கு அப்போதுதான் அவளின் அதீத பயத்துக்கான காரணம் புரிந்தது.

 

பாவமாகத் தோன்றிய அதே வேளை உள்ளூர மெல்லிய சிரிப்பும் உண்டாயிற்று.

 

அதன் பிறகு நடந்தவைக்கு என்ன சொல்வது?

 

அப்பா என்றால் அவனுக்கு உயிர். ஊரிலேயே பெரிய மனிதர் அவர். அவரிடம் அவனே குரலை உயர்த்த மாட்டான். அப்படியிருக்க நேசன் அப்பாவிடம் குரலை உயர்த்துவானா என்கிற கோபத்திலும், சொத்தைக் கேட்டதும் கோபம் வருகிறதா என்கிற சினத்திலும்தான் சீறியிருந்தான்.

 

ஆனால், அவனைக் கண்டு அவள் பயந்து நடுங்கி விழிகளை இறுக்கி மூடிக்கொண்டபோது கொஞ்சம் ஒரு மாதிரித்தான் ஆகிப்போனது.

 

விழிகளை உயர்த்திக் கண்ணாடி வழியே மீண்டும் அவளைப் பார்த்தான். இப்போது கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்திருந்தாள். ஆனால், அவளிடத்தில் ஏதோ ஒரு சங்கடம்.

 

அவன் புருவங்கள் சுருங்கின.

 

நேரமாக நேரமாக முகமெல்லாம் சிவந்து, அவள் அசௌகரியமாக அசையாவும்தான் ஏதோ புரிந்தது. உள்ளம் ஒரு மாதிரிப் பிசைந்துபோனது.

 

அடுத்ததாக வந்த கடைகள் இருந்த ஒரு இடத்தில் வேகமாக வாகனத்தை ஒதுக்கி நிறுத்திவிட்டு, “டேய் அங்க பார். அங்க ஒரு ஹோட்டல் இருக்கு. எல்லாரையும் கூட்டிக்கொண்டு போய் ஏதாவது வாங்கிக் குடு.” என்றவன் டிக்கியில் எதுவோ எடுக்கப் போவதுபோல் போனான்.

 

பெரியவர்கள் இறங்கிப் போக, “நீங்களும் வாங்கம்மா.” என்று யாழிசையையும் அழைத்தான் குரு.

 

“இல்ல, எனக்கு ஒண்டும் வேண்டாம்.”

 

“சும்மா ஒரு தேத்தண்ணி குடிக்கிறதுதானே?”

 

“இல்லை அண்ணா, வேண்டாம்.”

 

“டேய், நிக்காம போடா!” என்று அவனைத் துரத்திவிட்டான் தூயவன்.

 

அவர்கள் போனதும், “பாத்ரூம் போகோணுமா?” என்றான் அவள் பக்க ஜன்னலருகே வந்து.

 

அவளுக்கு முகம் ஒரு மாதிரி மாறிப்போனது. ஆனால், மறுக்க வழியில்லை. விழிகள் கலங்க ஆம் என்பதுபோல் தலையை அசைத்தாள்.

 

அவனுக்கு நெற்றியில் அறைந்துகொள்ளலாமா என்றிருந்தது. “சரி, வா!” என்று அவளை இறக்கி அழைத்துப்போய், அங்கே இருந்த கடைக்காரரிடம் விசாரித்து, அவர்கள் காட்டிய பாதையில் கூட்டிக்கொண்டு சென்று விட்டான்.

 

“நான் இஞ்சதான் நிப்பன். போயிட்டு வா.”

 

சொன்னது போலவே அவள் வரும் வரையில் காத்திருந்து அழைத்து வந்தான். “ஏதும் சாப்பிடக் குடிக்க வேணுமா?”

 

அவனைப் பாராமல் குறுக்காகத் தலையை மறுத்து அசைத்துவிட்டு, அந்தக் கடைக்குச் சென்று, “அண்ணா, தண்ணி ஒரு போத்தில் தாறீங்களா?” என்று கேட்டு வாங்கினாள்.

 

பல்கலைக்குக் கொண்டு செல்லும் பேக் கையிலேயே இருந்ததில் பணமும் கொஞ்சமாக அவளிடம் இருந்தது. பாக்கில் இருந்த பனடோல் ஒன்றை எடுத்துத் தண்ணீரோடு விழுங்கினாள். அழுததில் தலை வலித்தது. அப்படியே முகத்தையும் அடித்துக் கழுவிக்கொண்டு, கைக்குட்டையால் முகத்தைத் துடைத்தபடி சென்று மீண்டும் வேனில் ஏறி அமர்ந்துகொண்டாள்.

 

அவளையே பார்த்துக்கொண்டிருந்த தூயவன் ஒரு பெரு மூச்சுடன் போய், இரண்டு கறி பணிசும் டீயும் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தான்.

 

அவள் வாங்கவில்லை.

 

“உனக்குத்தான். பிடி!”

 

“இல்ல வேண்டாம்.” அவனை நிமிர்ந்து பாராமல் மடியில் கிடந்த பாக்கில் பார்வையைப் பதித்துச் சொன்னாள் யாழிசை.

 

“வாங்கியாச்சு. இனி ஒண்டும் செய்யேலாது. வாங்கு.” அவன் கைகள் இரண்டும் நன்றாகவே ஜன்னலால் உள்ளே வந்திருந்தன. விட்டால் அவள் மடியிலேயே வைத்துவிடுவான் போன்று.

 

சீட்டோடு சீட்டாகத் தன்னைப் பின்னால் சாய்த்தபடி, “இல்ல, வேண்டாம்.” என்றாள் அவள் அப்போதும்.

 

“ஏய் பிடியடி!” என்றவனின் அதட்டலில் உடல் தூக்கிப் போட அதிர்ந்து நிமிர்ந்தாள் அவள்.

 

“வாங்கு!”

 

படக்கென்று அவள் கைகள் தானாக வாங்கிக்கொண்டன.

 

“சாப்பிடு. இன்னும் ஒரு முப்பது முப்பத்தஞ்சு நிமிசத்தில போயிடுவம்.” என்றுவிட்டுப் போனவன் திரும்பி வந்து, “ஒழுங்கா நிமிந்து இருக்கிறாய். இல்லை எண்டு வை, தெரியும் பிறகு!” என்று மிரட்டிவிட்டுப் போனான்.

 

அவளுக்கு அவற்றைச் சாப்பிடவோ குடிக்கவோ விருப்பமில்லை. என்ன காரணத்துக்காகவும் அவளால் உணவை வீணாக்கவும் முடியாது. பிடிக்காமலேயே பால் தேநீரைப் பருகினாள்.

 

ஆனால், காயப்பட்டுக் கிடந்த மனத்துக்கும் அழுததால் வந்திருந்த தலைவலிக்கும் பெரும் இதமாக இருந்தது தேநீர். அப்படியே அவளை அறியாமலேயே மெல்ல மெல்ல உண்ணவும் ஆரம்பித்தாள்.

 

தன் முன்னால் சாப்பிடச் சங்கடப்படுவாள் என்றுதான் விலகி வந்தான் தூயவன். ஆனால், ஹோட்டலுக்குள் சென்று அமரவில்லை. அவ்வளவு நேரமாக இருந்து வந்ததால் நின்றே தேநீரை அருந்துகிறேன் என்று சொல்லிவிட்டுத் தனக்கும் இரண்டு கறி பணிசுகளையும் டீயையும் எடுத்துக்கொண்டு வீதியோரமாக நின்றே சாப்பிட்டபடி பருகினான்.

 

அங்கே நின்றாலும் அவன் கவனம் இங்கேதான் இருந்தது. ஏனோ, அவன் கொடுத்தவற்றை அவள் சாப்பிடுகிறாளா என்று அறிய நினைத்தான்.

 

மெல்ல மெல்ல என்றாலும் பால் தேநீரைப் பருகிக்கொண்டே அவள் சாப்பிடுவது தெரிந்தது.

 

மற்ற நால்வரும் முதலே வந்துவிட்ட படியால் அவர்கள் விரைவாகவே சாப்பிட்டு முடித்திருந்தனர்.

 

“அந்தப் பிள்ளைக்கும் குடுத்தனீங்க தானே தம்பி.”

 

“ஓம் அப்பா.” என்றவன் அங்கே நின்றிருந்த ஒரு வாகனத்தைக் காட்டி, “நல்லாருக்கு என்னப்பா? எங்கட பழசைக் குடுத்திட்டு இப்பிடி ஒண்டு மாத்தினா என்ன?” என்று அவருக்குப் பேச்சைக் கொடுத்து அங்கேயே மறித்து வைத்துக்கொண்டான்.

 

இவர்கள் போய் வாகனத்தில் ஏறினால் அவள் சாப்பிட மாட்டாள் என்று நினைத்தான். அவன் எண்ணியதுதான் நடந்தது. கொஞ்ச நேரத்தில் அவர்கள் ஏறியதும் அவளும் மூடி வைத்துவிட்டாள்.

 

ஆனால், இப்போது அவள் முகம் தெளிந்திருந்தது. பார்த்தவனும் நிம்மதியாக வாகனத்தைச் செலுத்தினான்.

 

நாற்பது நிமிடங்களும் மின்னலாக மறைந்திருக்க அவன் வாகனம் வவுனியாவுக்குள் நுழைந்து, நேராகச் சென்று சொத்துப் பத்திரங்கள் பதியும் பதிவாளர் அலுவலகத்தின் முன்னே நின்றது.

 

ஏற்கனவே அங்கே வந்து காத்திருந்த அன்னையையும் தமையனையும் கண்டதுமே யாழிசையின் விழிகள் கலங்கிப் போயின. இறங்கி அவர்களிடம் ஓடிப்போனாள்.

 

“அம்மாச்சி!” என்று அன்னை அனைத்துக்கொண்டதும் அவரைக் கட்டிக்கொண்டு உடைந்து அழுதாள். அத்தனை நேரமாகத் தனியாகப் பரிதவித்துக்கொண்டு வந்தவளுக்கு அன்னையைக் கண்டதும் நெஞ்சின் வேதனை எல்லாம் வெடித்துக்கொண்டு வந்தது.

 

“இசை…” நலிந்து மெலிந்து ஒலித்த மாதவியின் குரலில் அவள் அசைவுகள் எல்லாம் நின்றே போயின. நெஞ்சில் ஒரு துடிப்பு. இத்தனைக்குப் பிறகும் அவரைத் தள்ளி வைத்து எதிர்கொள்ள இயலும்போல் அவளுக்கு இல்லை. அவர் புறம் திரும்பாமலே நின்றாள்.

 

“அம்மாச்சி இசை, அத்தையப் பாரம்மா…” என்றவரின் உடைந்த குரலுக்கும் அவள் திரும்பவில்லை.

 

இதற்குள் தூயவன் குழு உள்ளே போய் அனைத்தையும் விசாரித்துக்கொண்டு வெளியே வந்தார்கள்.

 

வாகனத்தை நிறுத்தித் தேநீர் அருந்தப் போனபோது யாழிசையின் பக்கமிருந்து என்னவெல்லாம் கொண்டு வர வேண்டும் என்று நேசனுக்கு அழைத்துச் சொல்லியிருந்தார் கருணாகரன். அவனும் அத்தனையையும் சரியாகக் கொண்டு வந்திருந்தான்.

 

நேசன் தரப்பு அங்கிருந்த யார் முகத்தையும் திரும்பிப் பார்க்கவில்லை. காட்ட வேண்டிய ஆவணங்களை முறையாகக் காட்டி, கையெழுத்துப் போட வேண்டிய இடங்களில் எல்லாம் மாதவியும் யாழிசையும் கன்னத்தில் வழியும் கண்ணீருடன் கையெழுத்துப் போட்டு முடித்தனர்.

 

என்னவோ அது ஒரு சொத்துப் பத்திரப் பதிவாக இருவருக்கும் இல்லை. மாறாக ஆத்மார்த்தமாகப் பிணைக்கப்பட்டிருந்த அவர்களின் உறவை மொத்தமாக வெட்டியதற்கான கையெழுத்தாகவே தெரிந்ததால் மாதவி உடைந்து அழுதார் என்றால், யாழிசை அங்கிருந்து ஓடிவிட முயல, எட்டி அவள் கரத்தைப் பற்றினார் மாதவி.

 

“அத்தையோட கதைக்காமயே போறீங்களேம்மா.” அவரால் பேசவே முடியவில்லை. என்னவோ அந்தச் சின்ன பெண்ணின் முன்னால் தான் மிகவும் சிறுத்துவிட்டதுபோல் அழுதார்.

 

யாழிசையாலும் அவர் முன்னே திடமாக நிற்க முடியவில்லை. ஆனாலும் நாசுக்காக அவரிடமிருந்து தன் கையை விடுவித்துக்கொண்டு கழுத்தில், காதில், விரல்களில் கிடந்த எல்லா நகைகளையும் கழற்றினாள்.

 

அங்கிருந்த யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. “என்ன செய்றீங்கம்மா? பொம்பிளைப்பிள்ளை இப்பிடிக் கழுத்தில காதுல கிடக்கிறத எல்லாம் கழட்டுறேல்ல.” என்றார் கருணாகரன்.

 

தூயவன் ஒரு வித அதிர்ச்சியில் உறைந்தவனாக அவளையே பார்த்து நின்றிருந்தான். அவனால் அவளிடமிருந்து பார்வையை அகற்றவே முடியவில்லை.

 

மாதவி முடியாமல் உடைந்து அழ ஆரம்பித்தார்.

 

“இன்னுமின்னும் என்னைக் கேவலமானவளா மாத்தாதீங்கோ இசை.” என்றவரின் வார்த்தைகளில் அவள் கன்னத்திலும் கண்ணீர் இறங்கினாலும் யாழிசை அசையவில்லை.

 

காலில் போட்டிருந்த காற்சலங்கையைக் கூடக் கழற்றினாள். ஜீவன் பரிசளித்த மணிக்கூட்டையும் விடவில்லை. வரும்போது தமையனுக்குக் குறுந்தகவல் அனுப்பி, அவன் கொண்டு வந்திருந்த அவளின் மற்ற நகைகளையும் சேர்த்து மாதவியின் மடியில் வைத்தாள். அவளின் பத்தாவது பிறந்தநாளுக்கு அவர் வாங்கிக் கொடுத்த குட்டி ஜிமிக்கி உட்பட எல்லாம் இருந்தது.

 

அதைப் பார்த்த மாதவிக்கு நெஞ்சு இடண்டாகப் பிறந்துவிடும் போல் வலித்தது.

 

“இதெல்லாம் நீங்க எனக்கு வாங்கித் தந்த நகைகள். இதைவிட இப்ப என்னட்ட இருக்கிற ஃபோன், ஸ்கூட்டி திருத்தின காசு ரெண்டும் இன்னும் நான் தரோணும். அதுக்கு மட்டும் கொஞ்சம் டைம் தாங்க. திடீர் எண்டு இப்பிடி நீங்க கேட்டதால அண்ணாவால அத மட்டும் அரேஞ்ச் பண்ணேலாம போச்சு. ஆனாலும் எப்பிடியும் ஒரு மாதத்துக்க உங்கட பாங்குக்கு போட்டுடுவம். இவ்வளவு காலமும் இந்தச் சொத்தில இருந்து வந்த குத்தகைக் காசு அப்பிடியே சுவர்ணா அக்கான்ர ரெண்டு பிள்ளைகளின்ர பெயர்லதான் சேருது. அது உங்களுக்கே தெரியும். வேற… நீங்க வாங்கித் தந்த உடுப்புகள்…” என்றவளை மேலே பேச விடாமல், “போதும் இசை. என்னைக் கொல்லாதயம்மா.” என்று அழுதார் மாதவி.

 

“என்ன கோகிலா அக்கா இதெல்லாம்? நீங்களும் பாத்துக்கொண்டு நிக்கிறீங்க? இதெல்லாம் எனக்கு வேண்டாம்.” என்று யாழிசை தந்தவற்றை அப்படியே தூக்கி அவரிடம் நீட்டினார்.

 

கோகிலா வாங்கவில்லை. “அது உங்கடதான் மாதவி. பக்குவமா எடுத்து வைங்கோ.” என்றுவிட்டு, “நாங்க ஏழைகள்தான் மாதவி. ஆனாலும் சோத்துல உப்புப் போட்டுத்தான் சாப்பிடுறனாங்க.” என்று சொன்னவர் தன் இரு மக்களோடும் அங்கிருந்து புறப்பட்டார்.

 

நேசனுக்குத் தூயவனைக் கடக்கையில் பேசாமல் போக முடியவில்லை. நின்று அவனைப் பார்த்து, “கத்திய ஆர் தூக்கினாலும் வெட்டும். அது ஆரின்ர சங்க வேணுமெண்டாலும் அறுக்கும். கத்தி சாதியும் பாக்காது, ஆரின்ர கழுத்து எண்டும் பாக்காது தூயவன். அமைதியான நிம்மதியான வாழ்க்கை வாழோணும் எண்டு நினைக்கிற வரைக்கும்தான் நாங்க ஒதுங்கிப் போறது.” என்று சொல்லிவிட்டுப் போனான்.

 

அதையெல்லாம் உணரும் நிலையில் தூயவன் இல்லை. அவன் பார்வை முழுக்க முழுக்க யாழிசையிலேயே இருந்தது.

 

 

 

error: Alert: Content selection is disabled!!