அத்தியாயம் 14
கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் மாதவிக்குக் கொடுக்க வேண்டும். அந்தளவு பணம் நேசனிடம் கையில் இல்லை. மகளுக்கென்று வைப்பில் வைத்திருந்ததைத்தான் எடுக்கும் நிலை.
அப்படி, அதை எடுப்பதை நினைக்கவே வலித்தது. சுரபிக்குப் பத்து வயதாகிறது. அவள் பிறந்ததிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்தது. அவள் பெரியபிள்ளையானால் தேவைப்படும் என்று நினைத்திருந்தார்கள்.
இனி?
மேலே யோசிக்கக் கூட முடியவில்லை. “வேற வழியில்ல நளினி. இதைச் செய்யத்தான் வேணும்.” இரவில் மகள் உறங்கிய பிற்பாடு மனைவியிடம் மெல்லிய குரலில் சொன்னான் தவநேசன்.
“தப்பித்தவறி பிள்ளை பெரியபிள்ளை ஆயிட்டா என்ன செய்றது?
“எனக்கும் தெரியேல்ல. இப்ப இந்தப் பிரச்சினையை முடிப்பம். பிறகு அதைப் பாப்பம்.” என்றான் அவன், மகள் மீது பார்வை படிய.
இருவருக்குமே இன்னொரு பிள்ளைக்கு மிகுந்த ஆசை உண்டு. வீட்டு நிலை நன்றாக இல்லை என்றுதான் தவிர்த்திருக்கிறார்கள். இதில் இருக்கும் ஒற்றை மகளைக் கூட ஆசைப்பட்டபடி வளர்க்க முடியவில்லை என்றால் எப்படி?
அவன் தங்கைக்கும் அவனை விட்டால் வேறு யாரும் இல்லையே. ஒரு நெடிய மூச்சுடன், “இசையின்ர கலியாணமும் இனி எங்கட பொறுப்புத்தான் நளினி.” என்றான் அதற்கு என்ன செய்யப்போகிறான் என்று தெரியாமலேயே.
எதிர்காலத்தை நினைக்கவே பயமாக இருந்தது நளினிக்கு.
“அப்ப இந்த வீட்டையும் அவளுக்கே குடுக்கோணுமா?” அப்படி, இருக்கும் ஒரேயொரு சொத்தான அந்த வீட்டையும் அவளுக்குக் கொடுத்துவிட்டால் தன் பெண்ணின் எதிர்காலம் என்னாகும் என்கிற பயத்துடன் வினவினாள் நளினி.
“இது இசைக்குக் குடுக்க வேண்டிய சீதன வீடுதானே.” மனைவியின் எண்ணப்போக்குப் புரிந்தாலும் சொன்னான் நேசன்.
நளினி ஒன்றும் சொல்லவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது நேசனுக்கு. ஒன்றும் சொல்லாமல் அவள் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்தான்.
கவலைப் படாத. கடவுள் இருக்கிறார். நாங்களும் ஆருக்கும் எந்தப் பாவமும் செஞ்சது இல்ல நளினி. எங்கட பிள்ளை நல்லாருப்பா.”
“நானும் ஏதும் வேலைக்குப் போகட்டோ எண்டு யோசிக்கிறன்.”
நேசன் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. அன்னையும் இருக்கிறார். சுரபிக்கும் பத்து வயது முடியப் போகிறது. அவள் போனால் அந்தப் பணத்தைச் சேமிக்கலாம்தான்.
கொரோனாவுக்கு முதல் வரை போய்க்கொண்டுதான் இருந்தாள். அவள் சம்பளப் பணத்தில்தான் சுரபிக்கு சின்ன சின்ன நகைகள் செய்து வைத்திருக்கிறார்கள். கொரோனா நேரம் அடுத்தடுத்து மூன்று முறை சுரபிக்கு கொரோனா வந்ததோடு நின்றவள் அதன் பிறகு போகவில்லை.
“உனக்கு ஏலும் எண்டா போ. முந்தி மாதிரியே அந்தக் காச சேர்க்கலாம் நாங்க.” தன் வீட்டு நிலையினால் தானே அவளை வேலைக்குச் செல் என்று சொல்வதால் அவள் காயப்படுவாளோ என்று எண்ணியவன் அவளை மெல்லத் தன்னிடம் இழுத்து அணைத்துக்கொண்டான்.
அந்த அணைப்புச் சின்ன சின்ன முத்தங்களாக மாற, கணவனை அறிந்துகொண்ட நளினியின் இதழ்களில் மெல்லிய சிரிப்பு.
“என்னடி சிரிப்பு?” என்று உதட்டோடு உதடு உரசியவன் மொத்தமாய் அவளை அள்ளிக்கொண்டான்.
*****
யாழிசைக்குத் தான் சொன்னது போன்று ஒரு மாதத்துக்குள் மாதவியின் பணத்தைத் திருப்பிக் கொடுத்ததை எண்ணி மகிழ முடியவில்லை. அதற்காகத் தமையன் எடுத்தது சுரபியின் சேமிப்புப் பணத்தை என்று அவளுக்கும் தெரியும். கோகிலா சொல்லியிருந்தார்.
அவனுக்குப் பாரமாக இருப்பது போதாது என்று அவன் மகளின் எதிர்கால வாழ்வுக்கும் தான் தடையாக நிற்கிறோமே என்றெண்ணிக் கண்ணீர் உகுத்தாள்.
நளினியும் அவர்கள் ஊரின் கிராம சேவையாளர் அலுவலகத்தோடு இணைந்து இயங்கிக்கொண்டிருந்த சமூர்த்தி அபிவிருத்தித் திட்டக் குழுவில் வேலைக்குச் சேர்ந்துகொண்டாள்.
வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் குடும்பங்களைத் தேடிப்போய், அவர்களுக்கான உதவிகளைப் பெற்றுக்கொடுக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். வெயில் மழை என்று பாராமல் ஒவ்வொரு இடமாக அலையும் வேலை.
அது கூடத் தன்னால்தான் என்று அறிந்த யாழிசைக்கு இந்த மூன்று வருடங்களும் விரைவாக முடிந்து, ஒரு வேலையில் அமர்ந்துவிட மாட்டோமா என்றிருந்தது.
கழுத்தில் காதில் ஒன்றுமில்லாமல் அவள் வீட்டுக்கு வந்த கணமே தன்னிடம் இருந்த இன்னொரு தோட்டையும் செயினையும் எடுத்துக் கொடுத்திருந்தாள் நளினி.
அதை மறுத்துவிட்டுச் சின்ன வயதில் போட்டுக்கொண்டிருந்த மொட்டுப் போன்ற குட்டித் தோட்டினை எடுத்து அணிந்துகொண்டாள் யாழிசை. நேசன், நளினி என்று யார் சொல்லியும் கேட்கவில்லை.
இனி நான் உழைத்து, என் பணத்தில் வாங்கும் நகையை மட்டுமே என் கழுத்தில் அணிவேன் என்று மனத்தில் ஒரு வைராக்கியம்.
கோகிலாவுக்குமே படிக்கிற பிள்ளை வெறும் கழுத்தோடு இருப்பாளா என்று கவலைதான். ஆனால், அவள் கேட்கவில்லை.
பாசத்துக்குப் பணிந்து என்றாலும் இன்னொருவர் வாங்கித் தந்ததும் போட்டுக்கொண்டு திரிந்ததற்கும் ஒரே பிடியில் நின்று மறுக்காமல் சொத்தை வாங்கச் சம்மதித்தற்கும் தண்டனை வேண்டாமா?
அதற்கெல்லாம் உடன்படப் போனதால்தானே இன்று இந்த நிலை.
மாதவி அவளுக்கு அழைப்பதை நிறுத்தவேயில்லை. அதே போல அவளும் அதை ஏற்காமல் இருப்பதை மாற்றவில்லை.
அவர் வங்கிக் கணக்குக்குப் பணத்தை அனுப்பிவைத்தபோது, “அத்தையை மொத்தமா வெறுத்திட்டீங்களோ இசை? உங்கட அண்ணா சொன்னவர், எனக்கு நல்ல சாவு வராதாம் எண்டு. எனக்கும் இப்ப இப்ப அதான் ஆசையா இருக்கு. என்னையே சுத்தி சுத்தி வந்த என்ர பிள்ளையை நானே அழ வச்சிட்டன் எல்லா. எனக்கு இது வேணும்தான்.” என்று அவர் பேசி அனுப்பியிருந்த குறுந்தகவலைக் கேட்டு, இரண்டு நாள்களாகக் கண்ணீர் உகுத்தவள் அதிலிருந்தும் தேறிக்கொண்டாள்.
அவரவர் அவரவர் இடத்தில் இருப்பதுதான் சரி!
காலம் உருள ஆரம்பித்திருந்தது. இப்போதெல்லாம் யாழிசைக்குப் பதிலாகத் துளசி மாதவியைக் கவனித்துக்கொள்ள ஆரம்பித்தாள்.
மாதவியின் இந்த வீட்டின் பாதி, வாடகைக்குக் கொடுக்கப் பட்டிருக்க மறு பாதியில் அவரின் பொருள்களை எல்லாம் போட்டுப் பூட்டித் திறப்பை எடுத்துக்கொண்டார்கள்.
அந்த வீட்டுக்கு அவர் வருவதேயில்லை. யாழிசை இல்லாமல், பக்கத்து வீட்டுக்குப் போகாமல் தன் வீட்டுக்கு மட்டும் போய்விட்டு வர அவரால் முடியவே முடியாது. வரவேண்டிய கட்டாயம் ஏதும் வந்தால் சுவர்ணாதான் வந்து பார்த்துக்கொண்டு போவாள்.
இப்போது யாழிசை மூன்றாவது செமஸ்ட்டரில் இருந்தாள். இன்னும் ஒன்றரை வருடங்கள், அதன் பிறகு நானே உழைக்க ஆரம்பித்துவிடுவேன் என்கிற எண்ணம், சின்னதாய் ஒரு நம்பிக்கைக் கீற்றைப் படர விட்டிருந்ததால் நன்றாகவே தெளிந்திருந்தாள்.
ஆனால், தூயவனின் நிலையோ முற்றிலும் தலைகீழாக மாறியிருந்தது. யாழிசையைப் பற்றி யோசிக்கிற ஒவ்வொரு பொழுதுகளிலும் அவளை இன்னுமின்னும் பிடித்தது.
கடந்துபோன ஒரு வருடமாக அவளைத் தேட ஆரம்பித்திருந்தான். பக்கத்திலேயே இருந்து அடிக்கடி கண்ணில் பட்ட நாள்களில் எல்லாம் வெறுத்து ஒதுக்கிவிட்டு இப்போதெல்லாம் அவளைப் பற்றியே யோசிக்கிறான்.
அவள் இங்கில்லை. அனுராதபுரத்தில் இருக்கிறாள் என்று அறிவுக்குப் புரிந்தாலும் எங்காவது தென்பட்டுவிட மாட்டாளா என்கிற தேடல் நிற்கவேயில்லை.
அவள் வைத்துவிட்டுப் போன ஆயிரம் ரூபாய்த் தாள் பிய்ந்துபோகும் நிலைக்கு வந்திருந்தது. அதை ஏன் அவ்வளவு பக்குவமாக வைத்திருக்கிறான் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால், அதைப் பாராமல் அவன் உறங்கியதேயில்லை.
இதற்கு முதலில் அவளை எங்கெல்லாம் வைத்துப் பார்த்தானோ அந்த இடங்களைக் கடக்கிற சந்தர்ப்பங்கள் அமைந்தால் அவனை அறியாமலேயே அவள் தென்படுகிறாளா என்று விழிகளைச் சுழற்றினான்.
இங்கிருந்த காலத்தில் அவள் மாதவியோடு அடிக்கடி போகும் அவர்களின் ஊர்க் கோயிலுக்கு அவனும் அடிக்கடி போக ஆரம்பித்தான்.
அங்குப் போனால் இசை பற்றி ஏதாவது ஒரு கதையை மாதவி நிச்சயம் சொல்வார் என்பதாலேயே ஒவ்வொரு வெள்ளியும் தவறாமல் அவரை அந்தக் கோயிலுக்கு அழைத்துப் போனான்.
ஏன் இந்தத் தேடல் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால், அவளைப் பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்க ஆரம்பித்திருந்தான்.
துளசியின் வாழ்க்கை தண்ணீரில் போட்ட கல்லாக அப்படியே இருந்தது. ஆனால், தூயவன் சும்மா இருக்கவில்லை. ஜீவன் மூலமும் அங்குத் தேட ஆரம்பித்திருந்தான்.
ஆரம்பத்தில் ஆறு மாதங்களுக்குக் கிட்ட அன்னையோடும் தமக்கையோடும் ஜீவன் கதைக்கவேயில்லை. பிறகு பிறகு மனம் கேட்கவில்லை. அந்தளவில் ஓயாமல் அவனுக்கு அழைத்துக்கொண்டே இருந்தார் மாதவி. அதுவும் வாயால் கதைத்து, புலனத்தின் வாயிலாக அனுப்புவது எப்படி என்று சுவர்ணா காட்டிக்கொடுத்ததிலிருந்து தினமும் அவனுக்கு ஒரு குறுந்தகவல் அவரிடமிருந்து வந்துவிடும்.
அதுவும் ஒரு நாள், “இசையும் இல்லாம நீயும் கதைக்காம நான் ஏன் உயிரோட இருக்கோணும் எண்டு இருக்கப்பு. அம்மா செத்த பிறகுதான் வருவியா?” என்று அழும் குரலில் அவர் கேட்டு அனுப்பிவிடவும் அவன் கோபம் கரைந்தே போயிற்று.
இப்போதும் இசை பற்றிய பேச்சு வந்தால் அவரை வருத்துகிறபடி ஏதாவது சொல்லிவிடுவான். ஆனாலும் பழையபடி கதைக்க ஆரம்பித்திருந்தான்.
அப்படி ஒரு முறை அவரோடு கதைத்தபோதுதான் துளசியைப் பற்றிச் சொன்னார் மாதவி. விதுசாவின் உறவுக்காரர்கள் பிரான்சில் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மூலம் விசாரித்துப் பார்ப்பதாகவும் ஜீவன் சொல்ல, அதை அறிந்த தூயவன் நேராக அவனோடு கதைக்க ஆரம்பித்திருந்தான்.
இவர்களோடோ அவன் வீட்டினரோடோ துளசியின் கணவன் அருள், தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்துக்கொள்வதில் அர்த்தமிருக்கிறது. ஆனால், அங்கே பிரான்சில் பழகிய மனிதர்களோடு பேசாமல் இருக்கக் காரணம் இல்லையே. அதில் அவன் இருந்த ஊரில், அவன் பழகிய மனிதர்களைப் பிடித்து, ஏதாவது அறிய முடிகிறதா என்று பார்த்தான்.
அதே நேரம், இங்கே அருளின் தம்பியின் நண்பனைப் பிடித்து, தன் ஆளாக மாற்றி வைத்துக்கொண்டான். அவன் அடிக்கடி அருளைப் பற்றி அருளின் தம்பியிடம் விசாரித்துத் தூயவனுக்குத் தகவல் சொல்ல வேண்டும்.
ஆனாலும் எந்தப் பலனும் இல்லை.
ஆனால், அந்த வருடம் பிரான்சில் நடந்த கோயில் திருவிழா ஒன்றில் அவனை இன்னொரு பெண்ணுடன் எதேற்சையாகக் கண்டதும் விதுசாவின் உறவினர் அவனறியாமல் புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தார். ஏற்கனவே புகைப்படத்தில் அவனைப் பார்த்திருந்தது அவனை இனம் காண உதவிற்று.
அப்போதுதான் அவன் பிரான்சிலேயே இடம் மாறி இருந்திருக்கிறான் என்று தெரிய வந்திருந்தது.
சாதாரணப் பழக்கமோ நட்போ என்று நினைக்க முடியாத அளவில் அவ்வளவு நெருக்கமாக விரல்களோடு விரல்களைக் கோர்த்தபடி அவர்கள் இருவரும் நடந்துபோகும் புகைப்படம் அது.
அந்தப் புகைப்படமே அவர்களுக்குள் இருக்கும் உறவு என்ன என்று சொல்ல, தூயவனின் இரத்தம் கொதித்துப்போனது. அவனைக் கண்ட துண்டமாக வெட்டிப் போடலாமா என்கிற அளவில் ஆத்திரம்.
அவன் தங்கை அந்தக் கேடுகெட்டவனுக்காக இங்கே ஒரு மகனுடன் காத்திருக்க, அங்கே அவன் இன்னொரு பெண்ணுடன் சுத்துவானா என்று நெஞ்சு காந்தியது. யாருமறியாமல் தகப்பனிடம் மட்டும் அந்தப் புகைப்படத்தைக் காட்டினான்.
கருணாகரன் இடிந்துபோனார்.
இனி என்ன செய்வது, அவனை எப்படிப் பிடிப்பது என்று தெரியாமல் அப்பாவும் மகனும் திணறினர். அவனைப் பிடித்தாலும் பிறகு என்ன செய்வது என்கிற கேள்வி வேறு. ஆனாலும் இப்போதைக்கு இதைப் பற்றித் துளசியிடமோ தேவகியிடமோ இருவரும் வாயைத் திறக்கவில்லை.
இப்படி இருக்கையில்தான் அருளின் குடும்பம் சிங்கப்பூருக்குப் புறப்படுகிறார்களாம் என்று செய்தி வந்தது. அடுத்த நொடியே அருளின் தம்பியைத் தூக்கியிருந்தான் தூயவன்.
அவனைக் கவனித்த கவனிப்பில் அனைத்தையும் கக்கியிருந்தான். சின்ன வயதில் பிரான்ஸ் சென்று, படித்து வேலை பார்க்கும் விசா உள்ள அந்தப் பெண்ணை மணந்துகொண்டு, அவள் மூலம் தனக்கு விசா எடுத்திருக்கிறான் அருள்.
இப்போது விசா இருப்பதால் தன் குடும்பத்தைப் பார்க்க சிங்கப்பூருக்கு வரச் சொல்லியிருக்கிறான்.
தூயவனுக்கு ஆத்திரம் கண்ணை மறைத்ததில் அருளின் தம்பியைப் போட்டுத் தாக்கியிருந்தான். அவனுக்கு ஏனோ இனியும் துளசிக்கு அந்தக் கேடு கெட்டவன் வேண்டாம் என்று தோன்றிற்று.
கருணாகரனிடமும் அதையே சொன்னான். முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் இறுதி மூடிவைத் துளசியே எடுக்கட்டும் என்றார் அவர்.
அதன்படி அருள் வீட்டுக்கு இருவரைக் காவலுக்குப் போட்டார்கள். அருளின் தம்பியைத் தூக்கி பொய் கேசில் உள்ளே போட்டார் கருணாகரன். அருள் இங்கே வந்து நேரடியாக அவர்களோடு பேசினால் மட்டுமே அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு வரும் என்கிற நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.
கடைசியில் அருள் இலங்கை வருவதற்கு ஆயத்தமானான். இனியும் மறைக்க முடியாது என்பதில் வீட்டில் விடயத்தைச் சொன்னார்கள்.
சத்தம் இல்லாமல் மகனை மடியில் வைத்துக்கொண்டு கண்ணீர் உகுத்தாள் துளசி. பேசி வைத்த திருமணம்தான் என்றாலும் ஆசைப்பட்டுக் கட்டி வாழ்ந்தவள். அவனுக்கு வெளிநாடு விருப்பம் என்று அவள்தான் தந்தையிடம் பேசி அவனை அனுப்பி வைத்ததே. கடைசியில் என்னாயிற்று?
சொல்வது அவளின் அப்பாவும் தமையனுமாக இருந்த போதிலும் அவளால் நம்பவே முடியவில்லை. அவளோடு ஊனும் உயிருமாக வாழ்ந்த கணவனால் இன்னொரு பெண்ணோடு வாழ முடியுமா?
“அந்த ஃபோட்டோ எங்க அண்ணா?” என்று கேட்டு வாங்கிப் பார்த்தவள் மொத்தமாக நொறுங்கிப்போனாள்.
தகப்பனாலும் தமையானாலும் அவளை அப்படிப் பார்க்க முடியவில்லை. மலைகள் போல் அவர்கள் இருந்தும் அவளை இப்படி அழ விட்டுவிட்டார்களே. ‘நீ முதல் இஞ்ச வாடா. உனக்கு இருக்கு!’ என்று கறுவிக்கொண்டான் தூயவன்.
இப்படி இருக்கையில்தான் சுரபி பெரியபிள்ளையாகியிருந்தாள்.

