அத்தியாயம் 15
அன்று காலையில் பாடசாலைக்குத் தயாராகி வந்த சுரபி, நாற்காலியில் அமர்ந்திருந்து காலணிகளை மாட்டிக்கொண்டு, புத்தகப் பையை ஒற்றைத் தோளில் தூக்கிப் போட்டபடி, “போயிட்டு வாறன் அப்பம்மா!” என்றுவிட்டு, அங்கே வாசலில் ஸ்கூட்டியில் காத்திருந்த நளினியிடம் போகையில்தான் வீட்டு வாசலில் நின்றிருந்த கோகிலா, அவள் வெள்ளைச் சீருடையில் பட்டிருந்த சிவப்பு நிறக் கறையைக் கண்டார்.
சட்டென்று தொற்றிக்கொண்ட சந்தோசப் படபடப்புடன் அவளையும் நளினியையும் வீட்டுக்குள் அழைத்து, நளினியிடம் விசயத்தைப் பகிர்ந்து, சுரப்பியை ஆராய்ந்தபோது அவரின் சந்தேகம் உறுதியானது.
விசயம் அறிந்து வேலைக்குப் போன வேகத்திலேயே திரும்பி ஓடி வந்தான் நேசன். அவனுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. தான் தன் பெண்ணைச் சென்று பார்க்கலாமா என்று கூடத் தெரியாமல் தடுமாறினான்.
என்னவோ திடீரென்று பொறுப்பு அதிகரித்துவிட்டது போன்று, தான் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் போன்று அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், ஒரு பயம் பிடித்துக்கொண்டது.
சுரபி பன்னிரண்டு வயதைத் தொடப்போகிறாள் என்கையில், அவள் வகுப்பில் ஒரு சில பிள்ளைகள் வயதுக்கு வந்ததைக் கேள்விப்படுக்கையில் என்று இதை அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனாலும் கூட, அது நடந்துவிட்ட நொடியில் உண்டான தடுமாற்றத்தையும் படபடப்பையும் பெண்கள் இருவராலும் கூடத் தவிர்க்க முடியவில்லை.
யாழிசைக்கும் செய்தி அவசரமாகப் பறந்தது. உடனேயே புறப்பட்டு வரத்தான் அவளுக்கு ஆசை. ஆனால், பல்கலை இருந்தது. சுரபிக்கும் பள்ளிக்கூடம் இருப்பதால் அந்தக் காலம் போன்று ஒரு மாதத்துக்கு அவளை வீட்டில் வைத்திருக்க முடியாது. சுரபிக்கு உதிரப்போக்கு நின்றுவிட்டால் ஏழாம் நாளே துடக்கினைக் கழிக்க முடிவு செய்த நேசன், அதை ஒட்டியே யாழிசையையும் வரச்சொன்னான்.
அயலட்டை மனிதர்கள், நெருங்கிய உறவுகளை அழைத்து முறைப்படி சின்னவளுக்குக் குப்பைத் தண்ணீர் வார்த்து, அவளைத் தனிமைப் படுத்தி, உணவு கொடுத்தனர்.
நான்கு நாள்கள் கடந்துதான் மாதவியின் காதுக்குச் செய்தி எட்டியது. அறிந்ததும் அப்படியே அமர்ந்துவிட்டார். யாழிசையைப் போலவே அவர் தூக்கி வளர்த்த பெண் அவள். அவரிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் விட்டுவிட்டார்களே. அவர் செய்தது பிழைதான். அதற்காக ஒரு நல்லதிலும் அவர் இருக்கக் கூடாது என்று நினைத்துவிட்டார்களா?
அவர்கள் சொல்லாமல் விட்டார்கள் என்பதற்காக அவரால் போகாமல் இருக்க முடியாது. பெரிய நல்லெண்ணெய்ப் போத்தல், சிவப்பரிசி, உளுந்து, நாட்டு முட்டை என்று ஆட்டோ நிறைய பொருள்களை எடுத்துக்கொண்டு சுவர்ணாவுடன் புறப்பட்டார்.
சுவர்ணாவுக்கு அங்குப் போவதில் பெரிய விருப்பமில்லை. அதுவும் ஒரு முறை விடுமுறைக்கு வந்த யாழிசை, எதேற்சையாக இவளை டவுனில் கண்டும் அறிமுகம் இல்லாத நபரைக் கடப்பது போன்று கடந்து போனதிலிருந்து ஒரு கோபம் முளைத்திருந்தது.
‘அவளுக்கே அவ்வளவு திமிர் இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும்?’ என்று நினைத்திருந்தாள். இன்றைக்கும், “அங்க எங்கட வீட்டில இருந்து பாத்தா ஒண்டுமே தெரியாத அளவுக்குப் பாதையையும் அடச்சு, தகரத்தால வேலியையும் அடச்சு வச்சிருக்கினம். அப்பிடியான மனிசரிட்ட என்னத்துக்கு அம்மா ரோசம் இல்லாமப் போறீங்க?” என்று சிடுசிடுத்தாள்.
ஏற்கனவே அவர்கள் தன்னிடம் சொல்லவில்லையே என்கிற கவலையில் இருந்த மாதவி, “என்னால தனியா போகேலாது எண்டுதான் உன்ன கூப்பிட்டனான் சுவர்ணா. பேசாம வரேலும் எண்டா வா. இல்லையா இறங்கிப் போ. நான் தனியாவே போய்க்கொள்ளுறன்.” என்று பதிலுக்குச் சிடுசிடுத்தார்.
“நீங்க எண்டைக்குத்தான் அவேய விட்டுக்குடுத்திருக்கிறீங்க?” என்கிற முணுமுணுப்போடு அமைதியானாள் சுவர்ணா.
ஆனால், அவர் முற்றிலுமாக அவர்களை விட்டுக்கொடுத்துவிட்ட படியால்தான் இன்று இந்த நிலை என்று அவளுக்கு விளங்கவைக்கும் மனநிலையில் அவர் இல்லை.
அதைவிட ஒன்றை எடுத்துச் சொன்னதும் விளங்கிக் கொள்கிற ரகமும் அவள் இல்லையே.
மாதவி போனபோது நேசனும் நளினியும்தான் சுரபியோடு வீட்டில் இருந்தனர். இப்படி மாதவி வருவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
அதுவும் இந்த ஒரு வருடத்தில் இன்னுமே ஊதி, வெளுத்த முகத்துடன் இருந்தவரைக் கண்டு உள்ளூரப் பதறிப் போனார்கள். கூடவே, வீடு தேடி வந்தவரை விரட்டவா முடியும்? கொஞ்சம் தடுமாறினாலும் உள்ளே அழைத்து அமரவைத்தனர்.
இன்றைக்கு அன்று இருந்த கோபம், குமுறல், கொதிப்பு எல்லாம் அடங்கியிருந்தாலும் அவர் முகம் பார்த்துப் பழையமாதிரிப் பேசுவதற்கு கணவன் மனைவி இருவராலும் முடியவில்லை.
மாதவிக்கும் அவர்களைக் கண்டதும் கண்ணீரைத் தவிர்த்து வேறு எதுவும் வரவில்லை.
இந்த வீடும் வீட்டு மனிதர்களும்தான் அவர் வாழ்க்கைக்கு அத்திவாரம் போட்டுத் தந்தவர்கள். கெட்டது செய்ய வேண்டும் என்று நினைத்து அவர் எதுவும் செய்ததில்லை. அவரின் இயலாமையும், முதுமையினால் உண்டான பலகீனமும், இனியாவது என் பிறந்த வீட்டோடு சேர்ந்து இருந்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டதாலும் தெளிவாக யோசிக்கத் தவறிப்போனார்.
ஆனால், அவரின் நிலை தடுமாறிய நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள். அதுதான் அவர்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று வீடு தேடி வந்துவிட்டார்.
அவருக்கு அங்குக் குறை என்று எதுவுமில்லை. பிறந்து வளர்ந்த வீட்டில், தாயைப் போல் கவனித்துக்கொள்ளும் தமக்கையோடு, பாசமாகப் பார்த்துக்கொள்ளும் துளசியின் துணையோடும், குட்டி மிதிலனோடும் நன்றாகத்தான் இருக்கிறார்.
தூயவன் கூடக் கோயிலுக்கு அழைத்துச் செல்வது, மருத்துவமனைக்குக் கூட்டிக்கொண்டு போவது என்று பாசமாகத்தான் இருக்கிறான்.
இதோ இப்போது கூட விசயத்தைச் சொன்னதும் அவர்களின் ஆலையிலிருந்து புது நல்லெண்ணையும் அவர்கள் விளைவித்த உளுந்தையும் கொண்டு வந்து தந்தது அவன்தான்.
ஆனாலும் இந்தக் குடும்பத்துக்கும் யாழிசைக்கும் தான் செய்த தவறுகளால் அவரால் நிம்மதியாக ஒரு நாள் கூட உறங்க முடிந்ததில்லை.
திரும்பவும் இந்த வீட்டில் காலடி எடுத்து வைத்ததும் பேச்சை முந்திக்கொண்டு கண்ணீர்தான் வந்தது.
“எனக்கும் ஒரு வார்த்த சொல்லி விடோணும் எண்டு யோசிக்கவே இல்லையா நேசன்?” அவர் கண்ணீருடன் கேட்டபோது சங்கடமாயிற்று அவனுக்கு.
“நான் செஞ்சது பிழைதான் அப்பு. ஆனா, வேணுமெண்டு செய்யேல்ல. அதுக்காக நான் தூக்கி வளத்த பிள்ளைக்கு ஒரு நல்லது நடக்கேக்க சொல்லாம இருப்பீங்களா? என்ன நளினி இதெல்லாம்?”
கண்ணீருடன் நியாயம் கேட்கும் பெண்மணியிடம் நளினியாலும் கோபப்பட முடியவில்லை. ஆனாலும், “இந்த நிலைக்கு நீங்கதானே அக்கா காரணம். உங்கள நாங்க கூப்பிட, திரும்பவும் காசு பணத்துக்கு ஆசைப்படுறோம் எண்டு உங்கட வீட்டு ஆக்கள் சொல்லவா? நாங்க பட்ட அவமானம் போதும் அக்கா.” என்றாள் நேராகவே.
அவர் அதற்கும் அழுதார்.
“விடு நளினி!” என்றான் நேசன். அவனுக்குப் பழையதைத் திரும்பப் பேசப் பிடிக்கவில்லை. அதைவிட அன்று அவருக்கு அழைத்து அளவுக்கதிகமாக வார்த்தைகளை விட்டதைக் குறித்துக் கோகிலா மிகவும் கடுமையாக அவனைக் கண்டித்திருந்தார்.
என்ன இருந்தாலும் அந்த ஒரு சம்பவம் மட்டுமே மாதவி இல்லையே. இத்தனை வருடங்களாகப் பக்கத்திலிருந்து பாசமாகப் பார்த்துக்கொண்ட பெண்மணி அவர். அவர் கையால் எத்தனையோ நாள்கள் வாங்கிச் சாப்பிட்டு இருக்கிறான்.
அவனுக்கு நோய்நொடி வந்தால் கோகிலாவுக்கு இணையாக அவரும் அருகிலேயே இருந்து கை வைத்தியங்கள் செய்து கவனித்துக்கொள்வார்.
அப்படி, அன்னைக்கு ஒப்பான பெண்மணியிடம் அவன் பேசிய முறையும் தப்பு, பேசிய வார்த்தைகளும் தப்பு என்று அடுத்து வந்த நாள்களில் அவனே உணர்ந்துகொண்டிருக்கிறான்.
அதில், “அண்டைக்கு கோவத்துல… சொறி மாதவி அக்கா. நான் அப்பிடிக் கதைச்சிருக்கக் கூடாது. என்னவோ நீங்க எங்களை நம்பேல்லை எண்டு நினைச்சதும்… ப்ச்!” என்றவன் பேச்சை நிறுத்தியிருந்தான்.
அவருக்கும் அந்த வார்த்தைகள் எப்படி வலிக்க வைத்தன என்று தெரியுமே. மீண்டும் விழிகள் தானாகக் கலங்கினாலும், “விடப்பு. எல்லாம் என்னால தானே. நான் சரியா நடந்திருக்க அதெல்லாம் நடந்திருக்காதே.” என்றவர், “எங்க இசை? நான் வந்து இவ்வளவு நேரமாகியும் என்னைப் பாக்க வரேல்ல. கோவமா உள்ளுக்கு இருக்கிறாவோ? இசை அம்மாச்சி!” அவர்களிடம் கேள்வியைக் கேட்டவர் அங்கிருந்த அறையைப் பார்த்து ஆவலும் பரிதவிப்புமாகக் குரல் கொடுத்தார்.
சுரபி பெரியபிள்ளையான சாட்டை வைத்து அவர் வந்ததே இசையைப் பார்த்துவிடும் ஆசையில்தான்.
“இண்டைக்கு விடியத்தான் அனுராதபுரத்தில இருந்து வந்தவா. அம்மாவும் அவாவுமா கடைக்குப் போயிட்டினம்.” என்றான் நேசன்.
“ஓ!” ஒரு வகை ஏமாற்றத்துடன் இழுத்துவிட்டு, “எங்க சுரபி?” என்று கேட்டுக்கொண்டு மெல்ல எழுந்தார்.
அவரால் சுயமாகக் காலை எடுத்து வைக்கக் கூட முடியவில்லை. கால்கள் இரண்டும் நன்றாகவே வீங்கி இருந்தன. அதற்குமேல் பொறுக்க முடியாமல், “என்னக்கா இப்பிடி இருக்கிறீங்க? டொக்டரிட்டக் காட்டுறேல்லையா?” என்றபடி அவருக்கு உதவ வந்தாள் நளினி.
“முதல் ரெத்தம் கட்டியாகுது எண்டு மருந்து தந்தாங்கள். இப்ப அளவுக்கதிகமா தண்ணி ஆயிட்டுதாம். சின்ன காயம் கூட வரக்கூடாதாம். தண்ணி ஓடுற மாதிரி ரெத்தம் ஓடி, உயிருக்கே ஆபத்தாயிடுமாம் எண்டு சொல்லி இருக்கிறாங்கள். மலம், சலம் போகேக்க கூடக் கவனமா இருக்கட்டாம். ரத்தமும் சேர்ந்து போயிடுமாம். பல்லுக் கூட இப்ப பிரஷ்ஷால தீட்டுறேல்ல நான். விரலாலதான் தீட்டுறனான். முரசு காயப்பட்டும் ரெத்தம் போயிடுமாம். என்னவோ என்னையே சுத்தி சுத்தி வந்த பிள்ளைக்குச் செய்த பாவத்துக்குத்தான் இதையெல்லாம் அனுபவிக்கிறன் போல.” மற்றப்பக்கம் அவரைப் பிடித்து அழைத்துச் சென்ற நேசனுக்கும் சேர்த்துச் சொல்லிக்கொண்டு சுரபி இருந்த அறைக்குள் போனார்.

