கடன் அன்பை முறிக்கும் 16 – 1

அத்தியாயம் 16

 

 

சின்ன வயதிலிருந்தே மார்க்கண்டேயருடன் தோட்டம் துரவு என்றே வளர்ந்தவன் தூயவன். அவரோடு சேர்ந்து ஒரு விதை முளை விடுவதில் தொடங்கி, பயிராகி, மொட்டடித்து, பூவாகிக் காயாவதைப் பார்த்து பார்த்து இரசித்திருக்கிறான்.

 

மண்ணைப் பற்றி, மண்ணின் வகைகளைப் பற்றி, அதில் வரக்கூடிய பயிரினங்களைப் பற்றி, அவற்றைப் பராமரிக்கும் முறைகள்பற்றி என்று தன் அனுபவங்களை மார்க்கண்டேயர் கதை கதையாக அவனிடம் பகிர்ந்திருக்கிறார்.

 

பெருமளவிலான விவசாயக் காணிகளில் காலம் காலமாக விவசாயம் செய்வதால் அவர்களுக்கு என்றுமே நட்டம் என்று வந்ததில்லை. ஒன்றில் விட்டாலும் இன்னொன்றில் பிடித்துவிடுவார்கள்.

 

அப்படி இயல்பாகப் பற்றிக்கொண்ட விவசாயத்தின் மீதான பாசம், அவனை விவசாயத் துறையிலேயே மேற்படிப்பையும் முடிக்க வைத்திருந்தது. ‘ஏதாவது ஒரு அரசாங்க உத்தியோகத்துப் போறியா ராசா?’ என்று மார்க்கண்டேயர் கேட்டதைக் கூட மறுத்துவிட்டு அவருடனேயே நின்றுகொண்டான்.

 

அந்தளவில் ஊர் முழுக்க அவர்களுக்கு இருந்த பெரும் கமக்காரர் குடும்பம் என்கிற மதிப்பும் மரியாதையும் அவனுக்கும் வேண்டுமாக இருந்தது.

 

உதவியா மார்க்கண்டேயர். கடனா மார்க்கண்டேயர். ஆலோசனையா மார்க்கண்டேயர். ஒரு நல்லது கெட்டதா மார்க்கண்டேயர். ஊர்க் கோயில் திருவிழாவா, அதற்கும் மார்க்கண்டேயரின் பெரும் நன்கொடை. ஊர் மரியாதையா மார்க்கண்டேயர் என்று எங்கும் மார்க்கண்டேயர் எதிலும் மார்க்கண்டேயர்தான்.

 

அவருக்கு வயாதாகிக்கொண்டு வருகையில் முன்னே வந்தவர் கருணாகரன். அதன் பிறகு தாத்தாவின் வழிகாட்டல்களோடு தந்தைக்கும் தோள் கொடுக்க ஆரம்பித்தான்.

 

மூத்த இரு ஆண்களின் இரத்தத்தோடு சேர்ந்து அவர்களின் சரி பிழைகளும், வழிநடத்தல்களும், ஒவ்வொரு விடயத்தையும் கையாளும் முறைகளும் அவனுக்குள் கேள்விகள் இல்லாமலேயே ஊற ஆரம்பித்திருந்தன. அவர்களின் பிரதியாகத்தான் அவனும் வளர்ந்து நிற்கிறான்.

 

காலம் காலமாக என் குடும்பம் இப்படித்தான், என் இனம் இப்படித்தான் என்றுதான் வாழ்கிறான். அதில் ஒரு பெருமையும் நிமிர்வும்.

 

அதனால் அவனுக்கு இதுவரையில் எந்தக் கெடுதல்களும் நிகழ்ந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் போகிற இடங்களில் எல்லாம் மரியாதையும் மதிப்பும்தான் கிடைத்திருக்கின்றன. அதனாலேயே அதன் மீது அவனுக்கு எந்த விமர்சனங்களும் எழுந்ததில்லை.

 

இப்போதும் அவன் அப்படித்தான். ஆனாலும் அந்த அவனுக்குள் இப்போதெல்லாம் ஏதோ ஒன்று நடந்துகொண்டிருக்கிறது. என்ன என்றுதான் தெரியவில்லை.

 

ஒரு பெண். அவளை அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது. பார்க்கிற பொழுதுகளில் எல்லாம் விழிகளில் வெறுப்பைக் கக்கிவிட்டுப் போவான். அவள் அவனைக் கண்டு பயந்து நடுங்குவதெல்லாம் அவனுக்குப் பிடிக்கும். இன்னும் கொஞ்சம் பயம் காட்டிப் பார்க்கலாமா என்று அவனுக்குள் இருக்கும் ஆணவம் உறுமும்.

 

ஆனால், ஒரு நாள் கண்ணீர் விழிகளுடன் அவன் முன்னால் வந்து நின்று நியாயம் கேட்டாள் அவள். வசதி இல்லாதபோதும் அவன் கொடுக்க நினைத்த பணத்தை வாங்க மறுத்துவிட்டாள். அழுதழுது சோர்ந்துபோய் இருக்கிறாளே என்று அவன் வாங்கிக் கொடுத்த உணவுக்கும் மேலால் பணத்தை வைத்துவிட்டுப் போயிருக்கிறாள்.

 

நியாயமாகப் பார்த்தால் இத்தனையும் அவனுக்குக் கோபத்தைக் கிளம்பியிருக்க வேண்டும். ஆத்திரத்தை உண்டாக்கியிருக்க வேண்டும். அதுதானே சரி! ஆனால் இங்கே அவனோ காரணமே தெரியாமல் அவளைத் தேடிக்கொண்டிருக்கிறான்.

 

அதுவும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அவளை நினைக்கப் பிடிக்கவில்லை. அவளைப் பற்றி யோசிக்கப் பிடிக்கவில்லை. அவள் இப்படித் தன் சிந்தைக்குள் ஊடுருவுவது பிடிக்கவேயில்லை.

 

இப்படி இருக்கையில்தான் சுரபி பெரியபிள்ளையாகியிருந்தாள். மாதவி அழைத்து விசயத்தைச் சொல்லி, நல்லெண்ணையும் உளுந்தும் கேட்டபோது ‘அவளும் வருவாள்’ என்றுதான் முதலில் ஓடியது அவனுக்கு.

 

“ரெண்டு கிலோ உளுந்தும் ஒரு லீட்டர் எண்ணெயும் போதுமா சித்தி?” தேவகி எப்போதும் அந்தளவில்தான் இதற்கெல்லாம் கொடுப்பார் என்று தெரியுமாதலால் வினவினான்.

 

“கொஞ்சம் கூடவா இருந்தா நல்லமப்பு. எள்ளும் வேணும் எனக்கு. இசைக்கும் குடுக்கலாம். அங்க ஹொஸ்டல்ல போய்த் தனியா இருக்கிற பிள்ளை. சும்மாவே உடம்பக் கவனிக்க மாட்டா. நாலஞ்சு எள்ளுருண்டையும், முட்டை மாவும் செய்து குடுத்துவிட்டா வச்சுச் சாப்பிடுவா. நான்… நான் காசு வேணுமெண்டாலும் தாறன்.” என்று கடைசி வரியைக் கொஞ்சம் தயக்கத்தோடு அவர் சொல்லவும் அவனுக்குச் சிரிப்பும் கோபமும் சேர்ந்தே வந்தன.

 

அவளுக்காக அவனுக்கு அவர் காசு தருவாரா?

 

“உங்களுக்கு எவ்வளவு வேணும் எண்டுதான் கேட்டனான் சித்தி. நான் கொண்டு வாறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் அவர் கேட்காத சிவப்பரிசியையும் சேர்த்துக் கொண்டு வந்து கொடுத்தான்.

 

அவர் புறப்படுவதற்கு ஆயத்தமாக அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவரை நானே அழைத்துக்கொண்டு போகலாமா என்கிற அளவுக்கு ஓடியது சிந்தனை.

 

அவர் புறப்பட்ட பிறகும் அமைதியாக இருக்க முடியவில்லை. கிழமை நாளாயிற்றே, வந்திருப்பாளா, இல்லை வார இறுதிதான் வருவாளா என்று பல கேள்விகள் மண்டையைக் குடைந்தன.

 

‘அவள் வந்தா உனக்கு என்ன, வராட்டி உனக்கு என்ன? பேசாம இரு!’ என்று அவனை அவனே அதட்டியும் முடியவில்லை.

 

முதலில் அவள் இங்கு வந்துவிட்டாளா என்று அவனுக்குத் தெரியவேண்டியிருந்தது. அப்படி இருக்கையில்தான் தேவகிக்கு அழைத்த சுவர்ணா, இசையைக் கண்டுவிட்டு மாதவி அங்கேயே இருந்துவிட்டதால் பிள்ளைகளைக் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போக வருவேன் என்று சொன்னாள்.

 

சட்டென்று பரபரப்பாகிப் போனான் தூயவன். அதற்குமேல் அவனால் சும்மா இருக்க முடியவில்லை.

 

அவள் வீட்டில் ஓடியாடி அத்தனை காரியங்களையும் பார்ப்பது அவள்தான் என்று மாதவியின் புண்ணியத்தில் அவனுக்குத் தெரியும். அதில் எப்படியும் வெளியில் வருவாள், பார்த்துவிடலாம் என்று ஊர் முழுக்கச் சுற்றியடித்தவன் கோயிலுக்குக் கூடப் போய்ப் பார்த்துவிட்டான்.

 

அதன் பிறகுதான் அவளுக்கும் இது துடக்கு என்பதால் கோயிலுக்கெல்லாம் வரமாட்டாள் என்பதே புத்தியில் உறைத்தது.

 

கடைசியில் அவனால் முடியவேயில்லை. தன் பைக்கில் போனால் பலரும் இனம் கண்டுவிடுவார்கள் என்று குருவின் இருசக்கர வாகனத்தைப் பறித்துக்கொண்டு, தலையில் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு, மாறுவேடத்தில் அவள் வீட்டுத் தெருவாலும் போய்ப் பார்த்துவிட்டான்.

 

அவளைக் காணவே முடியவில்லை. யாரிடமும் விசாரிக்க முடியா நிலை வேறு தொண்டையை நசுக்கியது. குருவிடம் கூட என்னவென்று பகிர்வான்? முதலில் தான் ஏன் இப்படி இருக்கிறோம் என்பதே அவனுக்குத் தெளிவில்லை.

 

இன்னுமே இதைக் காதல் என்கிற வட்டத்துக்குள் அவன் கொண்டுவரவில்லை. அவளின் அழுத விழிகளும், கழுத்தில் காதில் இருந்தவற்றைக் கழற்றிய கோலமும் மட்டுமே நெஞ்சினில் இருப்பதில் அவளை நல்ல மாதிரிப் பார்த்துவிட்டால் போதும் போலும் என்றுதான் சுற்றிக்கொண்டிருக்கிறான்.

 

அது எங்கே?

 

எரிச்சலும் சினமுமாக வீடு வந்து சேர்ந்தான். அங்கே என்றுமில்லாத வகையில் அந்த நேரத்தில் அவர்கள் வீட்டு விறாந்தையில் எப்போதுமே போடப்பட்டிருக்கும் சாய்மானை நாற்காலியில் சரிந்திருந்தார் கருணாகரன்.

 

திடகாத்திரமான, நல்ல உயரமான மனிதர். பெரும்பான்மை பொழுதுகளில் வெள்ளை சாரம், வெள்ளை ஷேர்ட் என்று வெள்ளையில்தான் இருப்பார். இன்றும் அப்படித்தான்.

 

அவர் முகத்தில் தெரிந்த ஆழ்ந்த சிந்தனையில் மற்றது எல்லாம் மறக்க, “என்னப்பா?” என்றான் தூயவன்.

 

“அருளுக்கு ஏமாத்துற பிளான் போல தம்பி.”

 

அவன் புருவங்களைக் கேள்வியாகச் சுருக்கினான்.

 

“இந்தக் கிழமை வாறன் எண்டு சொன்னவன் எல்லா. ஏதோ பாஸ்போர்ட்ல பெயர் பிரச்சினையாம். அது எல்லாம் மாத்த கொஞ்ச நாள் ஆகுமாம்.” என்றதும் கொதித்துவிட்டான்.

 

“ஆரிட்ட அப்பா விளையாடுறான்? அவன்ர மொத்தக் குடும்பமும் எங்கட பிடிக்க இருக்கு.”

 

“ஆனாலும் அவன் வாற வரைக்கும் சும்மா வெருட்டுவோமே தவிர வேற ஒண்டும் செய்ய மாட்டம் எண்டுற தைரியம் அவனுக்கு.”

 

அவர்களும் அப்படி எண்ணித்தான் அத்தனையையும் செய்தார்கள் என்பதில், “இன்னும் என்ன செய்யலாம் அப்பா? அவன்ர அப்பனையும் தனியா தூக்குவமா?” என்று வினவினான்.

 

அவருக்கு வருகிற ஆத்திரத்துக்கு அப்படித்தான் ஓடியது. ஆனால், காரியம் பெரிதா, வீரியம் பெரிதா என்கிற கேள்வி எழுந்து வந்து அவரை நிதானிக்கச் செய்தது. அதில் ஒன்றும் சொல்லாமல், சாய்மானைக் கதிரையில் சாய்ந்திருந்தவர் ஒரு கையைத் தலைக்கு மேலே போட்டபடி, விழிகளை மூடியபடி இலேசாக ஆடிக்கொண்டிருந்தார்.

 

அன்று காலையில் இருந்தே இப்படித்தான் இருக்கிறார். பெரிதாகச் சாப்பிடவும் இல்லை. தேவகி கணவரை நெருங்கவே பயந்தார். துளசிக்குத் தந்தையை அப்படிப் பார்க்க முடியவில்லை. இந்தக் கவலை அவருக்கு அவளால்தானே!

 

“அப்பா.” தழுதழுத்த குரலில் அழைத்தபடி அவர் முன்னே சென்று நின்றாள்.

 

மெதுவாக விழிகளைத் திறந்து பார்த்தார் கருணாகரன்.

 

“அவர் இஞ்ச வந்தாலும் எனக்கு அவர் வேண்டாம் அப்பா. நீங்க எல்லாரும் எனக்கு இருக்கிறீங்க. தம்பி இருக்கிறான். போதுமப்பா.” எனும்போதே அவள் கன்னங்களைக் கண்ணீர் நனைத்துப் போனது.

 

அவரின் நாற்காலியின் ஆட்டம் நின்றுபோனது. அவளையே சில கணங்களுக்குப் பார்த்தவர் மெல்ல ஒற்றைக் கையை மட்டும் நீட்டி அவளைத் தன்னிடம் அழைத்தார்.

 

“அப்பா!” என்றபடி அவர் காலடியில் அமர்ந்தவள் அவர் மடியிலேயே தலையைச் சாய்த்து அழுதாள். அதைப் பார்க்க முடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றான் தூயவன்.

 

அருள் மட்டும் அவன் கையில் கிடைத்தானோ, அங்கே அவன் வைத்திருக்கிறவளோடு வாழ்வதற்கு வழியே இல்லாமல் செய்துவிடுவான்.

 

கருணாகரனுக்கும் மனம் துடித்தாலும் காட்டிக்கொள்ளவில்லை. அதில், “அம்மாச்சி, இஞ்ச பாருங்கோ. சும்மா அழக் கூடாது. நீங்க இப்பிடி அழுறதுக்கா உங்கட அப்பாவும் அண்ணாவும் இருக்கிறோம். சீதேவியான என்ர பிள்ளையின்ர அருமை தெரியாமப் போனவன் உங்களுக்கு வேண்டாம்தான். இது வேற கணக்கு. அத அப்பாவும் அண்ணாவும் பாக்கிறம். நீங்க எத நினச்சும் கவலைப்படக் கூடாது. சரியா?” என்று அவளைத் தேற்றினார்.

 

இதையெல்லாம் கேட்டபடி அந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்த குருவின் பார்வை, கருணாகரனின் காலடியில் அமர்ந்திருந்த துளசியைத் தொட்டு விலகியது.

 

அப்படித் திடீரென்று அவன் வந்ததும் தன் உணர்வுகளைச் சட்டென்று கட்டுப்படுத்திக்கொண்ட துளசி, எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்.

 

தமையனின் நண்பன்தான். சின்ன வயதிலிருந்து தெரியுமும் தான். என்றாலும் இன்றைய தன் நிலையை யாரிடமும் காட்ட வெட்கினாள்.

 

மூன்று ஆண்களுமாகப் புறப்பட்டு அருள் வீட்டுக்குப் போனார்கள்.

 

பயந்துபோயிருந்த அவன் பெற்றோர், உடனேயே அருளுக்கு அழைத்தார்கள். அழைப்பை ஏற்ற அருள், கருணாகரனைக் கண்டதும் நடுங்கிப் போனான்.

error: Alert: Content selection is disabled!!