அத்தியாயம் 17
யாழிசையின் கைப்பேசி இலக்கத்தை எடுப்பதோ, இல்லை அவளை அனுராதபுரத்துக்கே சென்று பார்ப்பதோ அவனுக்கு ஒரு விடயமே இல்லை. நினைத்திருந்தால் அதை எப்போதோ செய்திருப்பான்.
ஆனாலும் செய்ததில்லை. அது வேண்டாம் என்று நினைத்தான். ஓயாத தேடல் ஒன்று உள்ளே இருந்தாலும் அதை அவன் விரும்பவில்லை. அவனுடைய அந்தப் பிடிவாத முடிவுகளை எல்லாம் உடைத்துக்கொண்டுதான் ஊர் முழுக்க அவளை வளைத்து வளைத்துத் தேடுவான்.
இன்றைக்குக் கடைசியாக இருந்த கட்டுப்பாடும் காணாமல் போயிற்று. விறுவிறு என்று மாடியேறி வந்து, அவள் புகைப்படங்களையே திருப்பி திருப்பிப் பார்த்தான்.
முதலில் அவளை முழுமையாகப் பார்த்தான். பின் முகத்தை மட்டும் அருகில் கொண்டு வந்து பார்த்தான். கள்ளம் கபடம் இல்லாமல் மனத்திலிருந்து சிரிக்கும் அந்த முகத்தையே நெடு நேரமாகப் பார்த்திருந்தான்.
அந்த முகத்தை இன்னும் அருகில் கொண்டுவந்தான். அவளுக்கு மாசு மருவற்ற தேன் சருமம். தமிழ் எழுத்து பானா தலைகீழாக நிற்பது போன்ற குட்டி நெற்றி, அடர்ந்த புருவங்கள், அவற்றின் நடுவில் வெற்றிலை வடிவத்தில் மெரூன் நிறப் பொட்டு.
பெரிய விழிகள் என்று சொல்ல முடியாத அளவில் அளவான விழிகள்தான் என்றாலும் அவை இரண்டும் சிரிப்பில் மின்னி, அவனைத் தடுமாற வைத்தன. அந்த முகத்துக்கு என்றே அளந்தெடுத்துச் செய்தது போன்ற மூக்கு.
அதற்குக் கீழே அடுக்கிவைத்த வரிசைப் பற்கள் மின்னச் சிரித்துக்கொண்டிருக்கும் இதழ்கள். அவை, அவள் அணிந்திருந்த மெரூன் வண்ணச் சேலையின் நிறத்திலேயே தோய்ந்து பளபளத்தன. அவனால் அங்கிருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை. தன்னை அறியாது அவளின் இதழ்களை விரல் ஒன்று வருடிக்கொடுக்க, இங்கே அவன் கீழுதடு பற்களுக்குள் நசிபட்டது.
யாரிடமிருந்தோ குறுந்தகவல் ஒன்று அவன் கைப்பேசிக்கு வந்து விழவும்தான் கவனம் கலைந்தான். அப்போதுதான் எதைப் பார்த்துக்கொண்டிருக்கிறான், அவன் உணர்வுகள் எந்தத் திசையை நோக்கி நகர்கின்றன என்று அவனுக்கே புரிந்தது.
புரிந்த கணம் திடுக்கிட்டுப் போனான். பட்டென்று கைப்பேசியை மெத்தையில் போட்டுவிட்டு எழுந்துபோய் ஜன்னலோரம் நின்றவனுக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.
என்ன செய்துகொண்டிருக்கிறான்? என்ன நடந்துகொண்டிருக்கிறது அவனுக்குள்? இன்னொரு வீட்டுப் பெண்ணின் இதழ்களைப் பார்ப்பதும் வருடிக்கொடுப்பதும்… மேலே யோசிக்க முடியாமல் பிடறிப் பக்கத்தை அழுத்தித் தேய்த்தான்.
இல்லை, இச்சையினால் அதை அவன் செய்யவில்லை. அது அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அவனைத் தாக்கும் அந்த உணர்வும் அவனுக்கு வேண்டாம். இந்த வீட்டில் இன்னொரு மாதவியா? இன்னொரு மார்க்கண்டேயரா? அப்படி நினைத்த கணம் அவன் நெஞ்சு குலுங்கிவிட்டது.
திரும்பவும் கைப்பேசியை எடுத்து, அவளின் அத்தனை புகைப்படங்களையும் அழித்தான். குப்பைவாளிக்குள் இருந்தும் அகற்றினான். அப்போதும் அவன் மனம் அமைதியடையவில்லை.
தடதடவென்று படிகளால் இறங்கிச் சென்று, பர்ஸுக்குள் இருந்த அந்த ஆயிரம் ரூபாய்த் தாளை எடுத்துத் துளசியின் கையில் பொத்தினான்.
“என்ன அண்ணா?” தமையனின் செய்கைக்குக் காரணம் புரியாமல் வினவினாள் துளசி.
“அது… மிதிலன் மிக்ஸர் கேட்டவன். வாங்கிக்கொண்டு வர மறந்திட்டன். நாளைக்கு நேசரியால கூட்டிக்கொண்டு வரேக்க வாங்கிக் குடுத்துக் கூட்டிக்கொண்டு வா.”
“இதக் கடைல எடுப்பினமா?” அதன் நிறமே ஏதோபோல் மாறிப்போயிருந்ததில் பிரித்துப் பார்த்துவிட்டு வினவினாள்.
ஒரு கணம் உதட்டைக் கடித்தாலும், “குடு, எடுப்பாங்கள். இல்லாட்டி தூக்கி எறிஞ்சுவிடு.” என்றுவிட்டுப் போனவனைப் புரியாமல் பார்த்திருந்தாள் தங்கை.
தாயிடமும் விடயத்தைப் பகிர்ந்தாள். அவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. “சரி விடு, எங்கயும் ஜீன்ஸ் பொக்கெட்டுக்க போட்டுட்டு மறந்திருப்பான். நானும் கவனிக்காம தோச்சு, அயர்ன் பண்ணி இருப்பன்.” என்றார் அவர்.
அதன் பிறகு வந்த நாள்களில் நடு நெஞ்சிலேயே யாரோ கத்தியால் கீறியதுபோல் ஒரு வலி. இன்னும் அதிகமாக அவள் நினைவில் வந்தாள். அதுவும் அவளின் பானா நெற்றி, சின்ன மூக்கு, சிரிக்கும் இதழ்கள் எல்லாம் அவனைச் சித்திரவதை செய்தன.
இரவுகள் நரகமாகின. பகல்கள் பைத்தியம் பிடிக்க வைத்தன.
பேசாமல் ஒரு திருமணத்தை முடித்துவிடலாமா என்று கூட யோசித்தான். தங்கையின் வாழ்க்கை நடுவில் நிற்கையில் அதுவும் முடியவில்லை.
சில நாள்களாக அவனைக் கவனித்துவிட்டு விசாரித்தான் குரு.
“என்னடா, என்னத்தையோ பறி குடுத்தவன் மாதிரியே இருக்கிறாய்? துளசியாலையா?”
அவர்களின் தேங்காய் மண்டியில் உரித்துப் போட்டிருந்த தேங்காய்ப் பொச்சுகள் மலைபோல் குவிந்து கிடந்தன. அணிந்திருந்த சேர்ட்டை கழற்றிப் போட்டுவிட்டு, வேலையாட்களுடன் சேர்ந்து அவற்றைச் சாக்குகளில் போட்டுக் கட்டிக்கொண்டிருந்தவனின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டுச் சொட்டாய் வழிந்தது.
ஆனாலும் குருவுக்குப் பதில் சொல்லாமல் ஒரு பிடிவாதத்துடன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“மச்சான், என்னடா? வாயத் திறந்து கதையடா!” அவன் கையைப் பிடித்துத் தடுத்து வினவினான் குரு.
“வேலை நேரத்தில வேலையப் பாக்காம என்னடா கதை உனக்கு?” சட்டென்று நிமிர்ந்து அதட்டினான் தூயவன்.
“நீ ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் எண்டு சொல்லு?” குரு அவன் அதட்டலுக்கெல்லாம் அசரவில்லை. .
“உனக்கு என்ன மண்டப் பழுதா? நான் எப்பவும் மாதிரித்தான் இருக்கிறன்.”
“சுடுதண்ணி குடிச்ச நாய் மாதிரி நீ பாயிறதிலயே தெரியுது, நீ எப்பவும் மாதிரித்தான் இருக்கிறாய் எண்டு.”
சட்டென்று தூயவனின் முகம் கோபத்திலும் சினத்திலும் சிவந்தது. “என்னப் பாத்தா நாய் மாதிரித் தெரியுதோ உனக்கு? சொல்லு! நான் என்ன உனக்கு நாயா?” என்று அவனை முட்டித் தள்ளுகிறவன் போல் பல்லைக் கடித்துக்கொண்டு நெருங்கினான்.
குரு அசையாமல் நின்றான். பேசவும் இல்லை. அதைப் பார்த்த தூயவனின் வேகமும் கட்டுப்பட்டது. அங்கிருந்த துண்டை எடுத்து, முகம் உடலெல்லாம் துடைத்துவிட்டு எறிந்தவனுக்கு உள்ளுக்குள் இருந்து அவன் உயிரைக் கொல்லும் அவளையும் இப்படித் தூக்கி எறிய முடியவில்லையே என்று எரிச்சல் வந்தது.
“என்னடா வேணும் உனக்கு இப்ப?” என்றான் சலிப்புடன்.
“என்ன விசயம் உன்ன போட்டுத் தின்னுது. துளசியா?” என்றான் திரும்பவும்.
“அவளும்தான்.” என்றுவிட்டுப் போய் வேலையைத் தொடர்ந்தான்.
“அவளும் தான் எண்டா வேற என்னவும்?”
“…”
“டேய் வைட்! இப்ப சொல்லப் போறியா இல்லையா?”
அதோடு தூயவனின் பொறுமை பரந்திருந்தது. கையில் கிடைத்த தேங்காய்ப் பொச்சைத் தூக்கி குரு மீது எறிந்தான். “நானே மறக்க நினைக்கிறத சொல்லு சொல்லு எண்டு கேட்டுச் சாகடிப்பியா நீ?” என்று கேட்டு கேட்டு அடிக்கவும், “ஐயோ நான் வாயே திறக்கேல்ல. என்னை விடடா!” என்று ஓடியே போனான் குரு.
*****
இங்கே அருள் ஆப்பசைத்த குரங்குபோல் மாட்டிக்கொண்டு முழித்தான். அவனுக்குத் தந்தையைப் பற்றியும் தெரியும். தூயவனைப் பற்றியும் தெரியும். தூயவன் பொல்லாதவன் என்றால் தந்தை சொன்னதைச் செய்கிறவர்.

