கடன் அன்பை முறிக்கும் 17 – 2

வேறு வழி இல்லாமல் இலங்கை வருவதற்கு முதல், நெருங்கிய நண்பன் மூலம், துளசியைத் தனக்குப் பிடிக்கவில்லை என்றும், மணவிலக்குப் பெறுவதற்காக இலங்கை வருவதாகவும், அவள் தமையன் தன் மீது கோபமாக இருப்பதால் தன் உயிருக்கோ தனக்கோ ஏதும் நடந்தால் அதற்கு அவன்தான் காரணம் என்றும், அவன்தான் பொய் கேஸ் கொடுத்துத் தன் தம்பியை உள்ளே வைத்திருக்கிறான் என்றும் காவல்துறையில் அறிவித்து, இலங்கை வரப்போகும் தனக்குப் பாதுகாப்புத் தரும்படி கேட்டிருந்தான்.

 

அந்த விடயம் அப்படியே அலுங்காமல் குலுங்காமல் கருணாகரன் காதுக்கு வந்து சேர்ந்தது. உள்ளே அவருக்குக் கொதிக்காமல் இல்லை. ஆனாலும் தூயவனை அழைத்து, அருளை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சொன்னார்.

 

கேட்டவனுக்குக் கழுத்து நரம்புகள் எல்லாம் புடைத்து, கண்கள் சிவந்து போயின. எவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்துவிட்டு எப்படிக் கதையை மாற்றிவிட்டான்! அவனை…

 

மகனை உணர்ந்தவராக அவன் தோளில் தட்டிக்கொடுத்தார் கருணாகரன். “அவன் எப்பிடிப் புத்தியா நடந்திருக்கிறான் எண்டு விளங்குதா தம்பி. அதே மாதிரி நாங்களும் நடக்கோணுமே தவிரக் கோபப்படக் கூடாது. எங்களுக்கு முதல் எங்கட காரியம் முடியட்டும்.” என்றவரின் பேச்சைத் தலையசைத்துக் கேட்டுக்கொண்டான் தூயவன்.

 

எல்லாவற்றையும் விட அவர்களுக்குத் துளசியும், அவளின் மன அமைதியும் முக்கியம்.

 

அருளும் வந்திறங்கினான்.

 

அவன் தம்பியை விடுவித்து, இனிமேல் அவன் உட்பட அவன் குடும்பத்தில் யாரையும் தொந்தரவு செய்யமாட்டோம் என்று காவல் நிலையத்தில் வைத்து அப்பாவும் மகனுமாக எழுதித் தந்தால் மட்டுமே எந்த முரண்டு பிடித்தல்களும் இல்லாமல் விவாகரத்துக்குக் கையெழுத்துப் போடுவேன் என்றான் அவன்.

 

அப்பாவும் மகனும் அதற்குச் சம்மதித்து, கடிதம் எழுதிக் கையெழுத்தும் போட்டுக் கொடுத்தார்கள்.

 

வாழ்வாதாரத்துக்குப் பணம் கேட்டோ, நடந்த அநியாயத்துக்கு நீதி கேட்டோ நிற்காததும், இரு தரப்பும் ஒத்தே விவாகரத்தைக் கேட்டதிலும் அடுத்த ஒரு வருடத்துக்குள் விவாகரத்தும் கிடைத்தது.

 

முதல் முறை வழக்கை நீதிமன்றில் தாக்கல் செய்துவிட்டு பிரான்ஸ் சென்ற அருள், அவர்களிடம் எழுதி வாங்கிய கடிதம் கையில் இருக்கும் தைரியத்தில் விவாகரத்துக் கையெழுத்தைக் கடைசியாகப் போடுவதற்கு நிமிர்வாகவே திரும்பவும் வந்திறங்கினான்.

 

கையெழுத்துப் போட்டு, மகனைப் பற்றிய சின்ன வருத்தம் கூட இல்லாமல், சந்தோசமாக விமானம் ஏறப் போனவனை விமான நிலையத்தில் வைத்து, போதைப் பொருள்கள் கடத்த முயன்றான் என்கிற குற்றச்சாட்டின் பெயரில் ‘சிஐடி’ அள்ளிக்கொண்டது.

 

குறைந்தது மூன்று வருடங்களுக்காவது அவன் வெளியில் வர முடியாதபடிக்குச் செய்த பிறகே ஓய்ந்தார் கருணாகரன்.

 

அவரே பெரும் கில்லாடி. அவரிடமே தன் புத்திசாலித்தனத்தைக் காட்டியவனை விடுவாரா?

 

வெளியில் காட்டிக்கொள்ளவில்லையே தவிர, அவருக்குள் எரிந்துகொண்டிருந்தது பெரும் ஆக்ரோசமான தீ! அவர் மகள் ஆசையாகக் கேட்டாள் என்பதற்காக, அவரின் பணத்தில் அவரே முன்னின்று அனுப்பி வைத்திருந்தார்.

 

அப்படியிருக்க அவருக்கே அவன் விளையாட்டுக் காட்டிவிட்டான்.

 

அவனை அடித்து முறிப்பது மட்டும்தான் தண்டனையா? என் மகளும் இல்லாமல், புதிதாக நீ பிடித்தவளும் இல்லாமல், நீ ஆசைப்பட்ட வெளிநாட்டு வாழ்க்கையும் இல்லாமல், ஏன் சாதாரண ஒரு வாழ்க்கையை வாழக்கூட வழி இல்லாமல் சிறைக்குள் கிட என்று செய்துவிட்டார்.

 

இனி அவன் வெளியில் வந்தாலுமே கொழும்பு சர்வதேச விமான நிலையத்தைத் தாண்ட முடியாது.

 

இது எல்லாவற்றையும் உள்ளே அழும் உள்ளத்தோடும், நெஞ்சை அடைக்கும் துக்கத்தோடும், வெளியே பெருத்த அமைதியோடும் கடந்தாள் துளசி. பெற்ற மகனைக்கூடத் திரும்பியும் பாராதவனை வேறு எப்படித்தான் கடப்பது?

 

அவளின் அந்த அமைதிதான் வீட்டினரை இன்னுமே கொன்றது. வாயில்லாப் பூச்சி, அமைதியே உருவானவள், இன்றுவரை ஸ்கூட்டி ஓட்டக் கூடத் தைரியம் இல்லாதவள். இந்த நிமிடம் வரையில் ஏன் அப்பா எனக்கு இப்படியான ஒருவனைத் தேடித் தந்தீர்கள் என்று கேட்கவேயில்லை.

 

மாறாக, அவர் தன்னைப் பார்த்துக் கவலைப்பட்டுவிடக் கூடாது என்று, தனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதுபோல் நடமாடிக்கொண்டிருந்தாள்.

 

அப்படியான பெண்ணுக்குப் போய் இப்படி நடந்திருக்க வேண்டாம் என்றே மாதவி உட்பட எல்லோரும் நினைத்தனர்.

 

குழந்தைப் பருவத்திலிருந்தே தந்தையின் அண்மையை அனுபவிக்காமல் வளர்ந்ததாலோ என்னவோ மிதிலன் இதனால் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை.

 

துளசியும் இனி எனக்கு மகன் மட்டுமே போதும் என்கிற முடிவோடு தன் வாழ்க்கையை நகர்த்த முயன்றாள்.

 

இத்தனைகளுக்கு மத்தியிலும் யாழிசையைத் தூயவன் மறந்துபோனானா என்றால் இல்லை. அவள் நினைவுகளின் ஆதிக்கத்தின் முன்னே அவன் பலமிழந்தவனாகிப் போனான்.

 

அன்று அப்பாவும் மகனுமாக யாழ்ப்பாணத்துக்கு வேனில் போய்க்கொண்டிருந்தார்கள்.

 

“இனி உங்களுக்கும் ஒரு கலியாணத்துக்குப் பாக்கோணும் தம்பி.”

 

அவன் நெஞ்சில் சுளீர் என்று ஒரு வலி. ஆனாலும் அதற்கு மறுப்பாக எதுவும் சொல்லாமல், “முதல் துளசிக்கு ஏதாவது செய்யோணும் அப்பா.” என்றான்.

 

“செய்யத்தான் வேணும். அவசரப்படோணுமா எண்டு இருக்கு. அதே நேரம் மிதிலனுக்கு இன்னும் நல்ல விவரம் வர முதல் இன்னொரு கலியாணம் செய்றதுதான் நல்லம் எண்டும் இருக்கு. துளசி என்ன சொல்லுவா எண்டும் தெரியேல்ல.” என்றார் அவர் யோசனையுடன்.

 

என்ன இருந்தாலும் வருகிறவன் தனக்கான மண வாழ்க்கையை வாழ வருவான். மனைவியாகத் துளசியை ஏற்றுக்கொண்டாலும் அவர் பேரனை மகனாகப் பார்ப்பானா என்கிற கேள்வி அவரைப் பின்னால் இழுத்துப் பிடித்தது.

 

“என்னப்பா யோசிக்கிறீங்க?”

 

“இனி அமையிற வாழ்க்கையாவது பிள்ளைக்கு நல்ல வாழ்க்கையா அமையோணும் தம்பி.”

 

சற்று நேரத்துக்கு வாகனத்தினுள் ஒலித்துக்கொண்டிருந்த சுவாமிப் பாட்டின் சத்தம் மட்டுமே கேட்டது. பின், “குருவ துளசிக்குப் பாத்தா என்னப்பா?” என்றான் மெல்ல.

 

பதில் சொல்லாமல் மெல்லிய திகைப்புடன் திரும்பு அவனைப் பார்த்தார் கருணாகரன்.

 

“அவனுக்குத் துளசியப் பிடிக்குமோ எண்டு கொஞ்ச நாளா எனக்கு ஒரு யோசின. அவனுக்குக் கேட்டுப் பாத்துச் செய்ய ஆக்கள் இல்லை எண்டுறதாலயும், சொத்துப்பத்து எண்டு ஒண்டும் இல்லாததாலயும் பேசாம இருக்கிறான் போல.”

 

மகன் சொன்னதைக் கேட்டுக்கொண்டாரே தவிர்த்து ஏதும் சொன்னார் இல்லை கருணாகரன். அவருக்கு அதைக் குறித்து யோசிக்க வேண்டியிருந்தது.

 

தாய் தந்தையர் நாட்டுப்போரில் இறந்திருக்க, தாய் வழிப் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த பிள்ளைதான் குரு. கொரோனா காலத்தில் அவரும் இறந்திருந்தார். அதனாலேயே தூயவனோடு இரவு பகல் என்றில்லாமல் சுற்றிக்கொண்டிருப்பாண்.

 

வீட்டோடும் வந்திருப்பான். நல்ல பிள்ளை. பிக்கல் பிடுங்கல் செய்யக் குடும்பமே இல்லை. முதற்கட்டமாக யோசிக்கையில் சாதகமான பதில்களே நிறைய வந்தன.

 

error: Alert: Content selection is disabled!!