அத்தியாயம் 2
மார்க்கண்டேயருக்குத் தூயவன் என்றால் உயிர். அவர் கைகளுக்குள்ளேயே வளர்ந்தவன் அவன்.
இத்தனை காலமும் அவனுக்கென்று மாடியில் ஒரு அறை இருந்தாலுமே அங்கு அவன் தங்கியதேயில்லை. தாத்தாவுடன் அவர் அறையில்தான் இருந்தான்.
வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வது, அவர் எங்காவது போக வேண்டுமென்றால் அங்கு அழைத்துப்போவது, அவரைக் குளிக்க வைத்து, உடை மாற்றி, உணவு கொடுத்து என்று அவரின் அத்தனை தேவைகளையும் அவனேதான் பார்த்துக்கொள்வான்.
முதல் நாள் இரவு, “உன்ர அம்மம்மா வந்து நிண்டுட்டுப் போறா ராசா.” என்று எப்போதோ இறந்துவிட்ட மனைவியைப் பற்றி அவர் முணுமுணுப்பாகச் சொன்னபோது, அவனுக்குச் சிரிப்புத்தான் வந்திருந்தது.
“வந்தவா என்னோட ஒரு வார்த்த கதைக்காமப் போயிட்டா பாருங்க தாத்தா. என்ன இருந்தாலும் பேரனை விட அவாக்கு மனுசன் பெருசா இருந்திருக்கிறார். அடுத்த முறை வரட்டும், ஒரு சண்டையே இருக்கு.” என்று பகிடியாகச் சொல்லிவிட்டு அவர் போர்வையைச் சரி செய்துவிட்டது அவன்தான்.
காலையில் தென்னந்தோப்புக்குப் போக வேண்டும் என்று இருள் பிரிய முதலே எழுந்தவன், கை கால்களை விசிறியபடி கிடந்த மார்க்கண்டேயரைக் கண்டு புருவங்களைச் சுருக்கினான்.
எப்போதும் போர்வைக்குள் சுருண்டுகொண்டு படுப்பதுதான் அவர் இயல்பு. “தாத்தா.” என்று குரல் கொடுத்தபடி அவரை நேராக்கப் போனவன் உடல் சில்லிட்டு இருக்கவும் நடுங்கியே போனான்.
உடனேயே வந்து பார்த்த வைத்தியரும் அவர் உயிர் பிரிந்துவிட்டதை உறுதிப்படுத்தியிருந்தார்.
இனித் தாத்தா இல்லை என்பதைக் கொஞ்ச நேரத்துக்கு அவனால் நம்பவே முடியவில்லை. அவர் உடலைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.
சிறு வயதில் அவர் தோளில் சுகமாய்ப் பயணித்தது தொடங்கி, அவரோடு சேர்ந்து குளங்களில் குளித்ததிலிருந்து, கடைசியில் தானே அவரின் ஆதாரமாக மாறிப்போனது வரை அத்தனையும் கண்முன்னே வந்துபோய் அவன் கண்களைக் கலங்க வைத்தன.
எங்கு என்ன வேலையாக நின்றாலும் தாத்தாவின் கால்களுக்கு எண்ணெய் வைத்து உருவிவிட வேண்டும், தாத்தாவை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவர்பற்றிய ஏதோ ஒன்று பின்னணியில் அவனுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். இனி?
அவர் இல்லாத ஒரு உலகத்தைக் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாமல் அமர்ந்திருந்தான்.
அடுத்தகட்ட வேலைகள் எல்லாம் மளமளவென்று நடக்க ஆரம்பித்தன. அயலட்டை மனிதர்களும் கூட ஆரம்பித்தனர். அப்போதும் அசையாமல் இருந்தவனின் தோளில் தட்டிக்கொடுத்து, எழுப்பிவிட்டது கருணாகரன்தான்.
துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் அப்பாவும் மகனுமான நின்று பேசிக்கொண்டிருக்கையில்தான் மாதவி யாழிசையுடன் இறங்கி வந்தார்.
முதலில் பார்த்தது அவன்தான். அந்த நிமிடமே தந்தையின் காதில் மற்றவர் அறியாமல் செய்தியைப் போட்டிருந்தான்.
நிமிர்ந்து வாசலைப் பார்த்துவிட்டு, “நீங்க போய் கூட்டிக்கொண்டு வாங்கோ தம்பி.” என்று, அவரும் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னார்.
கேள்வியாகப் பார்த்தான் அவன்.
“கோபதாபம் பாக்கிற நேரம் இது இல்லையப்பு.”
தலையாட்டிவிட்டுப் போனவன் மாதவியை மட்டும் அழைத்து வந்தான்.
இறப்பு வீடு என்பதில் யாரும் எதுவும் சத்தமாகப் பேசிக்கொள்ளவில்லையே தவிர, அந்த வீட்டு வாசலில் மாதவியைக் கண்டதுமே என்னாகுமோ என்றுதான் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
அப்படியிருக்க, தூயவன் சென்று மாதவியைக் கையைப் பிடித்து அழைத்து வரவும் எல்லோர் புருவங்களும் மேலே உயர்ந்து போயின.
பெரியப்பா முறையிலான மனிதர் ஒருவர் கருணாகரனைப் பார்க்க, “அவர் அந்தக் காலத்து மனுசன் பெரியப்பா. அவரின்ர கோபத்தில நியாயமும் இருக்கு எண்டுறதால அவர் இருக்கிற வரைக்கும் நான் ஒண்டுமே கதைச்சது இல்ல. அவரும் போய்ட்டார். இனியும் எப்பவோ நடந்து முடிஞ்சதத் தூக்கிப் பிடிச்சு நான் என்ன காணப்போறன்? கடைசியாக் கூடத் தகப்பனைப் பாக்க விடாம செய்றது எந்த விதத்திலையும் நியாயம் இல்லதானே பெரியப்பா.” என்று விளக்கம் சொன்னார் கருணாகரன்.
“பண்பட்ட மனுசன் எண்டு காட்டுறாயப்பு. சந்தோசமா இருக்கு. மார்க்கண்டேயர் இல்லையே எண்டுற கவலை இனி எனக்கு இல்ல.” என்று அவர் தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டுப் போனார் அவர்.
இதையெல்லாம் அறியாத மாதவி, அவர்கள் வீட்டு விறாந்தையில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த மார்க்கண்டேயரைக் கண்டதும் அவர் காலடியிலேயே விழுந்து கதறித் தீர்த்தார்.
“ஏன் அப்பா ஏன் கடைசிவரை என்ர முகத்தைப் பாக்காமயே போயிட்டீங்க? ஏன் அப்பா இவ்வளவு பெரிய தண்டனை எனக்கு? நான் சாகிற வரைக்கும் செய்ததை நினைச்சு அழோணும் எண்டு நினைச்சீங்களா? ஒரே ஒருக்கா என்னோட கதைச்சிருக்கலாம்தானே. ஒரு வருசம் ரெண்டு வருசம் இல்லை அப்பா. நாப்பது வருசத் தண்டனை தந்துமா உங்கட கோபம் குறையேல்ல?” என்றவரின் கதறலில் அங்கிருந்தவர்களுக்குமே மார்க்கண்டேயர் கடைசிக் காலத்திலாவது அவரைச் சேர்த்துக்கொண்டிருக்கலாம் என்றுதான் தோன்றிற்று.
அவரைப் பார்த்த தேவகியின் விழிகளிலும் கண்ணீர். கூடப் பிறந்தவளாயிற்றே.
அதன் பிறகான நேரம் பெண்களுக்கு மாதவியைத் தேற்றுவதில் ஓடியாதென்றால் ஆண்கள் மார்க்கண்டேயரின் இறுதிக் கிரியைக்காண காரியங்களில் இறங்கினர்.
வயதான மனிதன். வாழும்வரை மிக நன்றாகவே வாழ்ந்தவர். அவர் உடலை எதற்காகவும் வைத்திருக்கக் கருணாகரனுக்கும் தூயவனுக்கும் விருப்பமில்லை. அதில் அன்றே அடக்கம் செய்வதற்கான வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தனர்.
இதயமே வெடித்துவிடுமோ என்கிற அளவிலான துக்கத்தைத் தனக்குள் அடக்கியபடி தூயவன்தான் மொட்டை அடித்து, மீசை தாடியை எடுத்துக்கொண்டு அவருக்குக் கொள்ளி வைத்தான்.
*****
இங்கே வீடு வந்த யாழிசைக்கு தூயவனின் பார்வையையும், ஒற்றை விரலை அசைத்து இங்கிருந்து ஓடிப்போ என்பதுபோல் அவன் செய்த அந்தச் சைகையையும் மறக்கவே முடியவில்லை.
ஒருவரைப் பிடிக்காவிட்டாலோ, அவர்களோடு தம்மால் இயல்பாகப் பழக முடியாது என்றாலோ ஒதுங்கிப் போவது வேறு.
அதை விட்டுவிட்டு இப்படித் துச்சமாய் நோக்கி, மோசமாய் நடத்துவது எந்த விதத்தில் நியாயம்? முதலில் அந்தளவில் அவள் என்ன தவறு செய்தாள்? அவனோடு ஒரு நாள், ஒரு வார்த்தை பேசியது கூடக் கிடையாது. பிறகும் ஏன்?
திரும்ப திரும்ப அதே கேள்விதான் அவளுக்குள் சுழன்றுகொண்டிருந்தது.
கிட்டத்தட்ட அரசரட்ணம் இறந்ததிலிருந்து அவள் வாசம் மாதவி வீட்டில்தான். அதுவும் சுவர்ணா திருமணமாகிப் போனதிலிருந்து உண்பது உறங்குவது எல்லாமே இங்கேதான்.
இன்று மாதவி அங்கு இல்லையாதலால் வீட்டை ஒதுக்கிவிட்டுப் பூட்டித் திறப்பை எடுத்துக்கொண்டு அவர்களின் வீட்டுக்கு நடந்தாள்.
“அண்ணி, சுரபி ரெடியோ?” பக்கத்து பக்கத்து வீடு என்பதில் இவள் போய் வருவதற்காக வேலியிலேயே பாதை வைத்திருந்தார்கள். அதனூடு புகுந்து வீட்டுக்குச் சென்றபடி வினவினாள்.
“அவள் வெளிக்கிட்டாள். நீ வா, வந்து சாப்பிட்டு ஓடு. என்னவாம் சுவர்ணா, அவளின்ர பிள்ளைகள் இண்டைக்கு எப்பிடியும் ஸ்கூல் போகாயினம் என்ன?”
“ஓமாம் அண்ணி. அங்க அப்பு வீட்டுலதான் சின்னாக்களும் நிக்கினமாம். அதால நான் சுரபியோடையே யசோக்கான்ர பிள்ளைகளையும் ஸ்கூல்ல இறக்கி விடுறன். இண்டைக்கு ஒருக்கா போய்வந்தா சரி.” என்றுவிட்டு நளினி தந்த உணவை வேக வேகமாய் வாய்க்குள் போட ஆரம்பித்தாள்.

