அவள் எங்கே விமலைக் குறித்தெல்லாம் யோசித்தாள். ஊருக்கு வந்தாலே இவன் கண்ணில் படமால் திரும்பிவிட வேண்டும் என்றுதானே நினைப்பாள்.
அவளிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. திரும்பி அவளை பார்த்தான். யாராவது பார்த்தால் அவன் வேறு யாரோ, அவள் வேறு யாரோ என்று அப்பட்டமாகச் சொல்லிவிட வேண்டும் என்கிற பிடிவாதத்துடன் ஜன்னலோடு ஜன்னலாக ஊன்றிக்கொண்டு வெளியே முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.
அவனுக்குச் சட்டென்று ஒரு கோபம் வந்தது. “ப்ச் இப்பிடி முகத்தைத் திருப்பிக்கொண்டு இருக்காத இசை. எனக்குக் கோவம் வருது.” என்றான் எரிச்சலுடன்.
வேகமாகத் திரும்பியவள், “ஓகே. சொல்ல வந்ததைச் சொல்லிட்டீங்க தானே. இனி இறங்குங்க ப்ளீஸ்.” என்றாள் கலக்கத்துடன்.
“நீ முதல் கண்ணத் துடை!” அவளின் அந்தக் கலங்கிய விழிகள்தானே அவனை அலைக்கழிப்பவை. சட்டென்று அதட்டினான்.
அவள் பயந்துபோனாள். வேகமாகக் கைகளால் கண்களைத் துடைத்தாள்.
“லேஞ்சி எல்லாம் கொண்டு திரிய மாட்டியா?” என்றான் அவளையே பார்த்திருந்தவன்.
கைக்குட்டை அவளிடம் உண்டுதான். அது அவன் மடியில் இருக்கும் பாக்கில் இருந்தது.
“நீங்க சொன்னதச் செய்திட்டன். இறங்குங்க ப்ளீஸ்.”
“இறங்கு இறங்கு எண்டா எப்பிடி இறங்குறது? ஓடுற பஸ்ஸில இருந்து குதிக்கச் சொல்லுறியா?”
அப்படியானால் இப்படியே அவளோடு வரப்போகிறானா? கலக்கத்துடன் பார்த்தாள் அவள்.
“என்ர வேனுக்க 1000 தாள் கிடந்தது. அதைப் பற்றி உனக்கேதும் தெரியுமா?”
அவளுக்குள் மெல்லிய அதிர்வு. வேகமாக முகத்தைத் திருப்பினாள்.
“நீதானே வச்சனி.”
“…”
“என்ன, நான் வாங்கித் தந்த கறி பணிசுக்கும் டீக்கும் காசு தந்தியோ?” என்றான் ஒரு மாதிரிக் குரலில்.
“ஸ்கூட்டி திருத்திறதுக்கு அவரிட்ட வாங்கமாட்டன். வாங்கினா திருப்பிக் குடுக்கேலாது எண்டு சொன்னியாமே. உனக்கு மட்டும்தான் ரோசமெல்லாம் இருக்குமா? இல்ல, நீங்க மட்டும்தான் சோத்துல உப்புப் போட்டுச் சாப்பிடுறீங்களா?” என்றான் அவன்.
அவளுக்கு இவன் எழும்பிப் போய்விட மாட்டானா என்றுதான் இருந்தது.
“ரெண்டு பணிஸ், ஒரு டீ, டீசல் காசு எண்டு ஒரு 500 கழிச்சா நான் உனக்கு 500 திருப்பித் தரோணும்.” என்றதற்கு மட்டும், “இல்ல, எனக்கு வேண்டாம். அது உங்களிட்டயே இருக்கட்டும்.” என்றாள் வேகமாக.
“அப்ப நீதான் அந்தக் காச வச்சிருக்கிறாய்!”
கடவுளே! என்று மனத்தளவில் தலையைப் பற்றிக்கொண்டாள் அவள்.
“கடன் அன்பை முறிக்கும் எண்டு கேள்விப்பட்டது இல்லையா நீ?” என்று கேட்டுக்கொண்டு பர்ஸை எடுத்து, அதிலிருந்து ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
“இப்ப என்னட்ட இவ்வளவுதான் இருக்கு. அடுத்த முறை ஊருக்கு வரேக்க மெசேஜ் பண்ணு, மிச்சத்தைத் தரப்பாக்கிறன். நல்லா நினைவில் வச்சிரு, நான் உனக்கு இன்னும் 490 தரோணும்.” என்றுவிட்டு பஸ்ஸை நிறுத்தி இறங்கினான் அவன்.
அவன் இப்படி எல்லாம் நடப்பதற்கான காரணம் என்ன என்று கண்டுபிடிக்க முடியாமல் அவள் ஜன்னலால் அவனையே பார்க்க, பஸ் மெல்ல புறப்பட்டது. குருவுக்கு அழைத்துவிட்டு ஒரு கையால் கைப்பேசியைக் காதுக்குக் கொடுத்து மற்றக் கையை அசைத்துக்காட்டி அவளைப் பயணம் அனுப்பி வைத்தான் அவன்.
கருணாகரனுக்கு துளசியின் திருமணத்தைத் தள்ளிப்போட இப்போது விருப்பமே இல்லை. அதில் அவளை அழைத்துப் பேசினார்.
“என்னம்மா முடிவு செய்து இருக்கிறீங்க?”
அவர் இதைப் பற்றித்தான் பேசப்போகிறார் என்று தெரிந்ததால் அவரிடம் வரும்போதே கலக்கத்துடன் வந்தவள், “பயமா இருக்கப்பா. தம்பியும் இருக்கிறான். நான் இப்பிடியே இருக்கிறனே.” என்று, கலங்கிவிட்ட விழிகளோடு கெஞ்சலாகச் சொன்னாள்.
“அப்பிடி ஏன் பயப்பிட? குருவ உங்களுக்குச் சின்ன வயதில இருந்தே தெரியும். அத விட ஆரும் இல்லாம தனியா இருக்கிறவன். உறவா வாற பிள்ளையைச் சந்தோசமா வச்சிருப்பான். ஆரோ முன்னப்பின்ன தெரியாத புது ஆள் எண்டாக்கூட நீங்க பயப்பிடுறதில அர்த்தம் இருக்கு. மிதுக்குட்டிக்கும் குருவத் தெரியும். ஈஸியா சேர்ந்திடுவார். இப்பிடி ஒருத்தன் எங்களுக்குக் கிடைக்கிறது கஷ்டம் பிள்ளை.” என்று இதமாகவே எடுத்துச் சொன்னார் கருணாகரன்.
அப்போதும் அவள் கண்ணில் நீருடன் அமைதியாகவே இருக்க அவள் தலையை வருடிக்கொடுத்தார்.
“அண்ணா சொன்ன மாதிரி நீங்க ஏன் பிள்ளை தகுதியே இல்லாத ஒருத்தனால பாதிக்கப்பட்டு தனியாவே இருக்கோணும்? முதல் நீங்க எங்கயும் தூர போகப் போறீங்களா பயப்பிட? எங்களோட இதே வீட்டுலதான இருக்கப் போறீங்க. பிறகும் என்ன?”
ஒருமுறை பலமாக அடி வாங்கிவிட்ட அவளால் இன்னொரு முறை அதே விசப் பரீட்சசையை எழுதத் தைரியமில்லை என்று சொல்லத் தெரியாமல் நின்றாள்.
ஆனால், அவள் சொல்லாமலேயே அவருக்குப் புரிந்தது. அதில், “அம்மாச்சி, உங்களுக்கு ஒரு நல்லது நடக்காம அண்ணா தன்ர வாழ்க்கையைப் பாக்க மாட்டார். அவருக்கும் 31 முடிஞ்சுது. அவரையும் நாங்க யோசிக்கோணும்தானே.” என்றார் இதமாக.
அது அவளைக் கொஞ்சம் அசைத்தது. கலக்கத்துடன் அவரைப் பார்த்தாள்.
“இல்ல, அப்பாவில உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? முதல் வாழ்க்கையும் நீங்கதான் அமைச்சுத் தந்தீங்க. கடைசில என்ன நடந்தது எண்டு பாருங்க எண்டு கேக்காம கேக்கிறீங்களாம்மா?” என்று அவர் கேட்டதும், “என்னப்பா நீங்க? நான் அப்பிடி நினைப்பனாப்பா?” என்று அழுதாள் அவள்.
“ஆனா அப்பாக்கு அப்பிடி இருக்கேம்மா. என்ர பிள்ளை என்னை நம்பித்தானே அவனைக் கட்டினவள். அவளக் கடைசி வரைக்கும் சந்தோசமா வச்சிருக்கிற ஒருத்தனாப் பாத்துக் கட்டி வைக்காம விட்டுட்டனே எண்டு கவலையா இருக்கேம்மா.” என்றதும், “இல்லை அப்பா. அப்பிடி எல்லாம் கவலைப்படாதீங்க. இந்தக் கலியாணம் எனக்கும் ஓகே அப்பா.” என்றாள் கலக்கம் தீராக் குரலில்.
மகள் முழு மனத்துடன் சம்மதிக்கவில்லை என்று அவருக்கும் தெரிந்தது. ஆனால், அலை ஓயும்வரை காத்திருந்தால் கடலுக்குள் இறங்கவே முடியாதே. அவள் தன் கலக்கங்களைக் கால ஓட்டத்தில் குருவுடன் சேர்ந்தே கடக்கட்டும் என்று எண்ணிக்கொண்டு குருவோடு தூயவனைப் பேசச் சொன்னார்.
குரு இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் மறுக்கவில்லை. ஆழத்தில் புதைத்து வைத்திருந்த ஆசையாயிற்றே. அதே நேரம் தயங்கினான்.
“என்னடா? விருப்பம் இல்லையா? இல்ல இது ரெண்டாவ…” தூயவனை அவன் சொல்லி முடிக்க விடவில்லை.
“தயவு செய்து அப்பிடி எல்லாம் சொல்லாத மச்சான். துளசியை நான் அப்பிடி நினைக்கவே இல்ல. மிதிலன்… அவன் எனக்கு எப்பவுமே என்ர செல்லப்பிள்ளைதான்.” என்றான் ஒரு வேகத்துடன்.
“உனக்கு அவளை முதலே பிடிக்கும்தானே?” தன் சந்தேகத்தை உறுதிப்படுத்த வினவினான் தூயவன்.
பதில் சொல்லாமல் எங்கோ பார்த்தான் குரு.
“பிறகும் ஏன்டா சொல்லேல்ல?” அதை அவன் முதலே சொல்லியிருக்க முதலே இவனுக்கு அவளைக் கட்டிவைத்திருக்கலாம். அப்படிக் கட்டி வைத்திருந்தால் இந்தத் துன்பங்களை எல்லாம் துளசி அனுபவிக்கும் நிலை வந்திருக்காதே என்கிற ஆதங்கத்துடன் வினவினான்.
“இப்ப கேக்கிற இதே கேள்வியை அப்ப நீயும் கேக்கேல்லை தானே?” அவனை நேராகப் பார்த்துக் குரு கேட்கவும் தூயவன் திகைத்தான்.
“உனக்கே நான் கண்ணில படேல்ல. பிறகு எப்பிடி நானா வந்து கேக்க? முதல் என்னட்ட என்ன இருக்கு எண்டு கேக்க?” என்றவனை இப்போது தூயவன் பேச விடவில்லை.
“லூசு மாதிரி கதைச்சாய் எண்டு வை முதுகிலயே நல்லாப் போட்டு விட்டுடுவன். அந்த நேரம் துளசின்ர கலியாணத்தைப் பற்றி நான் யோசிக்க முதலே அப்பா அருளைக் கை காட்டிட்டார். நானும் அப்பா காட்டினதால அவன் எப்பிடி எண்டு விசாரிச்சனானே தவிர எனக்கு உன்னைப் பற்றின யோசின வரவேயில்லை. அதுக்குப் போய்…” என்று முறைத்தான் அவன்.
“சரி விடு. ஆனா மச்சான், எனக்கு மனுசியா வாறவா என்ர உழைப்பில வாழுறதுதான் எனக்கு விருப்பம். இப்போதைக்கு உங்கட வீட்டிலேயே இருக்கிறம். கொஞ்சக் காலம் போன பிறகு என்ர வீட்டத் திருத்திக்கொண்டு நாங்க அங்க போயிடுவம்.” என்று தன் முடிவை இப்போதே சொன்னான் குரு.
அவனைப் பற்றித் தெரியும் என்பதில் சந்தோசமாக நண்பனை அணைத்து விடுவித்த தூயவன், “கலியாணம் நடந்த பிறகு நீயாச்சு துளசியாச்சு. எங்க இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தா எனக்குப் போதும்.” என்று சொன்னான்.

