கடன் அன்பை முறிக்கும் 21 – 1

அத்தியாயம் 21

 

 

குருவும் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னதும் வீட்டுப் பெண்களிடம் அதைப் பகிர்ந்துகொண்டார் கருணாகரன். அவன், தன் வீட்டைத் திருத்திக்கொண்டு தனியாகப் போய்விடுவேன் என்று சொன்னதையெல்லாம் அவர் பெரிதாக எடுக்கவில்லை.

 

முதலில் திருமணம் முடியட்டும் என்று எண்ணிக்கொண்டார்.

 

அவனும் தூயவனோடு சேர்ந்து பட்டப்படிப்பை முடித்திருந்தாலும் தூயவனுக்கு உதவியாக அவர்களோடுதான் நிற்கிறான். அதற்கென்று மாதச் சம்பளம்போல் மாதா மாதம் கொடுத்துவிடுவார்கள்.

 

தூயவன் முழுமையாகக் கவனித்துக்கொள்ளும் தென்னந்தோப்பு, தேங்காய் மண்டி, எண்ணெய் ஆலை இது மூன்றிலிருந்தும் வரும் வருட வருமானத்தில் நண்பனுக்கு ஒரு பகுதியைத் தூயவன் கொடுத்துவிடுவான்.

 

அதில் கருணாகரனும் உடன்பாடியில்லை. என்னதான் நண்பனாக இருந்தாலும் வேலைக்காரனை வேலைக்காரனாக வைத்திருக்க வேண்டும் என்பது அவர் கருத்து.

 

“அவன் இல்லாட்டி நான் இந்தளவுக்கு லாபம் பாக்கேலாப்பா.” என்பான் தூயவன்.

 

அவனைப் போன்ற நம்பிக்கையானவர்கள் கிடைப்பது அரிதிலும் அரிது. தூயவனுக்கு அடுத்தபடியாக அனைத்தையும் கவனித்துக்கொள்வது அவன்தான் என்பதாலும் கருணாகரனும் தடுக்கப் போகவில்லை.

 

 

 

 

துளசியின் வாழ்க்கை மீண்டும் மலரப்போவதில் மிகவும் மகிழ்ந்துபோன மாதவி, தன்னருகில் அமர்ந்திருந்த துளசியை அணைத்து உச்சி முகர்ந்துவிட்டு, “பிறகு என்ன அத்தான். இனி தூயவனுக்கும் கலியாணத்துக்குப் பாக்கிறதுதானே.” என்றார் உற்சாகமாக.

 

இதை எதிர்பாராத தூயவன் அதிர்வுடன் பார்த்தான். இதுதான் அவன் எடுத்துவைத்திருந்த முடிவும். ஆனால், வீட்டில் அதைக் குறித்துப் பேச்சு எழுந்ததும் உள்ளே அடி நெஞ்சில் ஏதோ ஒரு அந்தரிப்பு.

 

கண் முன்னால் இசை வந்து நின்றாள்.

 

அதுவும் அன்று பஸ்ஸில் அவ்வளவு நெருக்கத்தில் அவளைப் பார்த்ததிலிருந்து அவன் அவனாகவே இல்லை. அவள் தன்னைக் கண்டு மிரள்வது, தன்னிடமிருந்து ஒதுங்குவது எல்லாம் இப்போதெல்லாம் அவன் நினைத்து நினைத்து ரசிப்பவை.

 

எத்தனையோ நாள்கள் அவளோடு கதைக்க அவாக்கொண்டு கைப்பேசியை எடுத்துவிட்டு அழைக்காமல் வைத்திருக்கிறான். நாம் எடுத்த முடிவு வேறு, இதற்கு எதிர்காலம் இல்லை என்கையில் அவளைக் குழப்ப வேண்டாம் என்று தன்னைத்தானே அதட்டி அடக்கிவிடுவான்.

 

இனி என்ன செய்யப்போகிறான்? “முதல் துளசின்ர கலியாணம் முடியட்டும் சித்தி.” என்றான் தன்னைச் சாதாரணமாகக் காட்டி.

 

“அப்பிடி எல்லாம் இனியும் விடேலாது தம்பி!” சட்டென்று நடுவில் புகுந்தார் தேவகி. இப்படி அவன் தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பதில் அவருக்குக் கோபம்.

 

“நீங்க இப்பிடி எல்லாம் சொல்லுவீங்க எண்டு தெரிஞ்சுதான் உங்கட அப்பான்ர பக்கத்திலேயே ஒரு பொம்பிளைய அப்பாவும் நானுமா போய், பாத்துக் கேட்டு விசாரிச்சு வச்சிட்டம். உங்க ரெண்டு பேருக்கும் பொருத்தமும் பாத்தாச்சு. அவாக்கு உங்களைப் பிடிச்சிருக்கு எண்டும் சொல்லிட்டா. விதானையா இருக்கிறா. நல்ல கெட்டிக்காரி.” என்றவர் வேக வேகமாக அந்தப் பெண்ணின் புகைப்படத்தை எடுத்து வந்து அவனிடம் காட்டினார்.

 

அதைப் பார்க்காமல், “என்னப்பா இதெல்லாம்?” என்றான் தகப்பனைப் பார்த்து.

 

“இனியும் ஏன் தம்பி தள்ளி வைக்க? எங்களுக்கும் எங்கட மகன், மனுசி பிள்ளை எண்டு வாழுறதப் பாக்க ஆசை இருக்காதா? துளசின்ர கலியாணத்துக்கு வருவினம். அங்க வச்சுக் கதைச்சுப் பாருங்கோ. பிறகு ஒரு நாளைக்கு எல்லாருமா சேந்து கதைச்சுக் கலியாண நாளக் குறிக்கலாம்.”

 

உனக்குப் பிடித்திருக்கிறதா என்கிற கேள்வியைக் கெட்டித்தனமாகத் தவிர்த்துவிட்டு எழுந்தவர், “இப்பிடிக் காட்டாம இருக்கிற ஃபோட்டோக்களை எல்லாம் அவரின்ர ஃபோனுக்கு அனுப்பி விடு தேவகி. பாக்கட்டும்.” என்றுவிட்டு எழுந்து வாசல் வரை நடந்தார்.

 

திடீரென்று நினைவு வந்தாற்போல் நின்று திரும்பி, “ஆ தம்பி, ஒரு விசயம் சொல்லோணும் சொல்லோணும் எண்டு நினைச்சிட்டு மறந்து மறந்து போயிடுவன். இப்பதான் நினைவு வந்தது.” என்றுகொண்டு வந்தார்.

 

“ஆரு அந்தப் பிள்ளை? நேசன்ர தங்கச்சி. சொத்த திருப்பி வாங்கினதில எங்கட பக்கம் நியாயம் இருந்தாலுமே அவாக்கு நாங்க செய்தது ஒரு வகைல பிழைதான். என்னவோ ஆசையைக் காட்டி ஏமாத்திப்போட்டமோ எண்டு இப்ப இப்ப அத நினச்சு மனம் சரியில்லாம இருக்கு. அதால அவாக்கும் நல்ல ஒரு பெடியனா பாத்துக் கலியாணம் கட்டி வைக்கோணும் தம்பி. அப்ப உங்கட சித்தியும் சந்தோசப்படுவா.” என்றவரின் பேச்சில் மாதவி நெகிழ்ந்தே போனார்.

 

அதுவும் தன் அத்தானிடமிருந்து இப்படி ஒரு பேச்சை அவர் எதிர்பார்க்கவேயில்லை. அதில், “உண்மையா அத்தான். அவளுக்கு ஒரு நல்லது நடந்தா என்னை விடச் சந்தோசப்படுறது வேற ஆரும் இல்ல. இருபத்திநாலு வயசாகப் போகுது. இஞ்ச வவுனியாவிலேயே ஏதோ ஒரு பிரைவேட் கொம்பனில எக்கவுண்டிங் டிப்பார்ட்மெண்ட்ல வேல கிடைக்குமாம். ஆரம்பத்துக்கு பெரிய சம்பளம் இல்லாட்டியும் எக்ஸ்பீரியன்ஸ் வர வரக் கூடுமாம். வேலையும் பாத்துக்கொண்டு தொடர்ந்து படிக்கப் போறன் எண்டும் சொன்னவா.” என்று வேகமாக அடுக்கினார்.

 

“அப்ப பிறகென்ன? அந்தப் பிள்ளையும் உங்களுக்குத் துளசி, சுவர்ணா மாதிரித்தான். அவேன்ர இனத்தில, படிச்ச, நல்ல பெடியன் ஆரோ இருக்கிறானாம். ஒரு வருசத்துக்கு முதலே அந்தப் பிள்ளையைக் கேட்டு வந்தவையாம். என்ன எண்டாலும் படிச்சு வேலை எடுத்த பிறகுதான் எண்டு அந்தப் பிள்ளையும் சொன்னவாவாம். உங்கட சித்திதான் சொன்னவா. அவாட்ட அவன் ஆர் என்ன எண்டு கேட்டு விசாரிங்கோ தம்பி. துளசிக்கு மாதிரியே எந்தக் குறையும் இல்லாம அந்தக் கலியாணத்தை செய்து வைக்கோணும்.” என்றவரையே வெறித்தான் தூயவன்.

 

துளசி மாதிரியா இசை அவனுக்கு? நெற்றிப்பொட்டில் அறைந்தது அந்தக் கேள்வி.

அவள், அவள் பார்வை, அதில் தெரியும் பயம், அவளின் மூக்குத்தி இல்லாத மூக்கு, இதழ்கள் எல்லாம் அவன் ரசனைக்குரியவை. அவள் துளசி போன்றவளா?

 

இல்லவே இல்லை! அவள் அவனின் இசை. இந்தத் தூயவனின் இசை! மனம் ஆங்காரமாகக் கத்தியதில் அவன் முகம் இரத்தமாகச் சிவந்தது.

 

அவனின் இறுகிய தோற்றத்தில் எதை உணர்ந்தாரோ, “தம்பி இஞ்ச பாரப்பு!” என்று அவன் தோள் தட்டினார் கருணாகரன்.

 

“பரம்பரப் பணக்காரரா இருக்கிறதால கிடைக்கிற மரியாதையும் மதிப்பும் பெருசு கிடையாது. எங்கட கோபதாபம், விருப்பு வெறுப்பு எல்லாத்தையும் ஒதுக்கி வச்சுப்போட்டு, நாலு பேருக்கு நல்லது செய்து, உண்மையாவே நாங்க பெரிய மனுசர்தான் எண்டு ஊருக்குக் காட்டோணும்.” அவன் நெஞ்சில் ஆழமாய் இறங்கும்படியாக நிதானமாகவும் தெளிவாகவும் சொன்னார்.

 

“எனக்குப் பிறகு இந்தக் குடும்பத்தைக் கொண்டு நடத்தப் போறது நீங்க. உங்கட தாத்தான்ர பெயரையும் மரியாதையையும் கௌரவத்தையும் காப்பாற்ற வேண்டியது உங்கட பொறுப்பு. அந்தப் பிள்ளைக்கு ஒரு நல்லதச் செய்து வச்சு மார்க்கண்டேயரின்ர பேரன் எண்டு நிரூபிக்கோணும்.” என்று அவன் தோளில் தட்டிக்கொடுத்துவிட்டுப் போனார் அவர்.

 

அவன் பார்வை அங்கே சுவரில் மாட்டப்பட்டிருந்த மார்க்கண்டேயரிடம் தாவிற்று. அவனின் அன்புத் தாத்தா. எனக்குப் பிறகு நீதான் ராசா என்று சொல்லிச் சொல்லித்தான் வளர்த்தார். அவருக்கு அவனும் துரோகம் செய்யப் போகிறானா?

 

அவனால் முடியவேயில்லை. நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது.

வேகமாக மாடியேறிப் போனவன் அறைக்குள்ளேயே அங்குமிங்குமாக நடந்தான்.

 

முதலில் எவன் அவன் அவளைப் போய்ப் பெண் கேட்டவன்? அது முக்கியமாக மண்டைக்குள் நின்று குடைய கைப்பேசியை எடுத்து வேகமாக அவளுக்கு அழைத்தான்.

 

அவள் அழைப்பை ஏற்கவில்லை. அவளின் அந்தச் செய்கை அவன் கொதிநிலையை இன்னுமே உச்சிக்குக் கொண்டுபோயிற்று.

 

‘எடு இசை! எடு இசை! எடு இசை!’ என்று பல்லைக் கடித்தான்.

 

*****

 

அன்று அவன், பஸ்ஸில் ஏறி அவள் பக்கத்தில் அமர்ந்துகொண்டு பேசியதே யாழிசைக்குத் திகிலைத்தான் பரப்பியிருந்தது. இதில் அவன் நல்லவனாம், பயந்தவனாம் என்று பேச்சு வேறு. அப்படிச் சொன்னவன்தான் அவன் இனி அழைக்கும்போது அவள் அழைப்பை ஏற்றே ஆக வேண்டும் என்றும் மிரட்டினான்.

 

எடுப்பானோ, எடுத்தால் என்ன செய்வது என்கிற கேள்விகள் தந்த பயத்துடன்தான் அவள் நாள்கள் கடந்துகொண்டிருந்தன.

 

அப்படி இருக்கையில்தான் திடீரென்று அவன் அழைத்தான். என்னவோ கன்னிவெடியின் மீது காலை வைத்துவிட்டவள் போன்று, கையில் மின்னிக்கொண்டிருந்த கைப்பேசியையே பார்த்திருந்தாள்.

 

இன்னுமே அவன் கைப்பேசி இலக்கத்துக்கு அவள் பெயர் சூட்டவில்லை. இலக்கங்களாகத்தான் ஒளிர்ந்துகொண்டிருந்தன.

 

அவள் தொடர்ந்து அழைப்பை ஏற்காமல் இருக்க இந்த முறை விடுவதேயில்லை என்கிற பிடிவாதம் அவனுக்குள் வழுத்துப் போயிற்று. என்னவோ வெறியே வந்தவன் போல் விடாமல் திரும்ப திரும்ப அழைத்துக்கொண்டேயிருந்தான். அப்போதும் அவள் ஏற்கவில்லை.

 

 

‘அந்தளவுக்குத் திமிரா உனக்கு? ஒரு மனுசன் இத்தினை தரம் எடுக்கிறான். என்ன அவசரமோ எண்டு நினைச்சுக் கூடி எடுத்துக் கேக்கமாட்டியாடி?’ பல்லைக் கடித்தபடி திரும்பவும் அழைத்தவன் இரண்டு ரிங்கில் தானே துண்டித்துவிட்டு, “எனக்கு உன்னோட கதச்சே ஆகோணும் இசை. எடு. இல்லையோ நேர்ல வந்து நிப்பன்.” என்று வார்த்தைகளைக் கைப்பேசிக்குள் கடித்துத் துப்பி அனுப்பிவிட்டான்.

 

கேட்டவளுக்கு கைகால்கள் எல்லாம் உதறின. அடுத்த முறை ஏற்காமல் இருக்கத் தைரியம் வரவில்லை. ஏற்றுக் காதில் வைத்தவளுக்குத் தொண்டை ஏறி இறங்கியது.

 

“ஃபோன் எடுத்தா எடுத்துக் கதைக்க மாட்டியா நீ? அப்பிடி என்ன உன்னைச் செய்திடுவன் எண்டு இப்பிடி எல்லாம் நடக்கிறாய்?” என்று அவள் காதுக்குள்ளேயே சீறினான் அவன்.

error: Alert: Content selection is disabled!!