அத்தியாயம் 23
மார்க்கண்டேயர் காலத்து வீட்டைப் புதுப்பித்துக் கட்டியபோது, மாடியில் அவர்களின் தோட்டத்தைப் பார்ப்பதுபோல் அமைந்த அறையை, பால்கனியுடன் வேண்டுமென்று கேட்டு, தனக்குப் பிடித்ததுபோல் அத்தனையையும் செய்துகொண்டிருந்தாள் துளசி.
அப்படியான அவளின் அறையை அவளுக்கு மிக மிகப் பிடிக்கும்.
அதே அறைக்கு முதல் திருமணத்தின்போது வெட்கமும் ஆசையும் படபடப்புமாகப் போயிருக்கிறாள். இன்றைக்கு திரும்பவும் அதே நிகழ்வு. ஆனால், மனநிலை முற்றிலும் தலைகீழாக இருந்தது.
அருளைப் பற்றிய எண்ணங்கள் அவளுக்குள் இல்லை. வர விடுவதில்லை. தவிர்க்க முடியாமல் வந்தாலும் விரட்டியடித்துவிடுவாள்.
அவளுக்குத் துரோகம் செய்த அவனைப் பற்றி நினைப்பது அவளே அவளுக்குச் செய்யும் அவமரியாதை என்று நினைப்பாள்.
குரு நல்லவன், பயப்படத் தேவையில்லை என்று தனக்குத் தானே தைரியம் சொல்லிக்கொண்டாலும் முடியவில்லை. அவள் கலங்கிய முகம் பார்த்து, தேவகியும் மாதவியும் சொன்ன புத்திமதிகள் செவி மடல்களைத் தாண்டி நுழையவும் இல்லை.
முடிந்தவரை தள்ளிப்போட்டு, அன்னையும் சிற்றன்னையும் விடாமல் நச்சரிக்க ஆரம்பிக்க, வேறுவழி இல்லாமல் புறப்பட்டவள், உறங்கிவிட்ட மகனைத் தூக்கித் தோளில் போட்டுக்கொள்ளவும், பெரியவர்கள் அதிருப்தியாகினர்.
“என்னம்மா இது? அதான் தம்பி நித்திரையாயிட்டார் தானே. என்னோட இருக்கட்டும்.” என்று மாதவி சொன்னதையோ, இன்றைக்கு மட்டுமாவது வேண்டாம் என்று தேவகி சொன்னதையோ அவள் காதில் விழுத்தவே இல்லை.
மகனோடுதான் அறைக்குப் போனாள்.
அங்கே அவள் அறையில் காத்திருந்த குருவாலும் இயல்பாக இருக்க முடியவில்லை. அந்த வீட்டுக்குச் சின்ன வயதிலிருந்து வந்து போயிருக்கிறான். ஏன், தூயவனின் அறையில் தங்கியும் இருக்கிறான். ஆனாலும் இன்று, துளசியின் அறையில் அவள் வரவுக்காகக் காத்திருப்பது கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது.
அப்போதுதான் துளசி மிதிலனோடு உள்ளே வந்தாள். கதவு திறந்தே இருக்கவும் போய் அதைச் சாற்றினான் குரு.
அப்படி அவன் செய்ததும் அவள் முகத்தில் மெல்லிய பதற்றம்.
“என்ன?” என்றான் அதைக் கண்டுவிட்டு.
ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, “தம்பி…” என்று மென்று விழுங்கினாள்.
“நித்திரையாயிட்டாரா?” என்று கேட்டுக்கொண்டே அவள் தோள்ப்பக்கம் வந்து, உறங்கிக்கொண்டிருந்த சின்னவனின் கேசத்தைக் கோதிவிட்டான்.
அன்று திருமணத்தின்போது அவன் மடியில் வந்து அமர்ந்து, “என்ன நடக்குது குரு மாமா?” என்று அவன் கேட்டதற்கு, “எனக்கும் உங்கட அம்மாக்கும் கலியாணம் நடக்குது.” என்று விளையாட்டுப்போல் குரு சொல்ல, “அப்ப எனக்கு?” என்று கேட்டிருந்தான் சின்னவன்.
அது மூட்டிய சிரிப்போடு, “உனக்குத் தெரியுமா? ஆள் இண்டைக்கு தனக்கு எப்ப கலியாணம் எண்டு கேட்டவர்.” என்று அவன் நடந்ததைப் பகிர்ந்துகொண்டபோதும், அதைக் குறித்து எதுவும் சொல்லாமல் கண்களில் கலக்கத்துடன் அவனையே பார்த்திருந்தாள் துளசி.
அவள் மனநிலை என்னவாக இருக்கும் என்று குருவுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் இலகுவாகப் பேசி அவளையும் இலகுவாக்க முயன்றான்.
அவளால் அது முடியவில்லை என்று தெரிந்ததும் நின்ற நிலையில் இருந்தே அவளையும் சின்னவனையும் சேர்த்து மிக மென்மையாக அணைத்து, அவள் தலையோடு தன் தலையைச் சாய்த்து, “என்ன உனக்குத் தெரியாதா துளசி? இல்ல, உன்ர மனநிலை என்னவா இருக்கும் எண்டு நான் யோசிக்க மாட்டனா?” என்றதும் சட்டென்று உணர்ச்சிவசப்பட்டவளின் விழிகள் கலங்கிப்போயின.
அவனுக்கு இது முதல் திருமணம், எதிர்பார்ப்போடு வருவான், தன்னால் அவனுக்கு ஈடுகொடுக்க முடியுமா என்று எவ்வளவு கலங்கியிருப்பாள்? அவனானால் அவள் மனநிலை என்னவென்று தெரியும் என்கிறானே!
“ப்ச் இப்படி அழுறேல்ல. இனி நீ சந்தோசமா மட்டும்தான் இருப்பாய் எண்டு சொல்லி இருக்கிறனா, இல்லையா?” அவன் கனிவோடு கடிந்துகொள்ளவும் கலக்கமகன்று சிறிதாகப் புன்னகைக்க முயன்றாள் துளசி.
“சரி, கையிலேயே வச்சிருக்காம தம்பிய கிடத்து.”
சின்னவனைக் கட்டிலின் நடுவில் கிடத்தி, போர்வையைப் போர்த்திவிட்டு நிமிர்ந்தவள், என்னவோ அவ்வளவு நேரமாக அவளின் பாதுகாப்பு அரணாக இருந்த ஒன்று பறிபோனதுபோல் உணர்ந்தாள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாது அவள் விழித்துக்கொண்டு நிற்க, சின்ன சிரிப்புடன் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான் குரு.
அதை எதிர்பாராதவள் நிலநடுக்கம் வந்தவள் போல் நடுங்க, “அடிப்பாவி! நான் என்ன அந்தளவுக்கு வில்லனா? இந்த நடுங்கு நடுங்கிறாய்?” என்றான் சிரித்துக்கொண்டு.
பதில் சொல்லாமல் அவன் மார்பிலேயே நெற்றியை முட்டித் தன்னை நிலைப்படுத்த முயன்றாள் அவள்.
மனம் கனிய, அவள் கன்னங்கள் இரண்டையும் தாங்கித் தன்னைப் பார்க்க வைத்தான்.
கலங்கிக்கிடந்த அவள் விழிகளோடு தன் பார்வையைக் கலந்து, “எனக்குச் சரியா நினைவு இல்ல. நான் கம்பசுக்கு போன காலம் எண்டு நினைக்கிறன். அப்ப இருந்தே இந்தத் துளசியை எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஆனா, ஆருமே இல்லாம அனாதையா நிக்கிற எனக்கு உன்னத் தருவினமா எண்டுற தயக்கதாலயும், நண்பன் எண்டு நம்பி வீட்டுக்க விட்டவனிட்ட போய் உன்ர தங்கச்சியப் பிடிச்சிருக்கடா எண்டு சொல்லத் தைரியமும் இல்லாமயும் கோழையா இருந்திட்டன். ஆனா நான் அதச் சொல்லியிருக்கோணும். சொல்லிப் பிடிவாதமா நிண்டு உன்னக் கட்டியிருக்கோணும். நீ அதைச் செய்யாம விட்டதாலதானே அவள் இவ்வளவு வேதனைகளையும் அனுபவிச்சவள் எண்டு எனக்கு என்னிலதான் கோவம். ஆனா, இந்தத் துளசி எனக்கே எனக்கு எண்டு பிறந்தவள். பிறகு எப்பிடி எனக்குக் கிடைக்காமப் போவாள் சொல்லு?” என்று கேட்டதும் உதடுகள் நடுங்க, கண்ணீர் வழிய, அவன் மார்பில் முகம் புதைத்தாள் அவள்.
அவன் விழிகளும் இலேசாகக் கலங்கிப்போயின. வாயைத் திறந்து பேசினால் தன்னை கண்டுகொள்வாளோ என்று பேசாமல் நின்று அவள் தலையை வருடிவிட்டான்.
என்னவோ அவளுக்குத் தான் வாழ்வளித்திருப்பது போன்ற ஒரு தோற்றம் அவளுக்குள் வந்துவிடக் கூடாது என்பதில் தன் மனத்தைச் சொல்லியிருந்தான். அப்படிச் சொன்ன பிறகுதான் அவன் மனத்தின் பாரமும் அடங்கிற்று.
தான் கொஞ்சம் தேற்றிக்கொண்டதும், “அழுறேல்ல துளசி.” என்றான் மெல்ல.
“நீங்க சொன்னது எல்லாம் உண்மையா?” அவன் முகம் பார்த்துக் கேட்கும் தைரியம் இல்லாததால் அவன் மார்புக்குள் இருந்தே மெல்ல வினவினாள்.
“அது சும்மா. இப்பிடி உன்ன என்னட்ட வர வைக்கிறதுக்குச் சொன்ன கதை.” என்றதும் திகைப்புடன் நிமிர்ந்த துளசி,
கண்களும் முகமும் சிரிக்க அவளையே பார்த்திருந்தவனைக் கண்டு தடுமாறிப்போனாள்.
உண்மையில் அந்தக் கணம் அவள் உள்ளம் அவனிடம் தடுமாறித்தான் போனது.
“எல்லாம் பொய்!” மெல்ல முணுமுணுத்தபடி அவள் விலக, “எல்லாம் அப்பட்டமான உண்மை!” என்றவன் அவள் முகம் தாங்கி நெற்றியில் தன் முதல் முத்தத்தைப் பதித்தான்.
சட்டென்று உடல் கூசிச் சிலிர்த்தாலும் அவனோடு ஒன்ற முடியாமல் அவள் மெல்ல விலக, “பயப்பிடாத. அது நீ என்னட்ட வந்திட்டாய் எண்டுற சந்தோசத்தில தந்தது. மிச்சம் எல்லாம் உனக்கும் பிடிச்சுத்தான் நடக்கும்.” என்றான் தானும் அவளை விட்டபடி.
இருவரும் சின்னவனின் இரு பக்கமும் படுத்துக்கொண்டார்கள்.
அவனும் இந்த அறைக்குள் அதுவும் பக்கத்தில் படுத்திருக்கிறான் என்கிற எண்ணம், அவள் இயல்பைப் பறித்துக்கொண்டிருந்தாலும் இந்த அறைக்குள் வரும்போது இருந்த பதற்றமான மனநிலையில் துளசி இப்போது இல்லை. அவன் சொன்ன விடயம்தான் திரும்ப திரும்ப நினைவில் வந்துகொண்டிருந்தது.
முதல் திருமணத்திற்கு முதல் அவனைக் கொஞ்சமும் அவள் உணரவே இல்லையே. ஏன், விவாகரத்தான பிறகும் கூட எந்த வகையிலும் அவன் முயலவே இல்லை. அந்தளவில் தன் ஆசையைத் தனக்குள் போட்டுப் புதைத்துக்கொண்டிருக்கிறான்.
அந்தப் பக்கம் படுத்திருந்த குருவால் உறங்க முடியவில்லை.
அவனுக்கு எப்போதுமே பகல்கள் வேலையோடும் தூயவனோடும் ஓடிவிடும். இரவுகள்தான் தனிமையை உணர வைத்து, நெஞ்சினுள் வெறுமையைப் பரப்புபவை. என்னென்னவோ நினைவுகள் எல்லாம் வந்து அலைக்கழிக்கும். ஆனால் இன்று?
எழுந்தமர்ந்து அவர்கள் இருவரையும் பார்த்தான். இது அவன் குடும்பம். அவன் மனைவி, அவன் மகன். மிதிலனின் நெற்றியை வருடிவிட்டவன் அப்படியே எட்டித் துளசியின் தலையையும் வருடிவிட்டுவிட்டுப் படுத்துக்கொண்டான்.
அடுத்தநாள் காலையில் பூரிப்பும் புதுப் பெண்ணுக்கான மினுமினுப்புமாக வராத போதிலும் நேற்றைய நாளைப் போல் இல்லாமல், அமைதியான முகத்தோடு இறங்கி வந்த மகளைக் கண்டு அன்னைமார் இருவரும் தமக்குள் நிம்மதியாகப் பார்வைப் பரிமாற்றம் செய்துகொண்டார்கள்.
காலை உணவைச் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு, மகளின் வருகைக்காகக் காத்திருந்த கருணாகரனுக்கும் மகளைக் கண்டு உள்ளம் நிறைந்துபோனது. அதுவும் அவளோடு மிதிலனைத் தூக்கிக்கொண்டு இறங்கி வந்த குருவைக் கண்டு உண்மையில் நெகிழ்ந்துதான் போனார்.
தேவகி வேண்டுமென்றே ஏதோ வேலை இருப்பவர் போல் சமையற்கட்டுக்கு நகர்ந்துவிட, இயல்பாகத் தகப்பனோடு சேர்த்துக் கணவனுக்கும் பரிமாறினாள் துளசி. மிதிலனையும் பக்கத்தில் அமர்த்திக்கொண்டு அவனுக்கும் கொடுத்துத் தானும் சாப்பிட ஆரம்பித்தான் குரு.
இதற்குள் தானும் குளித்துத் தயாராகி வந்த தூயவன், குருவின் தோளில் இடித்துக்கொண்டு அமர்ந்தான்.
கையில் எடுத்த உணவு வாய்க்குள் போகாமல் தட்டைத் தாண்டிச் சிதறிவிட, “அடேய்!” என்று அதட்டி குரு, “மிதுக்குட்டி, உங்கட மாமா செய்றதை எல்லாம் தட்டிக் கேக்க மாட்டீங்களா?” என்று தன் தோளைத் தடவி விட்டபடி கேட்டான்.

