அத்தியாயம் 26
தூயவனும் தன்னால் முடிந்தவரையில் தன் வாகனத்தில் பின் இருக்கையில் அழுதபடி வந்தவளிடம் தன் மனம் தடுமாற ஆரம்பித்ததை, முதலில் அதை அவனே உணராமல் இருந்ததை, பின் இது சரியே வராது என்று ஒதுங்கிப்போக நினைத்ததை, அது முடியாமல் நாளாக நாளாக மனம் அவள் வேண்டுமே வேண்டும் என்று நின்றதை எல்லாம் சொன்னான்.
அவன் சொன்னதை எல்லாம் கேட்டு ஒருவித அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தாள் அவள். உண்மையைத்தான் சொல்கிறானா என்கிற சந்தேகமே எழுந்தது. சமீபத்திய நாள்களில் அவளுக்குச் சந்தேகம் வந்ததேயொழிய ஆரம்பத்தில் அப்படி உணர்ந்ததே இல்லையே.
“நானே இதையெல்லாம் எதிர்பாக்கேல்ல இசை. என்ர வீட்டுக்கு இன்னொரு மார்க்கண்டேயரும் மாதவியும் வேண்டாம் எண்டுதான் நினைச்சனான். முடியோணுமே. எனக்கும் வீட்டில கலியாணத்துக்கு பாக்கினம். அந்தப் பிள்ளையை நிமிந்து நேரா பாத்தாலே என்னவோ உனக்குத் துரோகம் செய்ற மாதிரி இருக்கு எனக்கு.” என்றதும் அவள் விழிகள் அதிர்வில் விரிந்தன.
“சத்தியமா நீ இல்லாம என்னால ஒரு வாழ்க்கையை யோசிக்கவே ஏலாம இருக்கு. நீ ஓம் எண்டு சொல்ல மாட்டாய் எண்டு தெரியும். உன்ர குடும்பமும் சம்மதிக்காது, என்ர குடும்பமும் சம்மதிக்காது எண்டும் தெரியும். இது அப்பாக்குத் தெரிய வந்தா என்ன என்ன பிரச்சினை எல்லாம் வரும் எண்டு என்னால கணிக்கவே ஏலாம இருக்கு. ஆனாலும் எனக்கு நீ வேணுமா இருக்கு. என்னை என்ன செய்யச் சொல்லுறாய்?” என்று அவளிடமே கேட்டவனை வாயடைத்துப்போய்ப் பார்த்தாள் அவள்.
அதுவும் அவள் மறுப்பாள் என்றும் தெரியுமாமே.
“இன்னும் ஒரு கிழமை டைம் எடுத்து எண்டாலும் யோசிச்சுச் சொல்லு. நான் வெய்ட் பண்ணுறன். ஆனா ஓம் எண்டு சொல்லு. அத விட்டுப்போட்டு இப்பிடி வேணுமெண்டு திரும்ப திரும்ப கண்டதையும் கதைக்காத இசை. எனக்கு உண்மையாவே கோவம் வருது.” என்றதும் பற்றிக்கொண்டு வந்தது அவளுக்கு.
“வேணுமெண்டு கதைக்கிறதுக்கு எனக்கு என்ன வேண்டுதலா? இதுல நான் உங்களுக்கு யோசிச்சு ஓம் எண்டு சொல்லோணுமா? முதல் எந்த இடத்தில எனக்கு உங்களப் பிடிச்சிருக்கும் எண்டு நீங்களே சொல்லுங்களன் பாப்பம். பாக்கிற நேரமெல்லாம் பார்வையாலேயே கேவலப்படுத்துவீங்களே அப்பயா? இல்ல, உங்கட தாத்தான்ர செத்தவீட்டுக்கு வந்தவளை ஒற்றை விரலால துரத்தியடிச்சீங்களே அப்பயா? இல்ல, ஊரான் வீட்டுச் சொத்துக் கிடச்சதும் சந்தோசமா வாங்கி வச்சிருந்தியே எண்டு கேட்டீங்களே அப்பயா? இல்ல, என்னவோ உங்கட வீட்டுச் சொத்தையெல்லாம் தூக்கிக்கொண்டு ஓடிடுவன் எண்டு பெரும் கூட்டமா வந்து என்னைக் கூட்டிக்கொண்டு வந்து, கையோட சொத்தை மாத்தி எழுதினீங்களே அப்பயா? சொல்லுங்க!” என்று சீறினாள் அவள்.
முகம் கறுத்துப்போய் அவன் அமர்ந்திருக்க, “எளிய வீட்டுப் பிள்ளை நான். நீங்க செய்த அத்தனை அநியாயத்துக்கும் திரும்பிச் செய்ய என்னட்ட வலு இல்ல. அதால மட்டும்தான் எல்லாத்தையும் எனக்குள்ளேயே விழுங்கிக்கொண்டு ஒதுங்கிப் போனனான். அதுவே உங்களை ஏதாவது செய்ற அளவுக்கு என்னட்ட வல்லமை இருக்குமா இருந்தா என்ன எல்லாம் செய்யேலுமோ அத்தனையும் செய்திருப்பன். அந்தளவு ஆத்திரமும் கோபமும் இருக்கு எனக்கு உங்களில.” என்று பொரிந்தவளாள் அதற்குமேல் அங்கிருக்க முடியவில்லை.
பட்டென்று எழுந்துகொண்டாள்.
“இனியாவது நான் போகலாமா?” அவளிடத்தில் இனியும் எதையாவது கேட்டுக்கொண்டு வருவாயா என்கிற தொனி இருந்தது.
அவ்வளவு நேரமாக அவள் பேசப் பேச இறுகிப்போய் அமர்ந்திருந்தவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
“இல்ல, உங்கட நண்பர் நீங்க ஏதோ உங்கட விருப்பத்தைச் சொல்லுவீங்களாம். அதுக்கு நான் பதிலச் சொல்லோணுமாம் எண்டு சொன்னார். அவர் சொன்ன மாதிரி நான் பதில் சொல்லிட்டன் எண்டு நினைக்கிறன். இனி நான் போகோணும்.” என்று அவள் சொல்லி முடிக்க முதலே, “எனக்கு நீ வேணும் இசை.” என்றான் அவன் நிதானமாக.
நம்ப முடியாத திகைப்புடன் அவனையே பார்த்தாள் யாழிசை. இத்தனை தூரம் சொல்லியும் இப்படிச் சொன்னால்?
“என்னைக் கட்டு. அப்பிடிக் கட்டினா என்ர பிடி உன்னட்ட வந்திடும். அதுக்குப் பிறகு இப்ப சொன்னியே என்ன எல்லாமோ என்னைச் செய்யோணும் உனக்கு எண்டு. அதையெல்லாம் தாராளமாச் செய். நானும் அனுபவிக்கிறன்.” என்றான் அவள் முன்னால் வந்து நின்று.
ஒரு பயம் நெஞ்சைக் கவ்வ, “என்… என்ன கதைக்கிறீங்க?” என்றபடி பின்னால் நகர முயன்றாள். முடியாமல் சோபா முட்டி நின்றதும் அவள் நெஞ்சு டமாரம் அடிக்க ஆரம்பித்தது.
“கடைசியாக் கேக்கிறன், எனக்கு நீ வேணும். என்னால இன்னொருத்தனுக்கு உன்ன விட்டுக் குடுக்கேலாது. அப்பிடி ஒரு ஏற்பாடு நடந்தா, நடக்கிறது நடக்கட்டும் எண்டு வீடு பூந்து உன்னத் தூக்குவன்.” என்றதும் நெஞ்சே சில்லிட்டுப்போனது அவளுக்கு.
அதற்காக அவளால் அவன் மிரட்டலுக்கு அடங்கிப் போக முடியவில்லை. “நானும் கடைசியா சொல்லுறன். ஆர கட்டினாலும் உங்கள கட்ட…” என்று அவள் சொல்லி முடிக்க முதலே ஒற்றை விரல் கொண்டு அவள் இதழ்களை மூடிப் பேச்சை நிறுத்தினான்.
அவளுக்கு விழிகள் இரண்டும் திரும்பவும் வெளியே வந்துவிடும் என்கிற அளவுக்கு விரிந்துபோயின. “என்ன செய்றீங்க?” என்று அதட்டியபடி வேகமாக அவன் விரலைத் தட்டி விட்டுவிட்டு அங்கிருந்து ஓடப்பார்த்தாள்.
அதற்கு விடாமல் அவள் கையைப் பிடித்து நிறுத்தினான் அவன். அவளுக்கோ நெஞ்சு பதறியது. “பிழைக்கு மேல பிழை செய்றீங்க. விடுங்க ப்ளீஸ். எனக்குப் பயமா இருக்கு.” என்று அவனிடமிருந்து சிக்குப்பட்டிருந்த தன் கையை மறு கையால் விடுவிக்க முயன்றாள்.
வெகு சாதாரணமாகவே அவளைச் சமாளித்தபடி, “எந்தப் பிழையான எண்ணமும் எனக்கு இல்ல. நீ ஓடப் பாக்கிறதாலதான் உன்னப் பிடிச்சிருக்கிறன். இண்டைக்கு விட்டா எனக்கு உன்னோட கதைக்க வேற சான்ஸ் கிடைக்காது இசை. நீயும் தர மாட்டாய். ஓட மாட்டன் எண்டு சொல்லு. நான் விடுறன்.” என்றான் அவன்.
“இல்ல நீங்க விடுங்க. எனக்குப் போகோணும். இதுக்கு மேலயும் இஞ்ச நிக்க எனக்கு விருப்பம் இல்ல.” என்றவள் வாசல் புறம் திரும்பி, “கு…” என்று குரல் கொடுக்க முதலே பற்றியிருந்த கையாலேயே அவளை இழுத்துத் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன், ஒரு கையால் அவள் வாயை இறுக்கிப் பொத்தியிருந்தான்.
அவளுக்கு நெஞ்சு வெடித்துவிடுமோ என்கிற அளவுக்கு அதிர்ச்சி. பெரும் அச்சத்துடன் விழிகளை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தாள். உடலெல்லாம் கிடுகிடு என்று நடுங்கியது. வலைக்குள் மாட்டிக்கொண்ட முயல் குட்டியாக அவனிடமிருந்து விடுபட முயன்றாள். முடியவேயில்லை.
கண்ணீர் கடகடவென்று வழிய “ம்… ம்ம்… ம்!” என்று விட்டுவிடும்படி அவனிடம் கெஞ்சினாள்.
அவனுக்கும் அவளை அப்படிப் பார்க்க முடியவில்லை. பூவைப் போல் அவளைப் போற்ற ஆசைப்பட்டவனே அவளை நோகடிக்கிறான். அதுவும் அவள் விழிகளில் தெரிந்த பயமும் பதற்றமும் அவன் நெஞ்சை அறுத்தன. “சத்தியமா உன்னட்ட பிழையா நடக்க மாட்டன் இசை. நேசிக்கிற பிள்ளையையே கேவலப்படுத்துறவன் நான் இல்ல. தயவு செய்து கத்தாத. உன்ன விடுறன்.” என்றான் அழுத்தி.
“ம்! ம்! ம்!” நெஞ்சு பதைபதைக்கச் சரி சரி என்பது போலவே அந்த ‘ம்’களை வேகமாகக் கொட்டினாள் அவள்.
“ஓடமாட்டாய் தானே?”
“ம்ஹூம்!”
“கத்த மாட்டாய் தானே?”
“ம்ஹூம் ம்ஹூம்!” அவள் நெஞ்சின் பதற்றம் நிற்பதாகவே இல்லை. ‘ஐயோ என்னை விட்டுவிடு’ என்று ஊமையாக அலறித் துடித்தாள்.
அவள் முதுகுதான் முழுவதுமாக அவனோடு ஒட்டிக்கொண்டிருந்தது. ஒரு கை அவள் வாயைப் பொத்தியிருக்க மறு கையால் அவளின் மேல் கைய இறுக்கமாகப் பற்றியிருந்தான் அவன். ஆனால், அவன் பேசும்போது காதோரமாக மோதிய மூச்சுக் காற்றில் சகலதும் நடுங்கியது அவளுக்கு.

