கடன் அன்பை முறிக்கும் 28 – 1

அத்தியாயம் 28

 

 

குருவை நினைக்க நினைக்க அப்படியொரு கோபம் வந்தது துளசிக்கு. வரட்டும் என்று கருவிக்கொண்டு மகனருகில் பிடித்து வைத்த சிலைபோல் அமர்ந்திருந்தாள்.

 

தனக்கு யாழிசை செய்த உதவிக்காக இந்த விருந்து என்று அவள் எண்ணியிருக்க, அவள் கழுத்தில் தாலி கட்டிய புண்ணியவான் அவளுக்கே தெரியாமல் அவளை வைத்தே பெரும் ஏற்பாடு ஒன்றை செய்துவைத்திருந்திருக்கிறான்.

 

அது தெரியாமல் நல்லவன், இதமானவன், அவள் மனமறிந்து நடக்கிறவன் என்று இந்த நான்கைந்து நாள்களில் அவன்பால் அவளுக்குள் உண்டான மாற்றம் என்பது மிகப்பெரியது.

 

அவனானால்… பல்லைக் கடித்தாள் துளசி.

 

அவர்கள் விருந்துக்கு அழைத்து, அதன் பெயரில் அன்று முன்பகல் வேளையில் வந்த யாழிசை, இனிமையாகப் பழகினாலுமே அவளிடம் மெல்லிய தயக்கம் இருந்தது.

 

அதன் பிறகு சமையலில் இவளுக்கும் உதவி செய்ய ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக இயல்பாகி,

அக்கா அக்கா என்று அவள் பின்னாலேயே திரிந்து, ஒருமையில் அழைக்கச் சொல்லி வற்புறுத்தி என்று, உணவு உண்ணுகிற வேளை வரைக்கும் இவளுக்கும் மிக இனிமையாகக் கழிந்திருந்தது பொழுது.

 

நிறைய காலத்துக்குப் பிறகு கல்லூரிக் காலத்துக்கே போய் வந்ததுபோல் அவ்வளவு உற்சாகமாக உணர்ந்திருக்கிறாள்.

 

அப்படியான பெண், கடைசியில் இவள் முகத்தை நிமிர்ந்தே பார்க்கவில்லை. ஏன், அவள் கால்களைக் கட்டிக்கொண்ட மிதிலனைக் கூடத் திரும்பியும் பார்க்கவில்லையே.

 

அந்தளவில் தமையன் அவளுக்கு என்ன செய்திருப்பான்? அடித்தானோ? நினைக்கையிலேயே நெஞ்சு குலுங்கியது?

 

தமையனோடு கதைத்துவிட்டு வந்தவள் முதல் வேலையாக யாழிசைக்குத்தான் அழைத்திருந்தாள். இங்கே நடந்த எதுவும் எனக்குத் தெரியவே தெரியாது என்று சொல்லி, அவளிடம் மன்னிப்புக் கேட்க இவள் நினைக்க, யாழிசையோ இவள் அழைப்பை ஏற்கவேயில்லை. அனுப்பிய குறுந்தகவல் போய்ச் சேரவும் இல்லை.

 

இது எதற்கும் தான் காரணமில்லை என்று தெரிந்தாலும், பிரதிபலன் பாராது ஓடி வந்து உதவிய பெண்ணுக்கு என்ன செய்து வைத்திருக்கிறோம் என்று நினைத்து நினைத்து நொந்தாள் துளசி.

 

ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, இப்படியான ஒரு காரியத்துக்குத் துணை போயிருக்கிறாளே, இவள் எல்லாம் என்ன பெண் என்று நினைத்து வெறுத்திருப்பாளோ என்று நினைத்த மாத்திரத்தில் கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது.

 

அப்போதுதான் அந்த அறைக்குள் வந்தான் குரு.

 

துளசியின் கோபம், எரிமலையின் குளம்புகள் போல் குபுகுபு என்று கொதித்துக்கொண்டு மேலே எழுந்தன. அவனைத் திரும்பியும் பார்க்காமல் அமர்ந்திருந்தாள்.

 

“துளசி!”

 

அவள் அசையவே இல்லை.

 

“துளசி, ஒருக்கா எழும்பி வெளில வாவன்!” சின்னவன் உறங்குவதால் மிக மெல்லிய குரலிலேயே வேண்டினான்.

 

அப்போதும் செவிடன் காதில் ஊதிய சங்குபோல் அவள் அமர்ந்திருக்க, “உன்னோட கதைக்கோணும் துளசி!” என்று அழுத்திச் சொன்னதில் குரல் அதுபாட்டுக்குச் சற்றே உயர்ந்திருந்தது.

 

அதில் சரக்கென்று திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தாள் துளசி.

 

அதற்கே குருவுக்குத் திக்கென்றிருந்தது. கோபப்படுவாள் என்று எதிர்பார்த்தான்தான். ஆனால், சமாதானப்படுத்திவிடலாம் என்று நம்பியிருந்தான். அவன் அறிந்த துளசி மிக மிக மென்மையானவளாயிற்றே!

 

“வெளில வா ப்ளீஸ்!” அவளின் கோபம் கொப்பளிக்கும் விழிகளைப் பார்த்துக் கெஞ்சினான்.

 

விருட்டென்று எழுந்தவள் அவனையும் கடந்து விறுவிறுவென்று வீட்டின் பின்னால் சென்று நின்றாள். அவள் நடையிலேயே அவள் கோபம் அப்படியே தெரிந்தது.

 

அவள் பின்னாலேயே வந்து, “இப்பிடி எல்லாம் நடக்கும்…” என்று அவன் ஆரம்பிக்க முதலே, “ஒரு பொம்பிளைப் பிள்ளையை இப்பிடிக் கூப்பிட்டு விட வெக்கமா இருக்கேல்லையா உங்களுக்கு?” என்றதுமே முகம் கன்றிப்போனது அவனுக்கு.

 

“இதுல நீங்க பாத்த வேலைக்கு எனக்கே தெரியாம என்னையும் கூட்டுச் சேர்த்து இருக்கிறீங்க என்ன? ஒரு வார்த்த சொன்னீங்களா? அந்தப் பிள்ளையை வரச் சொன்ன பிறகாவது சொல்லி இருக்கலாம்தானே? இதுல என்ர மனுசன் நல்லவர், அன்பானவர், எனக்கு உண்மையா இருப்பார் எண்டு எனக்கு நம்பிக்கை வேற. சே!” என்றவளுக்கு உண்மையில் மனத்தில் அத்தனை கசப்பு.

 

“நீங்க இசையை மட்டும் ஏமாத்தேல்ல. என்னையும் சேத்து ஏமாத்தி இருக்கிறீங்க. நானும் ஒரு பொம்பிளை இஞ்ச இருக்கிறன் எண்டு நினைச்சுத்தானே அந்தப் பிள்ளை வந்திருப்பா. நீங்க மட்டும் கூப்பிட்டு இருந்தா வந்திருப்பாவா? இதுல என்னைக் கடைக்கு அனுப்பிப்போட்டு வெளில நிண்டு காவல் வேற காத்து இருக்கிறீங்க” என்றதும் அவன் முகம் கன்றிச் சிவந்தே போனது.

 

அங்கே, ‘இன்னும் இந்த வேலைய நீங்க விடேல்லையா?’ என்று யாழிசை கேட்டதே அவன் நெஞ்சை அறுத்துக்கொண்டு இருக்கையில் அவன் மனைவியும் இப்படிக் கேட்கிறாள்.

 

“என்னையும் கொஞ்சம் கதைக்க விடு. உன்ர அண்ணாக்காகத் தான்… அவன் பாவம்…” என்றதும், “ஓ! என்ர அண்ணாக்காக எண்டதும் நீங்க செய்தது பிழை இல்லையோ? இப்ப என்ன, அதுக்காக உங்கள நான் தலைல தூக்கி வச்சுக் கொண்டாடோணுமா?” என்று சீறினாள்.

 

“என்ன, பிடிச்சு வச்ச சிலை மாதிரி நிக்கிறீங்க? வாயத் திறந்து கதைங்க. இண்டைக்கு இந்த வீட்டில நடந்ததுக்கு என்ன பெயர்? இது குடும்பம் வாழுற வீடா இல்ல…” என்றவளை இடையிட்டு, “வார்த்தைகளை விடாத துளசி!” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.

 

“ஓ! கோவம் வருதோ? நான் ஒண்டும் இல்லாததைச் சொல்லேல்லையே? நீங்க பாத்த வேலையைத்தான் சொன்னனான். இந்த வீட்டுக்கு இண்டைக்குக் காலம சிரிச்சுக்கொண்டு சநதோசமா வந்த பிள்ளையை எப்பிடி திருப்பி அனுப்பி இருக்கிறீங்க எண்டு ஒருக்கா யோசிங்க. எல்லாம் விளங்கும்.” என்றதும் அவன் கோபம் அப்படியே நீர்த்துப் போனது.

 

பெரிய பரிசுப் பேட்டி ஒன்றைக் கொண்டுவந்து இவர்கள் இருவரிடமும் நீட்டி, சிரித்த முகமாகத் திருமண வாழ்த்துச் சொன்ன பெண், கசங்கிப்போன முகத்தோடுதானே புறப்பட்டுப் போனாள்.

 

“முதல், இது என்ர அம்மா அப்பா வாழ்ந்த வீடு, இஞ்சதான் நாங்களும் வாழோணும் எண்டு சொன்னீங்க. உங்கட அம்மா அப்பாக்கு நல்ல மரியாதை செய்திருக்கிறீங்க. அத நினைச்சு நீங்க சந்தோசப்படோணும். இப்பிடிக் கவலைப்படக் கூடாது!” என்றதும் அவனால் தானாக முடியவில்லை.

 

“ஏய் போடி! உன்னோட மனுசன் கதைப்பானா!” என்றுவிட்டு வந்த வேகத்திலேயே திரும்பிப்போனான் அவன்.

 

அதைக் குறித்தெல்லாம் துளசி கவலைப்படவில்லை. தமையன் மீதிருந்த கோபத்தையும் சேர்த்துக் கணவனின் மீது இறக்கி வைத்திருந்தாள். என்னதான் அவள் தமையனுக்காக என்றாலும் கணவனின் செயலை அவளால் மன்னிக்கவே முடியவில்லை.

 

அன்று இரவு அங்கே அவர்களின் வீட்டுக்கு அவள் போகவில்லை. தூயவனுக்கு அழைத்து இரவுக்கும் இங்கேயே தங்கிவிட்டு நாளைக்கு வருவதாகச் சொன்னாள்.

 

“என்ன துளசி, அவனோட சண்டை பிடிச்சியா? நான் கேட்டுத்தான் அதையெல்லாம் செய்தவன் எண்டு உனக்குச் சொன்னனான்தானே?” என்றான் தூயவன் வேகமாக.

 

“அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்லை அண்ணா.” சமாளிக்க முயன்றாள் அவள்.

 

“பொய் சொல்லாத!”

 

“ஏன் இப்பிடி நடந்தீங்க எண்டு பேசினனான்தான். சண்டை எல்லாம் பிடிக்கேல்ல. எனக்கு அம்மா அப்பான்ர முகம் எப்பிடிப் பாக்கிறது எண்டு இருக்கு. நீங்க வேற இதைப் பற்றி வீட்டில சொல்ல வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டீங்க. அதான் இரவுக்கும் நிண்டுட்டு நாளைக்கு அங்க வந்தா சமாளிச்சிடுவன்.”

 

“சரி, கவனமா இரு. அம்மாக்கும் எடுத்துச் சொல்லிவிடு. அவனையும் நேரத்துக்கே அங்க வரச் சொல்லி நான் சொல்லிவிடுறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவனுக்கு துளசி உண்மையைச் சொல்லவில்லை என்று தெரியும்.

 

ஆனால், இனி இதைக் குறித்துத் திரும்ப திரும்பப் பேசுவதில் அர்த்தம் இல்லையே.

 

தன்னோடு பேசியதைப் பற்றிக் குருவிடம் தமையன் சொல்லாமல் இருக்க மாட்டான் என்று துளசிக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் இரவாகியும் குரு வீட்டுக்கு வரவில்லை. பழக்கமில்லாத வீட்டில் தனியாக இருக்கிறோமே என்று அவளுக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனால், வீட்டின் முன் பின் கதவுகளோடு சேர்த்து, அவற்றுக்கு இரும்புக் கம்பிக் கதவுகளும் புதிதாகப் போட்டிருந்தான் குரு.

 

அதில் அது எல்லாவற்றையும் நன்றாகப் பூட்டிவிட்டு வீட்டுக்குள் மகனோடு இருந்துகொண்டாள். ஆனாலும், கணவனின் இந்தச் செய்கையும் சேர்ந்து அவளுக்குள் சினத்தையும் கோபத்தையும் நன்றாகக் கிளப்பியிருந்தன.

 

ஒன்பது மணிபோல்தான் வீட்டுக்கு வந்தான் குரு. வந்து கதவைத் தட்டினான். மிதிலன் திரும்பவும் உறங்கிவிட்டதால் வேகமாக வந்து கதவைத் திறந்தவள் நாசியில் வித்தியாசமான நாற்றம்.

 

error: Alert: Content selection is disabled!!