கடன் அன்பை முறிக்கும் 28 – 2

முகத்தைச் சுளித்துக்கொண்டு கணவனைக் கூர்ந்து கவனித்தாள். மிதக்கும் அவன் விழிகளும், இலேசாக வியர்த்திருந்த முகமும், அவனிடம் தெரிந்த தள்ளாட்டமும் என்ன நடந்திருக்கிறது என்று சொல்ல அவளுக்கோ பெரும் அதிர்ச்சி.

 

இந்தப் பழக்கம் வேறு இருக்கிறதா இவனுக்கு? நெஞ்சில் ஒரு துக்கமும் கோபமும் பொங்க, அவனைப் பார்வையாலேயே எரித்தாள் அவள்.

 

“துளஸீ! துளஷீ! நான் குச்சிட்டு வந்திருக்கிறன் எண்டு மட்டும் நினைக்காத. உன்ர மனுஷன் வாழ்க்கைல குச்சதே கிடையாது.” என்றான் ஆடிக்கொண்டு.

 

“உன்ன எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா? உன்ன இஞ்ச வச்சிருக்கிறன்டி இஞ்ச!” என்று இடது கையால் நெஞ்சில் படார் படார் என்று அடித்துக் காட்டினான்.

 

“ஆனா நீ!” என்றவன் ஆடிக்கொண்டு வந்து அவள் முன்னால் நின்றான்.

 

“என்ர துளஷிய கட்டி நான் ஷந்தோஷமா இருக்கிற மாதிரி என்ர நண்பனும் அவனுக்குப் பிடிச்ச பிள்ளையைக் கட்டி ஷந்தோசமா இருக்கட்டும் எண்டு நினைச்சன். அதுக்கு நீ… அதுக்கு நீ” என்று அவள் கண்ணுக்குள் விடுகிறவன் போல் விரலை நீட்டிக்கொண்டு வந்தான்.

 

“அந்தப் பிள்ளை இல்லாட்டி அவன் வாழ மாட்டான்டி. அது தெரியுமா உனக்கு?” என்று திரும்பவும் நெருங்கி வர, நாற்றம் குட்லைப் பிடுங்கியது.

 

துளசி வேகமாக இரண்டடி தள்ளி நின்றாள்.

 

“எங்க போறாய்? நில்லு! இண்டைக்கு நான் கதச்சே ஆகோணும். அதென்ன எல்லா பொம்பிளைகளும் கட்டுற வரைக்கும் பூனை மாதிரி இருக்கிறீங்க. கட்டினதும் புலி மாதிரி மாறுறீங்க. என்ன கதைக்க விடு எண்டு கேட்டனான் எல்லா. விட்டியா நீ? இந்த வாய்தானே இண்டைக்கு என்னைப் பேசினது?” என்று அவள் வாயைப் பிடிக்க வர, படாரென்று அவன் கையைத் தட்டி விட்டுவிட்டுத் தள்ளி நின்றாள் துளசி.

 

“உன்ர அண்ணா என்னை ஏமாத்தி உன்னைக் கட்டி வச்சிட்டான். கூப்பிடு அவனை! இப்ப அவன் இஞ்ச வந்தே ஆகோணும். எனக்கு ஒரு நியாயம் கிடைச்சே ஆகோணும்.” என்று குரலை உயர்த்தினான்.

 

பார்த்திருந்தவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. “தம்பி நித்திரை!” என்று பல்லைக் கடித்தாள்

 

சட்டென்று அடங்கினான் அவன்.“அதுக்கிடைல நித்திரை ஆகிட்டானா. அவன் தங்கம். அவன்தான் என்ர பிள்ளை. நீ இல்ல. இனி நீ எனக்குப் பிள்ளையும் இல்ல. நான் உனக்கு அப்பனும் இல்ல. எனக்கு என்ர மகன் மட்டும் போதும்.” என்றவன் அறைக்குப் போகிறேன் என்று மறுபக்கச் சுவரில் போய் முட்டிக்கொண்டு நின்றான்.

 

சுவரில் கையால் துழாவி கதவைத் தேடி, அதைக் காணவில்லை என்றதும், “துளஸீ, எங்கடி இஞ்ச இருந்த கதவைக் காணேல்ல?” என்று அதிர்ச்சியில் கூவினான்.

 

துளசிக்கு முகம் கோபத்தில் சிவந்து கொதித்தது. முதல் வேலையாக ஓடிப்போய் மிதிலன் இருக்கிற அறையின் கதவைச் சாற்றிவிட்டு வந்தாள்.

 

அப்படி அவள் அறை வாசலுக்கு ஒட்டிவிட்டு வந்தது மங்கிக்கிடந்த அவன் கண்களுக்கு என்னவோ மின்னலாக அசைந்ததுபோல் இருந்தது போலும். “துளஸி இஞ்ச பார், கதவு ஓடித்திரியுது.” என்று அந்தக் கதவைப் பிடிக்கப் போனவன் சாப்பாட்டு மேசையில் மோதுப்பட்டு நின்றான்.

 

“என்னடா இது?” என்று கண்களை மூடித் திறந்து உற்றுப் பார்த்தவனின் விழிகள் விரிந்து போயின. “டேய் கதவு, நான் உன்ன அங்க தேடிக்கொண்டு இருந்தா, நீ இஞ்ச வந்து படுத்துக் கிடக்கிறியா?” என்று அந்த மரத்தாலான மேசையைத் தூக்க முயன்றான்.

 

சத்தியமாகத் துளசியால் முடியவில்லை. தூயவனுக்கு அழைத்து, உங்கள் நண்பனை வந்து பாருங்கள் என்று சொல்லலாமா என்று இருந்தது அவளுக்கு.

 

அங்கே அவன் இன்னுமே கதவைத் தூக்க முயன்றுகொண்டிருந்தான். அதற்குமேல் அவன் போடுகிற கூத்தை எல்லாம் பார்க்க முடியாமல், “இஞ்சால வாங்க. அது கதவில்லை. மேசை!” என்று அவனைப் பிடித்து இழுத்தாள்.

 

“அப்ப எங்க கதவு? அவ்வளவு பணத்தடிப்பு உன்ர அப்பனுக்கு? ஒரு மனுஷன் வெளில போயிட்டு வாறதுக்கிடைல கதவைத் தூக்குவானா? ஆனா, இந்த உலகமே எதிர்த்து நிண்டாலும் நண்பனுக்காக நிப்பான் இந்தக் குரு. போய் உன்ர அப்பனிட்டச் சொல்லு. போ!”

 

“குடிச்சுப்போட்டு வந்து அப்பாவை இழுத்தீங்க எண்டா தெரியும் பிறகு.” அவ்வளவு நேரமாகப் பொறுமையாக நின்றவளால் அதற்குமேல் முடியவில்லை.

 

அவனுக்கு அது சரியாகக் காதில் விழவில்லை.

 

“என்ன? என்ன ஷொன்னனி இப்ப?” என்று தடுமாறியபடி அவளிடம் வருகிறேன் என்று எங்கோ போனான்.

 

“ம்க்கும்! ஒழுங்கா நடக்கவே வழியக் காணேல்ல. நண்பருக்காக நிப்பாராம்!”

 

“என்ன? தைரியம் இருந்தா இப்ப ஸ்சொல்லு!” ஒரு வழியாக அவளிடம் வந்து சேர்ந்தவன் அவளுடன் மல்லுக்கு நின்றான்.

 

“ப்ச் தள்ளிப் போங்க! நாறுது!” என்று மூக்கைச் சுளித்தாள் துளசி.

 

அதையெல்லாம் அவன் கேட்கவில்லை. தன் வாயைக் கொண்டுபோய் அவள் காதருகில் வைத்துவிட்டு, “இப்ப ஸ்சொல்லு! எப்பிடிக் கேக்காம இருக்கு எண்டு நானும் பாக்கிறேன்.” என்று நின்றான்.

 

அவனால் நிற்கவும் முடியவில்லை. அவள் காது இருக்கும் உயரத்துக்கு வேறு முதுகை வளைத்து நின்றதில் இன்னுமே நிதானம் தப்பியிருந்தது. அதில், “ஸ்சொல்லு துளஸீ! இப்ப ஸ்சொல்லு!” என்றபடி முன்னும் பின்னுமாகப் போய் வந்துகொண்டிருந்தான்.

 

இவனை என்ன செய்வது என்று தெரியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு அவள் நிற்க, “ஏய் என்னடி காதில ஜிமிக்கிய தொங்க விட்டது காணாது எண்டு வாயிலையும் தொங்க விட்டிருக்கிற. சொத்துக்குப் பறக்கிற உன்ர அப்பன் பாத்த வேலையா இதெல்லாம்?” என்றதும் துளசியின் பொறுமை மொத்தமாகப் பறந்திருந்தது.

 

அவனைத் தறதற என்று இழுத்துக்கொண்டு போய் சோபாவில் தள்ளிவிட்டு வந்து, மகன் இருந்த அறைக்குள் புகுந்துகதவைச் சாற்றியதும் அல்லாமல் திறப்பாலும் பூட்டிவிட்டாள்.

error: Alert: Content selection is disabled!!