அத்தியாயம் 3
மார்க்கண்டேயர் எந்தக் குறையுமில்லாது தன் இறுதிப் பயணத்தை முடித்துக்கொண்டிருந்தார். நேரமும் இரவாகியிருந்தது. துக்கம் விசாரிக்க வந்திருந்த மக்கள் புறப்பட்டிருந்தனர்.
நெருங்கிய உறவுகள் சிலர் மட்டுமே மிஞ்சியிருந்தனர்.
தூயவன், மார்க்கண்டேயரும் அவனுமாக இருந்த அறைக்குள் போகவே இல்லை. தன்னை மறந்து ஒரு முறை நுழைந்தபோது, அங்கிருந்து அகற்றப்பட்டிருந்த மார்க்கண்டேயரின் கட்டிலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அவர் பொருள்களும் இனி அவர் அந்த அறைக்குள் வரமாட்டார் என்று அறைந்து சொல்லின. ஒரு கணம் திகைத்து நின்றவன் வெளியே ஓடி வந்துவிட்டான்.
மாதவி மட்டும் தன் அழுகையை நிறுத்தவேயில்லை. நிறுத்த முடியவில்லை.
“மாதவி விடு, அப்பாக்கு உன்னில் பெரிய கோவம் எல்லாம் இல்ல. கடைசி நேரம் அவருக்குக் கொஞ்சம் ஏலாம போயிற்றுது.” என்று தேற்றினார் தேவகி.
ஆனால், மாதவிக்கு அவர் சொன்னதும் கண்ணீரைத்தான் பெருக வைத்தது. “அப்பிடி ஏலாம இருக்கிறார் எண்டு தெரிஞ்சும் நீங்களும் ஒரு வார்த்த சொல்லிவிடேல்லையே அக்கா. தெரிஞ்சிருக்க சண்டை பிடிச்சாவது வந்து பாத்திருப்பனே. நீங்களும் சேர்ந்து தண்டனை தந்தீங்களா எனக்கு?” என்றதும் தேவகிக்கு என்ன சொல்வது என்று தெரியவேயில்லை.
“ஆரம்பத்தில கோவப்பட்டா அதுல ஒரு அர்த்தம் இருக்கு. என்ர மனுசன் என்னத்தில குறை வச்சவர் சொல்லுங்க? என்னையும் பிள்ளைகளையும் நல்லாத்தானே கடைசி வரைக்கும் பாத்தவர். அதப் பாத்துமா உங்களுக்கு எல்லாம் கோவம் போகேல்ல?”
“சரி விடு. சரியோ பிழையோ இனி அவர் இல்ல. இல்லாத மனுசனில கோபம் குறைய வளக்காத.” என்று தேற்றினார் தேவகி.
*****
இரவாகியும் மாதவி வீட்டுக்குத் திரும்பாததால் சுவர்ணாவை அழைத்து விசாரித்தாள் யாழிசை. அவர் எட்டுச் செலவு முடியும் வரை அங்குதான் இருக்கப் போகிறாராம் என்று அறிந்ததும் அவருக்கான மாற்றுடைகள், அவர் தினமும் எடுக்கும் மருந்துகள், அவரின் கைப்பேசி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு சென்று சுவர்ணாவின் வீட்டில் கொடுத்துவிட்டு வந்திருந்தாள்.
அன்று இரவு தன் வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, பிள்ளைகளைக் கணவனோடு விட்டுவிட்டு வந்த சுவர்ணா, அவற்றைக் கொண்டுவந்து தாயிடம் கொடுத்தாள்.
“மத்தியானமும் ஒரு மருந்தும் நீங்க போடேல்ல. இப்ப என்னென்ன போடோணும் எண்டு பாத்து எடுத்துப் போடுங்கோ.”
அங்கிருந்த ஒரு அறையில் தரையில் பாய் விரித்துச் சரிந்திருந்த மாதவி, “அதப் பற்றி எனக்கு ஒண்டும் தெரியா பிள்ளை. இசைதான் எடுத்துத் தாறவள்.” என்றார் அழுதழுது அடைத்திருந்த குரலில்.
“அந்தளவுக்குக் கவனம் இல்லாம இருப்பீங்களா அம்மா. அவள் எதையாவது மாறித் தந்தா என்ன செய்வீங்க?” சட்டென்று மூண்ட கோபத்துடன் அதட்டினாள் சுவர்ணா.
“இசை ஒரு நாளும் அப்பிடி நடக்கமாட்டா. பிள்ளை எல்லாத்திலயும் வலு கவனம். இப்ப கூட நீயோ நானோ இத யோசிச்சமா. அவதான் எல்லாத்தையும் யோசிச்சுக் குடுத்துவிட்டிருக்கிறா. இஞ்ச பார், எனக்கு மெசேஜ் வேற அனுப்பி இருக்கிறா.” என்று கைப்பேசியை எடுத்துக் காட்டினார்.
அதில், “மாமி மருந்து எல்லாம் குடுத்துவிட்டிருக்கிறன். பகலுக்கும் விட்டதையும் சேர்த்துப் போடுங்கோ.” என்று எழுதியிருந்தாள் அவள்.
“எது பகலுக்கு எது இரவுக்கு எண்டு தெரியாம எதப் போடுறதாம்?” என்றபடி யாழிசைக்கு அழைத்தாள் சுவர்ணா.
ஒவ்வொரு மாதத்துக்கும் என்று தொகையாகவே வாங்குவதால் சின்ன சின்ன போத்தல்களில் மருந்துகள் இருந்தன. அதில் எதை, எப்போது கொடுப்பது என்கிற எந்தத் தகவலும் இல்லை.
யாழிசை அழைப்பை ஏற்றதும், “மருந்தைக் குடுத்துவிட்டா சரியா இசை? எத எப்ப போடுறது எண்டு சொல்ல மாட்டியா? முதல் அம்மாக்குச் சொல்லிக்குடுக்க மாட்டியா? மனுசிக்கு ஒண்டும் தெரியுது இல்ல.” என்று ஆத்திரப்பட்டாள் சுவர்ணா.
“எல்லாம் ஒரு பேப்பர்ல விவரமா எழுதி மாமின்ர உடுப்பு பாக்குக்க வச்சிருக்கிறன் மச்சாள். பாருங்க இருக்கும். அதைவிட மாமிக்கு எத்தினையோ முறை சொல்லிக் குடுத்திட்டன். அதுவும் நான் கம்பஸ் போயிட்டா அவாக்குக் கஷடம் எண்டு சொல்லியும் அவா நினைவில வச்சிருக்கிறேல்ல.” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே பாக்கை கிளறி, அவள் எழுதி வைத்திருந்த பேப்பரை கண்டெடுத்திருந்தாள் சுவர்ணா.
“பேப்பர் இருக்கு. சரி நீ வை!” என்று அவள் அழைப்பைத் துண்டிக்கப் போக, “மாமி எங்க மச்சாள்?” என்று இடையிட்டுக் கேட்டாள் யாழிசை.
“இஞ்சதான் படுத்திருக்கிறா. மைக்லதான் போட்டிருக்கிறன். என்ன எண்டு நீ சொல்லு.” கைகள் மாத்திரைகளை எடுத்துக்கொண்டிருந்ததில் கைப்பேசியை மைக்கில் போட்டு அருகில் வைத்திருந்தாள் சுவர்ணா.
“மாமி!” என்று குரல் கொடுத்தாள் யாழிசை.
“ஓமாச்சி சொல்லன.”
அவர் குரலே நன்றாக அழுதிருக்கிறார் என்று சொல்ல, “நீங்கதானே ஜீவன் மச்சான் அப்பிடியே என்ர அப்பா எண்டு அடிக்கடி சொல்லுறனீங்க. அதால அப்பு எங்கயும் போகேல்ல. உங்கட மகனா இனியும் உங்களோடதான் இருப்பார். அதால சும்மா சும்மா அழுறேல்ல. சரியா?” என்றாள் கனிவும் கண்டிப்புமாக.
அதுவே அவரை இன்னும் கண்ணீர் சொரிய வைத்தது. “ஓமாச்சி” என்றார் உடைந்த குரலில்.
“மாமி!”
“இல்லையம்மா. நான் இனி அழேல்ல.” என்று எழுந்து அமர்ந்துகொண்டு கண்களைத் துடைத்தார்.
இதையெல்லாம் பார்த்திருந்த தேவகிக்கு உள்ளூர வியப்பு என்றால் வெளி விறாந்தையில் அமர்ந்திருந்து கேட்டுக்கொண்டிருந்த கருணாகரனுக்கு நடப்பவை எதுவும் நல்லதாகப் படவில்லை.
“இது நல்ல பிள்ளைக்கு அழகு. மாமி அப்பிடியே ஜீவன் மச்சானுக்கு எடுத்துக் கதைங்கோ. மத்தியானம் உங்களுக்கு எடுத்துப் பாத்திட்டு எனக்கு எடுத்தவர். நான் அப்பு மோசம் போனதப் பற்றிச் சொன்னனான். டைம் இருக்கேக்க உங்கள எடுக்கச் சொன்னவர்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
“அதை எடுத்து அவன் என்னட்டக் கேக்க மாட்டானாமா? அதென்ன எப்ப பாத்தாலும் அவளுக்கே எடுக்கிறது?” என்று சினந்தாள் சுவர்ணா.
“என்னம்மா கதைக்கிறாய்? அவா என்னோடயே இருக்கிற பிள்ளை. அதால நான் எடுக்கேல்ல எண்டதும் அவாக்கு எடுத்திருக்கிறான் தம்பி. இதையெல்லாம் ஒரு பிரச்சினையா தூக்கிப் பிடிப்பியா நீ?” இந்த நேரத்தில் அதுவும் தமக்கையின் வீட்டில் வைத்து இப்படிக் கதைக்கிறாளே என்கிற அதிருப்தியுடன் சொன்னார் மாதவி.
“நான் தூர இருந்தாப்போல உங்களைக் கவனிக்காமலா இருக்கிறன். அவனுக்கும் உங்களுக்கும் எப்பவும் அவள்தானே முக்கியம். என்னவோ சொல்லுங்கோ, நானும் கேக்கிறன்.” என்றபடி மருந்துகளை அவர் கையில் கொடுத்தாள் சுவர்ணா.
எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தாலும் நடுவில் போகவில்லை தேவகி. அவரின் மகள் துளசியிடம் மாதவிக்கான உணவைக் கொண்டுவரச் சொன்னார்.
வேண்டாம் என்று மறுத்தவரை விடாமல், “என்னைவிட உனக்கு நாலு வயசு குறைவு. ஆனாலும் உடம்ப இப்பிடிக் கெடுத்து வச்சிருக்கிறாய். இதில சாப்பாடும் வேண்டாமா? சாப்பிடு!” என்று அதட்டி, உண்ண வைத்து, மருந்துகளை விழுங்கவும் வைத்தார்.
அப்போது சரியாக இலண்டனிலிருந்து மாதவிக்கு அழைத்தான் ஜீவன்.
“தம்பி, அப்பு எங்களை எல்லாம் விட்டுட்டுப் போய்ட்டாரடா.” என்று அவனிடமும் ஒரு மூச்சு அழுது தீர்த்தார் மாதவி.
“சரியம்மா. அதுக்கு ஏன் இப்பிடி அழுறீங்க. நீங்க அழுதாப்போல உங்கட அப்பா வரவா போறார்?” என்று மெலிதாய் அதட்டினான் ஜீவன்.
உண்மையில் மார்க்கண்டேயரின் இழப்பு அவனைப் பெரிதாகப் பாதிக்கவே இல்லை. மாறாக, இப்படி அழுது அன்னை தன் உடலை இன்னும் கெடுத்துக்கொள்வாரோ என்றுதான் பயந்தான்.
அதைவிட ஜீவனுக்கு அங்கு வைத்து அன்னையோடு என்ன கதைப்பது என்று தெரியவில்லை. ஒருவித ஒட்டாமை தானாய் வந்து நின்றது.
அவன் அம்மா செல்லம். அவர் இவ்வளவு காலமாகத் தன் பிறந்த வீட்டினருக்காக, தன் அப்பாவுக்காக எவ்வளவு ஏங்கினார் என்று தெரியும். அப்படி இருந்தும் அவர்கள் சேர்க்கவேயில்லை.
இன்று தாத்தா இறந்ததும் அங்கு வந்திருக்கிறார், அவர்களும் அனுமதித்திருக்கிறார்கள். ஆனால், இது பிரயோசனம் இல்லாத, அவன் அன்னையின் மனக்குறையைத் தீர்க்காத அனுமதிப்பு.
இன்னும் சொல்லப்போனால் இனி வரும் காலத்தில் இதற்கும் சேர்த்து அவன் அன்னை மருகப்போகிறார்.
இதை அவனால் அவர்கள் வீட்டில் வைத்துச் சொல்ல முடியாது.
“சாப்பிட்டீங்களாம்மா?”
“ஓமப்பு. இப்பதான் சாப்பிட்டு இசை குடுத்துவிட்டிருந்த குளுசையும்(மருந்து) போட்டுட்டு இருக்கிறன்.”
“கொண்டு வந்து தராம அதென்ன குடுத்துவிட்டவள் எண்டு சொல்லுறீங்க.” என்று கேட்டுக்கொண்டிருந்தவன் நினைவு வந்தாற்போல், “அவளின்ர வீட்டில இருந்து ஆர் வந்தது? நேசன் அண்ணா வந்தவரா? இல்லை அவளா?” என்றான் பார்வையில் கூர்மையோடு.

