மாதவிக்கு அப்போதுதான் அதுபற்றிய யோசனையே வந்தது. பக்கத்தில் இருந்த தமக்கையைக் கேள்வியாகப் பார்த்துவிட்டு, “எனக்குத் தெரியேல்லையே அப்பு. அதையெல்லாம் நான் எங்க கவனிச்சன். ஆனா இசைதான் என்னை இஞ்ச கூட்டிக்கொண்டு வந்து விட்டுட்டுப் போனவள்.” என்று சொன்னார் மாதவி.
“கூட்டிக்கொண்டு வந்து விட்டுட்டுப் போனவள் எண்டா என்ன அர்த்தம்? விளங்கேல்ல எனக்கு.” தொனி ஒரு விதமாய் மாற வினவினான் அவன்.
“அது அது அவள் இஞ்ச என்னோட வரேல்லையப்பு. “
“அவளா வரேல்லையா இல்ல வர விடேல்லையா?”
“நான் கவனிக்கேல்லையே தம்பி.” மகன் கோபப்படப்போகிறான் என்று தெரிந்ததால் பரிதாபமாய்ச் சொன்னார் மாதவி.
“என்னம்மா…” அவர் பயந்தது போலவே சினத்துடன் ஆரம்பித்தவனை இடைமறித்து, “டேய்! என்ன நீ. அந்த மனுசியே இப்பதான் அழுது ஓஞ்சு இருக்கிறா. அவாட்டப் போய்க் கேள்வியா கேட்டுக்கொண்டு இருக்கிறாய். முதல் செத்த வீட்டுக்கு ஆராவது வா எண்டு கூப்பிடுவினமா? அவேயே வரோணும். அவள் வாசலோடையே போயிட்டாள். தூயவன் அண்ணாதான் அம்மாவக் கையைப் பிடிச்சுக் கூட்டிக்கொண்டு வந்தவர்.” என்றாள் சுவர்ணா.
அவனுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது. ஆனாலும் அவர்கள் இருக்குமிடத்தை எண்ணித் தன்னை அடக்கிக்கொண்டு, “எங்க எப்பிடி நடக்கோணும் எண்டு தெரியாதவள் இல்ல அவள். ஆரோ அவளை வர வேண்டாம் எண்டு சொல்லியிருக்கோணும். நான் நினைக்கிறது சரியா இருந்தா நேசன் அண்ணாவும் வந்திருக்க மாட்டார்.” என்றதோடு முடித்துக்கொண்டான் அவன்.
அதற்குமேல் அன்னையோடு கூடப் பேசப் பிடிக்கவில்லை. ஒரு விதமான கோபமும் குமுறலும் அவனைப் போட்டு அழுத்தின.
“அப்ப நான் வைக்கட்டாம்மா? வீட்டை போன பிறகு எடுங்கோ.” என்று பேச்சை முடிக்கப் பார்த்தான்.
மாதவிக்கும் மகனின் கோபம் புரிந்தது. அங்கு வைத்து அவராலும் எதையும் உடைத்துப் பேச முடியவில்லை. அதோடு, யாழிசை வாசலோடு போனது இப்போதுதான் அவர் கருத்திலும் பதிந்து, உள்ளத்தைப் பிசைய வைத்தது.
அவர்கள் வீட்டில் வைத்தே வரத் தயங்கியவளைக் கூட்டிக்கொண்டு வந்தது அவர். கடைசியில் அம்போ என்று விட்டுவிட்டுத் தன் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். தூயவன் என்ன சொல்லிக் காயப்படுத்தினானோ தெரியாது. இல்லாமல் மகன் சொன்னது போன்று வாசலோடு போயிருக்கமாட்டாள்.
தவநேசனும் கூட நல்ல விசேசங்களைத் தவற விட்டாலும் இப்படியான துக்க நிகழ்வுகளுக்கு வராமல் விடவே மாட்டான். அவனும் வரவில்லை என்கையில் அவனுக்கும் இங்கு நடந்தது தெரிந்திருக்க வேண்டும். நொடியில் தான் அங்கு இருப்பதையே பெரும் தவறோ என்று எண்ணிவிட்டார் மாதவி.
மனத்தில் ஓடுகிறவற்றை வெளியில் காட்ட முடியாமல், “எட்டுச் சிலவு முடியும் மட்டும் இஞ்சயே இருக்கச் சொல்லி அத்தான் சொன்னவரப்பு. எனக்கும் அங்கயும் இஞ்சயும் எண்டு அலையிறது சிரமமப்பு. ஒரு உதவி தேவ. பிறகு ஒவ்வொரு முறையும் இசைதான் என்னோட அலையோணும். உன்ர அக்காக்குப் பிள்ளைகளோடயே நேரம் போயிடும். அதுதான் நானும் இஞ்சயே நிப்பம் எண்டு நினைச்சன்.” என்று, மகன் அதற்கும் ஏதும் சொல்லிவிடுவானோ என்கிற தயக்கத்துடன் சொன்னார்.
அவன் எதுவுமே சொல்லவில்லை. ‘பெரிய அத்தான்’ என்று மனம் பொறுமிற்று. மார்க்கண்டேயர் வீட்டின் பொறுப்பு எப்போதோ கருணாகரனின் கைக்கு வந்திருந்தது. அவர் நினைத்திருந்தால் எல்லாவற்றையும் மாற்றியமைத்திருக்கலாம்.
அப்படி எதையும் செய்யாமல் இருந்துவிட்டு, இப்போது எட்டுச் செலவு வரையில் இருக்கட்டுமாம். அவன் அன்னைக்கும் இது எதுவும் விளங்குவதாக இல்லை.
இலண்டனில் இருக்கும் அவனாலும், அதுவும் அவர்கள் வீட்டில் வைத்து எதை என்று சொல்லிப் புரியவைக்க முடியும்?
“சரியம்மா. அப்ப நான் வைக்கிறன்.” என்றவனை இடைமறித்து, “இவ்வளவு நேரமா உங்கட பெரியம்மாவப் பற்றி நீங்க விசாரிக்கவே இல்லை, என்னப்பு.” என்று இடையிட்டார் தேவகி.
கொஞ்சம் திகைத்துப்போனான் ஜீவன். அவனுக்கு இவ்வளவு காலமும் அவரையும் பிடிக்காது. அவரும் சேர்ந்துதானே அவர்கள் எல்லோரையும் ஒதுக்கி வைத்திருந்தார்.
ஆனால் இன்று, கிட்டத்தட்ட அன்னையின் அதே சாயலில் இன்னும் கொஞ்சம் மூப்புடன் கண்களில் கனிவுடன் ஆதங்கமாய்க் கேட்டவரிடம் அவனால் தன் கோபத்தைக் காட்ட முடியவில்லை.
“இல்ல, அப்பிடி இல்ல. நான் வேற ஏதோ யோசினைல…” என்று தடுமாறினான்.
“சரி விடப்பு. ஏதேதோ கோபதாபத்தில இவ்வளவு காலமும் பிரிஞ்சே இருந்தாச்சு. இனியாவது சேந்திருப்பம். ஆனா அந்தப் பிள்ளை சொன்ன மாதிரி அப்புவைப் போலவே இருக்கிறீங்கய்யா.” என்றவருக்கும் தந்தையை எண்ணிச் சட்டென்று விழிகள் கலங்கிப்போயின.
“ஆரு, இசை சொன்னவளா?” சும்மாவே ‘சின்னப்பு’ என்று அழைத்துத் தன்னைச் சீண்டும் அவள் நினைவில் உதடுகள் விரிய வினவினான் அவன்.
“ஓம் அவாதான். உங்கட அம்மாட்டச் சொன்னவா.”
“அவள் முந்தியும் அப்பிடித்தான்.” என்றவனுக்கு முன்னர் மட்டும்தான் அதெல்லாம் என்கிற எண்ணமும் மெல்லிய வலியோடு நினைவில் வந்தது.
இப்போது அவள் அவனிடமிருந்து விலகியே நிற்கிறாள்.
“ஓ! நீங்க விரும்பின பிள்ளை எங்க இருக்கிறா? அவாவும் நீங்க இருக்கிற ஊர்தானா?” அவன் அங்கேயே ஒரு பெண்ணை நேசிக்கிறானாம் என்று சுவர்ணா மூலம் அறிந்திருந்த தேவகி வினவினார்.
“அவா என்னோடதான் இருக்கிறா.”
அவர் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னாலும் உறவு முறையைச் சொல்லாமலும் சுருக்கமாகவும் பேசிக்கொண்டிருக்கிறான் என்று தேவகி உணராமல் இல்லை. அதுவே அவன் விலகளையும் சொல்லிற்று. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் மேலும் பேச்சுக் கொடுத்தார்.
“என்னப்பு சொல்லுறீங்க? கலியாணம் முடிய முதலே ஒரே வீட்டில் இருக்கிறீங்களா? அது கூடாதெல்லோ.” காலம் முழுக்க ஊரோடும் கட்டுத்திட்டங்களுக்குள்ளும் அடங்கி வாழ்ந்த பெண்மணியால் அதை ஏற்கவே முடியவில்லை.
ஜீவனுக்கு மெல்லிய சினம்தான் வந்தது. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல், “ரெஜிஸ்ட்ரேஷன் முடிஞ்சுது. சட்டப்படி அவா என்ர மனுசிதான். தாலிதான் கட்டேல்ல. அதைவிட ரெண்டு வீட்டில தனித்தனியா இருந்து ரெண்டு வாடகை குடுக்கிறதை விட இது காசு மிச்சம்.” என்றவனிடம் அப்போதும் அந்தப் பெண் யார், இலங்கையில் எந்த ஊர் என்று கேட்டு, மறைமுகமாக அவர்களும் தம் இனம்தான் என்று அறிந்துகொண்டுவிட்டே அவனை அழைப்பைத் துண்டிக்க விட்டார் தேவகி.
ஜீவனுக்கும் அதெல்லாம் விளங்காமல் இல்லை. கோபம்தான் வந்தது. இவ்வளவு காலம் இல்லாமல் பெரிய அக்கறை. அதைவிட அவனுக்கு அவன் வாழ்க்கையைப் பார்க்கத் தெரியாதா? இல்லை, வேறு சாதிப் பெண் என்றால் மட்டும் என்ன செய்வாராம்?
அவனுடைய அப்பா, அம்மாவை எந்த வகையில் குறைய வைத்தாராம்? மனிதனை மனிதனாக மதிக்க விடாத சாதியைப் பிடித்துத் தொங்கும் இவர்கள் எல்லாம் என்ன மனிதர்கள் என்று புகைந்து தள்ளினான்.
அதே நேரம் இசையின் நினைவும் வந்தது. கூடவே அவளின் ‘சின்னப்பு’ என்கிற அழைப்பும்.
அவளுக்கு அவன் எந்த வகையிலும் நியாயம் செய்யாதபோதிலும் அவன் அன்னையை அன்றுபோலவே இன்றும் கவனித்துக்கொள்ளும் அவள் மீது மிகுந்த அன்பு சுரந்தது அவனிடத்தில்.

