கடன் அன்பை முறிக்கும் 30 – 1

அத்தியாயம் 30

 

 

அடுத்த நாள் காலை, திடீரென்று வயிற்றில் கேட்ட கடமுட சத்தத்தில்தான் விழித்தான் குரு. அடுத்த நிமிடமே வயிறு கலக்க ஆரம்பித்தது. ஒரே ஒட்டாமாகக் கழிவறைக்கு ஓடினான். அங்கே வைத்துத்தான் அவனுக்கு அத்தனையும் நினைவில் வந்தன. வந்த கணம் தலையிலேயே அறைந்துகொண்டான்.

 

வேகமாக வெளியே வந்து, பல்லைத் தீட்டி, அப்படியே தலையிலும் அள்ளி ஊற்றிக்கொண்டு, அவசரத்துக்குக் கொடியில் கிடந்த சாரத்தை மாற்றிக்கொண்டு ஓடிவந்து அறையில் பார்த்தான்.

 

துளசியையும் மிதிலனையும் காணவில்லை. தொய்ந்துபோய் அவர்கள் படுத்த கட்டிலிலே சென்று அமர்ந்துகொண்டவனுக்குத் தலை விண் விண்ணென்று வலித்தது.

 

நேற்று யாழிசையும் துளசியும் கேட்ட கேள்விகள் மிகவுமே அவனைக் காயப்படுத்தியிருந்தன. அதைத் தாங்க முடியாமல், அப்போதுதான் இறக்கிய தென்னங்கள்ளை வாய்க்குள் கவிழ்த்திருந்தான்.

 

முதன்முறை என்பதில் இரவு என்ன நடந்தது என்றுகூட அவனுக்குச் சரியாக நினைவில் இல்லை.

 

ஆனால், தவறுக்கு மேல் தவறு செய்து துளசியை நன்றாகவே காயப்படுத்தியிருக்கிறோம் என்று விளங்கியது. கைப்பேசியை எடுத்து அவளுக்கு அழைத்தான்.

 

அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த வீட்டைப் பூட்டித் திறப்பை எடுத்துக்கொண்டு அங்குச் சென்றான்.

 

தூயவனின் பைக்கை காணவில்லை. இன்று தோட்டத்துக்கு நீர் இறைக்கும் நாள். அதிகாலை நான்கு மணிக்கே போயிருப்பான். எப்போதும் இவனும் கூடப் போவான். இன்று அவன் கூட இவனுக்கு அழைக்கவில்லை. மனைவியோடு தனியாகத் தங்கப் போனவன் இருக்கட்டும், தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணியிருப்பான்.

 

நண்பனின் புரிந்துணர்வும் இவனுக்குள் குற்ற உணர்ச்சியையே அதிகரித்தது.

 

அந்த வீட்டுக்குள் காலடியை எடுத்து வைக்கையில் பெரியவர்களிடம் சொல்லியிருப்பாளா என்று அது வேறு ஒரு சங்கடம். ஆனால், அங்கு யாரும் அவனை வித்தியாசமாக நடத்தவில்லை.

 

அதுவும் தேவகி, “இரவு, வேலை எண்டு லேட்டா வந்தனீங்களாம். அதான் நல்ல நித்திரையில இருந்த உங்களை எழுப்பாம நடந்தே வந்திருக்கிறா துளசி. சொல்லியிருக்க அண்ணா வந்து கூட்டிக்கொண்டு வந்திருப்பாரேம்மா எண்டதுக்கு சத்தமே இல்ல.” என்றபடி அவனுக்குப் பால் தேநீருடன் காலை உணவையும் பரிமாறினார்.

 

அவனால் அவரை இயல்பாக எதிர்கொள்ள இயலவில்லை. அமைதியாக உணவில் கவனம் செலுத்தினான்.

 

துளசியைக் காணவில்லை. மிதிலனை நேசரிக்கு விடப் போயிருப்பாள். கடந்த இரண்டு நாள்களும் அவன்தான் அந்த வேலையைப் பார்த்தான். இன்று அதுவுமில்லை.

 

உணவை வேகமாக முடித்துக்கொண்டு அவளைப் போய்க் கூட்டிக்கொண்டு வருவோம் என்று எண்ணியபடி, தட்டில் என்ன கிடக்கிறது என்றே தெரியாமல் வாய்க்குள் அள்ளித் திணித்துக்கொண்டிருந்தபோது, துளசியே வந்து சேர்ந்தாள்.

 

 

 

உண்பதை நிறுத்திவிட்டு அவளையே பார்த்தான். இரவு முழுக்க அவள் உறங்கவில்லை என்பதற்கு அடையாளமாக மிகவும் சோர்ந்து தெரிந்தாள்.

 

அவன் தன்னையே பார்க்கிறான் என்று தெரிந்தும் அவன் புறம் திரும்பவே இல்லை அவள்.

 

“நீயும் வந்து சாப்பிடு பிள்ளை.” என்று அழைத்த தேவகியிடம், “பசிக்கேல்ல அம்மா.” என்றுவிட்டுத் தன்பாட்டுக்கு மாடியேறினாள்.

 

அதுவரை நேரமும் சாதாரணமாக இருந்த தேவகியின் புருவங்கள் சுருங்கின. திரும்பிக் குருவைக் கேள்வியாகப் பார்த்தார்.

 

வேகமாகத் தன் உணவுத் தட்டில் பார்வையைப் பதித்தான் அவன்.

 

“என்ன தம்பி, ரெண்டு பேருக்கும் ஏதும் சண்டையா?” இந்தச் சில நாள்களாகத்தான் அவன் அவருக்கு மருமகன். அதற்கு முதல் வரையில் மகனின் நண்பனாக, இன்னொரு மகனாக அந்த வீட்டில் புழங்கிய ஒருவன். அதில் இயல்பாக விசாரித்தார்.

 

“அப்பிடி எல்லாம் இல்ல மாமி. இரவே ஆள் கொஞ்சம் சோர்வாத்தான் இருந்தவா.” என்று சமாளித்து எழுந்துபோய்க் கையைக் கழுவினான்.

 

அப்படியே இன்னொரு தட்டில் அவளுக்கான உணவைப் போட்டு எடுத்துக்கொண்டு மாடியேறினான். அதைப் பார்த்திருந்த தேவகிக்குக் கவலை அகன்று போயிற்று.

 

அப்படியே அவர்களுக்குள் சண்டையாகவே இருந்தாலும் இந்த அக்கறையும் அன்பும் சமாளித்துவிடும் என்று நம்பினார்.

 

மேலே வந்தவனைத் தாழிடப்பட்டிருந்த கதவே வரவேற்றது. உடை மாற்றுகிறாள். இந்த நான்கைந்து நாள் வாழ்க்கையில் இது அவர்களின் நடைமுறைதான் என்பதில் அவளாகத் திறக்கும் வரையில் பொறுமையாகக் காத்திருந்தான்.

 

அவன் நினைத்தது போலவே உடையை மாற்றிக்கொண்டு கதவைத் திறந்தவள், வாசலில் அவன் நிற்பான் என்று எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் அதிர்ந்தாலும் அவன் முகம் பாராமல் அறையை விட்டு வெளியேறப்போனாள்.

 

அதற்கு விடாமல் அவளையும் சேர்த்து உள்ளே தள்ளிக்கொண்டு போய்க் கதவைச் சாற்றித் தாளிட்டான் குரு.

 

அப்படியே எட்டி மேசையில் உணவுத் தட்டை வைத்துவிட்டு, “சொறி துளசி. நேற்றுத்தான் கடைசியும் முதலுமா நான் குடிச்சது. நீயும் யாழிசையும் பேசின பேச்சில என்னவோ செய்யவே கூடாத காரியத்தைச் செய்த மாதிரி இருந்ததில…” என்றவனின் பேச்சைக் கேளாமல், அப்போதும் அவள் போக முயன்றாள்.

 

தடுத்துப் பிடித்து, “துளசி, ஏதாவது சொல்லு.” என்றான்.

 

அவள் பிடிவாதக் குழந்தையாக வாயை இறுக்கி மூடிக்கொண்டு நின்றாள்.

 

“கதை துளசி.” என்றான் கெஞ்சலாக.

 

“என்ன கதைக்கிறது? அண்ணா உங்களை ஏமாத்தி என்னைக் கட்டி வச்சிட்டாரா? பிடிக்காம ஒண்டும் நீங்க என்னோட வாழத் தேவை இல்லை. எனக்கு இதெல்லாம் பழக்கம்தான். அவனை மாதிரியே நீங்களும்…” என்றவளாலும் மேலே பேச முடியவில்லை. அவனும் பேச விடவில்லை.

 

அவளைத் தன் மார்போடு சேர்த்து இறுக்கி அணைத்துக்கொண்டான். அடடக்கி அடக்கிப் பார்த்த துளசியால் முடியாமல் போகவே அவன் மார்பிலே அழுதாள். ஆத்திரம் எப்படி அவன் மீதோ அப்படியே அவளுக்கான ஆறுதலும் அவனிடம்தான் கிடைத்தது.

 

“என்ர செல்லம் எல்லா. அழுறேல்ல.” என்று அவள் முகம் நிமிர்த்திக் கண்களைத் துடைத்துவிட்டு, “வெறியப் போட்டுட்டு என்னத்த உளறி வச்சனான் எண்டு சத்தியமா எனக்கு நினைவில இல்ல. ஆனா, இப்பிடி எல்லாம் கதைக்காக. உன்ர பேச்சு, மூச்சு எல்லாத்திலயும் நான் மட்டும்தான் இருக்கோணும் துளசி! நீ என்ர துளசி!” என்றவனின் வார்த்தைகளில் அவள் விழிகள் மீண்டும் கலங்கின.

 

அவன் அப்படிச் சொன்ன அந்த நேரத்தில் கூட அவள் அதைப் பெரிதாக எடுக்கவில்லை. அவள் தந்தையை இழுத்ததுதான் கோபத்தைக் கொடுத்திருந்தது.

 

ஆனால், இரவு முழுக்க அதைப் பற்றி யோசிக்க யோசிக்க மனம் காயப்பட்டுப் போனது.

 

சொத்துப்பத்தில் தந்தை கவனமாக இருப்பார் என்று அவளுக்கும் தெரியும் என்பதில் அதில் தன்னைச் சமாளித்துக்கொள்ள முடிந்தவளால், இதைக் கடக்க முடியவில்லை.

 

அதுவும், ‘உங்களைப் பிடிக்கேல்ல, நீங்க வேண்டாம் எண்டு சொல்லிட்டானே’ என்று விமல் சொன்னது இன்னுமே நெஞ்சில் இருந்ததில் குருவின் வார்த்தைகள் நன்றாகவே தாக்கியிருந்தன.

 

அதில், “உண்மையாவே அண்ணா உங்களை ஏமாத்தி என்னைக் கட்டி வச்சிட்டார் எண்டு நினைக்கிறீங்களா?” என்று நடுங்கும் குரலில் கேட்டாள்.

 

அவனிடத்தில் மெல்லிய அதிர்வு. சில கணங்களுக்கு அவளையே பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் அவள் இதழ்களைச் சிறையிட்டான்.

 

முதலில் இதை எதிர்பாராதவள் அதிர்ந்து விலகப் பார்த்தாள். அவன் விடவில்லை. அதன் பிறகு அவளும் பெரிதாக எதிர்ப்புக் காட்டவில்லை. அலைப்புற்றிருந்த மனத்துக்குக் கணவனின் அண்மைதான் அமைதியைத் தந்தது.

 

அவள் கேள்விக்கான பதிலைச் சொல்லிவிட்டு விலகியவன் வேறு பேசாமல் உணவுத் தட்டையும் எடுத்துக்கொண்டு, அவளையும் கையோடு பற்றிக்கொண்டு சென்று கட்டிலில் அமர்ந்து, அவளுக்குத் தானே அள்ளிக்கொடுத்தான்.

 

இருவரும் வேறு பேசவில்லை. அவள் சாப்பிட்டதும், “தோட்டத்துக்குப் போயிற்று வாறன்.” என்று சொல்லிக்கொண்டு கீழிறங்கி வந்து, தட்டையும் கையையும் கழுவினான்.

 

பார்த்திருந்த தேவகியால் என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடிந்ததில் அவர் உதட்டில் மெல்லிய முறுவல். அவன் புறப்பட்டதும் ஓடி வந்து தங்கையிடம் விடயத்தைப் பகிர்ந்துகொண்டார். மாதவிக்கும் சந்தோசமே.

 

அங்கே தோட்டத்தில் மேற்சட்டை இல்லாமல் உள் பெனியனும் ட்ரவுசருமாக நின்று, மோட்டாரிலிருந்து வாய்க்கால் வழியே பாய்ந்து வந்துகொண்டிருந்த தண்ணீரைப் பார்த்து பார்த்து மடை திருப்பிக்கொண்டிருந்தான் தூயவன்.

 

“சொறி மச்சான்.” குருவின் குரலில் மெல்லிய சங்கடம்.

 

“லூசா நீ!”

 

“நித்திரையாயிட்டனடா.”

 

பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு நிமிர்ந்த தூயவன், அவனை முறைத்தான். “இப்ப உன்ன நான் ஏதாவது கேட்டனானா?”

 

“மச்சான்!” அவனுக்கு நீ நினைப்பதுபோல் எதுவுமில்லை என்று சொல்ல வேண்டும்போல் இருந்தது. அதே நேரத்தில் அதைச் சொல்லவும் முடியவில்லை.

 

error: Alert: Content selection is disabled!!