“நீ என்ர தங்கச்சியப் பற்றிக் கதைப்பாய். நான் நிதானமா இருக்கோணுமோ. போடா எழும்பி!” என்றான் மரியாதையைக் கைவிட்டுவிட்டு.
“போகத்தான் போறன். அதுக்கு முதல் உழைக்கத் துப்பில்லை எண்டதும் வீட்டுப் பொம்பிளைகளை வச்சுக் காசு பாக்க நினைக்கிற உன்ன நாலு கேள்வி நாக்கைத் பிடுங்கிற மாதிரிக் கேக்க வேண்டாமா?” என்று அவர் கேட்டு முடிக்க முதலே அவரின் கழுத்துச் சட்டையைக் கொத்தாகப் பற்றியிருந்தான் நேசன்.
“என்னடா கதைக்கிறாய்? எங்களை என்ன, உங்களை மாதிரிக் காசு பணத்துக்குப் பறக்கிற ஈனக்கூட்டம் எண்டு நினைச்சியா?” என்றவனின் உறுமலில் அங்கிருந்த மொத்தக் கூட்டமும் அவர்களிடத்தில் ஓடி வந்து, வேகமாக அவர்களைப் பிரிந்துவிட்டனர்.
ஆனாலும், நேசனின் கொதிப்பு அடங்கவேயில்லை. அவன் நெஞ்சு வேக வேகமாய் ஏறி இறங்கியது. உடல் எல்லாம் கோபத்தில் நடுங்கியது. எதிரில் இருக்கிறவனை மெய்யாகவே எதுவும் செய்துவிடலாமா என்கிற அளவில் சினம் பெருகிற்று. கண்கள் இரண்டும் இரத்தக் கட்டிகளாகச் சிவந்து போயின.
சண்முகத்துக்கு அத்தனை பேரின் முன்னால் அவன் சட்டையைப் பிடித்துவிட்டதில் அசிங்கமாகப் போயிற்று. அதில், “என்னடா பெரிய நல்லவன் மாதிரித் துள்ளுறாய்? நான் என்ன இல்லாததையா சொல்லுறன். ரெண்டு நாளைக்கு முதல் சாப்பிடப் போறன் எண்டு போன உன்ர தங்கச்சி எங்க போனவள், ஆரப் பாத்தவள் எண்டு போய்க் கேளு, போ! கேட்டுப்போட்டு வந்து இதே மாதிரி நெஞ்ச நிமித்திக்கொண்டு நில்லு. அப்ப நீ அடிக்கிறத நான் வாங்கிறன்!” என்றுவிட்டு நடந்தார் அவர்.
அதன் பிறகு நொடி நேரம் கூட அங்கு அவன் நிற்கவில்லை. வீட்டுக்குப் புறப்பட்டிருந்தான்.
*****
அப்போதுதான் வேண்டாத சிந்தனைகள் எல்லாம் இப்போதைக்கு வேண்டாம் என்று ஒதுக்கி வைத்துவிட்டுப் படிப்பில் ஆழ்ந்திருந்தாள் யாழிசை. சுரபி டியூஷனுக்குப் போயிருந்தாள்.
எப்போதும் இடியப்பம், பிட்டுக்காக அவிக்கிற மாவை ஐந்து கிலோவாக அவித்து எடுத்து வைப்பதுதான் அந்த வீட்டின் வழக்கம். அன்றைக்கும் வீட்டுக்குப் பின்னால் விறகடுப்பு மூட்டி, ஐந்து கிலோ மாவை அவித்தெடுத்து, அதை அப்படியே எடுத்துக்கொண்டு வந்து விறாந்தையில் வைத்து, சூடு ஆற முதல் சுளகில் போட்டு உதிர்த்து, மசித்துக் கோகிலா கொடுக்க, நான்கைந்து பேப்பர்களை ஒன்றுக்கு மேல் ஒன்றாக விரித்து வைத்துவிட்டு அரித்துக்கொண்டிருந்தாள் நளினி.
அப்போதுதான் வேகமாக உள்ளே வந்தான் நேசன். “எங்கம்மா இசை? இசை!” அன்னையிடம் கேள்வி கேட்டவன் சத்தமாக அவளையும் அழைத்தான்.
அவன் வந்த விதம், அவன் கண்களில் இருந்த சிவப்பு, யாழிசையை அழைத்த விதம் எல்லாமே என்னவோ சரியில்லை என்று சொல்ல, “என்ன தம்பி? என்ன கோவம்?” என்று கோகிலா விசாரித்துக்கொண்டு இருக்கையிலேயே, தமையனின் குரலின் பேதமுணர்ந்து, காரணமறியாப் பயம் ஒன்று நெஞ்சைப் பற்றிப் பிடிக்க, “என்னண்ணா?” என்றுகொண்டு வெளியே வந்தாள் யாழிசை.
“அண்டைக்கு எங்க போனனீ?”
அந்தக் கேள்வியிலேயே சகலதும் ஆடிப்போனது அவளுக்கு. தன்னிடம் சொன்னதை மீறித் தூயவன் சென்று அண்ணாவிடம் சண்டைக்கு ஏதும் போய்விட்டானா என்று நடுங்கியது அவளுக்கு.
முகம் அழுகையிலும் பயத்திலும் சிவக்க, “எ…ண்டைக்கு அண்ணா?” என்றாள் வார்த்தைகள் தந்தியடிக்க.
“சாப்பாட்டுக்குப் போறன் எண்டு சொல்லிக்கொண்டு போனியே. அண்டைக்கு.”
“குருவும் துளசியும் கூப்பிட்டுத்தானப்பு போனவா. நானும் இருக்கேக்கதான் அவே எடுத்துக் கூப்பிட்டவே. உங்களுக்கும் தெரியும் தானே. நீங்களும் சேந்துதானே சுரபியும் அவாவும் போயிட்டு வரட்டும் எண்டு சொன்னனீங்க.” தெரிந்த விடயத்தை மகன் ஏன் விசாரிக்கிறான் என்று புரியாமல் இடையில் வந்தார் கோகிலா.
“எங்களுக்கு அவ்வளவும் தானேம்மா தெரியும். அங்க என்ன நடந்தது எண்டோ, இல்ல அதுக்கு முதல் என்னவெல்லாம் நடந்தது எண்டோ தெரியுமா என்ன?” என்றவனின் கேள்வியிலேயே அவள் கன்னத்தில் கண்ணீர் இறங்க அரம்பமாயிற்று.
“அண்ணா.” என்றாள் அழுகையோடு.
“சொல்லு, என்ன நடந்தது?”
“அண்…ணா.”
“அந்தத் தூயவன் அங்க வந்தவனா?”
“ஓ…ம்”
“பிறகு என்ன நடந்தது?”
அவளால் அதைச் சொல்ல முடியவில்லை. மௌனமாகக் கண்ணீர் உகுத்தாள்.
“சொல்லு!” என்றவனின் அதட்டலில் விழிகளை இறுக்கி மூடிக்கொண்டு, தேகம் நடுங்க முதன் முதலில் விமல் விசயத்தில் அவன் துரத்திக்கொண்டு வந்ததில் தொடங்கி, கைப்பேசியில் அழைத்தது, காதலைச் சொன்னது, பஸ்ஸில் வைத்துப் பார்த்தது, கடைசியாக அன்று நடந்தது என்று அவன் முத்தமிட்டதைத் தவிர்த்து அத்தனையையும் ஒப்பித்து முடித்தாள்.
பெண்கள் இருவருக்கும் இதயத்தின் துடிப்பே நின்றுவிட்டது போலொரு நிலை. நம்ப முடியாமல் யாழிசையையே சிலைபோல் பார்த்து நின்றனர்.
“கேட்டீங்களாம்மா? இவ்வளவு நடந்திருக்கு. இதைப் பற்றி ஒரு வார்த்த எங்களிட்டச் சொல்லேல்லத்தானே?” என்றவனால் தாங்கவே முடியவில்லை.
இதையெல்லாம் அவள் முதலே சொல்லியிருக்க கண்டவனெல்லாம் வந்து அவன் வீட்டுப் பெண்களைப் பற்றி ஒரு வார்த்தை பேசியிருக்க முடியுமா? என்னவெல்லாம் கேட்டான் அந்தச் சண்முகம்? ‘உன் வீட்டுப் பெண்கள்’ என்று அவன் சொன்னதற்குள் அவனுடைய அம்மா, தங்கை, மனைவி, மகள் என்று அத்தனை பேரும் அடக்கமே! நினைக்க நினைக்கக் கோபத்துக்குப் பதிலாக அவனுக்குக் கண்கள் கலங்கிவிடும் போலாயிற்று.
பேசாமல் போய் அமர்ந்துவிட்டான். மகன் அப்படி இடிந்துபோய் அமர்ந்ததும் கோகிலாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவனிடம் ஓடினார். நளினிக்குமே கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது. “பாத்தியா? இப்ப சந்தோசமா உனக்கு? மலை மாதிரி இருந்த மனுசனை இப்பிடி இருத்திப்போட்டியே!” என்று யாழிசையிடம் குமுறியவள் கணவனின் கையை ஆறுதலாகப் பற்றிக்கொண்டாள்.
“அவன் அவளுக்குப் பின்னால சுத்துறதுக்கு நீங்க ஏனப்பா இப்பிடி இருக்கிறீங்க?” என்று பரிதவித்தாள்.
“அதுதானே தம்பி. நீ உடஞ்சிடாதயப்பு. அம்மாக்குப் பயமா இருக்கய்யா!” என்று அவன் முகத்தைத் துடைத்துவிட்டபடி அழுதார் கோகிலா.
அவர்களிடம் எதுவும் சொல்லாதவன், “எங்க உன்ர ஃபோன்?” என்றான் யாழிசையிடம்.
“அண்ணா.” என்று அதிர்ந்து பார்த்தாள் அவள்.
“கொண்டு வா!”
“அண்ணா ப்ளீஸ்!” அழுதழுது சிவந்திருந்த அவள் விழிகள் இரண்டும் அது வேண்டாமே என்று அவனிடம் கெஞ்சின.
“ஏய்! உன்னில பிழை இல்லாட்டி, நீ சொன்னதெல்லாம் உண்மை எண்டா என்னத்துக்குப் பயப்பிடுறாய்? அப்ப பொய் சொல்லி இருக்கிறாய் என்ன?” இருந்த சினத்தில் சீறினாள் நளினி.
“இல்லை அண்ணி. நான் பொய் சொல்லேல்ல அண்ணி.” என்றவள் நடுங்கும் நெஞ்சுடன் எழுந்துபோய்க் கைப்பேசியைக் கொண்டுவந்து கொடுத்தாள்.
அவனோடான அத்தனையையும் அழித்தவள் கடைசியாக அழுது தான் அனுப்பிய குறுந்தகவலையும், அதன் பிறகாக அவர்களின் பேச்சையும் அழிக்கவில்லை. அதனால் அவன் திரும்பவும் கோபப்பட்டுவிடக் கூடாது என்றெண்ணி விட்டுவைத்திருந்தாள்.
தூயவனோடான குறுந்தகவல் பரிமாற்றத்தைக் கண்டு பிடிக்க நேசனுக்கு நிறைய நேரம் பிடிக்கவில்லை. யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் நின்றவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அதை பிளே செய்தான்.
அங்கே அவள் அழுதழுது அவனிடம் கெஞ்சியதைக் கேட்ட மூவர் முகங்களும் சினத்திலும் சீற்றத்திலும் சிவந்து கொதித்தன.
கோகிலா அம்மா அவளை அடிக்கவே ஆரம்பித்திருந்தார்.
“அந்தப் பெடியனிட்ட போய் அழத் தெரிஞ்ச உனக்கு வீட்டில சொல்லத் தெரியேல்ல என்ன? நாளைக்கு ஏதாவது ஒண்டு பெருசா நடந்திருந்தா என்ன செய்திருப்ப? உன்னப் பாத்து பாத்து வளத்தவனின்ர முகத்தில கரிய பூசிட்டியே!”
அழுகையோடு அவள் சொன்ன விளக்கங்களும், அவளின் பயங்களும் அங்கே ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அவளும் அவனை நேசிக்கவில்லை என்பது பெரும் ஆறுதலாக இருந்தாலும் கோகிலா அவளை அடித்தபோது நேசனோ நளினியோ வந்து தடுக்கவும் இல்லை.
அதுவும் நேசன் முற்றிலும் உடைந்திருந்தான். ‘பயப்பிடாத, நான் அவரோட சண்டைக்குப் போகமாட்டேன்’ என்று அவன் சொன்னதை நம்பி, ஆயிரம் முறை நன்றி என்று அனுப்பியிருக்கிறாள் அவன் தங்கை. கூடவே, அவன் வார்த்தைகளை அவள் நம்பவும் செய்திருக்கிறாள். அது அவனை ஏதோ ஒரு வகையில் பாதித்தது.
அவன் மீது எனக்கு அப்படி எந்த அபிப்பிராயமும் இல்லை என்று அவள் சொன்னதை நம்ப முடியாமல் அல்லாடினான்.
“உங்களுக்கு எப்பிடி இதெல்லாம் தெரிய வந்தது?” திடீரென்று வந்த நளினியின் விசாரிப்பில் நேசனின் முகம் மாறிப்போனது. அங்கு நடந்தவற்றை தன் வீட்டுப் பெண்களிடம் அவனால் சொல்ல முடியவில்லை.
அதில், “எப்பிடியோ தெரிய வந்திட்டுது. அதா இப்ப முக்கியம்? நான் பாத்திருக்கிற கலியாணம் உண்மையாவே அவளுக்கு ஓம் தானா எண்டு கேள்.” என்றான் மனைவியிடம்.
தங்கையின் முகத்தை அவன் திரும்பிப் பார்க்கவே இல்லை.
“அண்ணா!” தவறு செய்யாமலேயே அடி வாங்கி, நடுவீட்டில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டுத் தலை குனிந்து நிற்கும் இந்த நிலை போதாது என்று தமையனின் பாரா முகம் அவளை வதைத்தது.
“பிறகு இதே மாதிரி நாளைக்கு கடைசி நேரத்தில நடு சபைல நிண்டு என்னால கேவலப்பட்டு நிக்கேலாது. வேறேதும் பிளான்ல இருந்தா இப்பவே சொல்லச் சொல்லுங்க அம்மா.” என்றதும் இன்னுமே குலுங்கி அழுதாள் யாழிசை.
“நான் மறைச்சது பிழைதான் அண்ணா. ஆனா, பிழையான எண்ணத்தில மறைக்கேல்ல. நாளைக்கு நீங்க கோவத்துல சண்டைக்குப் போய், உங்களுக்கு ஏதும் நடந்திடுமோ எண்டுற பயத்தில மட்டும்தான் மறைச்சனான். அவர் எவ்வளவோ வற்புறுத்திக் கேட்டும் நீங்க சொல்லுறவரத்தான் கட்டுவன் எண்டு சொன்னனான். இப்பவும் சொல்லுறன், நீங்க சொல்லுறவரத்தான் கட்டுவன்.” என்றவள் அதற்குமேல் அங்கே இருக்க முடியாமல் எழுந்து, அறைக்குள் புகுந்துகொண்டாள்.
உள்ளம் புண்ணாகிப்போயிருந்தது. முதலே சொல்லியிருக்கலாமோ என்று இப்போது நினைத்தாள்.
அங்கே நேசன் நெஞ்சில் ஏதோ ஒரு பயம் பிடித்துக்கொண்டிருந்தது. அவள் திருமணத்தை இன்னும் விரைவாக எப்படி நடத்தலாம் என்று யோசிக்க ஆரம்பித்திருந்தான்.

