கடன் அன்பை முறிக்கும் – 32

அத்தியாயம் 32

 

 

அவளின் அறையில் பாயில் சரிந்திருந்த யாழிசை, போர்வைக்குள் முழுமையாகச் சுருண்டிருந்தாள். அன்னையின் ஒவ்வொரு அடியும் உடலில் அல்லாமல் உள்ளத்தில் காயமாய் விழுந்துபோயின.

 

அவன் அவ்வளவு தொந்தரவு தந்தும், அவளிடம் எல்லை தாண்டியும் கூட, எந்த இடத்திலும் மனத்தை அலைபாய விடாமல், அண்ணா சொல்கிறவரைத்தான் கட்டுவேன் என்று நின்றிருக்கிறாள். அப்படியான அவளைத் தமையன் நம்பவில்லை என்கிற அந்த விடயம், அவள் கண்ணீரை இன்னுமே பெருக வைத்தது.

 

தூயவனும் பொய்த்துப் போனானே. அவளிடம் சத்தியம் எல்லாம் பண்ணிவிட்டு என்ன வேலை பார்த்திருக்கிறான்?

 

ஆனால், யார் என்ன செய்தாலும் அவள் குடும்பம் அவளை நம்பியிருக்க வேண்டாமா?

 

அவனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறாள் என்பதைப் பிழையாகப் பார்த்தவர்கள் அதில் என்ன சொல்லியிருக்கிறாள் என்று விளங்கிக்கொள்ளவில்லையே! அவனிடம் யாருக்காகக் கெஞ்சியிருக்கிறாள் என்று யோசிக்கவில்லையே!

 

மறைத்தது தவறுதான். பெரும் தவறுதான். அதற்கென்று அவளை நம்பாமல் போனது? அவள் கைப்பேசியைக் கூடத் தன்னிடமே இருக்கட்டும் என்று சொல்லியிருந்தான் நேசன். அதன் பொருள்?

 

அன்று வீடு வந்த சுரபிக்கும் வீட்டு நிலை சரியில்லை என்று பார்த்த நிமிடமே புரிந்துபோயிற்று. “என்னம்மா?” என்று அவள் கேட்டு முடிக்க முதலே, “நீயும் மறைச்சிருக்கிறாய் என்ன? முளைச்சு மூண்டு இல விடேல்ல. அதுக்கிடையில களவும் பொய்யும்!” என்று கேட்டு, இரண்டு போட்டாள் நளினி.

 

உள்ளே அறையில் படுத்திருந்த யாழிசை எழுந்து ஓடி வந்து, “ஐயோ அண்ணி! சுரபி பாவம். அவாக்கு ஒண்டும் தெரியாது. அவா கடைக்குப் போன நேரம்தான் இதெல்லாம் நடந்தது.” என்று தடுத்தாள்.

 

அது இன்னுமே நளினியின் சினத்தைக் கிளம்பிவிட, “ஆக, நல்லா பிளான் பண்ணித்தான் நீயும் அவனும் நடந்திருக்கிறீங்க என்ன? நீ ஒழிப்பு மறைப்புச் செய்தது காணாது எண்டு, அவளுக்கும் அதையெல்லாம் சொல்லிக் குடுக்கிறியா?” என்று சீறினாள்.

 

கண்ணீருடன் அதிர்ந்து பார்த்தாள் யாழிசை.

 

“இனிமேல் அவளிட்ட இருந்து நீ கொஞ்சம் தள்ளியே நில்லு. சேந்து சுத்தி அவளையும் கெடுத்துப்போடாத!” என்றதும் துடித்துப்போனாள்.

 

அவள் கைக்குள் பயந்து நடுங்கிக்கொண்டு நின்ற சுரபியை இழுத்து, “வெளில என்ன நடந்தாலும் வீட்டில வந்து சொல்லோணும் எண்டு சொல்லி இருக்கிறன் எல்லா உனக்கு. இனியும் எதையாவது மறைப்பியா? சொல்லு!” என்று கேட்டு இன்னும் இரண்டு போட்டாள் நளினி.

 

கடைசியில் யாழிசையோடு கோகிலாவும் சேர்ந்து மறித்துத்தான் நளினியைச் சமாளித்தனர். உள்ளே அறையில் படுத்திருந்த நேசன் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தான். வெளியில் வரவில்லை. அந்தளவில் சண்முகத்தின் வார்த்தைகள் காயப்படுத்தியிருந்தன. தங்கையும் தன்னை ஏமாற்றியதில் நொந்துபோயிருந்தான்.

 

மகளின் அழுகைக்குரல் கேட்டபோது விழிகளை இறுக்கி மூடிகொண்டவனின் உயிரே துடித்தது. ஆனாலும், அவன் அசையவில்லை.

 

 

*****

இரவு யாழிசையைச் சாப்பிட அழைத்தார் கோகிலா.

 

“பசி இல்லை அம்மா.” போர்வைக்குள் இருந்தே அழுது அடைத்துக் கரகரத்த குரலில் சொன்னாள்.

 

“சாப்பிடாம இருந்தாப்போல நீ செய்தது எல்லாம் இல்லை எண்டு ஆகிடுமா? மரியாதையா வந்து சாப்பிட்டுப் போ!” என்றதும் பேசாமல் வந்து, யாரையும் நிமிர்ந்து பாராமல் சாப்பிட்டாள். திரும்பவும் போய்ப் பாயில் சுருண்டுகொண்டாள்.

 

யாழிசை பரீட்சசைக்காக விழித்திருந்து படிப்பதால் கோகிலா விறாந்தைக்குத் தன் படுக்கையை மாற்றிக்கொண்டிருந்தார். சுரபி வளர்ந்த பிறகு யாரிடம் என்றில்லாமல்தான் உறங்குவாள். ஒரு நாள் கோகிலாவோடு என்றால் இன்னொரு நாள் யாழிசையோடு. சில நேரங்களில் அம்மா அப்பாவோடு.

 

இன்றைக்கு அவளும் எல்லோருடனும் கோபம் என்பதில் யாழிசையின் போர்வைக்குள் புகுந்து, அவள் இடுப்பைக் கட்டிக்கொண்டு, “உங்களுக்கும் அப்பம்மா அடிச்சவாவாம். சொறி அத்த!” என்றாள் இரகசியக் குரலில்.

 

சட்டென்று நிறைந்துவிட்ட கண்ணீரோடு அவளை அணைத்துக்கொண்டு, “நீங்க ஏனம்மா சொறி சொல்லுறீங்க? ஆனா, அண்ணி சொன்ன மாதிரி வெளில என்ன நடந்தாலும் வீட்ட வந்து சொல்லோணும் என்ன. அத மறச்சு அத்தைக்கு இப்ப எவ்வளவு பிரச்சினை எண்டு பாருங்கோ. நீங்க அத்தைய மாதிரி இருக்கக் கூடாது என்னம்மா.” எனும்போதே அவள் குரல் உடைந்துபோனது.

 

“இல்ல. நான் என்ர அத்த மாதிரித்தான் இருப்பன். என்ர அத்த நல்லவா. எனக்கு அவவப் பிடிக்கும். அவா ஒரு பிழையும் செய்யேல்ல எண்டு எனக்குத் தெரியும்.”

 

அழுகையோடு சேர்த்துச் சிரிப்பும் வந்தது யாழிசைக்கு. அவளாவது அவளை நம்புகிறாளே! “உண்மையாவா? உங்கட அத்தைய உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?” அவளிடம் பேச்சுக்கொடுத்துத் தன் மனத்தை ஆற்றிக்கொள்ள முயன்றாள்.

 

“இப்பிடி இறுக்கிக் கட்டிப்பிடிச்சுக் கொஞ்சுற அளவுக்கு!” என்று சொல்லிவிட்டு, தன்னால் முடிந்த வரையில் அவளை இறுக்கி அணைத்து, அவள் கன்னத்தில் மிக மிக அழுத்தமாக முத்தமிட்டாள் சின்னவள்.

 

அழுத முகத்தோடு மலர்ந்து சிரித்தாள் யாழிசை. என்னவோ அந்த நொடியில் அவள் பெரியவளாகவும் இவள் சிரியவளாகவும் மாறிவிட்டது போலிருந்தது.

 

“நீங்க படிக்கேல்லையா? திங்கள் எக்ஸாம் எல்லா.” என்று நினைவூட்டினாள் சின்னவள்.

 

உண்மைதான். படிக்கத்தான் வேண்டும். இப்படி அழுதுகொண்டிருப்பதால் வரப்போவது எதுவுமில்லை. கடந்துபோன மூன்று வருடங்களும் வீணாவது மட்டுமே மிச்சமாகும் என்று எண்ணிக்கொண்டு எழுந்து, முகத்தைத் துடைத்தாள்.

 

அப்படியே, “நீங்க போய் இண்டைக்கு அப்பம்மாவோட படுங்கோ.” என்றுவிட்டு எழுந்துபோய், வெளியே வாளியில் இருந்த தண்ணீரில் முகத்தை அடித்துக் கழுவிக்கொண்டு வந்து, ஒரு மாத்திரையையும் விழுங்கிக்கொண்டு படிக்க அமர்ந்தாள்.

 

சின்னவள் வெளியில் போகவில்லை. அங்கேயே அவளுக்குப் பக்கத்தில் இன்னொரு பாயை விரித்துக்கொண்டு சரிந்தாள். சுவரில் சாய்ந்திருந்து, போர்வையை இடுப்புவரை போர்த்திக்கொண்டு, மடியில் ஒரு தலையணையை வைத்து, அதில் படிக்க வேண்டிய கொப்பியை வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்த யாழிசையின் ஒரு கை, தன் பாட்டுக்குச் சின்னவள் தலையை வருடிவிட்டுக்கொண்டிருந்தது.

 

மகள் மீது கோகிலாவுக்கு மிகுந்த கோபம்தான். என்ன இருந்தாலும் நடந்தவற்றை அவள் வீட்டில் சொல்லியிருக்க வேண்டும் என்றே இப்போதும் நினைத்தார். அவளுக்கு அப்படியான எந்த விருப்பங்களும் இல்லை என்று அவள் எவ்வளவுதான் அடித்துச் சொன்னாலும் மனத்தில் இருந்த கலக்கம் அகலுவதாக இல்லை.

 

தூயவனை நினைத்து மிகவுமே பயந்தார். மகள் எதையும் மறைக்கிறாளோ என்று அது ஒரு புறம். இனி அவளை ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்த பிறகே அவரால் நிம்மதியாக உறங்க முடியும். அது மட்டும் நன்றாகத் தெரிந்தது.

 

மகனும் பாவமே. அவரின் பொறுப்பை, யாழிசையின் பொறுப்பை, அவன் குடும்பப் பொறுப்பை என்று அவனும் எத்தனையைத்தான் சுமப்பான்? அப்படி இருக்கையில் இவள் இன்னும் பொறுப்பாக நடந்து, நேசனை இந்த நிலையில் நிறுத்தாமல் இருந்திருக்க வேண்டாமா?

 

இத்தனையும் மனத்தினுள் ஓடினாலும் அவள் போய் முகம் கழுவிக்கொண்டு வந்து, விளக்கைப் போட்டுக்கொண்டு படிக்க அமரவும் மனம் கேட்கவில்லை.

 

எழுந்துபோய் அவளுக்குப் பிடித்த பதத்தில் தேநீர் போட்டுக்கொண்டு வந்து கொடுத்தார். யாழிசைக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அதை அவருக்குக் காட்டாமல் வாங்கி வைத்துக்கொண்டாள்.

 

“சுரபி, வந்து அப்பம்மாவோட படுங்கோவன் குஞ்சு.” விளக்குப் போட்டிருப்பதால் அவள் உறக்கம் கெடும், நாளைக்குப் பள்ளிக்கூடம் போக வேண்டுமே என்கிற கரிசனையில் சொன்னார்.

 

அவளோ, “ம்ஹூம்!” என்று முகத்தை வெட்டித் திருப்பிக்கொண்டு, அவருக்கு முதுகு காட்டிப் படுத்துக்கொண்டாள். பின்னே, அன்னை அடிக்க முதலே தடுக்காதவரிடம் அவளுக்கு என்ன பேச்சு?

 

அவளைச் சமாதானம் செய்ய மனம் உந்தினாலும் மகள் படிக்கையில் அங்கிருந்து தொந்தரவு செய்ய மனம் வராமல், “எங்கட வீட்டுப் பெரிய மனுசிக்கு ஆகத்தான் கோவம் வருது!” என்று செல்லமாக அவளின் பின் புறத்தில் ஒரு தட்டுத் தட்டிவிட்டுப் போனார் அவர்.

 

யாழிசையால் படிக்க முடியவில்லை. கண்கள் இரண்டும் சிவந்து எரிந்தன. நெஞ்செல்லாம் வலி. எவ்வளவுதான் உற்று உற்றுப் பார்த்தாலும் ஒற்றைச் சொல் கூட மண்டைக்குள் ஏறேன் என்றது. இப்படி இருந்து பரீட்சசைகளில் கோட்டையை விட்டுவிடுவோமோ என்கிற பயமும் சேர்ந்து திரும்பவும் அழுகையைத்தான் தோற்றுவித்தது.

 

 

*****

 

துளசிக்குத் தாய் தந்தையரின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே சங்கடமாக இருந்தது. இது வரையில் அவர்களிடம் அவள் எதையும் மறைத்ததேயில்லை. இப்போது என்னவோ பெரிய தவறு செய்கிறவள்போல் ஓடி ஒளிந்துகொண்டிருந்தாள்.

 

“என்னம்மா? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?” என்று மாதவியே கவனித்துக் கேட்டிருந்தார். அதற்கு எதையோ சொல்லிச் சமாளித்தாள்.

 

தமையன் அவளிடம் சொன்னதிலிருந்தும், யாழிசை அழுதுகொண்டு போனதிலிருந்தும் யாழிசைக்கு தமையன் மீது எந்த ஈடுபாடும் இல்லை என்று புரிந்தது. அப்படி இருக்கையில், தந்தையையும் வைத்துக்கொண்டு தன் காதலைத் தமையன் என்ன செய்யப் போகிறானோ என்று அது வேறு ஒரு கலக்கம்.

 

*****

 

அன்றைய நாள் மன்னிப்புக் கேட்டு, முத்தமிட்டுச் சமாளித்த பிறகு சமாதானமாகிவிடுவாள் என்கிற நம்பிக்கையோடுதான் இரவு வீட்டுக்கு வந்தான் குரு.

 

அவளும் கீழே வைத்து இரவு உணவு தந்து, அவனுக்கான வேலைகளைக் கவனிப்பதில் எந்தக் குறையையும் வைக்கவில்லை.

 

அது தந்த நம்பிக்கையில், கொடுத்த முத்தம் வேறு இன்னுமொன்றைக் கொடுத்துப் பார் என்று அவனைத் தூண்ட, மேலே அறைக்கு வந்து, அவள் மிதிலனை உறங்க வைத்ததும் ஆசையோடு அவளை நெருங்கினான் குரு.

 

அவளோ நின்று நிதானமாக அவனை வெற்றுப் பார்வை பார்த்தாள்.

 

“துளசி” என்றான் நம்ப முடியாமல்.

 

அவள் பேசாமல் அங்கிருந்த உடைகளை எடுத்து மடிக்க ஆரம்பித்தாள்.

 

“இன்னும் கோவமா? அதான் மன்னிப்புக் கேட்டுட்டனே.”

 

“துளசி”

 

“இப்பிடிக் கதைக்காம இருக்காத துளசி.”

 

அவள் வெகு சிரத்தையாக மடித்த உடைகளை அலமாரிக்குள் எடுத்து அடுக்கினாள்.

 

“என்ன துளசி நீ?” என்று அவள் கரம் பற்றித் தன்னிடம் கொண்டு வர முயல, உறங்கிக்கொண்டிருந்த மிதிலனைத் தட்டி எழுப்பிவிட்டாள் அவள்.

 

அடிப்பாவி என்று அதிர்ந்து பார்த்தான் குரு. அன்று மட்டுமில்லை. அதன் பிறகு வந்த நாள்களில் எல்லாம் மௌனத்தாலேயே அவனுக்குத் தண்டனை கொடுத்தாள் துளசி.

 

ஒரு நாள் மிதிலன் இல்லாமல் வசமாக மாட்டியவளைத் தன் கைகளுக்குள் கொண்டு வந்தவன் எதுவுமே பேசாமல் அவள் முகம் முழுக்க நிறுத்தி நிதானமாக முத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தான். விலகப் பார்த்தவளையும் விடவில்லை.

 

அவளும் எவ்வளவு நேரத்திற்கு என்றுதான் அது தன்னைப் பாதிக்கவே இல்லை என்பதுபோல் நிற்பது. கணவனின் அழுத்தமான உதடுகளும், அது பதிக்கும் தடங்களும், அவை அவளுக்குள் புகுந்து ஊனெங்கும் நிகழ்த்தும் மாயங்களுமாகச் சேர்ந்து முகம் இரத்தமெனச் சிவந்துபோனது.

 

கடைசியில் அவன் மார்பிலேயே முகத்தை மறைத்து, அவனிடமிருந்து தன்னைக் காத்துக்கொண்டாள் துளசி. வாய் விட்டுச் சிரித்தான் குரு.

 

“கோவமா இருக்கிற மாதிரி நடிச்சு வேணுமெண்டே வெறுப்பேத்துறாய் என்ன? இனியும் செய்து பார், உனக்கு இதான் தண்டனை.” என்றவன் ஆசையாய் அவள் இதழ்களைச் சிறையிட்டான்.

 

மறுக்காமல் இணங்கி நின்றவள் உள்ளம் பிடிபட்டு போக அவன் நெஞ்சம் துள்ளியது. ஆசையாக அவள் முகம் பார்த்து, “குடிச்சது பிழைதான். ஆனா, அதுக்குக் காரணம் நீதான்.” என்று வேண்டுமென்றே சொல்லி, அவளிடம் சில பல அடிகளை வாங்கிக்கொண்டு போனான்.

 

இருவர் உள்ளமும் உற்சாகத்தில் மிதந்தது. தம்மைச் சுற்றி யார் இருந்தாலும் தமக்கான உலகத்தில், மற்றவர் பற்றிய அழகான நினைவுகளுடன் கனவில் மிதந்தனர்.

 

அவள் முழுமையாகத் தன்னிடம் வந்து சேர நிறைய நாள்கள் காத்திருக்கத் தேவையில்லை என்று தெரிந்துகொண்டவனுக்கு மிச்ச சொச்சமான இந்தக் காத்திருப்புப் பிடித்தே இருந்தது.

error: Alert: Content selection is disabled!!