அத்தியாயம் 35
தன் முடிவை நெருங்கிக்கொண்டிருந்த அந்த நாளின் மீது, மெல்ல மெல்ல இருள் கவிய ஆரம்பித்த பொழுது அது. சாப்பாட்டு மேசையின் முன்னே அமர்ந்திருந்தார் கருணாகரன். அவர் முன்னே மேசையில் முயல் குட்டி பஸில் ஒன்று கலைந்து கிடந்தது. அந்தச் சாப்பாட்டு மேசையிலேயே ஏறி அமர்ந்துகொண்டு, அதைச் சரியாக அடுக்க முயன்றுகொண்டிருந்தான் மிதிலன்.
அவரின் ஒரு கை அவனைச் சுற்றி அணைவாக இருக்க, ஒரு கண் கிடைத்தால் அதன் பக்கத்தில்தான் மறு கண் இருக்கும், அதன் கீழே நாசி வரும், முயலின் செவிகள் இரண்டும் கூறாக மேல் நோக்கி இருக்கும் என்று அந்தப் பஸிலை அடுக்குவதற்கான குட்டி குட்டி நுணுக்கங்களைப் பேரனுக்குச் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார் கருணாகரன்.
துளசிக்கு இன்னுமே இடியப்ப மாவைப் பதமாகக் குழைக்கும் கலை கைவந்திருக்கவில்லை. அதில் தேவகி குழைத்துக் கொடுத்திருந்தார். அதை ஒவ்வொரு கைப்பிடி உருண்டைகளாகப் பிடித்து, இடியப்பம் பிழிவதனுள் தள்ளி, இடியப்பத் தட்டுகளின் மீது பிழிந்துகொண்டிருந்தாள் அவள்.
தூயவனுக்கு எப்போதுமே இடியப்பம், கறி என்று சாப்பிடுவதில் அவ்வளவாக நாட்டமில்லை. அவனுக்கு நிறைய சின்ன வெங்காயம் போட்டு, ஊர் முட்டையும் சேர்த்து, காரசாரமாக இறைச்சிக் கறியும் விட்டு, இடியப்பக் கொத்துச் செய்து கொடுத்தால்தான் விரும்பிச் சாப்பிடுவான்.
அதேதான் குருவும் என்பதில் அந்த வீட்டின் சமையலறையையும் விறாந்தையையும் இணைக்கும் குட்டி கொரிடோர் போன்ற அந்த இடத்தில் சுவரில் சாய்ந்து அமர்ந்தபடி சின்ன வெங்காயம் உடைத்துக்கொண்டிருந்தார் மாதவி. அவரால் இங்கே விறாந்தையிலிருந்து வெளி வாசல் வரையும் பார்க்க முடியும். அதேபோல் சமயற்கட்டில் நிற்பவர்களோடும் பார்த்துப் பேச முடியும்.
அப்போதுதான் தூயவனின் பைக் வந்து அவர்கள் வீட்டின் முன்னே நின்றது.
“தூயவனோ மாதவி? என்ன நேரத்துக்கே வந்திட்டான்?” என்று கேட்டபடி நீராவியில் அவித்து இறக்கிய இடியப்பங்களை இடியப்பத் தட்டிலிருந்து பிரித்தெடுத்துச் சட்டி ஒன்றினுள் அடுக்கினார் தேவகி.
“ஓமக்கா தம்பிதான்.” என்று அவருக்குப் பதில் சொல்லிவிட்டு, “என்னப்பு, நேரத்துக்கே வேலை முடிஞ்சுதா? எங்க குரு?” என்று கேட்டார் மாதவி.
அவரின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் சரக்கென்று ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு, கருணாகரனின் முன்னே வந்து அமர்ந்தான் தூயவன்.
மிதிலனோடு கூட விளையாடப் போகவில்லை. அவன் பஸில் அடுக்கக் கேட்டும் அசையாமல் அமர்ந்திருந்தான்.
அதில் எல்லோர் பார்வையும் அவனிடம் குவிந்தது.
அவன் முகத்தில் மிகுந்த கடினம். மேசையின் மேல் இருந்த கரங்கள் இரண்டும் மிக இறுக்கமாகக் கோத்திருக்க, நெஞ்சு வேக வேகமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. பார்வை ஒருவிதப் பிடிவாதத்துடன் கோத்திருந்த கைகளிலேயே நிலைத்திருந்தது.
“என்ன தம்பி?” என்று கருணாகரன்தான் கேட்டார்.
அவன் அசையவில்லை. அப்படியே அமர்ந்திருந்தான். ஆனால், அவன் தாடை இன்னும் இறுகியது.
அதைக் கவனித்த கருணாகரன், “என்னய்யா, ஆரோட என்ன கோவம்?” என்றார் திரும்பவும்.
அப்போதும் ஒன்றும் சொல்லாதவன் நிமிர்ந்து அவரைப் பார்த்தான். அவன் விழிகள் அவர் விழிகளுக்குள்ளேயே புகுந்து நெஞ்சையே அலசியது.
அவர் புருவங்கள் சுருங்கின. “என்ன, ஏதும் பிரச்சினையா?” என்றார் திரும்பவும்.
மகனின் அமைதியும் கணவரின் கேள்விகளும் ஏதோ சரியில்லை என்று சொல்ல அடுப்பை நிறுத்திவிட்டு இங்கே வந்தார் தேவகி. துளசிக்குக் காரணமே தெரியாமல் நெஞ்சு அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.
“என்னய்யா? அதான் அப்பா கேக்கிறார் எல்லா. என்ன எண்டு சொல்லன்.” என்றார் தேவகி.
“இசையைக் காணேல்ல.” என்றான் இப்போதும் கருணாகரனிடமிருந்து தன் பார்வையை அகற்றாமல்.
“காணேல்ல எண்டா?” கருணாகரனும் அவனையே பார்த்திருக்க தேவகிதான் கேட்டார்.
இதற்குள், “என்ன தம்பி சொல்லுறீங்க, இசைக்கு என்னப்பு? இப்ப அவா வீட்டை வந்திருக்கோணுமே.” என்று அந்தரித்த மாதவி, தன்னால் தனியாக எழுந்துகொள்ள இயலாது என்பதையே மறந்து எழுந்துகொள்ள முயன்றார். அவருக்கு அந்த நொடியே ஓடிப்போய் யாழிசையைப் பார்த்துவிட உள்ளம் துடித்தது. உடல் ஒத்துழைக்காமல் போக, விழப்போனார்.
“அச்சோ சித்தி! எங்க எழும்புறீங்க?” என்றபடி ஓடிப்போய் அவரைத் திரும்பவும் அமர்த்தினாள் துளசி.
“என்னம்மா அண்ணா சொல்லுறார்? எனக்குப் பயமா இருக்கே.”
“பொறுங்க சித்தி கேப்பம். நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க.”
“இண்டைக்கு விடிய அனுராதபுரத்தில எக்ஸ்சாம முடிச்சிட்டு, மூண்டு மணிபோல வீட்டுக்கு வந்திடுவன் எண்டு சொல்லிப்போட்டு, பஸ் ஸ்டாண்டுக்கு வந்தவள் இப்ப வரைக்கும் வீடு வந்து சேரேல்லையாம். ஃபோனும் ஓஃப்ல இருக்கு.” என்று சுருக்கமாக விவரம் சொன்னான் தூயவன்.
“ஓமோம், இண்டைக்கு வந்திடுவன் எண்டு நேற்றுக் கதைக்கேக்க எனக்கும் சொன்னவா. இந்தச் சுவர்ணாவை வரச் சொல்ல வரேல்ல. இல்லாட்டி அவாவைப் பாக்க போயிருப்பன்.” என்று பதறினார் மாதவி.
“சரி, அந்தப் பிள்ளையக் காணேல்ல எண்டா என்னத்துக்கு இஞ்ச வந்திருக்கிறீங்க தம்பி? இன்னும் நாலு பேரைக் கூட்டிக்கொண்டு போய் எல்லா இடமும் தேடுங்கோ. போலீஸ்ல ஏதும் கதைக்கோணுமா. அதுக்கு நான் வரோணுமா?” என்று வாய் திறந்தார் கருணாகரன்.
“உங்களுக்கும் இதுக்கும் ஏதும் சம்மந்தம் இருக்காப்பா?” அவர் கேள்விக்குப் பதில் சொல்லாதவன் அவரிடம் தான் ஒரு கேள்வியைக் கேட்டான். அவன் விழிகள் அவரை விட்டு இம்மியும் அகலவில்லை.
தேவகி குழம்பிப்போனார். “என்ன தம்பி கதைக்கிறாய்? அந்தப் பிள்ளை வந்து சேராததுக்கும் அப்பாக்கும் என்ன சம்மந்தம்? பஸ் எங்கயும் பிரேக்கடவுன் போல. இல்ல, இண்டைக்கு வரவேண்டிய பஸ் வரேல்லையோ ஆருக்குத் தெரியும். ஃபோனும் ஓஃப் எண்டேக்க எடுத்துச் சொல்லேலாம நிக்கிறா போல.” என்றார் அவர்.
“இல்ல, அவள் சொன்ன பஸ் இஞ்ச வந்திட்டுது. இண்டைக்கு வவுனியா வரவேண்டிய எந்த பஸ்ஸும் எங்கயும் பிரேக் டவுன் ஆகவும் இல்ல, வராம நிக்கவும் இல்ல. எல்லாத்தையும் குரு விசாரிச்சிட்டான்.”
“சரி, அப்ப அப்பா சொன்ன மாதிரி உங்கட வேனில அனுராதபுரம் வரைக்கும் போய்ப் பாத்துக்கொண்டு வாய்யா. இஞ்ச அப்பா போலீசில் சொல்லித் தேடட்டும். அத விட்டுப்போட்டு இஞ்ச வந்திருந்து அப்பாட்ட என்ன கேட்டுக்கொண்டு இருக்கிறாய்?”
அவருக்கு மகன் அப்படிக் கணவரைக் கேட்டது பிடிக்கவில்லை. அதோடு யாழிசையை இசை என்பதும், அவள் இவள் என்று அவன் பேசுவதும் நெருடியது. அதில் வேக வேகமாகப் படபடத்தார்.
ஆனால், இங்கே அப்பா மகன் இருவர் பார்வையும் மற்றவரை விட்டு அகலவேயில்லை.
“நீங்க இன்னும் நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லேல்ல அப்பா.” என்று அவன் அதிலேயே நின்றான்.
“என்ன சொல்ல இருக்குத் தம்பி? என்ர மகன் என்னட்ட இப்பிடி ஒரு கேள்வியைக் கேக்கிறானே எண்டு கவலைப்படவா, இல்ல, எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை எண்டு அவனுக்கு நான் நிரூபிச்சாத்தான் அவன் என்னை நம்புவானா?” என்று கேட்டார் அவர்.
தேவகிக்கே கணவர் அப்படிச் சொன்னதில் வலித்தது. தவிப்புடன் மகனைப் பார்த்தார். ஆனால், அவன் அசையவில்லை. “அப்ப இசை காணாம போனதுக்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்ல?” விழிகளில் இன்னும் கூர்மை ஏற வினவினான்.
“இல்ல.”
“பிறகு ஏன் சண்முகம் பெரியப்பா போய் நேசனோட கதைச்சவர்?”
“அவர் நேசனோட போய்க் கதைச்சா என்ன? அவருக்கு அவனிட்ட ஏதும் அலுவல் இருந்திருக்கலாம். அதை ஏன் என்னட்ட வந்து கேக்கிறீங்க?”
“அவர் எந்த அலுவலாவும் கதைக்கேல்ல. என்னையும் இசையையும் பற்றிக் கதைச்சிருக்கிறார். எங்களைப் பற்றிக் கதைக்க அவர் ஆர்? என்னவா இருந்தாலும் நீங்க என்னட்டத் தானே கதைச்சிருக்கோணும்?” என்றவனின் பேச்சில் துளசி கிடுகிடு என்று நடுங்கினாள் என்றால் தேவகி நெஞ்சில் கையை வைத்திருந்தார்.
மாதவிக்கு நடப்பதையும் அவன் சொல்கிறவற்றையும் கிரகித்துக்கொள்ள முடியாமல் இருந்தது. அல்லது, தான் கிரகிப்பதைத்தான் காதால் கேட்கிறோமா என்கிற சந்தேகத்தோடே அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.
கருணாகரனின் முகம் கடினப்பட்டது. கண்களிலும் கோபம். ஆனாலும் நிதானத்தைக் கைவிடாமல், “தம்பி, சண்முகம் அண்ணா நேசனிட்ட என்ன கதைச்சார் எண்டு எனக்குத் தெரியாது. முதல் இதெல்லாம் உண்மைதானா எண்டு தெரியாம, ஆராவது வந்து எதையாவது சொன்னா இப்பிடித்தான் எங்கட இனசனத்தச் சந்தேகப்படுவீங்களா?” என்று மெலிதாகக் கண்டித்தார்.
“என்னப்பா, கெட்டித்தனமா கதைக்கிறதா நினைப்பா? பெரியப்பா போய்க் கதைச்சது உண்மை. அது எனக்கு வடிவாத் தெரியும். இப்ப என்ர கேள்வி ஒண்டே ஒன்றுதான். நான் சம்மந்தப்பட்ட ஒரு விசயத்த உங்களுக்குச் சொல்லாம சண்முகம் பெரியப்பா நேசனோட போய்க் கதைச்சிருக்கிறார். இத நான் நம்போணுமா?” என்றதும் அவ்வளவு நேரம் பொறுமையாக இருந்த கருணாகரன், நாற்காலியைத் தள்ளிக்கொண்டு பட்டென்று எழுந்து நின்றார்.
“அப்ப என்ன நான் பொய் சொல்லுறன் எண்டு சொல்லுறியா? பெத்த அப்பா என்னை நம்பமாட்டாய். ஆரோ ஒருத்தன் வந்து எதையோ சொன்னா நம்பிடுவியா?” என்று சினத்துடன் சீறினார்.
அதுவரை அதிர்ந்துபோய் அமர்ந்திருந்த மிதிலன் அழ ஆரம்பிக்க, ஓடி வந்து மகனைத் தூக்கிக்கொண்டாள் துளசி.
“காணாம போயிருக்கிறது ஆரோ இல்ல. இசை அப்பா. அவள் எனக்கு வேணும்!” என்று தகப்பனுக்கு இணையாகத் தானும் கர்ஜித்தான் தூயவன்.
தேவகிக்கோ அவன் சொன்னதைக் கேட்டு நெஞ்சின் துடிப்பே நின்றுவிடும் போலிருந்தது. அவள் எதற்கு அவனுக்கு? ஆரம்பத்தில் இருந்தே இப்படித்தானே சொல்லிக்கொண்டிருக்கிறான். வேகமாகக் கணவரைத்தான் பார்த்தார்.
“என்ன கதைக்கிறாய் எண்டு யோசிச்சுக் கதை தம்பி!” என்று அடிக்குரலில் மகனை அதட்டினார் கருணாகரன்.
“ஐயா தூயவா, இஞ்ச நிண்டு சண்டை பிடிக்கிறத விட்டுட்டுப் போய் இசையைத் தேடப்பு. என்ர குஞ்சு ஆரிட்டை மாட்டி, என்ன பாடு படுறாளோ தெரியாதப்பு.” என்று அழுதார் மாதவி.
தேவகிக்கும் அந்தப் பயம் இருந்தாலும்
நொடிக்கு நொடி சூடாகிக்கொண்டு போகும் வீட்டு நிலையைக் கண்டு அவரின் ஈரக்குலையே நடுங்கியது. அதில், “சித்தி சொன்ன மாதிரி இஞ்ச நிண்டு நேரத்தை வீணாக்காம போய் அந்தப் பிள்ளையைத் தேடு தம்பி.” என்று அவனை அங்கிருந்து அனுப்ப முயன்றார்.
“சும்மா போய் ஊர் முழுக்கத் தேடுறதுக்கு ஒளிச்சு வச்ச ஆளிட்டையே கேக்கிறதுதானே ஈஸி?” என்றான் மகன்.
“தம்பி, என்ன கதைக்கிறாய்? அப்பா ஏன் அந்தப் பிள்ளையை ஒளிச்சு வைக்கப்போறார்? அவர் இவ்வளவு சொல்லியும் அவரை நம்பாம இருப்பியா?” என்று திரும்பவும் அதட்டினார் தேவகி.
“நம்ப மாட்டான். அவளின்ர விசயத்தில என்னைத் தவிர இந்த உலகத்தில ஆரையும் நான் நம்ப மாட்டன்!” என்று மேசையில் அடித்துக்கொண்டு எழுந்து நின்ற மகனைக் கண்டு தேவகிக்கு ஒரு கணம் சுவாசமே நின்றுபோயிற்று.
பெற்ற தாய் தகப்பன் தம்மிடமே அவன் காட்டும் இந்த ஆக்ரோசம் அவரை அச்சுறுத்தியது என்றால், அந்தப் பெண்ணிற்காக இந்தளவுக்குப் போவானா என்பதை அவரால் நம்பவே முடியவில்லை.
“எனக்கு அவள் வேணும். ஒரு சின்ன கீறல் கூட இல்லாம அவள் என்னட்ட வந்து சேரோனும். அத விட்டுட்டு அவளுக்கு மட்டும் ஏதும் நடந்தது? அதுக்குப் பிறகு என்னை நீங்க மகனாவும் பாக்க மாட்டீங்க, மனுசனாவும் பாக்க மாட்டீங்க!” என்று கருணாகரனை விரல் நீட்டி எச்சரிக்கவும் கொதித்துவிட்டார் தேவகி.
“ஆருக்கு முன்னால நிண்டு விரல் நீட்டிக் கதைக்கிறாய்? அந்தளவுக்கு பெரிய ஆளா நீ? உன்னைப் பெத்து, பாத்து பாத்து வளத்துவிட்ட மனுசனுக்கு நீ காட்டுற மரியாதை இதானாடா? இல்ல எவளோ ஒருத்தி எங்களை விட உனக்கு முக்கியமா போயிட்டாளா? முதல் நீ மன்னிப்புக் கேள். அப்பாட்ட மன்னிப்புக் கேளடா!” என்று அவனை இழுத்துக்கொண்டு போய் அவர் முன்னால் நிறுத்தினான்.
“தாராளமாக் கேக்கிறன் அம்மா. அதுக்கு முதல் இசை கிடைக்கோணும். அவள் காணாம போனதுக்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எண்டு எனக்குத் தெரியட்டும். அதுக்குப் பிறகு வந்து மன்னிப்புக் கேக்கிறன்.” என்றவன் அதன் பிறகு அங்கே நிற்கவில்லை.
விறுவிறுவென்று வாசலை நோக்கி நடந்தவன் நின்று திரும்பி, “உங்களுக்கு ஒண்டுமே தெரியாது என்னப்பா? அதுவும் நல்லதுதான். வேற ஆரும் சொல்லித் தெரிய முதல் நானே சொல்லித் தெரியிறதுதான் நல்லது.” என்றவன் அங்கு நின்ற நால்வரையயும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “இசையை நான் விரும்புறன். அவளைத்தான் கட்டப்போறன். இந்த வீட்டுக்கு மருமகள் அவள்தான். ஓகேயா? இனி ஆரும் வந்து உங்களிட்ட சொல்லுறதுக்கு எதுவும் இல்ல.” என்றுவிட்டுப் போனான்.

