அத்தியாயம் 37
இரவு ஒன்பதைத் தாண்டிய அந்தப் பொழுதிலும் அனுராதபுரம், பேருந்துத் தரிப்பிடத்திலிருந்த எந்தக் கடைகளும் சாற்றியிருக்கவில்லை. இன்னுமே சொல்லப்போனால் பகலை விடவும் இன்னுமே ஜெகஜோதியாக ஆட்களின் நடமாட்டத்தாலும் விளக்குகளின் வெளிச்சத்தாலும் கலைகட்டியிருந்தது.
பெரும் தவிப்புடன் அந்த இடம் முழுவதும் நண்பர்கள் இருவரும் ஓடியோடித் தேடினார்கள். வீணாகச் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடங்களும் அவளுக்கு ஆபத்தாகப் போய் முடிந்துவிடுமோ என்கிற பயம், அவர்களை விரட்டிக்கொண்டு இருந்தது.
எங்குமே யாழிசை இல்லை. வவுனியா செல்லும் பஸ் எந்த இடத்தில் நிற்கும் என்று கேட்டு, அந்த இடம் தெரிவதுபோல் இருந்த கடைகளுக்குச் சென்று, யாழிசையின் புகைப்படத்தைக் காட்டி, அன்று காலை அவளைப் பார்த்தார்களா என்று விசாரித்தார்கள்.
யாராலும் அந்தளவில் நினைவு கூர்ந்து சொல்ல முடியவில்லை. ஏதும் அசம்பாவிதங்கள் நடந்ததா என்றும் கேட்டுப்பார்த்தான் தூயவன். சீசீடிவி இருக்கிறதா என்றும் கவனித்தான்.
எல்லாக் கடைகளிலும் கடைக்குள்ளும் கடை வாசல் விழுகிற மாதிரியும் கமெராக்கள் பொறுத்தப்பட்டிருந்தாலும் அவள் நின்றிருக்கக்கூடும் என்று கணிக்குமிடத்தைப் பார்ப்பதுபோல் எதுவுமே இல்லை.
அப்படியே சோர்ந்து நின்றுவிட்டான் தூயவன். அவள் தொலைந்துபோன பாதையின் பக்கமாகச் சின்ன வெளிச்சம் கூட விழமாட்டேன் என்கிறதே!
வவுனியாவிலிருந்து வரும்வரையில் இங்கு வந்தால் ஏதாவது ஒரு சின்னத் துணுக்காவது கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் ஓடி வந்தான். இனி? ‘எங்கயடி இருக்கிறாய்?’ மனம் சத்தமாக ஓலமிட்டது. உயிர் அழுதது. அங்கிருந்த அரைக்குந்து ஒன்றில் முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்துவிட்டான்.
குருவுக்கும் திக்குத் தெரியாத நிலை. அவசர தேவைகள் தவிர்த்து ஒரு இடத்தில் கூட நிறுத்தாமல் ஓடி வந்தார்கள். இனி?
“சோர்ந்து போகாத மச்சான். கட்டாயம் கிடைப்பா.” அவன் தோளை அழுத்தி விட்டபடி சொன்னான்.
“பயமா இருக்கு மச்சான்.” முகத்தை மூடியிருந்த கைகளை விலக்காமலேயே உடைந்த குரலில் சொன்னான் தூயவன்.
தன் தந்தைதான் இந்த வேலையைப் பார்த்திருக்கிறார் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருந்த வரையில் அவளை மறைத்து வைத்திருப்பாரே தவிர, அவளுக்கு எந்த ஆபத்தும் வராது என்கிற எண்ணம் இருந்தது. இப்போதோ அப்படி இல்லையோ, யாரும் கயவன் காடையன் கண்ணில் பட்டு, வேறு விதமான அசம்பாவிதங்கள் ஏதும் அவளுக்கு நடந்துவிட்டதோ என்று நினைத்து நடுங்கினான்.
“விசராடா உனக்கு? சும்மா கண்டதையும் யோசிக்காத. நிச்சயமா எங்கட கண்ணில படுவா!”
தூயவன் எதுவுமே பேசவில்லை. அவனுக்கு அவனையே சமாளித்துக்கொள்வதற்கு சிறிது நேரம் தேவைப்பட்டது.
“மச்சான்! உடஞ்சிடாதயடா. தைரியமா இரடா! கிடைப்பாடா!” அவன் தோளில் சற்று அழுத்தமாகத் தட்டிக்கொடுத்தான்.
உண்மை! நிச்சயம் கிடைப்பாள். அப்படி எப்படி அவனை விட்டுவிட்டுப் போவாள்? அவள் அவனுடைய இசை. இல்லாமல், அடி நெஞ்சிலிருந்து வெறுத்து ஒதுக்கியவளை அவனின் உயிரின் ஒவ்வொரு அணுவும் நேசிக்குமா என்ன?
அவள் பிறந்ததே அவனோடு வாழ்வதற்குத்தான். பிறகு எப்படிக் காணாமல் போவாள்?
அன்று இவர்கள் அழைத்துச் செல்ல வந்தபோது யாழிசையோடு நின்ற பெண்ணின் நினைவு வர, உடனேயே நளினிக்கு அழைத்து, அந்தப் பெண்ணின் கைப்பேசி இலக்கத்தை வாங்கி, அவளோடு பேசினான்.
ஏற்கனவே நேசன் அழைத்து விசாரித்திருந்ததில் அவளுக்கும் யாழிசை காணாமல் போன விடயம் சென்று சேர்ந்திருந்தது. அவளும் மிகவும் பயந்துபோயிருந்தாள்.
அவளிடமிருந்து உருப்படியாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், யாழிசை அனுராதபுரம் பஸ் தரிப்பிடம் வரை வந்திருக்கிறாள் என்பது உறுதியானது.
அதற்குச் சான்றாக ‘பஸ் ஏறிட்டியாடி?’ என்று சந்தியா எழுதிக் கேட்டதற்கு, ‘இன்னும் இல்லையடி. நேரத்துக்கே வீட்ட போய் நல்ல நித்திரை கொள்ளுவம் எண்டு பாத்தா, இந்த பஸ் இண்டைக்கு வராது போல இருக்கு.’ என்று யாழிசை சலிப்புடன் அனுப்பிய பதிலையும் சேர்த்துத் திரைப்பிடிப்பு(screenshot) எடுத்து அனுப்பியிருந்தாள் சந்தியா.
அன்று பல்கலையின் கடைசி நாள் என்பதில் நிச்சயமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருப்பார்கள். அதையும் கேட்டு வாங்கினான். அவளும் அன்று எடுத்த அத்தனை புகைப்படங்களையும் அனுப்பிவைத்தாள்.
அவை அத்தனையிலும் மங்காத சிரிப்பும், சோகம் அண்டாத முகமுமாக நின்றிருந்தாள் அவனுடைய இசையரசி.
அவள் முகத்தை மட்டும் பெரிதாக்கி மெல்ல வருடினான். தொண்டைக்குள் என்னவோ அடைத்துக்கொண்டு வந்தது. பட்டென்று கைப்பேசியை அணைத்து, காற்சட்டைப் பைக்குள் போட்டுவிட்டு நிமிர்ந்து நின்று, வாயால் ஊதிக் காற்றை வெளியேற்றித் தனக்குள் உருவாகும் அந்த அழுத்தத்தைக் குறைக்க முயன்றான்.
அதுவும் ஒரு நொடிக்குத்தான்.
திரும்பவும் அந்தப் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு இருவரும் இரு திசையில் சென்று அங்கிருந்த கடைகள் எல்லாம் ஏறி இறங்கினார்கள்.
கை மணிக்கூடுகள் திருத்திக்கொடுக்கும் வயதான ஐயா ஒருவர், ஒரு கடையின் முன்னால், குட்டி மேசை ஒன்றைப் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். அவருக்கு அவன் படும் பாடு விளங்கியது போலும்.
“ஒரு கொஞ்ச நேரத்துக்கையே எத்தனையோ பேர் வந்துபோற இடமப்பு இது. ஆனா, எதிர்ல ஒரு ஷூக்கடை இருக்குப் பாருங்க. அந்தக் கடைல போன வருசம் களவு போனது. அதால எந்தப் பக்கத்தில இருந்து ஆர் வந்தாலும் தெரியிற மாதிரி நிறையக் கமெராக்கள் பூட்டினதா சொன்னவே. அங்க போய் விசாரிச்சுப் பாருங்கோ.” என்று தகவல் சொன்னார்.
அவர் காட்டிய கடை, பேருந்து நிலையத்துக்கு நேர் எதிரில் இருந்தது. அவர்கள் பூட்டுவதற்கு ஆயத்தமாவது தெரியவும் வேகமாக அங்கே ஓடினார்கள்.
விவரம் சொல்லிக் கேட்டபோது, “அங்க வரைக்கும் ரெக்கோர்ட் ஆகும்தான். ஆனா தெளிவாத் தெரியுமா தெரியாது. எதுக்கும் வாங்க பாப்பம்.” என்று அழைத்துப்போய்க் காட்டினார்கள்.
அவர்கள் சொன்னது போலவே தூரக் காட்சியாக என்றாலும் தெரிந்தது. அதைக் கண்டே பரபரப்பாகிப்போனான் தூயவன். நளினி கடைசியாக அவளோடு பேசிய நேரமும், சந்தியாவோடு இவள் சேட் பண்ணிய நேரமும் தெரியுமாதலால் அதை ஒட்டிச் சற்று முன்னரிலிருந்து எடுத்துப் பார்க்க ஆரம்பித்தார்கள்.
அன்று அவள் அணிந்திருந்த உடை வேறு இப்போது தெரிய வந்துவிட்டதால் அவள் பேருந்து தரிப்பிடத்தினுள் வரும்போதே கண்டுபிடிக்க முடிந்தது.
அதைக் கண்ட தூயவனின் மனநிலையை அவனாலேயே கணிக்க முடியவில்லை. இதயத்தின் துடிப்பு கூடிப்போனது. பார்த்துவிட மாட்டோமா என்று துடித்துக்கொண்டிருக்கும் அவன் உயிர். அவன் இருக்கும் அதே இடத்தில் அன்று காலையில் நின்றிருக்கிறாள். இப்போது தொலைத்துவிட்டு நிற்கிறான். குருவின் கையை இறுக்கிப் பற்றிக்கொண்டு பதிவு செய்யப்பட்டிருந்த அந்தக் காட்சியில் அவளையே உற்றுக் கவனித்தான்.
எந்தப் பயமும் பரபரப்பும் பதற்றமும் இல்லாத நிதான நடை. தோள்ப்பையை ஒரு பக்கத் தோளில் போட்டிருந்தாள். வவுனியா பஸ் வந்து நிற்கும் இடத்துக்கு நிதானமாகச் சென்று நின்றாள். ஒரு நான்கு நிமிட இடைவெளியில் எதிரில் இருக்கும் கடைக்குப்போய் ஏதோ வாங்கி வருவதும் தெரிந்தது.
அதன் பிறகு அவளிடம் மெல்லிய அசைவுகள் தெரிந்தனவே தவிரக் குறிப்பாக என்ன செய்கிறாள் என்று கணிக்க முடியாத அளவு தூரத்தில் இருந்தாள்.
நேரம் கரைய கரைய அவள் காணாமல் போன அந்த நொடி வந்துவிடப் போகிறது என்கிற அழுத்தத்தில் அவன் இறுக்கம் கூடிற்று. குரு அவன் கையை அழுத்திக்கொடுத்தான்.
சற்று நேரத்தில் மினி பஸ் வகையொன்று மஞ்சளும் சிவப்பும் கலந்த நிறத்தில் பேருந்து நிலையத்தினுள் மெதுவாக நுழைந்து ஓரிடத்தில் நின்றது.
யாழிசையிடம் ஒரு அசைவு. அவள் அந்த மினி பஸ் பக்கமாகப் பார்ப்பது போலொரு தோற்றம். உடலும் உள்ளமும் பரபரப்பாக, இன்னும் உற்றுக் கவனித்தார்கள்.
சில நொடிகளின் வித்தியாசத்தில் யாழிசையாகவே நடந்து சென்று அந்த மினி பஸ்ஸில் ஏறினாள். அந்தப் பேருந்தும் வந்தது போலவே மிக மெதுவாகப் பேருந்து நிலையத்தைச் சுற்றிக்கொண்டு சென்று வெளியேறியது.
பார்த்திருந்த எல்லோருக்குமே வியர்த்துப்போயிற்று. ஆக, யாரும் அவளைக் கடத்தவோ, இழுத்துச் செல்லவோ இல்லை. அவளாகத்தான் போயிருக்கிறாள்.
அது வவுனியா செல்லும் பஸ் என்று சொல்லவும் முடியவில்லை. காரணம், அவள் நின்ற இடத்தில் நின்றிருந்த மற்ற யாரும் அதில் ஏறவில்லை. அவள் மட்டுமே ஏறிப்போனாள்.
ஆக, நிச்சயமாக அவளுக்குத் தெரிந்த யாரோதான் அதில் இருந்திருக்க வேண்டும். இல்லாமல் அவளாகப் போயிருக்கப் போவதில்லை.
அப்படி யார்? அவ்வளவு நம்பிக்கையாக அதுவும் அனுராதபுரத்தில்?
அவன் வீட்டு உறவுகள் யாராக இருந்தாலும் அவள் போயிருக்கப் போவதில்லை. விமலோடும் நிச்சயமாகப் போக மாட்டாள். அவளுக்குப் பார்த்த பெடியன்? திருமணத்திற்கு பேசினார்களே தவிர, இதுவரையில் இன்னும் ஒரு தடவை கூட அவர்கள் தனியாகச் சந்தித்துக்கொண்டதில்லை என்று நேசன் அன்று அவனோடு பேசியதை வைத்துக் கணித்திருந்தான்.
இன்னும் யார்?
“அவாவோட படிச்ச பிரண்ட்ஸ் எல்லாருமா சேர்ந்து டூர் மாதிரி போச்சினமோ மச்சான்? வீட்டில கேட்டா விடாயினம் எண்டு சொல்லாம போனாவோ? பஸ் வேற மினி பஸ் மாதிரி இருக்கேடா.” யோசனையோடு வினவினான் குரு.
மறுப்பாகத் தலையை அசைத்துவிட்டு, “அந்தளவுக்குப் பொறுப்பில்லாம நடக்கிறவள் இல்ல அவள்.” என்றான் தூயவன்.
வாய் நண்பனுக்கான பதிலைச் சொன்னாலும் அவன் மூளை மிக மிக வேகமாக இயங்கிக்கொண்டிருந்தது. என்னவோ ஒரு பரபரப்பு அவனுள். ‘பஸ், மிக நன்றாகத் தெரிந்த நபர். கண்டு பிடி தூயவா! கண்டு பிடி! அந்த ஆள் உன்ர கண்ணுக்கு முன்னாலதான் நிக்கிறான். விட்டுடாத! பஸ், அவளுக்கு நல்லாத் தெரிஞ்ச ஆள்! அகிலன்! சுவர்ணாவின் கணவன்.’ பளிச்சென்று மின்னல் வெட்டியதுபோல் அவன் முன்னே பதில் வந்து நின்றது.

