கடன் அன்பை முறிக்கும் 38 – 1

அத்தியாயம் 38

 

 

அடுத்த நாளும் விடிந்தது. நேசன் வீடு மொத்தமாய் இடிந்துபோயிருந்தார்கள். எல்லோர் நெஞ்சுத் தண்ணீரும் வற்றிப் போயிருந்தது. யாழிசை காணாமல் போய் ஒரு இரவு கடந்து போயிற்றே. அது இன்னுமின்னும் அவர்களைப் பதற வைத்துக்கொண்டிருந்தது.

 

காவல் நிலையத்திலிருந்து எந்தத் தகவலும் இல்லை. விடிந்ததும் விடியாததுமாக நேசன் போய்க் கேட்டும் பிரயோசனமான எந்தப் பதிலும் தரவில்லை. தன் பங்குக்கு அனுராதபுரம் சென்று பார்க்கப் புறப்பட்டான்.

 

முதலில் வேண்டாம் என்று சொல்லிப்பார்த்த தூயவன் பிறகு விட்டுவிட்டான். எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் நேசன் இவனை முழுமையாக நம்பப்போவதில்லை என்று தெரிந்தது. அவன் ஆறுதலுக்கு அவனும் தேடட்டும் என்று பேசாமல் இருந்தான். அவர்கள் பார்த்த சீசீடிவி ஃபுட்டேஜ், அகிலன் மீது விழுந்த சந்தேகம் என்று எதைப் பற்றியும் வாய் விடவில்லை.

 

தூயவனும் குருவும் யாருமறியாமல் அகிலனின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களுக்கே அதிர்ச்சி தரும் விதமாக, அடுத்த நாள் மதியம் எப்போதும்போல் வேலைக்குப் போனான் அகிலன்.

 

கருணாகரன் அன்று முழுக்க வீட்டை விட்டு வெளியேறவே இல்லை. சண்முகம் உட்பட வெளியாட்கள் யாரையும் பார்க்கவும் இல்லை. சாப்பாட்டு மேசையில் வைக்கப்பட்ட அவர் கைப்பேசியை அவர் தொடவும் இல்லையாம் என்று சொன்னாள் துளசி.

 

இப்படி அவர் எத்தனையைச் செய்தாலும் அவர் இல்லையோ என்கிற திசையில் யோசிக்கக் கூடத் தூயவன் தயாராக இல்லை. நடக்கிற எதற்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லை என்று காட்டும் அவரின் முயற்சியில் விளைந்த செயல்கள்தான் இவை எல்லாம் என்று புரிந்துகொண்டான்.

 

“இனி என்னடா செய்றது?”

 

தூயவனுக்கும் தெரியவில்லை. அவளுக்குப் பார்த்த பெடியன் வேலை செய்யும் இடத்துக்கு நேராகவே சென்றார்கள். அங்கு அவன் இருந்தான். அங்கிருந்த மற்றைய ஆட்களை, செக்கியூரிட்டையை என்று விசாரித்தபோது அவன் மீது துளியும் சந்தேகம் வரவில்லை.

 

“விமலோடா?” ன்றான் குரு.

 

ஒரு கணம் புருவம் சுருக்கிய தூயவன் அடுத்த நொடியே பரபரத்துப் போனான். “அவனாத்தான் இருக்கோணும். அவனை நம்பி இவள் போகமாட்டாள். அகிலன் இசையத் தூக்கிக் குடுக்க விமல் மறச்சு வச்சிருக்கிறான். அவனைப் பிடிச்சா தெரிய வரும்.”

 

திரும்பவும் அவன் நண்பனைப் பிடித்து, அவன் மூலம் விமலோடு பேச வைத்தார்கள்.

 

“டேய், இன்னும் எத்தினை நாளைக்குக் கொழும்பில நிப்பாய்?”

 

“என்னடா, ஆளாளுக்கு எடுத்து இதையே கேக்கிறீங்க?” என்று சினந்தான் விமல்.

 

“ஆளாளுக்கு எண்டா? வேற ஆர் கேட்டது?”

 

“அந்தத் தூயவன்தான். பணம் இருக்கிற திமிர். என்னவோ தான் பெரிய இவன் எண்டு நினைப்பு. எருமைக்கு வல்லவனுக்கும் வல்லவன் வையகத்தில் உண்டு எண்டு தெரியாமப் போச்சு.” என்று பல்லைக் கடித்தான் விமல்.

 

இங்கே அவன் நண்பனுக்குப் பயத்தில் தொண்டைத் தண்ணீரே வற்றிப் போயிற்று. மிடறு விழுங்கியபடி தூயவனைப் பார்த்தான்.

 

தூயவன் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. தொடர்ந்து பேசு என்பதுபோல் சைகை செய்தான். இவனுக்குப் பேச்சு வருவேனா என்றது.

 

நேரடியாகத் தூயவனால் பாதிக்கப்பட்டதில்லை என்றாலும் அருளின் நிலை, அருளை வரவழைப்பதற்காக இவன் விமலையும் அவன் குடும்பத்தினரையும் போட்டுப் படுத்திய பாடுகள், ஏன் பைக்கை தூக்கி வைத்துவிட்டு விமலை அலையவிட்டது என்று எல்லாம் இவனுக்கும் தெரியும் என்பதில் நடுங்கினான்.

 

ஆனால் அங்கே விமல், “என்னத்துக்குக் கேட்டனி? வர ஒரு கிழமை ஆகும் எண்டு சொல்லிப்போட்டுத்தானேடா வந்தனான்.” என்றான்.

 

“தெரியுமடா. எனக்கும் திடீர் எண்டு ஒரு செமினார் அரேஞ்ச் பண்ணி இருக்கு. அதுக்கு நானும் கொழும்புக்கு வரோணும். அதான் வந்தா உன்னோடயே நிண்டுட்டு உன்னோடயே திரும்பி வரலாம் எண்டு நினைச்சன். எனக்கு நீ, நீ நிக்கிற ஹொட்டலின்ர அட்ரசை போட்டு விடு.”

 

“ஓ…” என்று இழுத்தவனின் பேச்சுத் தேங்கிப் போனது. பிறகு வேகமாக, “அதடா விடியத்தானே வந்து இறங்கினனான். நேரத்தை வீணாக்க வேணாம் எண்டு ஜெயிலுக்கு போய்க் கதைச்சிட்டு இப்பதான் சாப்பிட வந்தனான். இன்னும் ரூம் எடுக்கேல்ல. எடுத்திட்டு உனக்கு மெசேஜ் பண்ணுறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

 

“அவன் மெசேஜ் பண்ண மாட்டான். ஆனாலும் நீ டைம் பாத்து கோல் பண்ணிப் பார். அப்பிடி அவன் அட்ரஸ் போட்டா எனக்கு அனுப்பி விடு. போடாம ஃபோன தூக்காம இருந்தாலும் எனக்கு எடுத்துச் சொல்லோணும். சரியா?”

 

‘சரியா?’ என்று தூயவன் கேட்ட விதமே அதட்டுவது போலிருக்க, “சரி அண்ணா.” என்றான் அவன் உடனேயே.

 

“போன முறை மாதிரியே இதைப் பற்றி எந்தக் காலத்திலையும் நீ மூச்சே விடக் கூடாது. இல்லையோ…” என்றவன் ஆட்காட்டி விரலை மட்டும் ஆட்டிக் காட்டிவிட்டுப் போனான்.

 

வல்லவனுக்கும் வல்லவன் உண்டு என்று சொல்கையில் அவன் குரலில் தொனித்த அடக்க முடியாத வன்மமும், கடைசியாக அட்ரஸ் கேட்டதும் தெரிந்த தடுமாற்றமும் இவர்களின் சந்தேகம் சரியே என்று உறுதிப்படுத்தியது. ஆனாலும், அவன் அட்ரஸ் அனுப்பினால் யாழிசை அவனோடு இல்லாமல் இருக்கலாம், அனுப்பாவிட்டால் இருக்கிறாள் என்று இன்னும் கொஞ்சம் நம்பலாம் என்று எண்ணினான் தூயவன்.

 

இனி அவனைப் பிடிக்க வேண்டும். எப்படி? கொழும்பில் அவனின் தங்குமிடம் தெரியாது. ஆனால், அவன் தமையன் வாசம் செய்யும் சிறைச்சாலை தெரியுமே.

 

“டேய், பேசாம அகிலனைத் தூக்கிப் போட்டுக்கொண்டு போவமா?” என்றான் குரு.

 

“அவனுக்குத் தெரிஞ்சிருக்கும் எண்டு நினைக்கிறியா?”

 

உண்மைதானே. இத்தனைக்கும் காரணகர்த்தாவான கருணாகரன், எந்தப் பயமும் பதற்றமும் இல்லாமல், வீட்டை விட்டு அசையாமல் இருக்கிறார் என்றால் எத்தனை கச்சிதமாகத் தன் திட்டத்தைத் தீட்டியிருப்பார்?

 

இவர்களை விடவும் இன்னும் எத்தனை பேர் இதற்குள் இருக்கிறார்கள் என்று தெரியாமல், தாம் மோப்பம் பிடித்துவிட்டதை வெளியில் கசியவிட விரும்பவில்லை தூயவன்.

 

தன்னில் சந்தேகம் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே விமல் சிறைச்சாலைக்குச் சென்று தமையனை நிச்சயமாகச் சந்திப்பான். குறைந்த பட்சமாகச் சிறைச்சாலை வரை சென்று வந்து, தான் அதற்குத்தான் கொழும்பு போனேன் என்று காட்டவாவது முயல்வான். ஆக, அங்குப் போனால் அவனைப் பிடிக்கலாம்.

 

குருவை அனுப்பி வீட்டிலிருந்து தன் வேனை எடுத்துக்கொண்டு கொழும்புக்குப் புறப்பட்டான்.

 

அந்த நாளும் தன் முடிவை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருந்ததில் அவனுக்குள் மிகுந்த இறுக்கம். நிச்சயமாக இன்றும் அவனால் யாழிசையைக் கண்டு பிடிக்க முடியாது. ஆக, இந்த இரவும் அவள் துன்பத்துடன்தான் கழிக்க வேண்டும்.

 

அவனைப் பார்க்கிற பொழுதில் எல்லாம் நேசன் திட்டித் தீர்த்தான் என்றால், பெண்கள் கண்ணீராலேயே அவனைக் குற்றவாளியாக்கினர். எல்லாவற்றையும் அவன் ஒருவனே சமாளிக்க வேண்டியிருந்தது.

 

அவர்கள் கொழும்பு சென்று சேர்ந்தபோது இரவு பன்னிரண்டு தாண்டியிருந்தது. ரூம் எடுத்துத் தங்கவில்லை. சிறைச்சாலை இருக்கும் பகுதியில், அதே நேரம் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் ஒரு பார்க்கிங்கில் வேனைப் போட்டுவிட்டு, வெளியே இறங்கி நின்றான் தூயவன்.

 

விமலின் நண்பன் அழைத்து, விமல் அதற்குப் பிறகு அழைப்பை ஏற்கவே இல்லை என்று சொல்லியிருந்தான். அது மட்டும்தான் அவனிடம் இருக்கும் ஒரேயொரு நம்பிக்கை.

error: Alert: Content selection is disabled!!