“மச்சான், இண்டையோட இந்த ஓட்டம் முடியப் போறேல்ல. கிடைக்கிற நேரத்தில படுத்து எழும்படா. நீ ஒழுங்கா சாப்பிடவும் இல்ல.” என்றான் குரு.
அங்கே அவள், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்க, அவனுக்கு மட்டும் உறக்கம் வருமா என்ன? “நீ படுத்தெழும்பு.” என்றவன் வேனின் கதவை இழுத்துத் திறந்துவிட்டு, உள்ளே ஏறும் படியில் அமர்ந்துகொண்டு, கைப்பேசியில் இருந்த அவள் புகைப்படங்களை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தான்.
அத்தனையிலும் வெள்ளைச் சிரிப்புடன் நின்றிருந்தாள் அவள். ஒரு முறை கூட அந்தச் சிரிப்பை அவன் நேரில் பார்த்ததேயில்லை. இன்று பார்வை அதிலேயே இருக்க, உள்ளத்தால் அவளிடம் பேசிக்கொண்டிருந்தான். அது அவளைப் போய்ச் சேர்ந்து, அவளுக்கான ஆறுதலைக் கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கை.
மெல்ல மெல்லபொழுது விடிய ஆரம்பித்தது. ஒரு பொட்டுக்கு உறங்கவில்லை தூயவன். வேனை எடுக்கப் போகும்போதே இருவருக்குமான மாற்று உடைகளையும் தேவையான பொருட்களையும் அள்ளிப்போட்டுக்கொண்டுதான் வந்திருந்தான் குரு.
அதில், அங்கேயே பல்லுத் தீட்டி, முகம் கழுவி, உடைகளையும் மாற்றிக்கொண்டு புறப்பட்டார்கள். சிறைச்சாலைக்கான பிரத்தியேக பார்க்கிங்கில் வாகனத்தைப் போட்டுவிட்டு வந்து மறைவாக நின்றுகொண்டார்கள்.
இன்றே அவன் வருவானா என்று தெரியாது. வந்துவிட வேண்டும் என்கிற வேண்டுதலுடன் காத்திருந்தனர்.
மெல்ல மெல்லத் தம் உறவினர்களைச் சந்திக்க வருகிறவர்கள் வர ஆரம்பித்தனர். விமலை மட்டும் காணவேயில்லை.
நேரம் போக போகத் தூயவனுக்கு அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்தது.
வர மாட்டானோ? அப்படி வராவிட்டால் அவனுடைய இசையரசி இன்னொரு நாள் தாக்குப்பிடிப்பாளா? நாளைக்கும் வருவான் என்று என்ன நம்பிக்கை? முதலில் தான் சரியான பாதையில்தான் பயணிக்கிறோமா என்கிற சந்தேகம் திடீரென்று வந்து நின்றது.
இப்படி இருக்கையில்தான் விமல் வந்தான். ஏதோ ஒரு பையுடன். சட்டென்று பரபரப்பாகினர். தம் தேடலுக்கு ஒரு முடிவு வரப்போகிறது என்கிற எண்ணமே சுறுசுறுப்பை மீண்டும் தந்தது.
உள்ளே போனவன் வெளியே வர மூன்று மணித்தியாலங்கள் பிடித்தன. வெயிலும் உச்சிக்கு ஏற, பசி, தாகம், களைப்பு என்று எதையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தார்கள்.
இதில் அது சிறைச்சாலை என்பதில் அதி உயர் பாதுகாப்புடன் இருந்தது. இவர்கள் நெடு நேரமாக நிற்பதை, அதுவும் மறைவாக நிற்பதைக் காவல்துறை கவனித்ததோ இவர்களையும் தூக்கி விசாரணை என்கிற பெயரில் உள்ளே போட்டுவிடுவார்கள். பிறகு எல்லாக் காரியமும் கெட்டுவிடும்.
ஒரு வழியாக அவனும் திரும்பி வந்தான். போகும்போதும் சரி, வரும்போதும் சரி அவனிடம் ஒரு கவனம் இருந்தது. உன்னிப்பாக இருவரும் அவனைப் பின் தொடர்ந்தார்கள்.
அங்கிருந்த ஒரு ஆட்டோவில் அவன் புறப்பட, இதை எதிர்பாராதவர்கள் ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டார்கள். இருவர் காதிலும் ப்ளூடூத் கொழுவி இருந்ததில், “நீயும் இன்னொரு ஆட்டோல பின்னாலேயே போ குரு. அப்பிடியே உன்ர லொக்கேஷனை எனக்கு ஷேர் பண்ணிவிடு. பின்னால நான் வாறன்.” என்றுவிட்டு வாகனம் நிறுத்தியிருந்த இடம் நோக்கி ஓடினான் தூயவன்.
குரு விமலைப் பின் தொடர, குருவைத் தூயவன் பின்தொடர்ந்தான். இருவர் நெஞ்சிலும் கையில் கிடைத்தவனை எக்காரணம் கொண்டு தவற விட்டுவிடவே கூடாது என்கிற பதற்றம்.
வாகன நெரிசல்களுக்கு மத்தியில் இப்படித் தொடர்வது தூயவனுக்கு இலகுவாக இல்லை. ஆட்டோ கிடைக்கிற இடமெல்லாம் புகுந்து போனது. அவனால் அதைப் போல் தன் வாகனத்தைச் செலுத்த முடியவில்லை. அதற்கென்று தோற்று நிற்க முடியாதே. அங்கே தவித்துக்கொண்டிருப்பது அவன் உயிராயிற்றே.
ஏதோ ஒரு சந்தியில் விமல் இறங்கினான். குரு இறங்கவில்லை. ஆட்டோவுக்குள் இருந்தே கவனித்தான். தூயவன் கொஞ்சம் தூரமாகவே நின்றுகொண்டான். தூயவனின் வேனை விமலுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அதைக் கண்டால் அவன் தப்பியோடப் பார்ப்பான். இல்லையா, யாழிசை இருக்குமிடத்துக்குப் போகமாட்டான்.
அங்கு இறங்கிய விமல் ஒரு கடைக்குப்போய் உணவுப்பார்சல்கள் வாங்கினான். ஒன்றில்லை குறைந்தது மூன்று நான்கு இருக்கும். அந்தளவில் பெரிதாக இருந்தது அந்தப் பை.
அப்படியே சுற்றவரப் பார்வையைச் சுழற்றியபடி நடந்தவன் ஒதுக்கமாக ஒரு மரத்தின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றில் ஏறிக்கொள்ளவும் அதன் பிறகு குரு தாமதிக்கவில்லை.
ஒரே ஓட்டமாக ஓடிப்போய், போன வேகத்திலேயே வேனின் பின் கதவைச் சரக்கென்று இழுத்துத் திறந்தான்.
அங்கே கலைந்த தலை, கசங்கிய முகம், வியர்த்துப்போன தோற்றம் என்று அமர்ந்திருந்தவளைக் கண்ட பிறகுதான் அவனுக்கு உயிரே வந்தது.
“யாழிசை இஞ்ச இருக்கிறா. டேய் தூயவா, ஓடி வா!” ‘கண்டேன் சீதையை’ என்பதுபோல் அவள் இருக்கிறாள் என்பதை முதலில் சொல்லி, ப்ளூடூத்தில் தொடர்பில் இருந்த தூயவனுக்குத் தகவல் சொன்னான் குரு.
அங்கே, விமல் ஏறிய வாகனம் தப்பித்தவறிக் குருவிடமிருந்து தப்பித்துப் புறப்பட்டுவிட்டால் விரட்டிப் பிடிப்பதற்குத் தயாராக நின்றிருந்த தூயவனின் உடலில் குரு தந்த தகவலில் புது இரத்தமே பாய்ந்தது. வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு ஓடி வந்தான்.
இத்தனையும் நொடியில் நடந்திருக்க, வாகனத்தின் கதவு திறக்கப்பட்ட சத்தத்தில் அதிர்ந்துபோய்ப் பின்னால் திரும்பிப் பார்த்த விமலும் வாகன ஓட்டியும் தப்பித்து ஓட முயன்றனர். யாழிசையை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்த தூயவன், திசையை மாற்றி ஓடிப்போய் விமலை மடக்கிப் பிடித்தான்.
குரு யாழிசையை விட்டு அசையவேயில்லை. திரும்பவும் அவளைத் தொலைக்க முடியாது. தம்மைச் சுற்றி இன்னும் யாராவது இருக்கிறார்களா என்றும் தெரியாது. அதில், “பயப்பிடாதீங்கம்மா. நாங்க வந்திட்டம். இனி ஒண்டுமில்ல. வீட்டுக்குப் போயிடலாம்.” என்று அவளைத் தேற்றியபடி தூயவன் என்ன செய்கிறான் என்று பார்த்தான்.
அந்த மூன்று நாள்களும் அலைந்த அலைச்சலும் பயந்த பயமும் வெறியாக மாற, அங்கிருந்த மரத்தோடு மரமாகச் சாற்றி, விமலை நையப்புடைக்க ஆரம்பித்திருந்தான் அவன்.
அதைப் பார்த்த ஆட்கள் அவர்களைச் சூழ முயலவும், “தூயவா! இப்ப இது முக்கியம் இல்ல. எங்க சுத்தினாலும் இந்த நாய் ஊருக்கு வந்துதான் ஆகோணும். நீ இப்ப வா. நாங்க வெளிக்கிடுவம்.” என்றதும்தான் தூயவனும் நிதானமானான்.
அப்போதும் அவனைச் சும்மா விட அவனுக்கு மனமில்லை. அவன் கையில் இருந்த பை, பர்ஸ், கைப்பேசி, ஏன் கையில் அணிந்திருந்த மணிக்கூடு, மோதிரம் என்று அத்தனையையும் பறித்துவிட்டு, “நடந்தே வவுனியா வந்து சேர். அங்க வச்சு இன்னும் வடிவா உன்னைக் கவனிக்கிறன்.” என்று உறுமிவிட்டு வந்தான்.

