கடன் அன்பை முறிக்கும் 40 – 2

உதட்டோரம் தாராளமாக அரும்பிய சிரிப்புடன் ஒற்றைக் கையின் விரல்களால் மேசையில் தாளமிட்டபடி அவளையே பார்க்க ஆரம்பித்தான் தூயவன்.

 

யாழிசையால் அவன் முன்னே அமர்ந்திருக்கவே முடியவில்லை. எங்கு ஓடி ஒளிந்துகொள்வது என்றும் தெரியவில்லை. கீழுதட்டைப் பற்றியபடி குனிந்த தலையை நிமிர்த்தாது அப்படியே அமர்ந்திருந்தாள்.

 

இதற்குள் குரு குளித்துவிட்டு வந்தான். அதன் பிறகுதான் ஆசுவாசமானாள்.

 

மூவருமாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். யாழிசையால் முடியவில்லை. உடலின் பலகீனமா, மூன்று நாள்களாகப் பயத்திலேயே உறைந்திருந்ததா கைகள் நடுங்கின. தொண்டையும் விழுங்க முடியாமல் வலித்தது.

 

அவளைப் பார்த்த தூயவனுக்கு நெஞ்சில் வலி. அவனாலும் சாப்பிட முடியவில்லை. “கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடு.” என்றான்.

 

குருவுக்கும் அவள் நிலை புரியாமல் இல்லை. “என்ன நடந்தது யாழிசை? நாங்க பார்த்த சிசிடிவி புட்டேஜ்ல நீங்களாத்தான் அந்த மினி பஸ்ல ஏறிப் போறீங்க? ஆர் அது?” என்று விசாரித்தான்.

 

“ஓம் அண்ணா. நானாத்தான் போனனான். அகிலன் அண்ணாதானே எண்டுற நம்பிக்கைல.” என்று சொல்லும்போதே அவளுக்குக் குரல் அடைத்துக்கொண்டது.

 

அவள் வவுனியா பஸ்சுக்காக காத்து நின்றபோது, அந்த மினி பஸ்ஸில் வந்த அகிலன், “நீங்க நடந்து வந்ததப் பாத்திட்டுத்தான் வாறன் இசை. வவுனியாவுக்குத்தானே. வந்து ஏறுங்கோ.” என்று அழைக்கவும் சந்தோசமாகவே ஏறிக்கொண்டாள் அவள்.

 

முதலில் அவள் ஏன் மறுக்க? அவன் பஸ் டிரைவர் என்று தெரியும். சொந்தக்காரன். சந்தேகிக்கும் படியோ, மறுக்கும் படியோ இதுவரையில் அவன் நடந்ததேயில்லை.

 

சில சுவர்ணாவின் நியாயமே இல்லாத செய்கைகளுக்குக் கூட அவன் அவளிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறான். அப்படியானவன் இப்படிச் செய்வான் என்று அவள் எப்படி எண்ணுவாள்? அவள் மட்டுமே தனி என்று சொல்ல முடியாத வகையில் அந்த பஸ்ஸில் வேறு சில ஆட்களும் இருந்தார்கள்.

 

இடையில் ஒரு இடத்தில் நிறுத்தி, எல்லோரும் இளநீர் வாங்கி அருந்தியபோதும் அப்படியே. அதன் பிறகு அவள் விழித்தபோது நடுச் சாமமாக இருந்தது. கூடவே அந்த வேனில் போய்க்கொண்டிருந்தாள். முன்னால் விமல் இருந்தான். அவளின் கைப்பேசியும் காணாமல் போயிருந்தது.

 

அவள் பயந்து அழுதபோது வாயை மூடச்சொல்லி மிரட்டியிருந்தான் விமல். போதாக்குறைக்கு அவள் அருகில் அமர்ந்து, அவள் தோள் மீது கையைப் போட்டபடி, அவள் தலையோடு தலை முட்டியபடி என்று சில புகைப்படங்களையும் எடுத்து வைத்திருந்தான். இரவோடு இரவாகக் கொழும்புக்கு அழைத்து வந்திருந்தான்.

 

அதெல்லாம் ஏன் என்று கேட்டதற்கு எந்தக் காரணமும் சொல்லவில்லை. சரியாக ஒரு வாரத்தில் அவளை எந்தச் சேதாரமும் இல்லாமல் ஊருக்கே அழைத்துப் போவதாகச் சொல்லியிருந்தான். இதற்குள்தான் அவள் தப்பியோட முயன்று மாட்டிக்கொண்டதும் நடந்தது.

 

அடுத்த நாள் இரவு ஒரு அறையில் தங்க விமல் ஏற்பாடு செய்தபோது ஒரேயடியாக மறுத்திருந்தாள். இல்லையானால் உயிரே போனாலும் பரவாயில்லை, கத்திக் கூச்சலிடுவேன் என்று அவள் சொன்னதில் அன்றைய இரவும் இருவர் வாசமும் அந்த வேணுக்குள்தான்.

 

அடுத்த நாள்தான் தூயவன் கண்டுபிடித்தான்.

 

“இதுக்கு ஆர் காரணம் எண்டு ஏதும் சொன்னவனா விமல்?” குருதான் விசாரித்தான். தூயவனின் தாடை இறுகி, கண்கள் சிவந்திருந்தன.

 

பார்வை ஒருமுறை அவனைத் தொட்டு மீள, இல்லை என்பதுபோல் தலையை அசைத்தாள்.

 

“உங்களுக்கு ஏதும் தெரியுமா?” அவள் திருப்பிக் கேட்டாள்.

 

நண்பனைத் திரும்பிப் பார்த்துவிட்டுப் பதில் சொல்லாமல் சாப்பாட்டில் கவனம் செலுத்தினான் குரு.

 

சற்று முன்னர் இருந்த இதமான மனநிலை மாறிப்போயிருந்தது. அவர்களுக்கு யார் என்று தெரிந்திருக்கிறது என்று யாழிசை ஊகித்தாள். தூயவனைக் கேள்வியோடு பார்த்தாள்.

 

அவள் பார்ப்பதை உணர்ந்தும் அவன் நிமிரவில்லை.

 

அவர்கள் பேசிக்கொள்ளட்டும் என்றெண்ணி குரு வேகமாகச் சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தான்.

 

“துளசியோட கதைக்கோணுமடா. இப்ப ஒண்டும் அவளிட்ட நான் சொல்லேல்ல. என்ன ஏது எண்டு நீயே பார்.” என்றுவிட்டு அவன் வெளியேறினான்.

 

அதன் பிறகும் தூயவன் நிமிரவில்லை. சாப்பிடவும் இல்லை.

 

“என்ன யோசிக்கிறீங்க? உங்களுக்கு ஆர் எண்டு தெரியுமா?”

 

ஒரு நெடிய மூச்சுடன் நிமிர்ந்தவன் அப்போதும் அவளுக்குப் பதில் சொன்னான் இல்லை. அவன் கவனம் அவள் உணவுக்குச் சென்றது. அது அப்படியே இருந்ததில் எழுந்துபோய்க் கையைக் கழுவிக்கொண்டு வந்து அவளருகில் அமர்ந்தான்.

 

அவள் பார்சலை தன் புறமாகத் திருப்பி, அதைக் குழைத்து, சிறு பிடியாக ஒரு வாய் அள்ளி, அவள் புறமாக நீட்டினான்.

 

அவ்வளவு நேரமாக அவனையே பார்வையால் தொடர்ந்திருந்தவள் விழிகள் அகன்றன. அவன் தந்த வாயை வாங்காமல் தலையைக் கொஞ்சம் பின்னால் கொண்டுபோனாள்.

 

“என்ன, சாப்பிடு.” அவள் செய்கையின் பொருள் புரிந்தாலும் உணவைக் கொடுக்க முயன்றான்.

 

அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் என்ன இது என்று பார்த்தாள் அவள்.

 

“வேணாமா? தலையைப் பின்னுக்குக் கொண்டு போறாய். நான் தந்தா சப்பிட மாட்டியா?” முகம் மாற அள்ளிய சோற்றைத் திரும்பவும் போடப்போனான்.

 

அவன் முகம் வாடியதில் அவள் பரிதவித்துப்போனாள். “எனக்கே தாங்க.” என்று இப்போது தானே வாங்க வந்தாள்.

 

“இந்த ஒரு பிடி சோத்தக் கேக்கிறியா, இல்லை என்னையே கேக்கிறியா?” என்று வினவினான் அவன்.

 

அவள் திகைத்துப்போனாள். இதற்கு என்ன பதில் சொல்வது? அவளுக்கு உணவைக் கொடுத்துவிட்டு, “ரெண்டுமே உனக்குத்தான். அதால எதையும் யோசிக்காம சாப்பிடு.” என்றான் அவன் சிறு சிரிப்புடன்.

 

“ஆனா நான் அண்ணா சொல்லுறவரைத்தான் கட்டுவன்.” என்று அவள் சொன்னதும் தலையைப் பின்னால் சாய்த்துச் சத்தமாகச் சிரித்தான் அவன்.

 

அவளுக்கு வெட்கமாகிப் போயிற்று. அதுவும் இன்றைய நாளுக்குப் பிறகு இதைச் சொல்வது எத்தனை நகைப்புக்குரியது? ஆனால், அவள் சொன்னதிலும் அவளிடம் மாற்றமில்லை.

 

முகம் கனிய சில கணங்களுக்கு அவளையே பார்த்த தூயவன், எழுந்து வந்து மறு கையால் அவளைத் தன் வயிற்றுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான். “நீ உன்ர அண்ணா சொல்லுறவரையே கட்டு. உன்ர அண்ணா சொல்லுற ஆளா வந்து நிக்க வேண்டியது என்ர பொறுப்பு. சரியா?” என்றான் கனிந்த குரலில்.

 

“அதுக்காக நீங்க அண்ணாவோட சண்டைக்குப் போறேல்ல.” நிமிர்ந்து அவன் முகம் பார்த்துக் கண்டிப்புடன் சொன்னாள் அவள்.

 

அவன் புன்னகை விரிந்துபோனது. “முதல் இதப் போய் உன்ர அண்ணாட்டச் சொல்லு. என்ர சட்டையப் பிடிச்சு என்னோட சண்டைக்கு வந்தது அவர்.”

 

“இது எப்ப?” என்று விழிகளை விரித்தவள் அவனைச் சந்தேகமாகப் பார்த்தாள். “நான் உங்கள நம்ப மாட்டன். அண்ணா அப்பிடி இல்ல. நீங்கதான் ஏதும் செய்து இருப்பீங்க.”

 

“அடிப்பாவி! கொஞ்சமாவது என்னை நம்படி. நானும் நல்லவன்தான்.”

 

“ம்ஹூம்! உங்கள நம்பேலாது.” என்று மறுத்துத் தலையசைத்தாள் அவள்.

 

அவன் உதட்டில் கனிந்த முறுவல். அவளையே பார்த்தான். முன்னர் எல்லாம் அவனைக் கண்டாலே எப்படி ஓடுவாள். இன்று வாயடிக்கிறாள்.

 

“பிடிச்சிருக்கா?” அவள் உயரத்துக்கு குனிந்து, காதோரமாக இரகசியக் குரலில் வினவினான்.

 

இதை எதிர்பாராதவள் அவனையே பார்த்து நின்றாள்.

 

இப்போதும் அவன் பார்வை அவளின் ஆதரங்களுக்குத்தான் ஓடியது. ஆனாலும், ஆசைப்பட்டதைச் செய்யவில்லை. அவள் நெற்றியில் ஆழ்ந்து முத்தமிட்டுவிட்டு விலகி அமர்ந்து, அவளுக்கும் கொடுத்துத் தானும் உண்டு முடித்தான்.

 

அப்போதே அறையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வெளியேறினார்கள்.

 

 

error: Alert: Content selection is disabled!!