கடன் அன்பை முறிக்கும் 41 – 2

தூயவனாக இருப்பானோ என்கிற சந்தேகம் அவளுக்கு வரவேயில்லை. அவன் என்றால் வீடு புகுந்து நேராகவே தூக்கிக்கொண்டு போயிருப்பான். இப்படி எல்லாம் சுற்றிவளைத்துக்கொண்டு இருக்க மாட்டான்.

 

ஆகக் கருணாகரனாகத்தான் இருக்க வேண்டும். அவரால்தான் அகிலனையும் விமலையும் ஒரே நேர்கோட்டில் இயக்க முடியும். அதற்காய் என்ன கபட நாடகத்தை ஆடினாரோ, இல்லை எதை வைத்து விலை பேசினாரோ அவளுக்குத் தெரியாது. அவளுக்குத் தெரிந்து அவரைத் தவிர்த்து இதைச் செய்ய வேறு யாரும் இல்லை. இவ்வளவு பெரிய காரியம் செய்வதற்குரிய காரணமும் வேறு யாருக்கும் இல்லை.

 

இதையெல்லாம் யோசிப்பதும் ஊகிப்பதும் அவளுக்கே இலகுவாய் இல்லை. அப்படியிருக்க அவள் தமையன் எதுவுமறியாதவன். அகிலனையோ விமலையோ சந்தேகப் படப் போவதே இல்லை.

 

அப்படியே சந்தேகப்பட்டாலும் அவனால் மிஞ்சி மிஞ்சிப் போனால் என்ன செய்ய முடியும்? போலீசுக்கு போவான். இல்லையா கருணாகரனிடம் போவான். கருணாகரன் அசைந்து கொடுக்கப் போவதில்லை. போலீசும் கருணாகரனின் கையில் என்கையில் குண்டு சட்டிக்குள் குதிரையை ஓட்டுவதுபோல், அவனுக்குத் தெரிந்த அந்த வட்டத்துக்குள்தான் திரும்ப திரும்ப தேடுவானாக இருக்கும். இல்லையானாலும் அவனுக்கு நிச்சயம் சில பல நாள்கள் எடுக்கும்.

 

ஆனால், தூயவனை மலைபோல் நம்பினாள்.

 

கருணாகரனை நேருக்கு நேர் சந்திக்கக் கூடியவனும் அவரின் அத்தனை திட்டங்களையும் தவிடுபொடியாக்கிக்கொண்டு அவளிடம் வந்து நிற்கக்கூடிய வல்லமை கொண்டவனும் அவன் ஒருவனே!

 

வருவான்! நிச்சயம் வருவான்! என்னை அப்படி விட்டுவிட மாட்டான் என்று அவள் உள்ளம் ஓங்கிக் கத்திக்கொண்டே இருந்தது. அது காதல் கிடையாது. அவன் எப்படியானவன் என்று தெரிந்ததன் வெளிப்பாடு.

 

மனம் கலங்கிவிடுகிற ஒவ்வொரு பொழுதுகளிலும், ‘தூயவா, இன்னும் என்ன செய்றீங்க? எனக்குப் பயமா இருக்கே. நான் காணாம போனது தெரியுமா உங்களுக்கு, என்னைத் தேடேல்லையா நீங்க, நீ எனக்குத்தான் எண்டு அவ்வளவு உறுதியாச் சொன்னீங்க. வந்து கூட்டிக்கொண்டு போக மாட்டீங்களா என்று ஆழ்மனத்தால் அவனிடம் அரற்றியிருக்கிறாள்.

 

அந்த நேரங்களில்தான் அவளுக்குள் அவன் பற்றிய சிந்தனைகள் ஓட ஆரம்பித்ததும். அவன் பொல்லாதவன், தராதரம் பார்க்கிறவன், எத்தனையோ முறை பார்வையாலும் செய்கையாலும் அவளை அவமானப்படுத்தியிருக்கிறான், அவனிடமிருந்து ஒதுங்கி இருப்பது மாத்திரமே அவள் வாழ்க்கை நிம்மதியாக இருக்க ஒரே வழி என்று அவள் நினைக்கிற அளவுக்கு நடந்திருக்கிறான்.

 

அதே நேரம், அவள் கண்ணீரைக் கண்டு கோபம் கொண்டதும் அவன்தான். நிமிர்ந்து இருக்கச் சொல்லி, அதட்டி உண்ண வைத்து, அவளின் உடல் உபாதைகளைக் கவனித்து, அவளோடு கூடவே நின்றதும் அவன்தான்.

 

ஏன் அன்று, யாழ்ப்பாண வைத்தியசாலையிலிருந்து நடந்தே புறப்பட்டவளின் பின்னாலேயே வந்து பஸ் ஏறுகிறவரை காத்திருந்தானே. காதலில் அதி தீவிரம் கட்டியவண்டான் அண்ணாவோடு சண்டைக்குப் போக வேண்டாம் என்ற அவள் சொன்னதைக் கேட்டு அடங்கி நின்றதும்.

 

இப்படி அத்தனையும் யோசிக்க யோசிக்க அவன் மீதான நம்பிக்கையும் நல்லெண்ணமும் வளர்ந்துகொண்டேதான் போயின.

 

அன்று கோவிலில் வைத்து அவன் சுரபியிடம் சொல்லிவிட்டதை அவள் நம்பவில்லை. ஆனால், தான் இப்படிக் கடத்தப்பட்டதற்குக் கருணாகரன் காரணமாக இருப்பாரோ என்று யோசித்த கணத்திலேயே, விடயம் அறிந்து தமையனிடம் சொன்னதும் இவராகத்தான் இருக்க வேண்டும் என்று தெளிந்திருந்தாள்.

 

ஆக, அன்றும் அவன் அவள் சொல்லை மீறவில்லை.

 

இப்படி இருக்கையில்தான் அவள் நம்பியதுபோல் அவனும் வந்து நின்றான். எதுவும் நடக்க முதல் அவளைக் காப்பாற்றினான். அவளுக்காய் அந்த விமலைப் பந்தாடினான். அது மட்டுமா? அன்று கூட நான் என்று நின்று காதலைச் சொன்னவன் இன்று மொத்தமாய் உடைந்து, அவளை அள்ளியணைத்தபோது அவள் உள்ளம் எப்படி அவனிடம் வீழாமல் இருக்கும்? விழுந்துவிட்டாள் மொத்தமாய்.

 

அவன் விடாமல் அவளுக்குத் தொல்லை தந்தபோது வராத நேசம், ‘என்னப் பிடிக்கேல்லையா’ என்று கேட்டபோது உண்டாகாத மாற்றம், தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு வற்புறுத்தியபோது மாறாத மனம், அந்தக் கணத்தில் மாறியது.

 

அவளை, அவள் மானத்தை, அவள் வாழ்க்கையைக் காத்திருக்கிறான் அவன். இன்னும் அவனை மறுத்து என்ன செய்யப்போகிறாள் அவள்? அவளுக்கும் தன்னைத் தன் உயிருக்கும் மேலாய் நேசிக்கும் ஒருவன்தானே வேண்டும்! அவளுக்காக இன்னும் என்ன செய்ய வேண்டும் அவன்?

 

அவள் உள்ளம் அவனிடம் மொத்தமாகப் படர்ந்துவிட்டது உண்மை. இனி எல்லாவற்றையும் அவன் பார்த்துக்கொள்வான் என்கிற நம்பிக்கையும் மலைபோல் உண்டுதான். ஆனாலும், அவளிடம் மனம் திறக்க மறுக்கிறானே! அது காயப்படுத்தியது.

 

அவளா அவனுடைய அப்பாவா என்று வந்தால் அவர் பக்கம் நின்றுவிடுவானோ? தன் சிந்தனையின் போக்குச் சரியா என்று கூட அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், மனம் கலங்கிற்று.

 

அன்று இவர்கள் பக்கம் நியாயம் இருந்தும், அவர்கள் செய்வது மகா பிழையாக இருந்தும், அவள் தமையன் அவன் தந்தையிடம் குரலை உயர்த்திவிட்டான் என்று சங்கை அறுப்பேன் என்றவன், இன்றா அவளிடம் அவரைப் பற்றிச் சொல்லப்போகிறான்?

 

சுருக்கென்று ஏதோ ஒரு வலி அவளுக்குள். பேசாமல் யன்னலில் தலையைச் சாய்த்துக்கொண்டாள்.

 

உள்ளம் அவனிடம் சரியாமல் இருந்திருந்தால் இதை இன்னும் கொஞ்சம் திடமாக எதிர்கொண்டிப்பாள் போலும். இல்லை, ஒரு மகனாக அவன் பக்கத்தைப் பார்த்திருப்பாளோ என்னவோ. ஆனால் இப்போது? ஒரு நெடிய மூச்சு அவளிடமிருந்து வெளியேறியது.

 

“டேய், ஒரு தேத்தண்ணி குடிச்சிட்டு போவமாடா?” சட்டென்று நண்பனிடம் கேட்டான் தூயவன்.

 

இருவரையும் அவ்வப்போது பார்த்தபடி ஓடிக்கொண்டிருந்த குரு, வயிறு நிறையச் சாப்பிட்டதில் இலேசாகக் கண்ணைக் கட்டுவது போலவும் இருக்க, வாகனத்தை ஓரம் கட்டினான்.

 

தேநீர்க் கடையிலும் அவள் ஒரு பக்கமும் நண்பர்கள் இருவரும் மறு பக்கமும் என்று அமர்ந்து இஞ்சித் தேநீர் பருகினர். ஷோர்ட்டீஸ் வகைகளும் வந்தன. அவள் எடுத்துக்கொள்ளவில்லை.

 

“சாப்பிடு.” என்று தட்டை அவள் புறமாக அவன் நகர்த்தியும் மறுத்துவிட்டாள்.

 

அவன் உதடுகள் அழுந்த மூடின. அவளைச் சமாதானம் செய்யப் பிரியப்பட்டான். எப்படி என்றுதான் தெரியவில்லை.

 

குருவின் பேச்சுக்கு மட்டும் பதில் சொன்னவள் தூயவன் பக்கம் திரும்பவே இல்லை. அவனுக்குக் கோபமும் ஆற்றாமையும் சேர்ந்தே பொங்கின. அவனையும் கொஞ்சம் அவள் விளங்கிக்கொள்ள முயலலாம்.

 

மீண்டும் புறப்பட்டபோது தூயவன் இந்த முறை வாகனத்தை எடுத்தான். ஆனாலும் அவன் கவனம் அடிக்கடி சிதறி, தன்னைப் பார்க்க மறுத்துப் பிடிவாதமாக அமர்ந்திருப்பவளிலேயே படிந்து படிந்து மீண்டது.

 

அவனைக் கவனித்துவிட்டு, “டேய்! இனி நாங்க ரெண்டு பேரும் தனியாக்கள் இல்ல. ஒழுங்கா ரோட்டை பாத்து ஓட்டு!” என்று அதட்டினான் குரு.

 

அப்போதும் அவனைப் பார்த்தாள் இல்லை. ஒரு கோபம் சுறுசுறு என்று தூயவனுக்குள் பொங்கியது. அவனும் அதன் பிறகு அவள் பக்கம் பார்வையைத் திருப்பவில்லை. வாகனமோட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தினான்.

 

“நித்திரையாயிட்டா மச்சான்.” கொஞ்ச நேரத்தில் சொன்னான் குரு.

 

அப்போதுதான் தூயவனும் பின்னால் பார்த்தான். தலை ஒரு பக்கமாகச் சரிந்திருக்க நல்ல உறக்கத்தில் இருந்தாள். “சத்தமே இல்லாம எப்பிடிக் கோவத்தை காட்டுறாள் பாத்தியா? முகமே பாக்கேல்லயடா. இதுக்கெல்லாம் காரணம் ஆர் எண்டு நான் அவளிட்டச் சொல்லேல்லையாம்.” அவள் செல்லக் கோபத்தைச் ரசிக்கும் சிரிப்புடன் சொன்னான்.

 

குருவும் அதையெல்லாம் பார்த்துக்கொண்டுதானே இருந்தான். “அனுபவிடி. இதுக்குத்தானே ஆசைப்பட்டனி.” என்றான். அவனுக்குத் துளசியின் நினைவு. இரண்டு நாள் பிரிவு வேறு அவளைத் தேடிற்று.

 

அவர்களுக்குள் சண்டை என்று இப்போது எதுவுமில்லை. ஆனாலும், அறைக்குள் வந்ததும் முறுக்குவதை அவள் விடுவதில்லை. இவனும் மிதிலன் உறங்குகிறவரை நல்ல பிள்ளையாக இருப்பான். பின் கோபமாக இருக்கிறாயா, அப்படியே இரு என்று தனக்கு வேண்டியதை பஞ்சம் இல்லாமல் அவளிடமிருந்து எடுத்துக்கொள்வான்.

 

அந்த நேரங்களில் அவள் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் படுகிற பாடு அவனைப் போதையின் உச்சியில் கொண்டுபோய் விட்டுவிடும். எல்லாம் அமைதியாகவே அவர்களுக்குள் நடக்கும். அவளின் பொய்யான மறுப்புகள் கூட இவனுக்கான அழைப்புகள்தான். ஆனாலும், அவள் இன்னும் கோபமாக இருக்கிறாள்.

 

அடக்க முடியா புன்னகையும் சின்ன வெட்கமும் வந்துவிட உதடு கடித்துத் தன்னை அடக்கிக்கொண்டான் குரு.

 

“ஓய் கோவக்காரி! என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?” என்று கேட்டுக் குறுந்தகவல் அனுப்பி, அவளிடமிருந்து முறைக்கும் ஸ்மைலிகளைப் பெற்று, இவன் பல்லைக் காட்டிக்கொண்டிருந்தான்.

 

யாழிசையைக் கண்டுபிடித்துவிட்ட ஆசுவாசத்தில் இருந்தவன் கடைசியாகப் பேசும்போது வம்பிழுத்திருந்தான்.

 

இப்படி, தன் வாழ்க்கை இத்தனை ஆத்மார்த்தமாகவும் ஆனந்தமாகவும் மாறும் என்று அவன் எண்ணியே பார்த்ததில்லை. இத்தனைக்கும் காரணம் பக்கத்தில் இருக்கிறவன். “தேங்க்ஸ் மச்சான்!” என்று அவன் தோளில் தட்டிச் சொன்னான்.

 

‘லூசா நீ?’ என்று பார்த்தான் தூயவன்.

 

“நீயா கேக்காட்டி நானா துளசியைக் கேட்டிருக்க மாட்டன். இன்னும் மொட்டையா சுத்திக்கொண்டு இருந்திருப்பன். ஆனா இப்ப, வாழ்க்கையே வண்ணமயமா இருக்கு.” உள்ளார்ந்து சொன்னான்.

 

“நீயாச் சொல்லாம இருந்ததுக்கே உன்னைக் கட்டி வச்சுச் சாத்தி இருக்கோணும். இதில நான் கேட்டுக் கட்டித் தந்தத்துக்கு நன்றி சொல்லுவியா?” என்றவனுக்கு அருளைக் கட்டிய நாள்களில் கூட அவள் இத்தனை மலர்வாக, பூரிப்பாக இருந்து பார்த்த நினைவு இல்லை. அதைக் குருவிடம் சொல்லாதபோதும் மனத்தில் எண்ணிக்கொண்டான்.

 

யாழிசையின் உறக்கம் கலையாமல் குருவின் கைக்கு வாகனத்தை மாற்றிவிட்டு பின்னால் ஏறிக்கொண்டான் தூயவன். மெல்ல அவளுக்கு அருகில் நெருங்கி அமர்ந்து, அவளைச் சுற்றிக் கையைப் போட்டு, சரிந்திருந்த அவள் தலையைத் தன் தோளில் தாங்கிக்கொண்டான்.

 

அப்படியே அவளின் ஒரு கரத்தைத் தன் கைக்குள் மென்மையாக அடக்கினான். பஞ்சு போன்ற மென்மையான கரம். மெல்லிய நீண்ட தளிர் விரல்கள். அவற்றை அவள் உறக்கம் கலையாமல் வருடிக்கொடுத்தபோது உதட்டில் ஒற்றிக்கொள்ளும் ஆசை உண்டாயிற்று.

 

முன்னால் அவனுடைய எருமை இருக்கிறானே. அதில் ஆசையை அடக்கிக்கொண்டான். அவள் இப்படித் தன் கைக்குள் இருப்பதே தற்போதைக்குப் போதுமாக இருந்தது.

 

கண்ணாடி வழியே அவர்களைப் பார்த்த குரு, “கண்ணுக்கு நிறைவா இருக்கு மச்சான்.” என்றான் சின்ன புன்னகையுடன்.

 

தூயவனிடத்தில் மெல்லிய கூச்சமும் சிரிப்பும். “எருமை! வெக்கமே இல்லாமப் பாப்பியா?” மெல்லிய குரலில் அதட்டினான்.

 

“நீ காட்டுறது ஃபிரீ ஷோ.”

 

“அதுக்கு?”

 

“டேய்! நான் அவாவை பாக்கவும் இல்ல. உங்க ரெண்டு பேரையும் பாக்கேல்லை. உன்னப் பாக்கிறன். சந்தோசத்தில ஜொலிக்கிற உன்ர முகத்தைப் பாக்கிறன்.”

 

“வாய மூர்றா!” அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அதட்டினான்.

 

சத்தமில்லாமல் குலுங்கிச் சிரித்த குரு, “போற போக்கில உன்னைக் காதலிச்சு, துளசிக்குத் துரோகம் செய்திடுவனோ எண்டு பயமா இருக்கு மச்சான்.” என்றதும் தூயவனால் முடியவில்லை.

 

கேடுகெட்டவனே என்ன கதைக்கிறாய்?

 

அங்கிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து அவன் மீது எறியப் போனான். அவன் அசைந்ததில் திடுக்கிட்டு எழுந்த யாழிசை, அவன் பக்கத்தில் இருப்பதையும், தான் அவன் தோளில் சாய்ந்திருந்ததையும் கண்டு திகைத்துப்போனாள்.

 

அச்சோ என்று இருந்தது தூயவனுக்கு.

 

“ஒண்டுமில்ல நீ படு.” என்றான் மெல்ல.

 

அப்போதும் முற்றிலும் விலகாத உறக்க கலக்கத்தில் அவள் அவனையே பார்க்க, அவன் உதட்டில் மெல்லிய முறுவல். கண்ணாலேயே அவளைத் தன் தோளுக்கு அழைத்தான்.

 

பட்டென்று தள்ளி அமர்ந்து, யன்னலில் தலையைச் சாய்த்துக்கொண்டாள் அவள்.

 

‘சந்தோசமாடா!’ என்று குருவை முறைத்தான் தூயவன். அவன் படக்கென்று கண்ணைச் சிமிட்ட இவனுக்குச் சிரிப்பு மூண்டது. ஆனால், கொஞ்ச நேரத்திலேயே திரும்பவும் உறங்கிவிட்ட யாழிசையைத் தன் தோளுக்கு மாற்றியிருந்தான்.

 

எதுவுமே முடிந்துவிடவில்லை. இனியும் அவர்கள் நடைபயிலப் போகிற பாதையில் இருப்பதெல்லாம் பிரச்சனைகள் மட்டுமே. ஆனால், இப்போது தூயவனிடத்தில் கலக்கமில்லை. அடுத்து எப்படி இதை நகர்த்துவது என்கிற யோசனையும் இல்லை.

 

எதை எப்படி நடத்திக்கொள்வது என்று தெளிவாகவே இருந்தான்.

 

 

error: Alert: Content selection is disabled!!