அத்தியாயம் 42
நேரம் இரவு பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. வாகனம் சீரான வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது. யாழிசையிடம் அசைவே இல்லை. அவனின் ஒரு பக்க மார்பில் தலையை வாகாகச் சாய்த்து, அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டு சுகமாக உறங்கிக்கொண்டிருந்தாள்.
இவர்கள் வவுனியாவை நெருங்கும்போதே அகிலனைத் தூக்கிவிட்ட செய்தி, தூயவனின் கைப்பேசிக்கு வந்து விழுந்தது. அதைப் பார்த்துவிட்டு, “எங்கயாவது நிப்பாட்டு மச்சான். அவளை எழுப்பி, முகத்தைக் கழுவ வச்சுக் கூட்டிக்கொண்டு போவம்.” என்று குருவிடம் சொன்னான்.
கொஞ்சத் தூரத்தில் ஓலையால் வேயப்பட்ட ஒரு குட்டிக் கடையினுள் ஆச்சி ஒருவர் போர்வையால் தன்னைப் போர்த்திக்கொண்டு அமர்ந்திருந்தார். கடைக்கு வெளியே விறகடுப்பின் மீது இருந்த மண் சட்டியில் தண்ணீர் கொதித்தபடி இருந்தது. அதன் முன்னே நிறுத்திவிட்டு, “நீ அவாவை எழுப்பிக் கூட்டிக்கொண்டு வா!” என்றுவிட்டு இறங்கிப் போனான் குரு.
அப்போதும் அவனுக்கு அவளை எழுப்ப மனமேயில்லை. எழுப்பினால் இனிப் பக்கத்திலும் வரமாட்டாள். அவனுடைய ஒற்றை விரல் அவளின் அடர்ந்த புருவம் தடவி, பட்டுக் கன்னம் வருடி, சின்ன செப்பு இதழ்களில் வந்து நின்றபோது அவன் உதடுகளில் ஒரு துடிப்பு.
அதற்குமேல் தாங்காது என்று புரிந்துபோனது. அவள் கன்னம் தட்டி, “இசை!” என்றான்.
“ம்?”
“எழும்பு! வவுனியாவுக்குக் கிட்ட வந்திட்டம்.”
“ம்!” இன்னுமே நல்ல நித்திரையில் இருந்தவளுக்கு அவர்களைச் சூழ்ந்திருந்த ஏசிக் குளிருக்கு இதமாக இருந்த அவன் தேகத்தின் கதகதப்பிலிருந்து மீள விருப்பமில்லை.
இன்னும் அவன் இடுப்பை இறுக்கித் தோளில் சுகமாக முகம் புரட்டினாள்.
அவள் செய்கையில் உதடு கடித்த தூயவன், எதிர்ப்பக்கம் முகம் திருப்பிக்கொண்டான். இல்லையோ அவன் உதடுகள் எல்லை மீறிவிடும்.
மெல்ல மெல்ல விழிப்பு வர ஆரம்பித்துவிட்ட யாழிசைக்கு அப்போதுதான் அவன் கைக்குள் இருக்கிறோம் என்பதே உறைத்தது. உறைத்த கணம் படக்கென்று தலையைத் தூக்கி அவனைப் பார்த்தவள், அதே வேகத்தில் அவனிடமிருந்து விலகினாள்.
அவன் முகத்தில் மெல்லிய புன்னகை.
“சொறி!” அவனைப் பாராமல் முணுமுணுத்தாள்.
“என்னத்துக்கு?” என்றான் அவன். “எனக்கு உன்ன எழுப்ப விருப்பமே இல்ல. வேற வழி இல்லாமத்தான் எழுப்பினனான்.” நகை துலங்கும் குரலில் அவன் இயம்ப, யாழிசைக்கு முகத்தை எங்கயாவது கொண்டுபோய் மறைக்க வேண்டும் போலாயிற்று.
அவள் தலையைப் பிடித்துச் செல்லமாக ஆட்டிவிட்டு, “வா! முகம் கழுவிக்கொண்டு வருவம்.” என்று அழைத்துக்கொண்டு வாகனத்தை விட்டு இறங்கினான்.
இறங்கி வந்தவளிடம், “நல்ல நித்திரையாம்மா?” என்று இயல்பாக விசாரித்தான் குரு.
“ஓம் அண்ணா. இவ்வளவு தூரம் வந்ததே தெரியேல்ல.” மெல்லிய கூச்சத்துடன் சொன்னாள்.
“ரெண்டு நாளா ஆன நித்திரை இல்லை எல்லா. அதான்.”
மூவருமாக இருந்த தண்ணீர் போத்தலில் முகம் கழுவி, கைக்குட்டையால் துடைத்துக்கொண்டனர்.
அந்த ஆச்சியிடம் தேநீர் வாங்கிப் பருகினர். அவரிடம் நாற்காலிகள் எல்லாம் இல்லை. மரக் குற்றிகளைத்தான் சேகரித்து வைத்திருந்தார். ஆளுக்கு ஒன்றில் அமர்ந்துகொண்டனர்.
நன்றாக உறங்கி எழுந்தது, அருந்திக்கொண்டிருந்த சூடான தேநீர், முகத்தில் வந்து மோதிய குளிர் காற்று எல்லாமாய்ச் சேர்ந்து, யாழிசையின் மூளையையும் விழிப்படையச் செய்தன.
எந்த அனர்த்தங்களும் நேராமல் தப்பிவிட்டோம், இனி ஆபத்தில்லை என்று ஆசுவாசப்பட்டிருந்த மனது, இப்போது ஊரையும் வீட்டையும் எண்ணித் திரும்பவும் கலங்க ஆரம்பித்தது.
எப்படியும் ஊருக்குள் கதை கசிந்திருக்கும். இனி என்னென்ன பேச்சுகள் வரும் என்று தெரியாது. அகிலனைப் பற்றியோ விமலைப் பற்றியோ சொன்னாலும் நம்புவார்களா? எல்லாவற்றையும் யோசிக்க யோசிக்கக் கலக்கம் மட்டுமே எஞ்சியது.
ஒவ்வொரு முறையும் எந்தத் தவறும் செய்யாமலேயே எல்லோர் முன்னும் குற்றவாளியாக நிற்கிறாள்.
“இனி என்ன நடந்தாலும் நான் இருக்கிறன் எண்டு சொன்னனான் எல்லா உனக்கு?” திடீரென்று அவள் சிந்தனையை இடைவெட்டிய தூயவனின் குரலில் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“தேத்தண்ணி குடிச்சாச்சு எண்டா வா, உன்ர அண்ணாவோட கதைப்பம்.” என்றதும் சட்டென்று தொற்றிக்கொண்ட பரபரப்புடன் எழுந்துகொண்டாள் யாழிசை.
*****
இரவு பதினொன்றை நெருங்கிய பொழுது. ஆனாலும் அந்த வீட்டில் யாருமே உறங்கவில்லை. அடுத்ததாக என்ன செய்வது என்று கூடத் தெரியாமல் அமர்ந்திருந்தார்கள்.
அன்று அனுராதபுரம் சென்ற நேசன், அதே அனுராதபுரப் பேருந்து நிலையத்துக் கடைகளில் யாழிசையின் புகைப்படத்தைக் காட்டி காட்டி விசாரித்தான்.
இதே பெண்ணைக் காட்டி வேறு இருவரும் வந்து விசாரித்தார்கள் என்று சொன்னார்களே தவிர்த்து, யாருமே உருப்படியான தகவல் எதையும் தரவில்லை. அந்தக் கடைகளில் இருந்த சிசிடிவிக்களும் அவனுக்கு உதவவில்லை.
அனுராதபுரத்திலிருந்து திரும்பி வருகையில் சண்முகம் வந்து பேசியதைப் பற்றி யோசித்தான். அன்று தங்கை இதையெல்லாம் மறைத்திருக்கிறாள் என்கிற திசையில் மட்டுமே யோசித்துக் கோபப்பட்டவன் இன்று, சண்முகத்துக்கே தெரிந்திருக்கிறது என்கையில் தூயவனின் காதல் விசயம் கருணாகரனின் காதுக்கு எட்டாமல் இருக்க சாத்தியமே இல்லை என்று கணித்தான்.
அப்படியானால் யாழிசை காணாமல் போனதற்கும் அவர் காரணமாக இருக்க முடியுமே என்று தோன்றியதும் அவன் ஓடியது அவரிடம்தான். வீட்டுக்குள் இருந்துகொண்டே அவனைப் பார்க்க மறுத்திருந்தார் அந்தப் பெரிய மனிதர்.
அவன் என்ன கெஞ்சியும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஆத்திரத்தில் கத்திவிட்டு வந்தவனுக்கு வீடு போக முடியவில்லை. சண்முகம் எங்கு நிற்கிறார் என்று தேடியலைந்து அவரிடம் ஓடினான்.
தன் மீதிருக்கும் கோபத்தில் தங்கையை ஏதும் செய்துவிட்டீர்களா என்று அவன் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் கொக்கரித்தார் சண்முகம்.
அன்று சட்டையைப் பிடித்தவன் இன்று தன்னிடம் வந்து கெஞ்சுவது அவரின் அகங்காரத்துக்கு நன்றாகவே தீனி போட்டதில் மனத்தின் வன்மம் தீருமளவுக்கு அவனை அவமானப்படுத்தி அனுப்பியிருந்தார்.
கடைசியில் மாதவியோடு கோகிலா அவர்களின் வீட்டுக்குச் சென்று, ‘என் மகள் எங்கே’ என்று கருணாகரனிடம் கேட்டபோது, “எனக்கு என்ன தெரியும்?” என்றார் அவர்.
“உங்களுக்குத் தெரியாம இருக்கச் சாத்தியம் இல்ல தம்பி. சண்முகம் எண்டுறவர் எங்களிட்ட வந்து உங்கட மகனைப் பற்றிச் சொன்னவர் எண்டேக்க உங்களிட்ட சொல்லாம இருப்பார் எண்டு சொல்லுறீங்களா?” கண்ணீருடன் நியாயம் கேட்டார் அவர்.
அன்று மகன் கேட்டு மடக்கிய அதே கேள்வி. உள்ளே சினம் உச்சிக்கு ஏறினாலும் மனைவியும் மச்சாளும் அங்கிருந்ததில் அடக்கினார்.
“இஞ்ச பாருங்க அம்மா. இதுக்குத்தான் பிள்ளைகளை வளக்கேக்கையே அடுத்தவேன்ர காசு பணத்துக்கு ஆசைப்படக் கூடாது, விரலுக்கு ஏற்ற வீக்கமா இருக்கோணும், பேராசைப் படக் கூடாது, முக்கியமா ஒழுக்கமா இருக்கோணும், நல்லா படிக்கோணும் எண்டு சொல்லிக்கொடுத்து வளக்கோணும். அப்ப எப்பிடியாவது போ, என்னவாவது செய் எண்டு விட்டுப்போட்டு இப்ப வந்து நிண்டு அழுறதில அர்த்தம் இல்லை எல்லா.” என்றவரின் வார்த்தைகளில் தன் நெஞ்சைப் பற்றிக்கொண்டு நின்றுவிட்டார் கோகிலா.
அவருக்கு அழக்கூட வரமாட்டேன் என்றது. வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் வார்த்தைகளில் ஜாலம் காட்டி என்னவெல்லாம் சொல்லிவிட்டார்? விசம்! முழுக்க முழுக்க அவர் கக்கியது விசம்!
தேவகிக்குமே கணவரின் வார்த்தைகளில் அதிர்ச்சிதான்.
என்ன இருந்தாலும் ஒரு பெண் பிள்ளை. அன்று தம் மகளைக் காத்தவள். அவர் பார்த்த வரையில் நல்ல பிள்ளை. மகனோடு இணை சேர்க்கும் அளவுக்கு அவர் தயார் இல்லைதான். என்றாலும் இப்படிப் பேசியிருக்க வேண்டாம் என்று நினைத்தார்.
ஆயினும்கூட, என்றுமே கணவனை எதிர்த்துப் பேசியறியாதவர் இன்றும் வார்த்தைகளற்று நிற்க, மாதவியால் அப்படி இருக்க முடியவில்லை.
“அபாண்டமாக் கதைக்காதீங்க அத்தான். அவள் நான் வளத்த பிள்ளை. தூயவன்தான் அவளுக்குப் பின்னால திரிஞ்சிருக்கிறான். அந்தக் கோவத்திலதான் இப்பிடி எல்லாம் நடக்கிறீங்களா?” என்று கண்ணீருடன் கேட்டவருக்கு மனம் அடங்கவே இல்லை.
“வேணாம் அத்தான். ஒரு பொம்பிளப் பிள்ளையின்ர வாழ்க்கைல விளையாடின பாவம் எங்கட குடும்பத்துக்கு வேணாம். அவே எந்தப் பிரச்சினைக்கும் வராயினம். அதுக்கு நான் பொறுப்பு. அவளை விட்டுடுங்க. அவள் இல்லாம அந்தக் குடும்பமே அந்தரிச்சுப்போய் நிக்குது.” என்று கண்ணீருடன் கையேந்தினார்.
“மாதவி! அவேன்ர மனநிலை இப்ப எப்பிடி இருக்கும் எண்டு எனக்கும் தெரியும். அதாலதான் பொறுமையாப் புத்தி சொன்னனான். அதுக்காக எனக்குக் கோவத்தைக் கிளப்புற மாதிரிக் கதைக்கிறேல்ல. என்ர மகன் என்ன தராதரம் தெரியாதவனா? கண்ட கண்ட இடத்திலையும் போய் வாய் வைக்க? எனக்கு என்னவோ இப்பிடி ஊர் மேயிற பிள்ளையோட என்ர மகனின்ர பெயரை அடிபட வச்சு, பிடிக்கிறதை புளியங்கொம்பா பிடிச்சிடுவமோ எண்டு போட்ட பிளானோ எண்டு சந்தேகமா இருக்கு.” என்றதும் மாதவி மொத்தமாகச் சுருண்டு போனார்.
ஆனாலும் விடாமல் யாழிசைக்காக அவர் கதைக்கப் போக அவரின் கையைப் பற்றி நிறுத்தினார் கோகிலா.
“என்ர இத்தின வருச வாழ்க்கைல மனதறிஞ்சு ஆருக்கும் நான் எந்தப் பாவவும் செய்தது இல்ல தம்பி. எங்களை மோசமா நடத்தின மனுசரிட்ட கூடக் கோவத்தை காட்டினதே இல்ல. ஒதுங்கித்தான் போயிருக்கிறம். அந்த நம்பிக்கைல சொல்லுறன், என்ர மகள் வருவா. அப்ப என்ன நடந்தது எண்டு தெரிய வரும். அதே மாதிரிக் கடவுள் இருக்கிறான். சும்மா விட்டிற மாட்டான்.” என்று அவரைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போனார் கோகிலா.
அன்னை சொன்னதைக் கேட்ட நேசன் கொதித்துப்போனான். இதே வார்த்தைகளைத்தான் சண்முகமும் அவனிடம் கேட்டிருந்தார். இப்போது கருணாகரன். வீடு புகுந்து கருணாகரனை வெட்டிச் சாய்த்துவிட்டுச் சிறையில் போய்க் குந்தினால் என்ன என்கிற அளவுக்கு அவன் இரத்தம் கொதித்தது.
வேறு யாரெல்லாம் காரணமாக இருக்க முடியும் என்று யோசித்தபோது விமலின் நினைவு வந்தது. சாதாரணமாக ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்ததற்கு இவ்வளவு தூரத்துக்குப் போவானா என்று யோசித்தாலும், அப்படி எந்தச் சின்ன விடயத்தையும் தட்டிக் கழிக்கும் நிலையில் அவன் இல்லை.
அவனுக்கு விமல் துளசியின் கணவனின் தம்பி என்றுதான் தெரியுமே தவிர அவன் பெயர் விமல் என்று கூடத் தெரியாது.
கருணாகரனின் மகளின் முதல் கணவனின் வீட்டை ஊரில் இருப்பவர்களிடம் கேட்டறிந்து, அங்குச் சென்று விமல் எங்கே என்று விசாரித்தால், அவர்களும் தெரியவில்லை என்றார்கள்.
அன்று காலையில் தமையனைப் பார்க்கப் போவதாகச் சொல்லிவிட்டுப் போனவன் அதன் பிறகு தொடர்பு கொள்ளவே இல்லையாம். அவன் முன்னாலேயே விமலுக்கு அழைத்தார்கள். அவ கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
அவனின் நம்பரை வாங்கிக்கொண்டு வந்த நேசனுக்கு இனி என்ன செய்வது என்று தெரியவேயில்லை. தங்கை கிடைக்கவே மாட்டாளோ என்று மிகவுமே பயந்து போனான். ஆனாலும் காணாமல் போன விமல் ஏதோ ஒருவகையில் சந்தேகத்தைக் கிளப்ப, அவன் பற்றிய தகவலை எங்கிருந்து பெறுவது என்று அலைந்துகொண்டிருந்தான்.
வீட்டுக்குப் போக மனமில்லை. போனால் தன் முகம் பார்க்கும் மூன்று பெண்களின் முகத்தையும் பார்க்கும் தைரியம் அவனுக்கில்லை. எத்தனை முறைதான் அவனும் அவர்களை ஏமாற்றுவது?
தூயவனுக்கு எடுத்துக் கத்தினான்.

