கடன் அன்பை முறிக்கும் 44 – 1

அத்தியாயம் 44

 

 

வாகனத்தைக் கொண்டுவந்து தங்களின் வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டு, அப்படியே அமர்ந்திருந்தான் தூயவன். அவனால் அதிலிருந்து இறங்க முடியவில்லை. அவர்களைச் சூழ்ந்திருந்த இருளையே வெறித்தான். முகத்தில் கடும் இறுக்கம். மார்பு மட்டும் வேகவேகமாக ஏறி இறங்கியது. இன்னுமே வாகனத்தின் திசைமாற்றி(Steering)யைப் பற்றியிருந்த அவன் கைகளில் அவ்வளவு இறுக்கம்.

 

அவனையே பார்த்திருந்த குரு, அவன் தோளில் தட்டிக்கொடுத்தான். “சாதாரணமான நேரத்தில நாங்க நிதானமா இருக்கிறது எல்லாம் பெரிய விசயம் இல்ல மச்சான். இப்பிடியான நேரத்தில நிதானமா இருக்கோணும். வா, என்னவா இருந்தாலும் படுத்தெழும்பித் தெளிவா யோசிச்சு நடக்கலாம்.” என்று அழைத்தான்.

 

அவனுக்கு அந்த நம்பிக்கை இல்லை. வெடித்துச் சிதறக் காத்திருக்கும் எரிமலையின் நிலையில் இருந்தான். அதுவும் இப்போது அவன் இருக்கும் மனநிலையில் அவரைப் பார்த்தானோ, சினமிகுதியில் சீற்றம் கொண்டு அவனுக்குள் இருந்து உறுமிக்கொண்டிருக்கும் அந்த மிருகம், நிச்சயம் வெறிகொண்டு பாய்ந்துவிடும்.

 

வேறு யாருமென்றால் வேறு. அவனைப் பெற்ற தகப்பனே அவனை மையமாக வைத்து, அவனுக்கே தெரியாமல், அவனைச் சுற்றி இருக்கும் அத்தனை பேரையும் தன் சுண்டுவிரலில் ஆட்டுவித்திருக்கிறார். பெரும் முட்டாளாக அவரை நம்பிக்கொண்டு இருந்திருக்கிறான் அவன்.

 

அதற்குமேல் யோசிக்க முடியாமல் சட்டென்று இறங்கி விடுவிடு என்று வீட்டின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவன் அப்படியே நின்றுவிட்டான்.

 

அங்கே சோபாவில் அமர்ந்திருந்து அவனையே பார்த்திருந்தார் கருணாகரன்.

 

அவன் கண்கள் சிவந்தன. கழுத்து நரம்புகள் புடைத்தன.

அவரைப் பார்க்க பார்க்க அவனுக்குள் இருந்த மிருகம் உறும ஆரம்பித்தது. கை முஷ்டியை மடக்கித் தன்னைக் கட்டுப்படுத்த முயன்றான். முடியவேயில்லை.

 

நண்பனின் வெடித்துச் சிதறக் காத்திருக்கும் விளிம்புநிலை மனநிலையைப் புரிந்துகொண்ட குரு, “தூயவா!” என்றபடி அவன் தோளில் கையை வைத்து மெல்லிய அழுத்தம் கொடுத்தான்.

 

அவ்வளவுதான். அங்கே காலம் காலமாக அவர்கள் வீட்டு விறாந்தையை அலங்கரித்துக்கொண்டிருந்த பெரிய மீன் தொட்டியை எப்படித் தூக்கினானோ தெரியாது. அதைத் தனி ஒருவனாகத் தூக்கி, சளீர் என்று தரையில் வீசி எறிந்தான்.

 

குருவே ஒரு கணம் ஆடிப்போனான. கருணாகரன் அதிர்வின் உச்சிக்குத் தள்ளப்பட்டு பட்டென்று எழுந்து நின்றார். அவரின் அகன்ற திடமான தேகம் மொத்தமும் ஆட்டம் கண்டது. இதயம் வந்து தொண்டைக்குள் துடிக்க அவனையே பார்த்தார்.

 

நடுச் சாமத்தில், பெரும் அமைதியில் திளைத்திருந்த வீட்டில் திடீரென்று காதைப் பிளக்கும் அளவுக்கான சத்தம் கேட்டதில் ஏதும் வெடித்துச் சிதறிவிட்டதோ என்று அடித்துப் பிடித்து ஓடி வந்தார் தேவகி.

 

அப்படி வந்த தேவகி பார்த்தது, விழிகள் இரண்டும் நெருப்புத் துண்டுகளாகச் சிவந்து கொதிக்க, வேக வேகமாக ஏறி இறங்கிய மார்பும், பெரும் சீறலாக வெளியேறிக்கொண்டிருந்த மூச்சுமாக நின்றிருந்த மகனைத்தான்.

 

திரும்பிக் கணவரைப் பார்த்தார். அவரின் முதுகுதான் இவருக்குத் தெரிந்தது. திடீரென்று அவர் கால்களை நனைத்த ஈரத்தில் குனிந்து பார்த்தார். அப்போதுதான் என்ன நடந்தது என்று கண்டு, “ஐயோ!” என்று வாயில் கையை வைத்தார்.

 

தேவகியைப் போலவே மேலே மாடியில் நல்ல உறக்கத்திலிருந்து எழுந்து வந்த துளசியும் நடந்த அசம்பாவிதத்தைக் கண்டு அசையக் கூட முடியாமல் நின்றிருந்தாள்.

 

அந்த விறாந்தை முழுக்கத் தண்ணீர் ஆறாகப் பெருகி ஓடியது. மீன்தொட்டியின் கண்ணாடித் துண்டுகள் சில்லுச் சில்லாக அந்த இடம் முழுவதிலும் சிதறிக் கிடந்தன. உயிரை விட்டுவிடப்போகிறோம் என்று தெரிந்தாக்கும் தம் இறுதிப் போராட்டத்தில் மீன்கள் எல்லாம் துள்ளித் துடித்தன.

 

அவை அவனுடைய இசையரசியின் விழிகளை நினைவூட்டவும், தரையில் கிடந்த கண்ணாடித் துண்டுகளைப் பற்றி யோசிக்காமல் ஓடிப்போய், ஒரு பெரிய பேசினில் தண்ணீர் கொண்டுவந்து வைத்துவிட்டு, அதனுள் அந்த மீன்களைப் பிடித்துப் போட ஆரம்பித்தான் தூயவன்.

 

“விசராடா உனக்கு. வெறும் காலோட இதுக்க நடப்பியா!” என்று அவனைத் திட்டிவிட்டு ஓடிப்போய், வெளியே கழற்றிவிட்டிருந்த தன் செருப்பை மாட்டிக்கொண்டு, அவனுடையதையும் கொண்டுவந்து கொடுத்தான் குரு.

 

இந்தச் சத்தத்தில் ஓடி வந்த தோட்ட வேலை செய்கிறவரையும் சேர்த்துக்கொண்டு, மூவருமாக அத்தனையையும் ஒதுக்கி முடித்தார்கள். குருவுக்கு நாரியே விட்டுப்போனது. அவ்வளவில் பெரிய மீன்தொட்டி அது. கிட்டத்தட்ட 30 லீட்டர் தண்ணீர் கொள்ளக்கூடியது. அதைத் தூக்கி அடித்திருக்கிறானே.

 

ஆனால், தூயவனுக்குள் இருந்த அடக்கமுடியா ஆக்ரோசத்துக்கும் ஆத்திரத்துக்கும் அதுகூட வடிகாலாகவில்லை. அந்த விறாந்தையையே கழுவித் துடைத்துவிட்டு மேலேறப் போனவனால் அவரைச் சும்மா விட்டுவிட்டுப் போக முடியவில்லை.

 

விடுவிடுவென்று திரும்பி வந்து அவர் முன்னால் நின்றான்.

 

“பெத்த தகப்பனாப் போயிட்டீங்க. இல்லை எண்டு வைங்க!” என்றவன் அப்போதும் விழிகளை இறுக்கி மூடித் தன்னை அடக்கத்தான் முயன்றான். முடியவே இல்லை. அவர் செய்த காரியங்கள் அத்தனையும் அவனைச் சுழற்றி அடித்தன.

 

“எங்களிட்ட இருக்கிற அத்தனை சொத்தும் நீங்க கொண்டு வந்ததோ, உங்கட அப்பர் உங்களுக்குத் தந்ததோ இல்ல. என்ர தாத்தான்ர. அவருக்குச் சொந்தமானது. அவர் உழைச்சுச் சேத்தது. அவருக்குப் பிறகு அவரின்ர வாரிசு அம்மாதான் அத்தனைக்கும் சொந்தக்காரி. நீங்க இல்ல! அம்மாவைக் கட்டினதால மட்டும்தான் நீங்க இந்த வீட்டில இருக்கிறீங்க. மற்றும்படி இஞ்ச இருக்கிற ஒரு பொருளுக்கும் நீங்க சொந்தக்காரன் இல்ல. இப்ப உங்கட பெயர்ல இருக்கிறது கூட இந்தச் சொத்தை எல்லாம் பாதுகாத்ததுக்காகத் தாத்தா தந்த கூலி. விளங்கினதா? அத மறந்து என்ன ஆட்டம் எல்லாம் ஆடுறீங்க? அப்ப ஊரான் வீட்டு சொத்துக்கு அலையிறது ஆரு? வந்த வழிய மறந்து ஆணவத்தில ஆட வெக்கமா இல்ல?”

 

நாக்கைத் பிடுங்கிக்கொள்வதுபோல் அவன் கேட்ட கேள்விகளைக் கேட்க முடியாமல், “தம்பி!” என்று தேவகியே கத்தியிருந்தார் என்கையில் கருணாகரனின் நிலை? அவமானத்தில் கறுத்துச் சிறுத்துப்போய் நின்றார்.

 

அன்னையின் அதட்டலில் திரும்பி அவரைப் பார்த்தவனின் விழிகளில் அத்தனை வெறுப்பு. “நீங்க கூட எல்லாத்தையும் மறைச்சிட்டீங்க என்ன?” என்றதும் அதிர்ந்து நின்றுவிட்டார் அவர்.

 

அதன் பிறகு அங்கே அவன் நிற்கவில்லை. மேலே போயிருந்தான்.

 

கடகடவென்று படியேறி வந்து, தான் நிற்பதைக் கூடக் கவனிக்காமல் கடந்து, அறைக்குள் புகுந்துகொண்ட தமையனையே கண்ணீர் விழிகளுடன் பார்த்து நின்றாள் துளசி.

 

“எனக்கு அண்ணாவோட கதைக்கோணும்.” என்றாள் அவன் பின்னால் வந்த குருவிடம்.

 

முதல் வேலையாக அவளை அறைக்குள் அழைத்துக்கொண்டு போய், “இஞ்ச நடந்தது எல்லாம் தெரியும். இப்போதைக்கு அவனிட்ட எதுவும் சொல்லப் போகாத துளசி. அவன் பாவம். எத்தினை பிரச்சினையை எண்டு பாப்பான்? எத்தினை பேரைச் சமாளிப்பான் சொல்லு. ஒற்றை ஆளா நிண்டு போராடுறான். இதில அப்பா எண்டு இந்த…” என்றவன் பல்லைக் கடித்துத் தன் ஆத்திரத்தை அடக்கி, மேலே எதுவும் சொல்லாமல் நிறுத்தினான்.

 

“எனக்கு அப்பாவைப் பாக்கவே பயமா இருக்கு குரு. இந்த வீட்டில என்ன எல்லாம் நடக்குது எண்டு விளங்குதே இல்ல. என்னை இஞ்ச இருந்து கூட்டிக்கொண்டு போறீங்களா?” என்றதும் அவளை ஒரு பார்வை பார்த்தவன் கைகள் இரண்டையும் விரிக்க, ஒரே ஓட்டமாக ஓடி வந்து, கோழிக் குஞ்சினைப் போன்று அவன் கைகளுக்குள் புகுந்துகொண்டாள் அவள்.

error: Alert: Content selection is disabled!!