கடன் அன்பை முறிக்கும் – 46

அத்தியாயம் 46

 

 

அன்று, நடுச்சாமத்தில் வந்த கணவனின் முகத்தைக் கண்டு அதிர்ந்துபோனாள் சுவர்ணா. அந்தளவில் இரண்டு கன்னங்களும் வீங்கி, உதடுகள் தடித்து என்று அவனைப் பார்க்க முடியவில்லை.

 

“என்னப்பா இது, என்ன நடந்தது?” என்ற அவளின் பதற்றத்துக்குப் பதில் கூடச் சொல்ல முடியாமல் சோபாவில் விழுந்தான் அகிலன்.

 

அவனால் மனைவியின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அவமானம் பிடுங்கித் தின்றது. இருவரும் சம வயது ஆண்கள். அவன் தங்கையின் கணவன் இவன். மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டிய இடத்தில் இருப்பவன். அதற்கு மாறாகக் கன்னம் கன்னமாக அறை வாங்கிக்கொண்டு வந்து நிற்கிறான்.

 

இதையெல்லாம் நினைக்க நினைக்க அவன் முகம் கறுத்துச் சிறுத்தது. சுவர்ணா என்ன கேட்டுப் பதறியும் அதைப் பற்றி அவன் வாய் திறக்கவில்லை.

 

அதற்கென்று அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை. கணவனின் வீங்கி கிடந்த முகமும், அவமானக் கல்லாலும் அவளை அப்படி அமைதியாகப் போக விடவில்லை. கண்ணீருடன் திருப்பி திருப்பிக் கேட்டாள்.

 

கடைசியில், “வரேக்க இருட்டில பள்ளம் பாக்காம விழுந்திட்டன். அதுக்கு இப்பிடித்தான் நொய் நொய் எண்டு உயிரை எடுப்பியா? போய்த் துல அங்கால.” என்று எரிந்து விழுந்தான் அவன்.

 

ஒருகணம் திடுக்கிட்டுப் போனாள் சுவர்ணா. அப்படியே விழுந்தாலும் முகத்தில் மட்டும் எப்படிக் காயம் வந்தது என்கிற கேள்வி எழுந்தது. முதலில் ஏன் அவளிடம் இவ்வளவு கோபம்? அதையெல்லாம் கேட்கத் தைரியம் வரவில்லை. அவனுக்குத் தெரியாமல் தான் செய்த தவறும் சேர்ந்து அவளை உறுத்தியதில் வாயை மூடிக்கொண்டாள்.

 

பேசாமல் போய் இளம் சுடுதண்ணீரும், தூய்மையான ஒரு துண்டையும் எடுத்து வந்து அவன் முகத்துக்கு ஒத்தடம் கொடுக்க முயன்றாள். “உனக்கு ஒருக்கா சொன்னா விளங்காதா?” என்கிற அவனின் சீறல் அவளை அதையும் செய்ய விடாமல் தடுத்தது.

 

கடைசியில் இருவரிடத்திலும் மற்றவரிடம் சொல்ல முடியாத களவு இருந்ததில் இருவரும் மற்றவரிடமிருந்து ஒளித்து ஓடிக்கொண்டிருந்தார்கள்.

 

*****

 

மிதிலனை நேசரிக்கு விட்டுவிட்டு நேராக இங்கேதான் குருவும் துளசியும் வந்தார்கள். நேசன் இருந்தால் நல்லது என்று எதிர்பார்க்க, அவன் இல்லை.

 

கோகிலா அம்மாவிற்கு அவர்களைக் கண்டதும் ஒருவிதச் சங்கடம். நளினிக்கு அப்படி இல்லை என்றாலும் எதற்கு வந்திருக்கிறார்கள் என்கிற கேள்வி. ஆனாலும், வீடு தேடி வந்தவர்களை மிக நல்ல முறையிலேயே வரவேற்று உபசரித்தார்கள்.

 

யாழிசைக்கு ஏன் வந்திருக்கிறார்கள் என்கிற பதற்றம். அதே நேரம், தூயவனும் வந்திருப்பானோ என்று எதிர்பார்த்து ஏமாந்தாள்.

 

துளசி உள்ளே வந்ததும் வராததுமாக நேரே யாழிசையிடம்தான் வந்தாள். அவள் கரம் பற்றி, “சொறி இசை. அண்டைக்கு உண்மையா எனக்கு உதவி செய்த இசைக்குச் சின்னதா நன்றி சொல்ல நினச்சுத்தான் சாப்பாட்டுக்குக் கூப்பிட்டனான். ஆனா, எனக்கு மனுசன் எண்ட பெயர்ல இருக்கிறாரே ஒருத்தர். அவர் பாத்த வேலதான் மிச்சம் எல்லாம்.” என்று அவள் திரும்பிப் பார்த்து இப்போதும் குருவை முறைக்க, அவன் உதட்டில் மெல்லிய புன்னகை.

 

அவர்கள் இருவரையும் கவனித்த இசையின் இதழ்களிலும் முறுவல்.

 

“என்ன வச்சு இவர் பிளான் பண்ணின கதை கடவுள் சத்தியமா எனக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா அதுக்கு ஓம் எண்டு சொல்லியே இருக்க மாட்டன். ஆனாலும் அண்டைக்கு நடந்ததுக்கு சொறி.” என்று மனதார மன்னிப்பை வேண்டினாள் துளசி.

 

அதைவிடவும் அதிர்ச்சிகரமான பல சம்பவங்களை இன்றைய யாழிசை கடந்து வந்துவிட்டதாலோ என்னவோ அன்றைய சம்பவங்களிலிருந்து ஓரளவுக்கு வெளியே வந்திருந்தாள். அதில், “பரவாயில்லை அக்கா, விடுங்கோ.” என்றாள் இதமாகவே.

 

அதேபோல் கோகிலாவின் புறம் திரும்பி, “சண்முகம் பெரியப்பா நேசன் அண்ணாட்ட என்ன சொன்னார் எண்டு எனக்குத் தெரியாது அன்ட்ரி. ஆனா, அண்டைக்கு அப்பா இசையைப் பற்றி உங்களிட்ட கதைச்ச கதைல கொஞ்சம் கூட உண்மை இல்லை எல்லா. அதே மாதிரித்தான் சண்முகம் பெரியப்பா கதைச்ச கதைலயும் எந்த உண்மையும் இல்ல. எனக்கு விளங்கின மாதிரிக்கு அண்ணா இசையை விரும்பிற விசயம் எங்கட அப்பாக்கு முதலே தெரிஞ்சிருக்கு. அவரால அத அண்ணாட்ட நேரடியாச் சொல்லேலாது. அண்ணா ஒரு முடிவு எடுத்தா அதைத்தான் செய்வார் எண்டு அப்பாக்கு நல்லாத் தெரியும். அதாலதான் இந்தப் பக்கம் சண்முகம் பெரியப்பா மூலம் நேசன் அண்ணாவை ஏத்தி விட்டுட்டு, அந்தப் பக்கம் இசையைக் கடத்தி இருக்கிறார். எங்கட அப்பாவால நீங்க அனுபவிச்ச எல்லா கஷ்ட துன்பத்துக்கும் சொறி அன்ட்ரி. ஆனா, அதுக்காக எல்லாம் இசையை அண்ணாக்குத் தரமாட்டோம் எண்டு சொல்லிப்போடாதீங்கோ.” என்று கெஞ்சலில் முடித்தாள்.

 

கோகிலாஉடனேயே ஒன்றும் சொல்லப் போகவில்லை. என்ன இருந்தாலும் சின்ன பெண். அவளிடம் எந்தளவு தூரத்துக்கு இதைப் பற்றிப் பேசுவது என்று அவருக்குத் தெரியவில்லை. அதைவிட, அவள் கேட்ட மன்னிப்புக்காகவும், சொன்ன விளக்கத்துக்காகவும் பெண்ணைக் கொடுத்துவிட முடியாதே. அதில் என்ன பேசுவது என்று தெரியாது குருவைப் பார்த்தார்.

 

அவனும் அவரை உணர்ந்தாற்போல், “துளசி உங்க எல்லாரிட்டையும் மன்னிப்பு கேக்கோணும் எண்டு சொன்னவா. அதாலதான் கூட்டிக்கொண்டு வந்தனான். ஆனா அவா சொன்ன மாதிரி இதையெல்லாம் மனதில வச்சிருக்காம இந்தக் கலியாணத்துக்கு ஓம் எண்டு சொல்லுங்கோ அம்மா. நிச்சயமா தூயவனோட உங்கட மகள் சந்தோசமா இருப்பா.” என்றான் அவன்.

 

“ஓம் அன்ட்ரி, ஓம் எண்டு சொல்லுங்கோ. நேசன் அண்ணாவோடயும் கதைப்பம் எண்டுதான் வந்தனாங்க. அவர் இல்ல.” மாதவியின் அருகில் அமர்ந்திருந்த துளசி, கெஞ்சலாகச் சொன்னாள்.

 

அருமையான பெண் என்றுதான் கோகிலாவுக்குத் தோன்றிற்று. அந்த மனிதருக்கு இப்படி ஒரு மகளா என்கிற கேள்வியும். அதே நேரத்தில் இன்னுமே இவர்கள் பேச்சை எவ்வளவு தூரத்துக்குக் கருத்தில் எடுப்பது என்று அவருக்குத் தெரியவில்லை. ஆனாலும் பதில் சொன்னார்.

 

“எங்களுக்குப் பெடியன் நல்லவனா இருந்து, நல்ல ஒரு வேலையும் இருந்து, எங்கட மகள் சந்தோசமா வாழுவா எண்டு தெரிஞ்சா போதும். அதைத் தாண்டி இந்தச் சாதி, பணம் எண்டு எதையும் யோசிக்கேல்ல. அப்பிடி ஒரு வாழ்க்கை உங்கட வீட்டில கிடைக்கும் எண்டுற நம்பிக்கை இல்லையேம்மா. பிறகு எப்பிடிப் பொம்பிளை தாறது? முதல் உங்கட அம்மா அப்பாவே இதுக்குச் சம்மதிக்கவே சம்மதிக்காயினம் எண்டேக்க இதைப் பற்றி நாங்க கதைக்கிறதே வீண்.” கோபப்படாமல் நயமாகவே சொன்னார்.

 

“அப்பாவை நினைச்சுப் பயப்பிடுறீங்க எண்டு விளங்குது.” என்றவளுக்கு என்னதான் இருந்தாலும் தந்தையை இன்னொரு வீட்டினரிடம் விட்டுக்கொடுத்துப் பேசுவது இலகுவாக இல்லை.

 

ஆனால், இது அவள் தமையனின் வாழ்க்கை. பேசாமல் நல்லது நடக்காது என்பதில், “அம்மாவும் அப்பாவும் ஒரு நியாயத்தோட மறுப்புச் சொன்னா அதில ஒரு அர்த்தம் இருக்கு அன்ட்ரி. இல்லாம சும்மா அவேன்ர வறட்டுப் பிடிவாதத்துக்காக மாட்டம் எண்டு சொன்னா அதைக் கேக்கேலாது. அதுவும் அண்ணா கேக்கவே மாட்டார்.” என்று சொன்னாள் அவள்.

 

“இவ்வளவு காலமும் எங்களுக்குத் தெரிஞ்ச அப்பா எங்களில உயிரயே வச்சிருக்கிற ஒருத்தர். பாசமானவர். அன்பானவர். ஊருக்குப் பெரிய மனுசன். ஆர் என்ன உதவி எண்டு வந்து கேட்டாலும் செய்றவர். அவர் ஒரு காரியம் செய்தா அது சரியா இருக்கும், அதில ஒரு அர்த்தம் இருக்கும் எண்டு கண்ணை மூடிக்கொண்டு நம்பினனாங்க. அவர் சாதியப் பெருசாப் பாப்பார் எண்டு தெரியும். இன்னும் சொல்லப்போனா எங்களுக்கே தெரியாம நாங்களும் அதைப் பாத்திருக்கிறம். அதால நாங்க எந்தவிதமான பிரச்சினைகளையும் இதுவரைக்கும் சந்திச்சதும் இல்லை அன்ட்ரி. அதாலயே அதின்ர பாரதூரம் எங்களுக்கு விளங்கினதும் இல்லை.” என்றவளால் அவர்களை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

 

“அதுக்காக நியாய அநியாயங்கள் தெரியாத மனுசர் இல்லை நாங்க. இசைக்கு அப்பா பிரச்சினை குடுக்க ஆரம்பிச்சதில இருந்தே எங்கட அப்பாவா இது எண்டு நம்பேலாம இருந்தது. ஆனா அண்டைக்கு அவர் உங்களிட்ட கதைச்சதக் கேட்ட நேரம், அவருக்க இப்பிடி ஒரு கொடூர முகம் இருக்கா எண்டு திகைச்சுப்போனன்.” என்றவளால் இப்போதும் மேலே பேச முடியவில்லை.

 

மாதவிதான் அவள் கையை ஆறுதலாகத் தட்டிக்கொடுத்தார்.

 

தன்னைச் சமாளித்துக்கொண்டு நிமிர்ந்து, “ஆனா ஒண்டு அன்ட்ரி, அண்ணாக்குத் தெரியாத வரைக்கும்தான் அப்பான்ர ஆட்டமெல்லாம். இப்ப அண்ணாக்குத் தெரியும். கட்டாயம் இதையெல்லாம் ஒரு முடிவுக்குக் கொண்டு வராம விடமாட்டார்.” என்றவள் முதல் நாள் இரவு நடந்ததைச் சொல்லவும் எல்லோருமே பயந்து போயினர்.

 

அதுவும் யாழிசை துடித்தே போனாள். அவன் கையில் பெரிய காயம், காய்ச்சலும் காய்கிறதாம் என்று அறிந்ததும் கண்கள் கலங்கிப்போயின.

 

அந்த நிமிடமே அவனைப் பார்க்க ஆசைப்பட்டாள். குறைந்த பட்சமாகக் கைப்பேசியில் பேசுவதற்கு கூட வழி இல்லாமல் நிற்கிறாளே. தொண்டை அடைக்க அவர்களையே பார்த்திருந்தாள்.

 

மாதவி உடனேயே பெறா மகனைப் பார்க்கப் புறப்பட்டார். முதல் முறை தூயவன் தகப்பனோடு முட்டிக்கொண்டுவிட்டுப் போனபோது, இத்தனைக்கும் காரணம் நீதான் என்று தேவகி சொன்ன மனத்தாங்கலில் இத்தனை நாள்களும் அவருக்கு அழைக்காமல் இருந்தார் மாதவி. இப்போதும் அந்தக் கோபத்தைப் பிடித்து வைக்க முடியவில்லை. அவரோடு பேசியபோது, மகன் தன் முகம் கூடப் பார்க்காமல் போனதைச் சொல்லி அழுதார் அவர்.

 

கடைசியில் குரு பைக்கிலும் துளசியும் மாதவியும் ஆட்டோவிலும் புறப்பட்டனர். அவர்களுடனேயே சென்றுவிட அவள் உள்ளமும் உயிரும் துடித்தது. ஒரேயொரு முறை அவன் முகம் பார்க்க, காயம் பட்ட கையை வருடிக்கொடுக்க மனம் ஏங்கிற்று.

 

நீயும் போய்விட்டு வா என்று யாராவது சொல்லிவிட மாட்டார்களா என்று அவள் உள்ளம் தவித்தது. அன்னையின் முகத்தை முகத்தைப் பார்த்தாள். அவர் அசைவதாக இல்லை.

 

ஆட்டோவும் வந்தது. மாதவியை உள்ளே ஏற்றி அமர்த்திவிட்டார்கள். இதோ புறப்படப் போகிறார்கள். விழிகளில் சேர்ந்துவிட்ட கண்ணீரை அடக்கப் படாத பாடு பட்டபடி நின்றாள் யாழிசை.

 

கடைசியில் மனம் கேளாமல், “இசையையும் கூட்டிக்கொண்டு போயிட்டு, வரேக்க சித்தியோட அனுப்பிவிடட்டா அன்ட்ரி.” என்று கேட்டாள் துளசி.

 

“இல்லையம்மா. இனியாவது எந்த வீண் பிரச்சினைகளும் வேண்டாம். குறை நினைக்காதீங்கோ.” என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார் கோகிலா.

 

கன்னத்தில் இறங்கிவிட்ட கண்ணீரோடு அந்த ஆட்டோ போய் மறைகிறவரை பார்த்து நின்றாள் யாழிசை.

 

*****

 

எல்லா இலக்கங்களும் கைப்பேசியில் இருப்பதில் பெற்ற அன்னை, தந்தை உட்பட யார் நம்பர்களும் விமல் நினைவில் இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்களுக்கு அழைத்து, அவன் செய்த காரியத்தைச் சொல்லி, அதனால் அவனுக்கு நடந்ததைச் சொல்லவா முடியும்?

 

கடைசியில் அவன் எண்ணிப் பயந்ததுபோல் பிச்சைதான் எடுத்தான். வேறு எங்கும் போவதற்கு அவனுக்குப் போக்கிடமும் இல்லை.

 

இவன் ஓடி ஒளிந்தாலும் அன்னை தந்தையைப் பிணையாக வைத்துத் தன்னை வரவழைக்கவே தூயவன் முயல்வான் என்று தெரியும். அவனும் வயதான பெற்றோரை விட்டுவிட்டு எத்தனை நாள்களுக்கு என்று ஓடி ஒளிவான்? அதைவிட அவனுக்குள்ளும் ஒரு கோபம் இருந்தது. அதில் நடப்பது நடக்கட்டும் என்று வவுனியாவுக்கே செல்ல முடிவெடுத்தான்.

 

யாரோ இரு கொள்ளையர்கள் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் கொள்ளையடித்து, அந்தப் போராட்டத்தில் தன்னை அடித்தும் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள் என்று பொய் சொல்லி, பலரிடம் கெஞ்சி, வவனியா செல்லும் அளவுக்கான பணம் சேர்த்துக்கொண்டு பஸ்ஸில் புறப்பட்டான்.

error: Alert: Content selection is disabled!!